பாகிஸ்தான் : அம்பயரைப் பகைத்துக் கொண்டதால் அவுட் ஆன இம்ரான்கான்

கிரிக்கெட் வாழ்க்கை முடிந்து, 1996ல் பாகிஸ்தான் தெஹ்ரீக் இ இன்ஸாஃப் ( நீதிக்கான பாகிஸ்தான இயக்கம்) என்ற பெயரில் கட்சி தொடங்கிய இம்ரான் கானுக்கு, அரசியலில் முதல் சுமார் 20 ஆண்டுகளில் பெரிய வெற்றி ஏதும் கிடைக்கவில்லை.
இம்ரான் கான்
இம்ரான் கான்NewsSense
Published on

( கட்டுரையாளர் இலண்டனிலிருந்து இயங்கும் மூத்த செய்தியாளர். பிபிசி தமிழின் முன்னாள் ஆசிரியர்)

பாகிஸ்தானில் கடந்த வாரம் ஏற்பட்ட அரசியல் நெருக்கடி ஒரு வழியாக ஒரு முடிவை எட்டிவிட்டது.

ஐந்து ஆண்டுகள் பிரதமர் பதவியில் தாக்குப்பிடித்த முதல் பாகிஸ்தான் பிரதமர் என்ற சாதனையைப் படைப்பார் என்று 2018ல் ராணுவத்தின் ஆசியுடன் வென்ற போது எதிர்பார்க்கப்பட்ட , இம்ரான் கான், நம்பிக்கையில்லாத் தீர்மானத்தின் மூலம் பதவியிழந்த முதல் பாகிஸ்தான் பிரதமர் என்ற பெருமையுடன் வெளியேறுகிறார்.

கடந்த வாரம் எதிர்கட்சிகள் கொண்டுவந்த நம்பிக்கை இல்லாத் தீர்மானம் வெற்றி அடையும் என்ற நிலையில், தீர்மானத்தை எதிர்கொள்ளத் தயாராக இல்லாத இம்ரான் கான், சபாநாயகர் உதவியுடன் அவையை ஒத்திவைத்து நாடாளுமன்றத்தைக் கலைக்க ஜனாதிபதிக்கு பரிந்துரை செய்தார்.

ஜனாதிபதியும் நாடாளுமன்றத்தை கலைத்தார். இம்ரான் கான் எதிர்பார்க்காத ஒன்று, பாகிஸ்தான் உச்ச நீதி மன்றம் நாடாளுமன்றத்தைக் கலைத்த முடிவை அரசியல் சட்டத்துக்கு எதிரானது என்று கூறி, ரத்து செய்யும் என்பதுதான்.

கலைக்கப்பட்ட நாடாளுமன்றத்துக்கு உயிர் கொடுத்து, சனிக்கிழமை நள்ளிரவுக்குள் நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை இம்ரான் கான் சந்தித்தாக வேண்டும் என உச்ச நீதிமன்ற உத்தரவிட்ட நிலையில், கடைசி மணி நேரம் வரை, சபாநாயகர் உதவியுடன், பல முறை அவை ஒத்திவைப்புகள், மற்றும் ஆளும் கட்சி உறுப்பினர்கள் நீண்ட நேர உரைகள் மூலம் அவை நேரத்தை வீணடிப்பது என்று இரவு 11.30 மணி வரை வாக்கெடுப்பு நடத்தப்படாமல் இருக்க இம்ரான் பகீரத பிரயத்தனம் செய்திருக்கிறார்.

கடைசியில், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியே நிலைமையை உணர்ந்து, தேவைப்பட்டால் நள்ளிரவுக்கு பின்னரும் உச்ச நீதிமன்றம் வழக்கை விசாரிக்கும் என்று அறிவித்து, நீதிமன்றக் கதவுகள் இரவில் திறக்கப்பட்ட பின்னரே, நிலைமை முற்றியதை உணர்ந்து, இம்ரான் ஆதரவு சபாநாயகர் பதவி விலக, கடைசியில் துணை சபாநாயகர் அவையை நடத்தி, வாக்கெடுப்பை நடத்தி முடித்திருக்கிறார்.

பாகிஸ்தானில் பலமுறை காயப்படுத்தப்பட்ட அரசியல் சட்டம் இம்முறை நீதிமன்றத் தலையீட்டால் தப்பித்திருக்கிறது.

என்ன நடந்தது பாகிஸ்தானில் ?

கிரிக்கெட் வாழ்க்கை முடிந்து, 1996ல் பாகிஸ்தான் தெஹ்ரீக் இ இன்ஸாஃப் ( நீதிக்கான பாகிஸ்தான இயக்கம்) என்ற பெயரில் கட்சி தொடங்கிய இம்ரான் கானுக்கு, அரசியலில் முதல் சுமார் 20 ஆண்டுகளில் பெரிய வெற்றி ஏதும் கிடைக்கவில்லை.

2017ல் அப்போதைய பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷரீபுக்கும், பாகிஸ்தானின் நிரந்தர அதிகார மையமான, ராணுவத்துக்கும் இடையே முறுகல் நிலை முற்றியதை அடுத்து, 2018ல் நடந்த தேர்தலில் முதல் முறையாக தனிப்பட்ட பெரும் கட்சி என்ற அளவில் இடங்களைப் பெற்றது இம்ரானின் கட்சி.

அப்போதே இம்ரான் கான் வெற்றி பெற ராணுவம் மறைமுகமாக உதவியது என்ற குற்றச்சாட்டு இருந்தது. இதை ராணுவமும், இம்ரானும் மறுத்திருந்தனர்.

ராணுவம் உதவியது ஒருபுறம் இருக்க, நவாஸ் ஷரீப் மற்றும் பாகிஸ்தான் மக்கள் கட்சியின் ஆசிப் அலி ஸர்தாரி ( பெனாசிர் பூட்டோவின் கணவர், பாகிஸ்தான் ஜனாதிபதி) ஆகியோர் மீது மக்களுக்கு இருந்த அதிருப்தி காரணமாக, இம்ரான் கான் வெற்றி எளிதானது. இதனால், ராணுவ ஆதரவும், மக்கள் ஆதரவும் ஒரே சமயத்தில் கிடைத்த ஒரு அசாதாரண சூழ்நிலை இம்ரான் கானுக்கு இருந்தது.

சில சிறிய கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சி அமைத்த இம்ரான்கான், ஆட்சிக்கு வந்த முதல் இரண்டு ஆண்டுகளில் புதிய அரசுகள் அனுபவித்த தேனிலவுக் காலத்தை அனுபவித்தார்.

NewsSense

பொருளாதார சறுக்கல்

ஊழலை ஒழிப்பேன், மாற்றங்களைக் கொண்டுவருவேன் என்றெல்லாம் வாக்குறுதிகள் வழங்கி ஆட்சிக்கு வந்த இம்ரான் கான், சில ஆக்கபூர்வமான திட்டங்களைக் கொண்டு வந்தார் என்பதை அவரது எதிரிகளே மறுக்கமுடியாது.

கடந்த ஆண்டு, தனிப்பட்ட குடும்பங்களுக்கு 10 லட்சம் ருபாய் வரை மருத்துவ காப்பீடு தரும் திட்டத்தை இம்ரான்கான் பஞ்சாப் மற்றும் வடமேற்கு எல்லைப்புற மாகாணங்களில் அமல்படுத்தினார். அது போல தள்ளுபடி விலைகளில் அத்தியாவசிய பொருட்களை ரேஷன் கடைகளில் வழங்கும் திட்டமும் பிரபலமானது.

மேலும், கொரொனா தொற்றின் போதும், முரட்டுத்தனமான லாக்டவுன் என்றெல்லாம் போட்டு சாதாரண மக்களை பாதிக்காமல் , கொரொனா தொற்றை பாகிஸ்தானில் இம்ரான் கான் அரசு சமாளித்தது. கொரொனா தொற்றால் பெரிய அளவு மரணங்கள் பாகிஸ்தானில் ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது

ஆனால் இம்ரான் கான் சறுக்கியது , பொருளாதாரத்தை கையாண்ட விஷயத்தில்தான் . ( வேறு பல பிரச்சனைகளிலும் அவர் அரசு மீது அதிருப்தி இருந்தது என்றாலும் ).

ஆட்சிக்கு வந்த ஆண்டே ,முந்தைய நவாஸ் ஷரிப் ஆட்சியின் தவறான பொருளாதார நிர்வாகம் காரணமாக மோசமடைந்திருந்த பாகிஸ்தான பொருளாதாரத்தை நிமிர்த்த உடனடியாக எந்த ஒரு பெரிய நடவடிக்கையும் பெரிதாக இம்ரான் கான் எடுக்கவில்லை.

நிலைமை மேலும் மோசமானதும், அடுத்த ஆண்டு , தனது நிலைப்பாட்டுக்கெதிராக, பன்னாட்டு நாணய நிதியத்திடம் ( ஐ எம் எஃப்) 6 பில்லியன் டாலர் கடன் வாங்கினார்.

கொரொனாவுக்கு பின் உலகப் பொருளாதாரம் சரிந்து, எரிபொருட்கள் விலை உலக சந்தையில் எகிறத் தொடங்கிய நிலையில், பாகிஸ்தானில் மட்டும் பெட்ரொல் டீசல் மற்றும் மின்சார விலைகளைக் குறைத்து இம்ரான் கடந்த பிப்ரவரியில் அறிவித்தது, பொருளாதார விதிகளைப் பின்பற்றாத “ பாப்புலிஸ்ட்” நடவடிக்கையாகவே பொருளியல் நிபுணர்களால் பார்க்கப்பட்டது.

இரட்டை டிஜிட் சதவீத பணவீக்கம் நிலவிய பாகிஸ்தானில், இந்த எரிபொருள் விலை குறைப்பு, நாட்டின் ஏற்கனவே குறைந்து வந்த அந்நிய செலாவணி கையிருப்பை மேலும் பாதித்து, பாகிஸ்தானிய ரூபாயின் மதிப்பை மேலும் குறைத்து, மற்றுமொரு பணவீக்க சுழற்சிக்கு வழிவகுத்தது.

இதற்கிடையே ஐ. எம்.எப் 2019ல் தர சம்மதித்த 6 பிலியன் டாலர் கடனின் கடைசி தவணையான ஒரு பிலியன் டாலரைத் தர, பாகிஸ்தான் அரசு சிக்கன நடவடிக்கைகளை எடுக்க வேண்டியிருந்தது. இந்த நடவடிக்கைகள் பாகிஸ்தானின் பொருளாதார நெருக்கடியை தீவிரப்படுத்தின.

இம்ரான் கான்
பாகிஸ்தான் வாழ் தமிழர்களின் வரலாறு - அட்டகாச தகவல்கள் இதோ
NewSense

ராணுவத்துடன் உரசல்கள்

இது ஒரு புறமிருக்க, பாகிஸ்தானின் முக்கிய அதிகார மையமான ராணுவம், இம்ரான்கான் மீது எரிச்சல் கொள்ளத்தொடங்கியிருப்பதற்கான அறிகுறிகள் தென்பட ஆரம்பித்திருந்தன.

கடந்த அக்டோபரில், பாகிஸ்தானின் சக்திமிக்க ராணுவ உளவுப் பிரிவான, ஐ எஸ் ஐ யின் தலைமை இயக்குநர் பதவியில் இருந்த லெப்டினண்ட் ஜெனரல் ஃபைஸ் ஹமீத்தை பாகிஸ்தான் ராணுவ தளபதி ஜெனரல் கமார் பாஜ்வா இடம் மாற்றி, புதிய உளவுப்பிரிவு தலைவராக நடீம் அஞ்சும் என்பவரை நியமித்தார்.

ஆனால் வழக்கமாக உளவுப்பிரிவு தலைவரை மாற்றும் நடைமுறை என்பது சற்று வேறுபட்டது. மூன்று பெயர்களை ராணுவ தளபதி பிரதமர் அலுவலகத்துக்கு பரிந்துரை செய்வார்; அந்த மூன்று பேரில் ஒருவரைப் பிரதமர் தேர்ந்தெடுப்பார். இந்த நடைமுறையை பின்பற்றாததால், இம்ரான் கான் ராணுவ தளபதியின் பரிந்துரையை அதிகாரபூர்வ அறிவிப்பாக வெளியிடாமல் இருக்க, சில வாரங்கள் பரபரப்பும் , ராணுவ-சிவிலியன் அரசு மோதல் என்று வதந்திகளும் அதிகரித்தன.

திரை மறைவுக்குப் பின் என்ன நடந்ததோ, பாஜ்வா- இம்ரான் சந்திப்புக்கு பின் , பிரதமர் அலுவலக அரசாணை வெளியிடப்பட்டது.

என்ன பிரச்சனை என்பது வெளிப்படையாக தெரியாவிட்டாலும், ராணுவ ஆதரவுடன் பதவிக்கு வந்த இம்ரான் கானுக்கும் ராணுவத்துக்கு இடையே கருத்து வேறுபாடுகள் முற்றிவருவது தெரிந்தது.

பொருளாதாரப் பிரச்சனைகளை இம்ரான் கான் அரசு கையாண்ட விதம் மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியது, தன்னுடைய இமேஜையும் பாதிக்கும் நிலை வந்ததால், ராணுவத் தலைமை , நாசுக்காக , அரசியல் நெருக்கடியில் இம்ரான் கானுக்காக வக்காலத்து வாங்கத் தயாராக இல்லை என்பதை எதிர்க்கட்சிகளுக்கு கோடிகாட்டிவிட்டதாக கூறுகிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்.

இதன் பின்னர்தான், முக்கிய எதிர்க்கட்சிகளான, பாகிஸ்தான் முஸ்லீம் லீக்( நவாஸ்) மற்றும் பாகிஸ்தான் மக்கள் கட்சி ஆகியவை இம்ரான் கான் அரசுக்கெதிரான போராட்டங்களைத் தீவிரப்படுத்தின.

யுக்ரெயினில் இரு நிலை

இது தவிர, வெளிநாட்டுக் கொள்கையிலும் ராணுவத்திற்கும், இம்ரான் கான் அரசுக்குமிடையே உரசல்கள் இருந்து வந்தன.

அமெரிக்க ஆயுத உதவியிலேயே தனது பலத்தை தக்கவைத்திருக்கும் பாகிஸ்தானிய ராணுவத் தலைமை , அமெரிக்காவுக்கு எதிரான நிலைபாட்டை இம்ரான் கான் எடுப்பதை ரசிக்கவில்லை.

யுக்ரெய்ன் நாட்டின் மீது ரஷ்யப் படையெடுப்பு தொடங்கிய அன்று இம்ரான் கான் ரஷ்ய விஜயம் மேற்கொண்டது பலருக்கு வியப்பை அளித்தது. ரஷ்ய படையெடுப்பையும் இம்ரான் கான் கண்டிக்காமல் நடுநிலை வகித்தார்.

ஆனால், ஏப்ரல் முதல் வாரத்தில் பாகிஸ்தான் தளபதி ஜெனெரல் பாஜ்வா ரஷ்ய படையெடுப்பைக் கண்டித்து தெரிவித்த கருத்து, இம்ரான்கானுக்கும் ராணுவத்துக்கும் இடையே இந்த முக்கிய வெளிநாட்டுப் பிரச்சனையில் நிலவும் கருத்து வேறுபாடுகளை வெளிக்காட்டியது.

இப்போது பதவியிழந்த நிலையில், “ஒரு வெளிநாட்டு சக்தி”தான் பாகிஸ்தானின் அரசியல் மாற்றத்துக்கு காரணம் என்று இம்ரான் கான் குற்றம்சாட்டியிருக்கிறார். அவர் குறிப்பிடுவது அமெரிக்காவைத்தான் . ஆனால் அவரது குற்றச்சாட்டுக்கு பெரிய ஆதாரம் எதையும் அவர் முன்வைக்கவில்லை.

பாகிஸ்தானில் முறையாக பொதுத்தேர்தல் 2023ல் தான் நடக்க வேண்டும். இந்த அரசியல் நெருக்கடிக்குப் பின், புதிதாக பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஷெபாஸ் ஷரிப் அடுத்த ஆண்டு வரை பதவியில் தொடர்வாரா, அல்லது உடனடியாக தேர்தல்கள் நடத்த பரிந்துரை செய்வாரா என்பது தெரியவில்லை.

இம்ரான் கான்
சிந்துவெளி தமிழர்கள் தொடர்பு : பாகிஸ்தானில் பேசப்படும் திராவிட மொழி - ஓர் ஆச்சர்ய வரலாறு

அடுத்த இன்னிங்ஸ் உண்டா ?

ஆனால் பாகிஸ்தானில் இம்ரான் கான் இந்த சுற்றில் தோற்றுவிட்டாலும், இது அவருக்கு இறுதித்தோல்வி என்று கூறிவிட முடியாது.

பாகிஸ்தான அரசியலில் தோற்று மீண்டும் அதிகாரத்துக்கு வந்த பிரதமர்கள், பெனாசிர், நவாஸ் ஷரீப் போல, இம்ரான் கானுக்கும் இன்னொரு இன்னிங்க்ஸ் இருக்கலாம். அவர் தேர்ந்த கிரிக்கெட் வீரர்- முதல் இன்னிங்ஸில் சரியாக ஆடாவிட்டாலும், இரண்டாவது வாய்ப்பை எதிர்நோக்கிக் காத்திருப்பார் என்பது நிச்சயம். அமெரிக்கா மீது பழிபோட்டு தற்போதைய அரசியல் நெருக்கடியை அவர் கையாண்டது, அவரது ஆதரவாளர்கள் மத்தியில் ஒரு உற்சாகத்தை ஏற்படுத்தியிருக்கிறது. பாகிஸ்தானின் சர்வதேசக்கூட்டாளியாக அமெரிக்கா இருந்தாலும், அமெரிக்க எதிர்ப்பு என்ற அரசியல் நிலைப்பாட்டுக்கு, பாகிஸ்தானின் உள்நாட்டு அரசியலில் கொஞ்சம் செலாவணி உண்டு !

ஆனால் ஒன்று, பாகிஸ்தான் கிரிக்கெட் களத்தில் எப்போதும் அம்பயர் , ராணுவம்தான். அதுவும் முற்றிலும் விளையாடாத, வெளியில் இருந்து மட்டும் அதிகாரம் செலுத்தும் அம்பயர் அல்ல ; பாகிஸ்தானின் சுதந்திர வரலாற்றில் மூன்று முறை ராணுவமே நேரடியாக களத்தில் இறங்கியிருக்கிறது. களத்தில் நேரடியாக இல்லாத கால கட்டங்களிலும், பாகிஸ்தானின் அரசியலில் நிர்ணயிக்கக்கூடிய சக்தியாக இருக்கிறது அந்த நாட்டு ராணுவம்.

எனவே இம்ரான் கான் , அம்பயரைப் பகைத்துக்கொள்ளாமல் இருந்தால், அடுத்த வாய்ப்பு கிடைக்கலாம்!

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com