விஜய் தற்போது நெல்சன் திலீப் குமாரின் பீஸ்ட் படத்தில் நடித்து வருகிறார். படத்தில் கதாநாயகியாக பூஜா ஹெக்டே நடிக்கிறார். அனிருத் இசையமைக்கும் இப்படத்தில் அபர்ணா தாஸ், யோகிபாபு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள். விஜய்யின் ’சர்கார்’ படத்தைத் தொடர்ந்து இந்தப் படத்தையும் சன் பிக்சர்ஸ் தயாரிக்கிறது.
இந்நிலையில் பீஸ்ட் படத்தைத் தொடர்ந்து விஜய்யின் அடுத்தப்படம் குறித்து பல்வேறு தகவல்கள் வெளிவந்த வண்ணம் இருந்தன. அதில் குறிப்பாகத் தெலுங்கு இயக்குநர் வம்சி பைடிப்பள்ளி தளபதி 66 படத்தை இயக்குவதாக ஏறக்குறைய உறுதியான தகவல் வலம் வந்தன. இதனை ட்விட்டரில் உறுதிப்படுத்தினார் வம்சி.
பிரபல தயாரிப்பாளர் தில் ராஜு தயாரிக்கும் இந்தப் படம் ஒரே நேரத்தில் தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாகவிருக்கிறது. தற்போது இதன் முதற்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், விரைவில் இதன் படப்பிடிப்பு துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் தளபதி 66 படம் குறித்து ஊடகம் ஒன்றிற்குப் பேட்டியளித்திருக்கும் தயாரிப்பாளர் தில் ராஜு, இந்தப் படம் விஜய்யின் பூவே உனக்காக, காதலுக்கு மரியாதை போன்று ஃபீல் குட் கதையாக இருக்கும் என்றும், இதைக்கேட்ட விஜய், ‘இந்த மாதிரி கதை கேட்டு 20 வருஷமாச்சு’ என்று கூறியதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
விஜய்யை பல வருடங்களாக ஆக்ஷன் கதாபாத்திரங்களில் மட்டுமே பார்த்து வந்தோம் மீண்டும் நண்பன், காவலன் போன்ற ஃபீல் குட் படத்தில் தோன்றவிருக்கிறார் விஜய்.
சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் 2021- ஆம் ஆண்டின் சிறந்த மகளிர் வீராங்கனைக்கான விருதை இந்தியாவின் ஸ்மிருதி மந்தனா வென்றார். சமீபத்தில் மகளிர் கிரிகெட்டின் இந்த வருடத்திற்கான சிறந்த டி 20 அணியை ஐ.சி.சி அறிவித்தது.
11 வீராங்கனைகள் அடங்கிய அணியில் இந்தியா சார்பில் ஸ்மிருதி மந்தனா மட்டுமே தேர்வாகியிருந்தார். இன்று சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் அறிவித்த இந்த ஆண்டுக்கான சிறந்த மகளிர் வீராங்கனைக்கான விருதை இந்திய வீராங்கனை ஸ்மிருதி மந்தனா தட்டிச் சென்றார்.
பெருவில் கடலில் கலந்துள்ள எண்ணெய் படலத்தை நீக்க ஏராளமானோர் தங்கள் முடியை தானமாக வழங்கி வருகின்றனர். பெருவில் சுத்திகரிப்பு நிலையத்திற்கு எண்ணெய் கொண்டு சென்ற கப்பலில் ஏற்பட்ட கசிவு காரணமாக சுமார் 3 கிலோ மீட்டர் கடற்பரப்பு மாசடைந்ததுள்ளதாக தெரிவிக்கின்றனர்.6,000 பேர்லல் எண்ணெய் கடலில் கலந்துள்ளதாகவும் 21 கடற்கரைகள் இந்த எண்ணெய் கழிவுகளால் மாசடைந்து காணப்படுவதாகவும் அந்நாட்டு சுற்றுச்சூழல் அமைச்சகம் கவலை அடைந்துள்ளது.
இதனிடையில் இந்த எண்ணெய் கசிவை அகற்ற புதிய யுக்தியை கையில் எடுத்துள்ளது பெரு சுற்றுச்சூழல் அமைச்சகம். சிகை அலங்கார நிபுணர்கள் உதவியுடன் லிமா நகராட்சி அலுவலகத்தில் முடி சேகரிப்பு மையமும் அமைக்கப்பட்டது. முடியை கயிறு போல உருளை வடிவில் திரித்து அதனை கடற்கரை அலைகளில் மூழ்கடிக்கும்படி செய்வதால் நீரில் உள்ள எண்ணெய் படலங்களை முடி உறிஞ்சிவிடும் என கூறப்படுகிறது.
அண்மையில் டாங்கோ அருகே கடலில் எரிமலை வெடித்ததின் எதிரொலியாக பெருவில் எழுந்த உயர் அலைகளால் கப்பலில் இருந்து எண்ணெய் கசிந்ததே இந்த பேரிடருக்கு காரணம் என சந்தேகிக்கப்படுகிறது.
கடலில் பிளாஸ்டிக் கழிவுகளால் பல்வேறு உயிரினங்கள் பாதிக்கப்படுவது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், சென்னை சிறுமி தாரகை ஆராதனா 18 கி.மீ. தூரம் கடலில் நீச்சல் அடித்து உலக சாதனை படைத்தார். கோவளம் முதல் நீலாங்கரை வரையிலான 18 கி.மீ. தூரத்தை 6 மணி, 14 நிமிடங்களில் கடந்து சாதித்த ஆராதனாவுக்கு (8 வயது) அசிஸ்ட் வேர்ல்டு ரெக்கார்டு என்ற உலக சாதனை நிறுவனம் அங்கீகரித்து சான்றிதழ் வழங்கியது. இந்த சான்றிதழை விஜிபி குழும தலைவர் வி.ஜி.சந்தோஷம் வழங்கினார்.
சிறுமியின் தந்தை அரவிந்த் ஆழ்கடல் பயிற்சியாளர் என்பதால் கடந்த 3 வருடங்களாகத் தீவிர பயிற்சி மேற்கொண்டு இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளார். சிறு வயது முதலே கடற்கரையில் நடைபயிற்சி மேற்கொள்ளும் போதும் கடலிலும், கடற்கரையிலும் அதிகப்படியான பிளாஸ்டிக் கழிவுகள் இருப்பதைக் கண்டு அதன் தாக்கத்தினால் இப்படி ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தி சாதனையைப் படைத்துள்ளார். இது குறித்து ஆராதனா கூறுகையில், இதுவரை 600 கிலோ பிளாஸ்டிக் கழிவுகளை சேகரித்து வைத்துள்ளதாகவும், அதனை விற்றுக் கிடைக்கும் பணத்தைத் தமிழக முதல்வரிடம் கொடுத்து பிளாஸ்டிக்கை ஒழிக்க வலியுறுத்த உள்ளதாகவும் தெரிவித்தார்.
உக்ரைன் எல்லையில் ரஷ்யா தமது படைகளை நிறுத்தியுள்ளதால், அங்குள்ள தங்கள் நாட்டுத் தூதரக அதிகாரிகளை வெளியேறுமாறு அமெரிக்கா கேட்டுக் கொண்டுள்ளது.
இதுகுறித்து இன்று அமெரிக்க வெளியுறவுத் துறை வெளியிட்ட அறிக்கையில், “உக்ரைன் நாட்டின் எல்லையில் ரஷ்யா பல்லாயிரக்கணக்கான படைகளைக் குவித்து வருகிறது. எல்லையில் பீரங்கிகள், ஏவுகணைகளும் நிறுத்தப்பட்டுள்ளன. உக்ரைனில் ஊடுருவுதற்கான முயற்சியில் ரஷ்யா உள்ளது. எனவே, உக்ரைனிலுள்ள அமெரிக்கப் பிரதிநிதிகள், தூதரக அதிகாரிகள், பொதுமக்கள் உக்ரைனிலிருந்து வெளியேறுமாறு கேட்டுக் கொள்கிறோம். இம்முடிவை தற்போதே பரிசீலியுங்கள்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
'நேட்டோ' நாடுகள் கூட்டமைப்பில் இணைய உக்ரைன் ஆர்வமாக இருந்து வருகிறது. இதற்கு அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகள் ஆதரவு தெரிவித்துள்ளன. ஆனால், இதற்கு ரஷ்யா எதிர்ப்பு தெரிவித்தது. இதனைத் தொடர்ந்து கடந்த சில மாதங்களாக உக்ரைன் - ரஷ்யாவுக்கு இடையே மோதல் வலுத்து வருகிறது.
இந்த நிலையில், சுமார் 1 லட்சம் படை வீரர்களை உக்ரைன் எல்லையில் ரஷ்யா நிறுத்தியுள்ளது. இதன் காரணமாக இரு நாடுகளுக்கிடையே போர்ச் சூழல் உருவாகி இருக்கிறது. இரு நாட்டு எல்லையில் பதற்றம் நிலவுகிறது. ரஷ்யாவின் இந்த நடவடிக்கையை அமெரிக்கா, பிரிட்டன் ஆகிய நாடுகள் கடுமையாக விமர்சித்து வருகின்றன.
முன்னதாக, உக்ரைன் மீது போர் தொடுத்தால் ரஷ்யா மீது பொருளாதாரத் தடைகள் விதிக்கப்படும் என்று அமெரிக்கா எச்சரித்துள்ளது குறிப்பிடத்தக்கது