செளதி அரசர் முதல் இங்கிலாந்து ராணி வரை: உலக அரச குடும்பங்களின் சொத்துமதிப்பு இவ்வளவா?

அதிகாரம் இருக்குமிடத்துக்கு தான் பணம் வந்து சேரும் அல்லது பணமிருக்கும் இடத்துக்கு தான் அதிகாரம் சொந்தமாகும். அப்படி அதிகாரத்தையும் வைத்துக்கொண்டு, பணக்காரர்களாகவும் இருக்கும் அரச குடும்பங்களைத் தான் இப்போது பார்க்கப்போகிறோம்.
Saudi
Saudi NewsSense
Published on

எப்போது பார்த்தாலும் அடிப்படை வாழ்க்கை தேவைகளுக்கு நாம் போராடிக் கொண்டிருக்கும் போது அரச குடும்பத்தில் எல்லாம் பிறந்திருந்தால் எத்தனை நிம்மதியாக இருந்திருக்கும். நிம்மதியாக அரச பொறுப்புகளை எல்லாம் நிர்வகித்துவிட்டு, வெயிலுக்கு ஊட்டி, கொடைக்கானல் என ஊர் சுற்றிவிட்டு ஜாலியாக் இருந்திருக்கலாம் என நம்மில் பலரும் நினைத்திருப்போம்.

உலகில் பெரும்பாலான நாடுகளில் முடியாட்சி முறை முடிவுக்குக் கொண்டு வரப்பட்டிருந்தாலும், பல நாடுகளில் இன்னும் அரச குடும்பத்துக்கான மரியாதை வழங்கப்பட்டு வருகிறது. சில நாடுகளில் இப்போதும் மன்னரே அல்லது மகாராணியே அரசாங்கத்தின் முக்கிய முடிவுகளை எடுக்கும் அளவுக்குச் சக்தி வாய்ந்தவர்களாக இருக்கிறார்கள்.

அப்படி இன்று வரை உலகில் இருக்கும் பல அரச குடும்பங்கள் மற்றும் அவர்கள் சொத்து மதிப்பைத் தான் இக்கட்டுரையில் சுருக்கமாகப் பார்க்கப் போகிறோம். இதில் சில அரச குடும்பத்தினரின் சொத்து மதிப்பு சில மில்லியன்கள் மட்டுமே இருக்கின்றன, இன்னும் சில அரச குடும்பத்தின் சொத்து மதிப்பு பல பில்லியன்களைத் தொடுகின்றன.

23. லார்ட் எக்ரெமான்ட் - இங்கிலாந்து

ஜான் மேக்ஸ் ஹென்றி ஸ்கவென் விண்டம் தான் இவரது முழு பெயர். இவர் பெட்வொர்த் ஹவுஸ் என்கிற சஸெக்ஸில் உள்ள அரண்மனையில் வாழ்ந்து வரும் அரச குடும்பத்து வாரிசு. எழுத்து இவர் தொழில். மேக்ஸ் எக்ரெமான்ட் (Max Egremont) என்கிற பெயரில் பல நாவல்களை எழுதியுள்ளார். இவரது சொத்து மதிப்பு 72 மில்லியன் டாலர்.

Saudi
கே எஸ் பாராக் : வேலையை இழந்த இந்தியர் ஐக்கிய அரபு அமீரகத்தின் மில்லியனர் ஆன கதை

22. பிரின்சஸ் ஸ்டிஃபனி ஆஃப் மொனாகோ

இளவரசி ஸ்டிஃபனி மேரி எலிசபத் ஆஃப் மொனாகோ, மூன்றாம் ரைனீர் மற்றும் அமெரிக்க நடிகை க்ரேஸ் கெல்லிக்கு பிறந்த மகள். இவர் ஒரு மாடல் மற்றும் பாடகர். ஆடை வடிவமைப்பு மீது கொண்ட காதல் காரணமாக கிறிஸ்டியன் டியோரில் பணியாற்றினார்.

21. பிரின்சஸ் கெரொலின் ஆஃப் மொனாகோ

ஸ்டிஃபனியின் மூத்த சகோதரிதான் இவர். ஹனோவரின் இளவரசரை திருமணம் செய்து கொண்டதால் இவர் ஹனோவரின் இளவரசி பட்டத்தைப் பெற்றார். தத்துவம், உளவியல், உயிரியல் படித்தவர். கெரொலின் மூன்றாவது திருமணமாகத் தான் ஹனோவரின் இளவரசரை மணந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

குழந்தைகளுக்காக பல்வேறு உதவிகளை முன்னெடுத்ததன் காரணமாக யுனெஸ்கோவின் நல்லெண்ணத் தூதராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டவர் இவர். இவரது சொத்து மதிப்பு சுமார் 100 மில்லியன் டாலர்.

Saudi
எலான் மஸ்க்: சிறு வயதில் மோசமான நெருக்கடிகள் முதல் உலகின் No 1 பணக்காரர் வரை - யார் இவர்?

20. பிரின்ஸ் சார்லஸ் இங்கிலாந்து

சார்லஸ் பிலிப் ஆர்தர் ஜார்ஜ், வேல்ஸின் இளவரசர் மற்றும் இரண்டாம் எலிசபத் மகாராணியின் மகன். இங்கிலாந்து அரியணையின் அடுத்த வாரிசு. இது போக பல அரச பட்டங்களும் இவருக்கு உண்டு.

கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில், ட்ரினிட்டி கல்லூரியில் அகழ்வாராய்ச்சி, மானுடவியல், வரலாறு படித்தவர். பட்டப்படிப்புக்குப் பிறகு, தன் மூதாதையர்களைப் போலவே பிரிட்டனின் ராயல் நேவியில் பணிக்குச் சேர்ந்தார்.

இவர்தான் உலகப் புகழ்பெற்ற இளவரசி டயானாவின் கணவர். 1986ஆம் ஆண்டு இவர்கள் இருவருக்கும் தேவாலயத்தால் திருமண முறிவு செய்யப்பட்டு முறைப்படி அறிவிக்கப்பட்டது. 1997 ஆகஸ்ட் 31ஆம் தேதி இளவரசி டயானா கார் விபத்து ஒன்றில் பாரீஸ் நகரில் இறந்தார். இந்த தம்பதிகளுக்குப் பிறந்தவர்கள் தான் இளவரசர் வில்லியம் மற்றும் ஹேரி.

2005ஆம் ஆண்டு இளவரசர் சார்லஸ், கெமிலா பார்கரை மணந்தார். இவரது சொத்து மதிப்பு சுமார் 100 மில்லியன் டாலர்.

எஸ்வாதினியின் அரசர் மூன்றாம் ஸ்வாதி
எஸ்வாதினியின் அரசர் மூன்றாம் ஸ்வாதி Twitter

19. எஸ்வாதினியின் அரசர் மூன்றாம் ஸ்வாதி (King Mswati III)

ஸ்வாசிலாந்து என ஒரு ஆப்பிரிக்கத் தேசத்தைக் கேள்விப்பட்டிருப்பீர்கள். ஆப்பிரிக்காவில் இப்போது முடியாட்சி இருக்கும் ஒரே நாடு அது. அதன் அரசர் தான் மூன்றாம் ஸ்வாதி.

இரண்டாம் சோபுசா மற்றும் டோம்பி வாலாவுக்கு 1968ஆம் பிறந்தவர் இந்த மகொசெடிவ் (Makhosetive). இவருக்கு 14 வயதிருக்கும் போது இரண்டாம் சொபுசா காலமானார். 18 வயதில் ஆட்சி அதிகாரத்துக்கு வந்தார் மகொசெடிவ்.

இவரால் ஸ்வாசிலாந்தின் பிரதமர், அரசை நிர்வகிக்கும் கேபினெட் உறுப்பினர், நீதித் துறை அதிகாரிகள் என யாரை வேண்டுமானாலும் நியமிக்க முடியும். ஆனால் இவரால், தனக்குப் பின் யார் ஆட்சிக்கு வர வேண்டும் என்பதைத் தீர்மானிக்க முடியாது.

பலதார மணம் ஸ்வாசிலாந்தில் சட்டப்பூர்வமான ஒன்று என்பதால் இவருக்கு 15 மனைவிகள் மற்றும் 36 குழந்தைகள் உள்ளனர். இவரது சொத்து மதிப்பு சுமார் 100 மில்லியன் டாலர்.

Saudi
டாடா குழுமம் வரலாறு : ஏன் உலக பணக்காரர்கள் பட்டியலில் டாடா இல்லை ? | நிறைவுப் பகுதி

18. ஜான் மான்டாக் - எர்ல் ஆஃப் சாண்ட்விச்

1730களில் ஜான் மான்டாக் என்பவர் நான்காவது எர்ல் ஆஃப் சாண்ட்விச் என்கிற பட்டத்திலிருந்தார். இதுவரை உண்மை.

அவருக்குச் சூதாட்டம் என்றால் ரொம்பப் பிடிக்கும். தன் சீட்டாட்டம் தடைப்படாமல் இருக்க, மனிதர் பிரெட் துண்டுகளுக்கு இடையில் வறுத்த மாட்டு இறைச்சியை வைத்துச் சாப்பிட்டார். அப்படித் தான் சாண்ட்விச் என்கிற உணவே உருவானது, மெல்லப் பிரபலமானது என்று ஒரு கதை கூறப்படுகிறது. அது உண்மையோ பொய்யோ, எர்ல் ஆஃப் சாண்ட்விச் என்கிற பெயர் இருப்பதாலேயே இந்த பதவியில் இருப்பவர்கள் பிரபலமடைந்தனர்.

தற்போது அந்த ஜான் மான்டாக்கின் நேரடி வாரிசான ஜான் எட்வர்ட் ஹொலிஸ்டர் மான்டாக் 11ஆவது ஏர்ல் ஆஃப் சாண்ட்விச்சாக பதவியில் இருக்கிறார். ஹவுஸ் ஆஃப் லார்ட்ஸ் என்கிற சபையிலும் உறுப்பினராக இருக்கிறார். இவரது சொத்து மதிப்பு சுமார் 100 மில்லியன் டாலர்.

ஃபராஹ் பலாவி
ஃபராஹ் பலாவிTwitter

17. ஃபராஹ் பலாவி - இரானில் வாழ்ந்த கடைசி ஷாவின் மனைவி

சொராப் திபா மற்றும் ஃபரிதெ கோட்பிக்கு மகளாக 1938ஆம் ஆண்டு பிறந்தவர், 1959ஆம் ஆண்டு இரான் நாட்டின் அரசர் மொஹம்மத் ரெசா பலாவியைத் திருமணம் செய்து கொண்டார். அவர் தான் இரான் நாட்டின் கடைசி ஷா மன்னர். இந்த தம்பதிக்கு இளவரசர் ரெசா உட்பட நான்கு குழந்தைகள்.

1967ஆம் ஆண்டு ஃபராஹ் பலாவி, இரானின் ஷாபானுவாக (அரசி) முடிசூட்டப்பட்டார். சுமார் 2,500 ஆண்டுக் கால பெர்ஷிய வரலாற்றில் மகாராணியாக நாட்டை ஆட்சி செய்த முதல் பெண்ணும் இவர்தான். இரானில் ஏற்பட்ட பல்வேறு அரசியல் மாற்றங்கள் காரணமாக, இரானின் கடைசி முடியாட்சியின் சாட்சியாக இருந்ததும் இவர்தான்.

20ஆம் நூற்றாண்டின் மத்தியில், அப்போதே பாரிஸ் நகரத்துக்குச் சென்று கட்டடக் கலை தொடர்பாகப் படித்தவர். இரானில் அமெரிக்க பாணியிலான பல்கலைக்கழகங்களை உருவாக்கியவர். பெண்கள் கல்விக்காகத் தொடர்ந்து உழைத்த பெருமைக்குரியவர். இவரது சொத்து மதிப்பு சுமார் 100 மில்லியன் டாலர்.

Saudi
அரபு உலகின் டாப் 10 பணக்காரர்கள் இவர்கள்தான் - விரிவான தகவல்

16. பிரின்ஸ் இம்மானுவல் ஃபிலிபெர்டோ ஆஃப் சவாய்

இத்தாலியின் கடைசி அரசர் இரண்டாம் உம்பெர்டோவின் பேரன். பைட்மன்ட் மற்றும் வெனிஸ் நகரத்தின் இளவரசர் இவர். தேர்ந்த நடனக் கலைஞர். சில பிரபல நடனப் போட்டிகளில் பங்கெடுத்து உலகப் புகழ்பெற்றவர். பொழுது போக்குத் துறையில் சவாய் & க்ரிகோரி, ராயல் மீ அப் என இரண்டு தயாரிப்பு நிறுவனங்களை நடத்தி வருவதாக சில வலைத்தளங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இது போக லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் சொந்தமாக ஒரு பாஸ்தா உணவு டிரக்கையும் நடத்தி வருகிறார். ஹவுஸ் ஆஃப் சவாய் என்கிற அரச குடும்பத்துக்குச் சொந்தமான, சுமார் 335 மில்லியன் டாலர் மதிப்பு கொண்ட நகைகளை மீட்க இத்தாலிய அரசு மற்றும் பேங்க் ஆஃப் இத்தாலிக்கு எதிராகப் போராடி வருகிறார். இதுவரை வெற்றி கிடைக்கவில்லை. இவரது சொத்து மதிப்பு சுமார் 100 மில்லியன் டாலர்.

 பிரின்சஸ் சார்லென் ஆஃப் மொனாகோ
பிரின்சஸ் சார்லென் ஆஃப் மொனாகோ Twitter

15. பிரின்சஸ் சார்லென் ஆஃப் மொனாகோ

ஜிம்பாபேவில் பிறந்து, தென்னாப்பிரிக்காவில் வளர்ந்த சார்லென் லினெட் விட்ஸ்டாக், கடந்த 2011ஆம் ஆண்டு மொனாகோவின் இளவரசர் ஆல்பர்டை திருமணம் செய்து கொண்ட பின் மொனாகோவின் இளவரசி ஆனார்.

இவர் 2000ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடந்த ஒலிம்பிக் போட்டியில், தென்னாப்பிரிக்கா சார்பாக நீச்சல் போட்டியில் கலந்து கொண்டவர். ஒரு நீச்சல் போட்டியில் தான் ஆல்பர்டும் இவரும் சந்தித்துக் கொண்டார்கள் என்பதும் இங்கு நினைவுகூரத்தக்கது.

இளவரசியான பின், பிரின்சஸ் சார்லென் ஆஃப் மொனாகோ ஃபவுண்டேஷன் என்கிற அமைப்பை நிறுவி பல்வேறு உதவிகளைச் செய்து வருகிறார்.

சிறப்பு ஒலிம்பிக்ஸுக்கான தூதராகவும் இருக்கிறார். கடந்த 2014ஆம் ஆண்டு இத்தம்பதியினர் இரட்டையர்களைப் பெற்றெடுத்தனர். இவரது சொத்து மதிப்பு 150 மில்லியன் டாலர்.

Saudi
லாரன்ஸ் ஆஃப் அரேபியா : அரபு உலகைக் கலக்கியவரின் சாகச வரலாறு - விறுவிறுப்பான கதை

14. பிரின்சஸ் பீட்ரிக்ஸ் ஆஃப் தி நெதர்லேண்ட்ஸ்

1938ஆம் ஆண்டு பீட்ரிக்ஸ் வில்ஹெல்மினா பிறந்த போதே நெதர்லாந்தின் இளவரசி பட்டத்தைப் பெற்றார். இளவரசி ஜூலியானா மற்றும் இளவரசர் பெர்ன்ஹார்டுக்குப் பிறந்த இவர், லெய்டன் பல்கலைக்கழகத்தில் சமூகவியல், சட்டம், பொருளாதாரம் படித்தவர்.

பீட்ரிக்ஸ், ஜெர்மனைச் சேர்ந்த ராஜரீக அதிகாரி க்ளாஸ் வான் ஆம்ஸ்பெர்கை திருமணம் செய்ய, நெதர்லாந்தின் நாடாளுமன்ற இரு அவைகளிலும் ஒப்புதல் பெற வேண்டி இருந்தது. ஒருகட்டத்தில் க்ளாஸ் வான் ஆம்ஸ்பெர்க் டச்சுக் குடிமகனாகி பீட்ரிக்ஸின் கரம் பிடித்தார். இந்த தம்பதிகளுக்கு 3 குழந்தைகள்.

1980ஆம் ஆண்டு அரசியாகப் பொறுப்பேற்றுக் கொண்ட பீட்ரிக்ஸ், கடந்த 2013ஆம் ஆண்டு அப்பட்டத்தைத் துறந்தார். இவரது சொத்து மதிப்பு 200 மில்லியன் டாலர்.

கரொலின் லுயல் ப்ராக்டார்ஃப்
கரொலின் லுயல் ப்ராக்டார்ஃப்Twitter

13. கரொலின் லுயல் ப்ராக்டார்ஃப் - டென்மார்க்

பிறப்பால் அரச குடும்பத்தைச் சேர்ந்த கரொலின், கடந்த 2001ஆம் ஆண்டு தன் அரச பட்டத்தைத் துறந்தார். காரணம், ராரி ஃப்ளெம்மிங் என்கிற அரச குடும்பத்தைச் சேராத அட்டர்னி ஒருவரைக் கரம் பிடித்தார் கரொலின். இந்த காதல் ஜோடிக்கு இரு குழந்தைகள்.

இந்த காதல் ஜோடி 2008ஆம் ஆண்டு பிரிந்தது. இருப்பினும் கரொலின், தன் பெயருக்குப் பின்னாள் உள்ள ஃப்ளெம்மிங் என்கிற பெயரை நீக்கவில்லை. இந்த விவாகரத்து மூலம் தான் அவருக்குக் கணிசமாகச் சொத்து கிடைத்தது.

மாடலிங், எழுத்து, வாசனைத் திரவியங்களை உருவாக்குவது, ஊடகப் பணி எனப் பல விஷயங்களைச் செய்து வருகிறார். இவரது சொத்து மதிப்பு சுமார் 400 மில்லியன் டாலர்.

Saudi
Jio அம்பானி கதை: அரசியலில் வியாபாரம், வியாபாரத்தில் அரசியல் - திருபாய் மங்காத்தா |பகுதி 16

12. மார்தா லேன் ஃபாக்ஸ் - சோஹோ, இங்கிலாந்து

பிரிட்டனில் உள்ள ஃபாக்ஸ் அரச குடும்பத்தைச் சேர்ந்தவர். 21ஆம் நூற்றாண்டின் தொடக்கக் காலத்தில் Last Minute என்கிற பயணம் மற்றும் பொழுது போக்கு நிறுவனத்தைத் தொடங்கினார். அத்தளத்தை சாப்ரே ஹோல்டிங்ஸ் என்கிற நிறுவனம் 577 மில்லியன் பிரிட்டிஷ் பவுண்ட் ஸ்டெர்லிங் கொடுத்து 2005ஆம் ஆண்டு வாங்கிக் கொண்டது.

டிஜிட்டல் தொழில்நுட்பம் மற்றும் கணினி அறிவு பரவலாக்கப்பட வேண்டும் என வலுவாக தன் கருத்தை முன்வைத்து வருபவர். கடந்த 2013ஆம் ஆண்டு முதல் ஹவுஸ் ஆஃப் லார்ட்ஸில் உறுப்பினராக இருக்கிறார்.

தற்போது ட்விட்டர், வீ டிரான்ஸ்ஃபர், சேனல் போன்ற தனியார் நிறுவனங்களின் இயக்குநர் குழுவில் ஒருவராக இருக்கிறார். பிரிட்டன் அரசியின் காமன்வெல்த் டிரஸ்டிலும் டிரஸ்டியாக இருக்கிறார். இவரது சொத்து மதிப்பு 500 மில்லியன் டாலர்.

Saudi
வெளிநாடுகளுக்கு குடிபெயரும் இந்தியாவின் பெரும் பணக்காரர்கள் - ஏன்?

11. இங்கிலாந்து அரசி இரண்டாம் எலிசபெத்

தற்போது வரை உலகம் முழுக்க இங்கிலாந்து மகாராணியாக அறியப்படும் இரண்டாம் எலிசபெத் தான், எலிசபெத் அலெக்சாண்ட்ரா மேரி.

1930களில், அரசர் ஐந்தாம் ஜார்க் காலமான பின், அவரது மாமா அரசர் எட்டாம் எட்வர்ட் தன் அரச பதவியைத் துறந்தார். எலிசபெத்தின் தந்தை அரசர் ஆறாம் ஜார்ஜ் அரசராக, எலிசபெத் தன்னிச்சையாகப் பட்டத்துக்கான இளவசரசியாகிவிட்டார்.

1947ஆம் ஆண்டு, கிரீஸ் மற்றும் டென்மார்கின் இளவரசர் பிலிப் மவுன்ட் பேட்டனை திருமணம் செய்து கொண்டார். 2021ஆம் ஆண்டு இளவரசர் பிலிப் இறக்கும் வரை அவரோடு வாழ்ந்தார். இத்தம்பதிகளுக்கு 4 குழந்தைகள். 1952ஆம் ஆண்டு ஆறாம் ஜார்ஜ் மன்னர் காலமான பின், எலிசபெத் மகாராணியானார்.

பிரிட்டன் வரலாற்றில், நீண்ட நாட்களாக ஆட்சி செய்தவர் என்கிற பெருமைக்குச் சொந்தக்காரர் அரசி இரண்டாம் எலிசபெத்தான். இவர் சொத்து மதிப்பு 600 மில்லியன் டாலர்.

10. ஜோர்டனின் அரசர் இரண்டாம் அப்துல்லா

ஜோர்டனின் அரசர் அப்துல்லா, இறைத் தூதர் மொஹம்மத் வழி வந்தவர்களாகக் கருதப்படுகிறார். 1962ஆம் ஆண்டு பிறந்த அப்துல்லா இபின் அல் ஹுஸ்ஸெயின் ஆக்ஸ்ஃபோர்ட் மற்றும் ஜார்டவுன் பல்கலைக்கழகங்களில் படித்தவர். பிரிட்டனின் ராயல் மிலிட்டர் அகாடமியிலும் படித்தவர்.

ஜோர்டன் நாட்டு ராணுவத்தில் முதல் நிலை லெப்டினண்டாக பணியைத் தொடங்கி மேஜர் ஜெனரல் வரை உயர்ந்தார். பின் ஜோர்டானின் சிறப்புப் படைகளுக்கான தளபதி பதவியை வகித்தார்.

1999ஆம் ஆண்டு, அப்துல்லாவின் தந்தை மரணித்த பின், அரியணை ஏறினார். அரசர் இரண்டாம் அப்துல்லா இஸ்லாத்திலும் சரி, உலக மதங்களிலும் சரி அமைதியை நிறுவ வேண்டும் என்கிற கருத்தோடு பல பணிகளை முன்னெடுத்தார், முன்னெடுத்து வருகிறார்.

1993ஆம் ஆண்டு அரசர் அப்துல்லா ராணியாவை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு நான்கு குழந்தைகள். இவர் சொத்து மதிப்பு 750 மில்லியன் டாலர்.

ஷா கரிம் அல் ஹுசைனி
ஷா கரிம் அல் ஹுசைனிTwitter

9. நான்காம் அகா கான்

ஷா கரிம் அல் ஹுசைனி தான் இந்த நான்காம் அகா கான். மெளலானா ஹசர் இமாம் என்றால் அவரைப் பின் தொடரும் லட்சக் கணக்கான இஸ்லாமியர்களுக்குத் தெரியும். மேலும் இவர் 49ஆவது நிசாரி இஸ்லாமியர்களின் இமாமாகவும் இருக்கிறார்.

தன் தாத்தாவைத் தொடர்ந்து, இவர் தன் 20ஆம் வயதில், 1957ஆம் ஆண்டு அகா கான் என்கிற பட்டத்தை ஏற்றார். இவர்களும் இறைதூதர் மொஹம்மதின் வழித் தோன்றல்கள் என்றே கூறிக் கொள்கிறார்கள்.

ஜெனீவாவில் பிறந்து, நெய்ரோபியில் வளர்ந்த நான்காம் அகா கான், லெ ரோசி மற்றும் ஹார்வர்டில் படித்தவர். அகா கான் டெவலெப்மெண்ட் நெட்வொர்க் (AGDN) என்கிற பெயரில் லாப நோக்கற்ற பல சமூக சேவைகள் மற்றும் லாபமீட்டும் நோக்கில் பல துறைகளில் தொழிலும் செய்து வருகிறார்.

இவர் 1969ஆம் ஆண்டு பிரிட்டிஷ் மாடல் சாரா ஃப்ரான்செஸை மணந்தார். இத்தம்பதிக்கு 3 குழந்தைகள் பிறந்தனர். 1995ஆம் ஆண்டு இத்தம்பதி விவாகரத்து செய்து கொண்டனர்.

1998ஆம் ஆண்டு கேப்ரியல் ரெனெத் தைசன் என்பவரை இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். அவர் மூலம் ஒரு குழந்தை பிறந்தது. தற்போது அகா கான் பிரான்ஸ் நாட்டில் வாழ்ந்து வருகிறார். இவர் சொத்து மதிப்பு 800 மில்லியன் டாலர்.

ஹெச்.ஐ.வி நோய்க்கு எதிராக இவர் பல பிரசாரங்களை முன்னெடுத்துள்ளார். இவரது சொத்து மதிப்பு 100 மில்லியன் டாலர்.

Saudi
ராய் பகதூர் மோகன் சிங் : 25 ரூபாயில் வாழ்வைத் தொடங்கி சாம்ராஜ்ஜியத்தைக் கட்டிய மனிதர்
பிரின்ஸ் இரண்டாம் ஆல்பர்ட் - மொனாகோ
பிரின்ஸ் இரண்டாம் ஆல்பர்ட் - மொனாகோTwitter

8. பிரின்ஸ் இரண்டாம் ஆல்பர்ட் - மொனாகோ

அமெரிக்கப் பிரபல நடிகை கிரேஸ் கெல்லி மற்றும் மூன்றாம் ரைனியரின் மகன்தான் இந்த ஆல்பர்ட். 2005ஆம் ஆண்டு தந்தை ரைனியரின் மரணத்தைத் தொடர்ந்து மொனாகோவின் இளவரசர் பட்டத்துக்கு வந்தார்.

காலநிலை மாற்றத்தை எதிர்த்து போராடும் அரச குடும்ப வாரிசுகளில் இவரும் ஒருவர். பாப்ஸ்லே என்கிற பனிசருக்கு விளையாட்டில், மொனாகோ நாடு சார்பாக ஐந்து முறை ஒலிம்பிக்கில் பங்கெடுத்துள்ளார். சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியில் 1985 முதல் உறுப்பினராக இருக்கிறார்.

இக்கட்டுரையில் மேலே பார்த்த சார்லெனின் கணவர் இவர். இவரது சொத்து மதிப்பு 1 பில்லியன் டாலர்.

Saudi
டாடா குழுமம் வரலாறு : "இவன் உலகை வெல்வான்” ஜே ஆர் டி டாடாவின் அத்தியாயம்! | பகுதி 11

7. மேரி சான்டல் - கிரீஸ் இளவரசி

மேரி சான்டல் க்ளெய்ர் மில்லர், ராபர்ட் வாரன் மில்லரின் மகள். கிரீஸின் இளவரசர் பாலோஸைப் பார்த்த உடனேயே காதல் மலர, அது 1995ஆம் ஆண்டு திருமணத்தில் நிறைவடைந்தது.

1970களிலிருந்து கிரீஸ் முடியாட்சி முறையைப் பின்பற்றுவதில்லை என்றாலும், இளவரசர் மற்றும் இளவரசி பட்டங்கள் இன்னும் நடைமுறையில் இருக்கின்றன. அதோடு இவர்களுக்கு சில ராஜ ரீக ரீதியிலான பணிகளும் உள்ளன. இத்தம்பதிகளுக்கு ஐந்து குழந்தைகள்.

Marie - Chantal என்கிற பெயரில் ஒரு குழந்தைகளுக்கான ஆடைகள் நிறுவனத்தை நடத்தி வருகிறார். சில ஆண்டுகளுக்கு முன் “Manners Begin at Breakfast: Modern Etiquette for Families” என்கிற புத்தகத்தையும் எழுதினார். இவர் சொத்து மதிப்பு 2 பில்லியன் டாலர்.

6. ஆறாம் மொஹம்மத் - மொராக்கோவின் அரசர்

17ஆம் நூற்றாண்டு முதல் மொராக்கோ நாட்டை அலாய்ட் வம்சத்தினர் (Alaouite Dynasty) ஆட்சி செய்து வருகிறார்கள். கடந்த 1999 முதல், ஆறாம் மொஹம்மத் மொராக்கோவை ஆட்சி செய்து வருகிறார். இவருக்கு முன் அவரது தந்தை இரண்டாம் ஹசன் ஆட்சி செய்து வந்தார்.

வெறும் அரச பதவியைத் தாண்டி, Societe Nationale d'Investissement என்கிற நிறுவனத்தின் 35% பங்கையும், பாத்தியப்பட்ட சொத்தாகப் பெற்றார். இந்த நிறுவனம் மொராக்கோ நாட்டின் மிகப்பெரிய வங்கி, சுரங்க நிறுவனம், சர்க்கரை உற்பத்தி நிறுவனம், பால் தயாரிப்பு நிறுவனம்... எனப் பல நிறுவனங்களின் பங்குகளில் முதலீடு செய்து வைத்துள்ளது.

மொராக்கோ நாட்டில், அரசரால், அந்நாட்டு பிரதமர், கேபினெட் உறுப்பினர்கள், நீதிபதிகள் எனப் பல உயர் அதிகாரிகளை நியமிக்க முடியும். அவர் தான் அந்நாட்டின் படைத் தளபதி.

அரசர் ஆறாம் மொஹம்மத், 2002ஆம் ஆண்டு சல்மா பெனானி என்பவரை மணந்தார். அவர்களுக்கு இரண்டு குழந்தைகள். இவரது சொத்து மதிப்பு 2.1 பில்லியன் டாலர்.

Saudi
அலெக்ஸாண்டர் வாங்: 19 வயதில் படிப்பை நிறுத்திய உலகின் இளம் பில்லியனர் - யார் இவர்?

5. ஹன்ஸ் இரண்டாம் ஆடம் - லிச்டென்ஸ்டைனின் இளவரசர்

ஆடம் ஃபெர்டினண்ட் அலோயிஸ் ஜோசஃப் மரியா மார்கோ டி அவியனோ பியுஸ் - தற்போது லிச்டென்ஸ்டைனின் நாட்டின் இளவரசராக இருக்கிறார்.

இளவரசர் இரண்டாம் ஃப்ரான்ஸ் ஜோசஃப் மற்றும் லிச்டென்ஸ்டைனின் இளவரசி ஜீனாவுக்குப் (ஜார்ஜினா வொன் வில்செக்) பிறந்த மகன் இவர். சுவிட்சர்லாந்தில் புனித கெலன் பல்கலைக்கழகத்தில் வணிக மேலாண்மை மற்றும் பொருளாதாரம் படித்தவர்.

இவருக்கு லிச்டென்ஸ்டைன் நாட்டின் அமைச்சர்கள், நீதிபதிகள் வரை நியமிக்க அதிகாரமுண்டு. உலகின் மிகப்பெரிய தனியார் வங்கி மற்றும் சொத்து மேலாண்மை நிறுவனமான லிச்டென்ஸ்டைன் குளோபல் டிரஸ்ட் இவருடைய குடும்பத்துக்குச் சொந்தமானது தான். இவர் சொத்து மதிப்பு 7 பில்லியன் டாலர்.

4. இளவரசர் அல் வாலீத் பின் தலால் அல் செளத் - செளதி அரேபியா

செளதி அரேபியாவின் முதல் அரசர் அப்துல்லாசீஸின் பேரன் இவர். கலிஃபோர்னியாவின் மென்லோ கல்லூரியில் வணிக மேலாண்மை, நியூயார்க்கில் சிராகஸ் பல்கலைக்கழகத்தில் சமூக அறிவியலில் முதுகலைப் பட்டம் பெற்றவர்.

இவர் நான்கு முறை திருமணம் செய்து விவகாரத்து செய்துள்ளார். இவர் கிங்டம் ஹோல்டிங் கம்பெனி என்கிற பெயரில் ஒரு நிறுவனத்தை நடத்தி வருகிறார். Lyft, ட்விட்டர், சிட்டி குழுமம், 4 சீசன்ஸ், பாரீஸ் ஹோட்டல் ஜார்ஜ் 5, லண்டனின் சவாய் ஹோட்டல் எனப் பல பெரிய நிறுவனங்களில் முதலீடு செய்துள்ளார்.

அல்வாலீத் ஃபிலாந்தரஃபீஸ் என்கிற அமைப்பு மூலம் சுமார் 3.5 பில்லியன் டாலர் அளவுக்கு பல்வேறு சமூக நலத் திட்டங்களை அரபு உலகத்துக்குச் செய்துள்ளார். உலக பில்லியனர்கள் பட்டியலில் கூட இடம் பிடித்து வந்தவருக்கு யார் கண்பட்டதோ சில சட்ட சர்ச்சைகளில் சிக்கினார்.

கடந்த 2017ஆம் ஆண்டு பணச் சலவை, லஞ்சம் கொடுத்தல் போன்ற சில குற்றத்துக்காகக் கைது செய்யப்பட்டார். சமாதான பேச்சு, பணம் கொடுத்து சரிக்கட்டுதல் என ஒருவழியாக கடந்த 2018ஆம் ஆண்டு விடுவிக்கப்பட்டார். இவர் சொத்து மதிப்பு 17 பில்லியன் டாலர்.

சல்மான் பின் அப்துல்லாசிஸ் அல் செளத்
சல்மான் பின் அப்துல்லாசிஸ் அல் செளத் Twitter

3. செளதி அரேபியாவின் சல்மான்

சல்மான் பின் அப்துல்லாசிஸ் அல் செளத். கடந்த 2015ஆம் ஆண்டு முதல் செளதி அரேபியாவின் அரசராக இருக்கிறார். இவருடைய தந்தை அப்துல்லாசிஸ் பின் அப்துல் ரஹ்மான் அல் செளத் தான் செளதி அரேபியாவின் முதல் அரசர் மற்றும் செளதியை நிறுவியவர்.

செளதி அரச குடும்பத்தில் பிறந்து, பல்வேறு அரச பதவிகளை வகித்து கடைசியில் செளதியின் அரசராகிவிட்டார். இவர் 3 முறை திருமணம் செய்து கொண்டார். இவருக்கு 13 குழந்தைகள். இவர் சொத்து மதிப்பு 20 பில்லியன் டாலர்.

Saudi
Jio Ambani கதை : திருபாய் அம்பானியை ஒதுக்கிவைத்த பாம்பே பணக்காரர்கள் | பகுதி 7
மூன்றாம் ஹசனல் பொல்கியா இபினி ஒமர் அலி சைஃபுதீன்
மூன்றாம் ஹசனல் பொல்கியா இபினி ஒமர் அலி சைஃபுதீன்Twitter

2. மூன்றாம் ஹசனல் பொல்கியா இபினி ஒமர் அலி சைஃபுதீன் - ப்ருனேவின் சுல்தான்

ப்ருனே நாட்டின் அரசர் இவர். மூன்றாம் சுல்தான் ஒமர் அலி சைஃபுதீனின் மூத்த மகன் இவர். இயற்கை எரிவாயு மற்றும் கச்சா எண்ணெய் மூலம் இவருடைய சொத்து பத்துக்கள் அதிகரித்தன.

மூன்று முறை திருமணம் செய்து கொண்டார். இவருக்கு மொத்தம் 12 குழந்தைகள். இளவரசர் அல் முஹ்தாதே பில்லா அடுத்த வாரிசாக அரியணை ஏற உள்ளார். இவரது சொத்து பத்துக்கள் சுமார் 30 பில்லியன் டாலர் தேறும்.

மஹா வஜ்ரலங்கோன்
மஹா வஜ்ரலங்கோன்Twitter

1. மஹா வஜ்ரலங்கோன் - தாய்லாந்தின் அரசர்

1952ஆம் ஆண்டு தாய்லாந்தின் முன்னாள் அரசர் பூமிபோல் அடுல்யடேஜ் மற்றும் ராணி சிரிகித்துக்கு பிறந்தார் மஹா வஜ்ரலங்கோன். கடந்த 2016ஆம் ஆண்டு பூமிபோல் காலமான பின், 2019ஆம் ஆண்டு தான் வஜ்ரலங்கோன் தாய்லாந்தின் அரசரானார்.

1977ஆம் ஆண்டு முதல் இதுவரை ஐந்து பெண்களைத் திருமணம் செய்து கொண்டார். ஏகப்பட்ட வாரிசுகள் உள்ளனர். தாய்லாந்து க்ரவுன் ப்ராபர்டி பியூரோ என்கிற அமைப்பு, அரச குடும்ப சொத்துக்களை நிர்வகித்து வருகிறது. அதன் மதிப்பு சுமார் 40 பில்லியன் டாலராக இருக்கலாம் என சில வலைதளங்களில் மதிப்பிடப்பட்டுள்ளன.

Saudi
Mansa Musa : பூமியின் வரலாற்றில் மிகப் பெரிய பணக்காரர்; தங்க அரசர் முசா| Podcast

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com