பிரிட்டன் உட்படப் பல நாட்டுக்கு மகாராணியாக இருந்த இரண்டாம் எலிசபெத், கடந்த வியாழக்கிழமை தன் 96ஆவது வயதில் தனக்குப் பிடித்தமான பால்மோரல் அரண்மனையில் அமைதியாகக் காலமானார்.
அவருக்கான இறுதிச் சடங்கு நிகழ்வுகள் இன்று நடைபெற்று வருகிறது. அவரது உடல் புனித ஜார்ன் தேவாலயத்தில் நல்லடக்கம் செய்யப்பட உள்ளது.
பிரிட்டன் மகாராணி எலிசபெத்தின் இறுதிச் சடங்குக்கு மட்டும் சுமார் 9 மில்லியன் டாலர் ( இந்திய மதிப்பில் ₹71 கோடி) வரை செலவழிக்க இருப்பதாக இந்துஸ்தான் டைம்ஸ் பத்திரிகையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மகாராணியாரின் இறுதிச் சடங்குக்கு சுமார் 500 அரசியல் தலைவர்கள், பல நாடுகளின் அதிபர்கள், பிரதமர்கள், வெளிநாட்டு பிரதிநிதிகள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்ப்பதாக பிபிசி கூறுகிறது.
மகாராணியாருக்கு இறுதி அஞ்சலி செலுத்தப் பல நாட்டுத் தலைவர்கள், அதிபர்கள், பிரதமர்கள் பங்கேற்க உள்ளதால் ஏற்படவிருக்கும் பாதுகாப்புச் செலவுகள், உள்ளூர் விடுமுறை காரணமாக சிறு குறு வியாபாரிகளுக்கு ஏற்படும் வியாபார நஷ்டம், புதிய அரசராக எலிசபெத் அவர்களின் மகன் சார்லஸ் பொறுப்பேற்றுக் கொள்ளவிருக்கும் நிகழ்ச்சி என செலவு கணக்கு நீள்கிறது.
இதற்கு முன் அரச குடும்பத்து இறுதிச் சடங்குகளுக்கும் மில்லியன் பவுண்ட் ஸ்டெர்லிங் கணக்கில் செலவாகியுள்ளது. உதாரணமாக 2002ஆம் ஆண்டு எலிசபெத் மகாராணியின் தாயாரின் இறுதிச் சடங்குக்கு 5.4 மில்லியன் பவுண்ட் ஸ்டெர்லிங் செலவானது. அதை இன்றைய தேதிக்கு கணக்கிட்டால் சுமார் 16 மில்லியன் அமெரிக்க டாலர் ஆகலாம்.
ஏற்கனவே பிரிட்டன் மக்கள், மின்சாரம் & எரிசக்தி போன்றவற்றின் விலைவாசி உயர்வால் கடும் அதிருப்தியில் இருக்கிறார்கள். பற்றாக்குறைக்கு அத்தியாவசியப் பொருட்களின் விலை வேறு விண்ணைத் தொட்டுக் கொண்டிருக்கிறது, பிரெக்ஸிட் பஞ்சாயத்தினால் இன்னும் பல பொருளாதார பிரச்னைகளை எதிர்கொள்ள வேண்டி இருக்கிறது. இந்த காலகட்டத்தில் மகாராணியாகவே இருந்தாலும் மில்லியன் கணக்கில் செலவழித்து இறுதி அஞ்சலி நிகழ்ச்சிகளை நடத்த வேண்டுமா என்ன? என ஒரு சிறு சலசலப்பு நிலவுவதாகவும் சில ஊடகங்களில் செய்திகளைப் பார்க்க முடிகிறது
மகாராணி இரண்டாம் எலிசபெத் அவர்களுக்கு ஐரோப்பா முழுக்க பல அரச குடும்பத்தினர் ரத்த பந்தங்களாகவே இருக்கிறார்கள். எனவே ஐரோப்பாவிலிருந்து பல அரச குடும்பத்தினர் எலிசபெத் அவர்களின் இறுதிச் சடங்கில் பங்கெடுக்கலாம்.
பெல்ஜியத்தின் அரசர் பிலிப்பெ, அரசி மதில்டே தங்கள் வருகையை உறுதி செய்துள்ளனர். நெதர்லாந்தின் அரசர் வில்லெம் அலெக்சாண்டர், அரசி மேக்சிமா அவர்களும் கலந்து கொள்ளவிருப்பதாகக் கூறியுள்ளனர்.
இவர்களைத் தொடர்ந்து ஸ்பெயின், நார்வே, ஸ்வீடன், டென்மார்க், மொனாகோ ஆகிய ராஜ குடும்பங்களும் இதில் கலந்து கொள்ளவிருக்கின்றனர்.
அமெரிக்க அதிபர் ஜோ பைடன், தன் மனைவி ஜில் பைடன் உடன் இறுதி சடங்கில் கலந்து கொள்ளவிருக்கிறார். ஆஸ்திரேலியாவின் பிரதமர் அந்தோணி அல்பனெஸ், நியூசிலாந்தின் ஜெசிண்டா ஆர்டெர்ன், கனடாவின் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, வங்கதேசத்தின் பிரதமர் ஷேக் ஹசீனா, இலங்கையின் புதிய அதிபர் ரணில் விக்ரமசிங்கே ஆகியோருக்கும் அழைப்புவிடுக்கப்பட்டு இருக்கின்றன. இந்தியா சார்பில், இந்தியாவின் குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு கலந்து கொண்டுள்ளார்.
அயர்லாந்து பிரதமர் (Taoiseach) மைக்கெல் மார்டின், ஜெர்மனியின் அதிபர் ஃப்ராங்க் வால்டர் ஸ்டெயின்மியர், இத்தாலி நாட்டின் அதிபர் செர்ஜியோ மடரெல்லா, ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைவர் உர்சுலா வொண்டர் லெயன், தென் கொரியாவின் அதிபர், யூன் சுக் யோல், பிரேசிலின் அதிபர் சயீர் போல்சனாரோ ஆகியோரும் கலந்து கொள்ள இருக்கிறார்கள்.
ஜப்பானின் அரசர் நாருஹிடோ, துருக்கியின் அதிபர் ரெசிப் தயீப் எர்டோகன், பிரான்ஸ் நாட்டின் அதிபர் இம்மானுவல் மக்ரோன் ஆகியோர் கலந்து கொள்ளலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
சீன அதிபர் ஷி ஜின்பிங் கொரோனாவுக்குப் பிறகு இப்போது தான் வெளிநாடுகளுக்குப் பயணங்களை மேற்கொள்ளத் தொடங்கியுள்ளார். அவர் மகாராணியின் இறுதிச் சடங்கில் கலந்து கொள்வாரா என்று தெரியவில்லை. இரான் நாடு சார்பாக அந்நாட்டு தூதரக அதிகாரிகள் கலந்து கொள்வர் என எதிர்பார்க்கப்படுகிறது.
உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்து, இப்போதுவரை தொடர்ந்து நடத்தி வருவதால், அந்நாட்டு அதிபர் விளாதிமிர் புதினுக்கு மகாராணியின் இறுதிச் சடங்கு நிகழ்வில் கலந்து கொள்ள அழைப்பு விடுக்கப்படவில்லை.
வட கொரியா மற்றும் நிகாராகுவா நாடுகள், தங்களின் பிரதிநிதி அல்லது அதிகாரிகளை அனுப்புமாறு அழைப்புவிடுக்கப்பட்டுள்ளது.
சிரியா, வெனிசுவேலா, ஆப்கானிஸ்தான், ரஷ்யா, பெலாரஸ், மியான்மர் போன்ற நாடுகளுக்கு மகாராணி எலிசபெத்தின் இறுதிச் சடங்கு நிகழ்ச்சியில் பங்கெடுக்க அழைப்பு விடுக்கப்படவில்லை.
செப்டம்பர் 19ஆம் தேதி அரசர் சார்லஸ், மற்ற அரச குடும்பங்கள் மற்றும் பல நாட்டு அதிபர், பிரதமர், நாட்டின் தலைவர்களை வரவேற்பார். வெஸ்மின்ஸ்டர் ஹாலில் இருந்து, ஆபே பகுதிக்கு மகாராணியாரின் உடல் கொண்டு வரப்படும். பிரிட்டன் முழுக்க இரண்டு நிமிட மெளனம் கடைபிடிக்கப்படும்.
பிரார்த்தனைகள் எல்லாம் முடிந்து ஊர்வலமாக மகாராணியாரின் உடல் ஹைட் பார்க்குக்கு எடுத்துச் செல்லப்படும். இறுதியாக விண்ட்சர் கோட்டையில் உள்ள புனித ஜார்ஜ் தேவாலயத்தில் கணவர் பிலிப்புக்கு அருகிலேயே அவரது உடலும் நல்லடக்கம் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust