ஐரோப்பா முழுவதும் தலையெடுக்கும் தீவிர வலதுசாரிகள், ஆபத்தில் ஜனநாயகம்: நமக்கு என்ன பாடம்?

இது எப்படி நடந்தது என்று பார்ப்பதற்கு முன்பாக, எந்தெந்த நாடுகளில் இப்போது தீவிர வலதுசாரி அபாயம் பெரிதாக இருக்கிறது என்று பார்ப்போம்.
ஐரோப்பா முழுவதும் தலையெடுக்கும் தீவிர வலதுசாரிகள்
ஐரோப்பா முழுவதும் தலையெடுக்கும் தீவிர வலதுசாரிகள்NS
Published on

ஐரோப்பா முழுவதும் வலதுசாரி அரசியல் கட்சிகளின் செல்வாக்கு வெகுவேகமாக உயர்ந்து வருகிறது. தாராளவாத ஜனநாயகத்துக்கு இது மிகப்பெரிய ஆபத்து என்று பலரும் கவலை தெரிவிக்கின்றனர்.

சரி முதலில், வலதுசாரி என்றால் என்ன?

இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி, முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் ஆகியோர் ‘வலதுசாரிகள்’ என்பதைச் சொன்னால், இந்த சொல்லின் பொருள் பளிச்சென்று புரியும்.

கொஞ்சம் விளக்கமாக சொன்னால், ஒரு குறிப்பிட்ட இனம், மதம், நிறம், ஜாதியே உயர்ந்தது என்ற கொள்கை வைத்திருப்பவர்கள், குறிப்பிட்ட மதத்தை வெறுப்பது, சமூக நலத் திட்டங்களில் அரசாங்கம் செலவு செய்யக்கூடாது என்று நினைப்பது, சமத்துவம், சமூக நீதி, தொழிலாளர் உரிமை ஆகியவற்றை வெறுப்பது, பழமைவாதத்தை விரும்புவது, வெளிநாட்டில் இருந்துவந்து குடியேறுகிறவர்களுக்கு தன் நாட்டில் இடம் தரக்கூடாது, தந்தாலும் அவர்களுக்கு உரிமைகள் தரக்கூடாது என நினைப்பது, மிதமிஞ்சிய தேசியவாதம் போன்றவை வலதுசாரிகளின் குணங்கள். இவற்றை தங்கள் கொள்கையாக கொண்டு செயல்படும் அரசியல் கட்சிகள், தனி நபர்களை வலதுசாரிகள் என்பார்கள். இவற்றுக்கு எதிரான கொள்கைகளைக் கொண்டிருப்பவர்கள் இடதுசாரிகள். இது ஒரு பொதுப் படையான விளக்கம்.

Pexels

‘யூத இனத்தைக் கொன்று அழிக்கவேண்டும்’, ‘ஆரிய இனம் உலகை ஆள வேண்டும்’ என வெளிப்படையாக அறிவித்து படுகொலைகளையும், போர்களையும் நிகழ்த்திய ஜெர்மனியின் ஹிட்லர், பாசிசம் என்னும் எதேச்சதிகார கோட்பாட்டை அறிமுகம் செய்த இத்தாலியின் முசோலினி போன்ற சர்வாதிகாரிகள் இழுத்துவிட்ட போர்களால், தேசிய வெறியால் போதும் போதும் என்ற அளவில் அனுபவித்துவிட்ட ஐரோப்பிய நாடுகள், தீவிர வலதுசாரிகள் என்றாலே ஒரு காலத்தில் சூடுபட்ட பூனையாக அலறின.

இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு, எந்த அரசியல் கட்சியாவது தீவிர வலதுசாரிக் கோட்பாடுகளைப் பேசினால் அவற்றை மைய நீரோட்டக் கட்சிகள் அருகே சேர்ப்பதில்லை. ஊடகங்கள் அவற்றை எச்சரிக்கையோடு அணுகின.

மிதமான பழமைவாதமும், மிதமான வலதுசாரிப் பார்வையும் கொண்ட கட்சிகள் மைய நீரோட்டத்தில் இருக்கவே செய்தன. இவற்றை மைய நீரோட்ட வலதுசாரிகள் என்று அழைத்தார்கள்.

இன வெறுப்பை அடிப்படையாக கொண்டு புதிதாக முளைக்கும் நியோ நாஜிஸ்டுகள் போன்ற தீவிர வலதுசாரிகளை, வாக்காளர்களும் ஓரம்கட்டியே வைத்திருந்தனர். ஒரு சதவீதம், இரண்டு சதவீதம் வாக்குகளைப் பெறுவதே அவர்களுக்குப் பெரிய போராட்டமாக இருந்தது. ஆனால், படிப்படியாக இந்நிலை மாறி இப்போது பல ஐரோப்பிய நாடுகளில் அவர்கள் மைய நீரோட்டக் கட்சிகளாக மாறிவருகின்றனர். பல நாடுகளில் அதிகாரத்தைப் பிடித்துள்ளனர். பல நாடுகளில் அதிகாரத்தைப் பிடிக்கும் நிலையில் இருக்கிறார்கள்.

இது எப்படி நடந்தது என்று பார்ப்பதற்கு முன்பாக, எந்தெந்த நாடுகளில் இப்போது தீவிர வலதுசாரி அபாயம் பெரிதாக இருக்கிறது என்று பார்ப்போம்.

ஐரோப்பா முழுவதும் தலையெடுக்கும் தீவிர வலதுசாரிகள்
ஓட்டமான் : ஐரோப்பாவில் கோலோச்சிய இஸ்லாமிய பேரரசு வீழ்ந்தது எப்படி? - துருக்கியின் வரலாறு

கத்தி முனையில் பிரான்ஸ்

பிரான்ஸ் தலைநகர் பாரிசின் புறநகர்க் குடியிருப்புப் பகுதி ஒன்றைச் சேர்ந்த அல்ஜீரிய பூர்வீகம் கொண்ட இளைஞர் ஒருவரை சமீபத்தில் போலீஸ் சுட்டுக் கொன்றது, இதையடுத்து கட்டுக்கடங்காத வன்முறை வெடித்தது. அந்த இளைஞர் கொல்லப்பட்டது மன்னிக்கமுடியாத குற்றம் என்று குறிப்பிட்டார் பிரான்ஸ் அதிபர் இம்மானுவல் மக்ரோங். இவர் இடதுசாரியும் அல்ல. வலதுசாரியும் அல்ல. இரண்டுக்கும் இடைப்பட்ட மையவாதி. இப்போது இந்த வன்முறையைக் கையாள்வதற்கு மக்ரோங் திணறிவருகிறார்.

இதனால் எழுகிற அதிருப்தி, குடியேற்றத்தை எதிர்க்கிற, பாதுகாப்புக்கு முக்கியத்துவம் தருகிற தீவிர வலது சாரி கட்சியான நேஷனல் ஃப்ரன்ட் (FN) தலைவர் மரின் லீ பென்-னுக்கு தேர்தலில் ஆதாயமாக மாறலாம் என்று சந்தேகப்படுகிறார்கள்.  

ஹங்கேரி –  கட்சியின் கையில் அரசு, அரசின் கையில் ஊடகம்

எல்லாப் பக்கமும் நிலப்பரப்பால் சூழப்பட்ட மத்திய ஐரோப்பிய நாடு ஹங்கேரி. சோவியத் ஒன்றியத்தின் தலையீட்டால் இடையில் கம்யூனிஸ்ட் நாடாக இருந்தது ஹங்கேரி. இப்போது தீவிர வலதுசாரியான விக்டர் ஆர்பான் தொடர்ந்து 2010ல் இருந்து பிரதமராக இருக்கிறார்.

1988ல் இவர் தமது ஃபிடஸ் கட்சியை ஒரு தாராளவாத ஜனநாயக, மேற்கு ஐரோப்பிய ஆதரவுக் கட்சியாக நிறுவினார். ஆனால், இன்று அவர், ஐரோப்பிய, அமெரிக்க வலதுசாரிகளின் நாயகனாக உள்ளார் என்கிறது வாக்ஸ் என்ற இணைய தள ஏட்டில் வெளியான ஒரு கட்டுரை. கிறிஸ்துவ மதம், ஐரோப்பியப் பண்பாடு, பாரம்பரிய குடும்பம் ஆகியவற்றின் பாதுகாவலராக தீவிர வலதுசாரிகள் அவரைப் போற்றுகிறார்கள்.

990, 1994 தேர்தல்களில் மோசமான தோல்வியைத் தழுவிய பிறகு அவர் தன்னுடைய தாராளவாத கட்சியை தீவிர வலதுசாரி கட்சியாக மாற்றி 1998ல் வெற்றி பெற்றார். அவரது முதல் கூட்டணி ஆட்சி அவ்வளவு ஆபத்தானதாக இல்லாவிட்டாலும்கூட, அவரது தேசியவாதப் போக்கும் எதேச்சாதிகாரப் போக்கும் அப்போதே தெரியவந்தன. 2002ல் ஆட்சியை இழந்து எதிர்க்கட்சியாக இருந்த காலத்தில் ‘குடிமை வட்டங்கள்’ என்று சொல்லப்படும் அமைப்புகளையும், ஊடக நிறுவனங்கள் உள்ளிட்ட அரசு சாரா அமைப்புகளையும் அவர் உருவாக்கிக்கொண்டார்.

மீண்டும் அவர் 2010ல் வெற்றி பெற்ற பிறகு இந்த அமைப்புகள், ஊடகங்கள் அரசுக்குள்ளே இன்னொரு அரசாங்கமாக செயல்படுகின்றன. தனக்கு நாடாளுமன்றத்தில் கிடைத்த பெரும்பான்மையையும், இந்த அமைப்புகளையும் பயன்படுத்திக் கொண்ட ஆர்பான் புதிய அரசமைப்புச் சட்டத்தைக் கொண்டுவந்து அரசியலையே தலைகீழாக மாற்றினார்.

முக்கிய அரசுப் பதவிகளில் தான் விரும்பியவர்களை அமர்த்தினார். அத்துடன், தன்னுடைய கட்சிக் கட்டுப்பாட்டில் இயங்கும் புதிய அரை-அரசு நிறுவனங்களை உருவாக்கினார். ஹங்கேரியில் இயங்கும் கிட்டத்தட்ட எல்லா ஊடகங்களையும், பல்கலைக்கழகங்களையும் இந்த நிறுவனங்களே நடத்துகின்றன. அரசுப் பணத்தைக் கொண்டு வெளிநாட்டு நிறுவனங்களை வாங்கி, வேண்டப்பட்டவர்களை பொருளாதார ரீதியில் வளர்த்தார். இவர்களை ‘தேசிய முதலாளி வர்க்கம்’ என்று அவர் குறிப்பிடுகிறார்.

குடியேறிகளை குறிப்பாக முஸ்லிம் குடியேறிகளைத் தடுக்க உயர் தொழில்நுட்பத்துடன் கூடிய எல்லைச் சுவர் கட்டினார் ஆர்பான். திருத்தியமைத்த அரசமைப்புச் சட்டம், அரசுக் கட்டுப்பாட்டில் உள்ள ஊடகம், இணைய முடியாத எதிர்க்கட்சிகள் ஆகியவை ஆர்பானின் வெற்றியின் ரகசியம். முதலில் ஐரோப்பிய ஒன்றியத்தின் உதவிகளைப் பெற்ற ஆர்பான், பின்னாளில் ஐரோப்பிய ஒன்றியத்தின் கொள்கைகளை உதாசீனம் செய்கிறவராக மாறினார். அரசுக் கட்டுப்பாட்டில் உள்ள ஊடகங்கள் அவர் மீதான ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்து அமைதி காக்கின்றன. ஆனால், எதிர்க்கட்சிகள் குறித்த திரித்த செய்திகளை வழங்குகின்றன. ஐரோப்பிய நாடாளுமன்றம் இந்த நாட்டை ‘தேர்தல் எதேச்சாதிகாரம்’ என்று அழைக்கிறது. இந்நாட்டுத் தேர்தல்கள் சுதந்திரமானவை ஆனால் நேர்மையற்றவை என்கின்றன சர்வதேச ஊடகங்கள்.

இப்போது ஃபிட்ஸை விட அதிதீவிர வலதுசாரி நிலைப்பாடு கொண்ட ‘அவர் ஹோம்லேண்ட்’ கட்சி இளைஞர்கள் மத்தியில் செல்வாக்கு பெறத் தொடங்கியுள்ளது.

ஐரோப்பா முழுவதும் தலையெடுக்கும் தீவிர வலதுசாரிகள்
சீனா - செளதி அரேபியா 1500 ஆண்டுகால நட்பு: வணிகமும், வரலாறும் - ஒரு விரிவான பார்வை

ஆஸ்திரியா – தீவிர வலதுசாரி எதிர்ப்பு தேய்ந்த கதை

முதல் முதலில் தீவிர வலதுசாரிகள் ஆட்சிக்கு வந்தபோது ஐரோப்பா எப்படி தீவிரமாக எதிர்வினையாற்றியது, காலப்போக்கில் தீவிர வலதுசாரி அரசியல் எப்படி இயல்பான ஒன்றாகிப் போனது என்பதை ஆஸ்திரியாவைப் பார்த்து தெரிந்துகொள்ளலாம்.

ஆஸ்திரியாவின் தீவிர வலதுசாரிக் கட்சியான சுதந்திரக் கட்சி (FPÖ) பழமைவாதக் கட்சியான மக்கள் கட்சியுடன் ஆட்சிக் கூட்டணியில் இணைந்தபோது அது மிகப்பெரிய அதிர்வலையை உண்டாக்கியது. காரணம் ஹிட்லரின் நிர்வாகத்தில் இடம் பெற்றிருந்த தாய்-தந்தைக்குப் பிறந்த ஜார்க் ஹைதர் சுதந்திரக் கட்சியின் தலைவராக இருந்தார். அவர் அவ்வப்போது ஹிட்லரின் நாஜிக் கோட்பாட்டுக்கு ஆதரவாகத் தோன்றும் கருத்துகளைத் தெரிவித்துவந்தவர்.

இந்தக் கூட்டணியைக் கண்டித்து ஆஸ்திரியத் தலைநகர் வியன்னாவிலும், ஐரோப்பா முழுவதிலும், அமெரிக்காவிலும் போராட்டம் வெடித்தது. ஐரோப்பிய ஒன்றியம் ஆஸ்திரியா மீது ராஜீயத் தடைகளை விதித்தது. தாண்டக்கூடாத, ஆபத்தான கோடு ஒன்றை ஆஸ்திரிய அரசியல் தாண்டிவிட்டதாக உலகம் பார்த்தது. கடந்த கால ரத்தம் தோய்ந்த வரலாறு காரணமாக தீவிர வலதுசாரிகளை தூரத்தில் வைக்கவேண்டும் என்ற எச்சரிக்கை உணர்வை மேற்கத்திய அரசியல் உலகம் வெளிப்படுத்தியது. ஆனால், இந்த எச்சரிக்கை உணர்வு காலப்போக்கில் மங்கியது. 2017ல் சுதந்திரக் கட்சி மீண்டும் ஓர் அரசியல் கூட்டணியில் இணைந்தபோது நடந்த போராட்டங்கள் மிகவும் குறைவு.

தற்போது அந்தக் கட்சி உள்ளூர் தேர்தல்களில் வெற்றி பெற்றுவருகிறது. ஆஸ்திரேலிய அளவிலான கருத்துக் கணிப்புகளிலும் அந்தக் கட்சி முந்துகிறது. தற்போது நாட்டின் முக்கிய அரசியல் சக்தியாகிவிட்ட இந்தக் கட்சி அடுத்த முறை ஆளுங்கட்சியாவதற்கு வாய்ப்புகள் அதிகம்.

இந்த தீவிர வலதுசாரிக் கட்சியின் அழுத்தம் காரணமாக வலதுசாரி கட்சியான மக்கள் கட்சி தீவிர குடியேற்ற எதிர்ப்புக் கொள்கைகளை கடைபிடிக்கிறது என்கிறது கார்டியன் பத்திரிகையில் வெளியான ஒரு கட்டுரை

ஐரோப்பா முழுவதும் தலையெடுக்கும் தீவிர வலதுசாரிகள்
ஆஸ்திரேலியா ஆதிக்குடிகள் அழிக்கப்பட்ட வரலாறு: பழங்குடிகளிடமிருந்து ஐரோப்பா திருடிய நாடு

இத்தாலி – மேற்கு ஐரோப்பாவின் முதல் தீவிர வலதுசாரி பிரதமர்

ஐரோப்பிய ஒன்றியத்தில் மூன்றாவது பெரிய பொருளாதாரத்தைக் கொண்டுள்ள இத்தாலியில் 2022ம் ஆண்டு நடந்த தேர்தலில் தீவிர வலதுசாரி கட்சியான பிரதர்ஸ் ஆஃப் இத்தாலி கட்சியின் ஜியோர்ஜியா மெலோனி பிரதமர் ஆனார். நவ நாஜிய வேர்களைக் கொண்ட கட்சி இது.  

இவர் இத்தாலியின் முதல் பெண் பிரதமர் மட்டுமல்ல, மேற்கு ஐரோப்பிய நாடு ஒன்றில் பிரதமரான முதல் தீவிர வலதுசாரியும்கூட.

ஆனால், இவரது பிரதர்ஸ் ஆஃப்  இத்தாலி கட்சி தனியாக ஆட்சியைப் பிடிக்கவில்லை. ஆளும் கூட்டணி ஏராளமான கருத்தியல் வேறுபாடுகளைக் கொண்டிருக்கிறது. நான்கு முறை பிரதமராக இருந்தவரும், தீவிர வலதுசாரிகளை அரசியல் களத்திலேயே இல்லாமல் செய்தவரும், தம்மளவில் மைய வலதுசாரியுமான சில்வியோ பெர்லுஸ்கானியின் ஃபோர்சா இத்தாலியா கட்சி, இத்தாலியின் வடபகுதிக்கு விடுதலை கேட்ட நார்தர்ன் லீக் கட்சி ஆகியவற்றுடன் கூட்டணி சேர்ந்திருக்கிறார் மெலோனி. இவரது கட்சி ‘ஒரே நாடு’ என்று பேசக்கூடியது.

ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைந்திருப்பதில் விருப்பம் இல்லாதவர் இவர். கிட்டத்தட்ட எல்லா நாடுகளின் தீவிர வலதுசாரிகளுக்கும் இப்படி ஐரோப்பிய ஒன்றிய எதிர்ப்பு இருக்கும். இந்தக் கூட்டணிக்குள் இருந்த மூத்த தலைவரும், ஐரோப்பிய ஒன்றியத்தின் தீவிர ஆதரவாளருமான சில்வியோ பெர்லுஸ்கானி கடந்த மாதம் இறந்துவிட்டார்.

இத்தாலியின் வலதுசாரிகள், குறிப்பாக பெர்லுஸ்கானி, தொடர்ந்து நீதித்துறையில் தலையிட்டவர்கள். இப்போது தீவிர வலதுசாரிகள் தலைமையிலான ஆட்சி பிற தீவிர வலதுசாரி நாடுகளைப் போலவே நீதித்துறையில் தொடர்ந்து தலையிடுமா, ஜனநாயக நிறுவனங்களைப் பலவீனப்படுத்துமா என்பதைப் பொறுத்திருந்து பார்க்கவேண்டும்.

ஸ்பெயின் – கடைசியில் ஏன் வீழ்ந்தது?

2008ம் ஆண்டு நடந்த பொருளாதார சீர்குலைவுக்குப் பிறகு பல ஐரோப்பிய நாடுகளில் அதை சாதகமாக்கிக் கொண்டு தீவிர வலதுசாரிகள் அரசியலில் வளர்ந்தார்கள். ஆனால், ஸ்பெயினில் அப்படி நடக்கவில்லை. காரணம், அங்கே வளரும் நிலையில் தீவிர வலதுசாரி கட்சி ஏதும் அப்போது இல்லை. சிக்கன நடவடிக்கைகளுக்கு எதிராக 2011ல் வெடித்துக் கிளம்பிய போராட்டம் பிரச்சனைக்குக் காரணமான அதிகாரம் மிக்கவர்களை குறிவைத்து நடந்தது. பிற இடங்களில் நடந்ததைப் போல குடியேறிகள் போன்ற பலவீனமானவர்களை குறிவைத்து நடக்கவில்லை. அதுதான் வலதுசாரிகள் இந்த சிக்கலை  சாதகமாகப் பயன்படுத்திக்கொள்ள முடியாத நிலைக்கு காரணம் என்கிறார்கள் இடதுசாரிகள்.

ஆனால், குடியேறிகளுக்கும், மாநில சுயாட்சிக்கும் எதிரான நிலைப்பாடு கொண்ட தீவிர வலதுசாரி கட்சியான ‘வாக்ஸ் கட்சி’ 2019 பொதுத் தேர்தலில் மூன்றாமிடம் பிடித்தது. சமீபத்திய உள்ளாட்சித் தேர்தல்களில் எதிர்பார்த்ததற்கு மேல் வெற்றி பெற்றுள்ளது இந்தக் கட்சி. சில வாரங்களில் நடக்கவுள்ள பொதுத் தேர்தலில், வாக்ஸ் கட்சி அரசாங்கத்தில் இடம் பிடிக்க வாய்ப்பு உள்ளது. அப்படி நடந்தால், கடந்த சுமார் அரை நூற்றாண்டு காலத்தில் அதிகாரத்தின் வாயிலுக்குள் தீவிர வலதுசாரிகள் நுழையும் முதல் நிகழ்வாக அது இருக்கும்.

பாசிஸ்ட் சர்வாதிகாரி பிரான்சிஸ்கோ பிராங்கோ 1975ம் ஆண்டு இறந்த பிறகு ஸ்பெயினில் தீவிர வலதுசாரி கட்சி எதுவும் வெற்றி பெறவில்லை.

ஐரோப்பா முழுவதும் தலையெடுக்கும் தீவிர வலதுசாரிகள்
Silk Road History : ஐரோப்பாவையும் சீனாவையும் இணைத்த பட்டுவழிச் சாலையின் வரலாறு

பிற நாடுகள்

தீவிர வலதுசாரி நாஜிசத்தை ஆட்சியில் அமர்த்தியதற்கு கடும் விலை கொடுத்த ஜெர்மனி அந்தப் பாடத்தை இன்னும் மறந்துவிடவில்லை. ஆனாலும் அந்நாட்டில், தீவிர வலதுசாரிக் கட்சியான ஆல்டர்நேட்டிவ் ஃபார் (AfD) ஜெர்மனி வளர்ந்து வருகிறது. வரும் பொதுத் தேர்தலில் அது இரண்டாமிடத்துக்கு வரும் என்று ஒரு கருத்துக் கணிப்பு கூறுகிறது. அந்தக் கட்சியோடு தேசிய அளவில் இணைந்து செயல்படப்போவதில்லை என்று கூறியுள்ளன. ஆனால், தீவிர வலதுசாரிகளுக்கு எதிரான ஜெர்மனியின் கோட்டையில் விரிசல்கள் தோன்றியிருக்கின்றன.

ஃபின்லாந்து நாட்டில் மூன்று மாதகால பேச்சுவார்த்தைக்குப் பிறகு தீவிர வலதுசாரி கட்சியான தி ஃபின்ஸ் சமீபத்தில் கூட்டணி ஆட்சியில் சேர்ந்திருக்கிறது. 

ஸ்வீடனில் குடியேற்றத்துக்கும், பன்முகப் பண்பாட்டுக்கும் உறுதியான எதிர்ப்பைத் தெரிவிக்கும் ஸ்வீடன் டெமாக்ரட்ஸ் கட்சி அந்நாட்டு நாடாளுமன்றத்தில் இரண்டாவது பெரிய கட்சி. அந்நாட்டின் வலதுசாரி கூட்டணி ஆட்சிக்கு ஆதரவு தருகிறது அந்தக் கட்சி.

தொடக்கத்தில் நவ நாஜிய கொள்கைகளைக் கொண்டிருந்த அந்தக் கட்சியை பாரம்பரியக் கட்சிகள் நீண்டகாலம் சட்டை செய்ததில்லை. ஆனால், 2014 அந்தக் கட்சி நாடாளுமன்றத்தில் மூன்றாவது பெரிய கட்சி ஆனது. அதன் பிறகு அந்த நிலை மாறியது.

போலந்து நாட்டின் ஆளுங்கட்சியான லா அண்ட் ஜஸ்டிஸ் கட்சி (PiS) கம்யூனிஸ்ட் எதிர்ப்பில் வேரூன்றி வளர்ந்த கட்சி. மையவாதக் கட்சியாக இருந்து தீவிர வலதுசாரியாக மாறிய கட்சி. ஹங்கேரியின் ஃபிடஸ் கட்சியைப் போலவே அரசு ஊடகங்களை பிரசாரக் கருவியாக மாற்றிக் கொண்ட இந்தக் கட்சி நீதித்துறை சுதந்திரத்தின் மீது தாக்குதல் தொடுத்தது. பெரிய குடும்பங்களுக்கும், கிராம சமூகத்துக்கும் மானியங்கள் அளிக்கும் இந்தக் கட்சி கத்தோலிக்க திருச்சபையுடன் நெருங்கிய உறவு கொண்டது. எல்.ஜி.பி.டி.க்யூ. உரிமைகளுக்கு எதிரானது. ஐரோப்பிய ஒன்றிய எதிர்ப்புணர்வு கொண்டது.

தீவிர வலதுசாரிகள் வளர்ச்சிக்கு என்ன காரணம்?

பொருளாதார சிக்கல்கள், தொடரும் குடியேற்றங்கள் ஆகியவையே தீவிர வலதுசாரிகள் காலூன்ற இடம் தரும் பிரச்சனைகள்.

“தீவிர வலதுசாரிகளின் வாதம் எடுபடக்கூடாது என்று நினைத்து, அவர்களது சில கொள்கைகளை, முழக்கங்களை மைய நீரோட்ட அரசியல்வாதிகள் கையில் எடுக்கிறார்கள். ஆனால், அப்படி செய்வதால், தீவிர வலதுசாரிக் கொள்கைகளை மைய நீரோட்டத்துக்கு கொண்டுவருகிறார்கள். அதே நேரம், ஐரோப்பாவில் பல தீவிர வலதுசாரி கட்சிகள், அதிக வாக்காளர்களைக் கவரும் நோக்கத்தோடு தீவிரத்தை தளர்த்திக் கொண்டு, தந்திரமாக மையவாத நிலைப்பாட்டை நோக்கி வருகின்றன,”. என்கிறார் ஐரோப்பிய கவுன்சில் வெளியுறவு இயக்குநர் மார்க் லெனார்ட்.  தீவிர வலதுசாரிகள் எப்படி வளர்கிறார்கள் என்பதை இது ஓரளவு விளக்குகிறது.

தீவிர வலதுசாரி கட்சி ஒன்று தேர்தல் மூலம் நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை பெற்று ஆட்சிக்கு வந்தாலும், ஜனநாயகத்துக்கு அது ஆபத்தாகிறது. ஹங்கேரியில் தேர்தல் நடக்கத்தான் செய்கிறது. ஆனால், நடைமுறையில் அங்கே எந்த ஜனநாயக நிறுவனங்களும் செயல்படமுடியவில்லை. உண்மையில் அங்கே ஜனநாயகம் செத்துவிட்டது. நாடாளுமன்றப் பெரும்பான்மை பெறமுடியாத தீவிர வலதுசாரிகளுக்கு சில தடைகள் இருக்கும். ஆனால், அவர்கள் கருத்து ரீதியாக சமுதாயத்தில் சிக்கலைத் தோற்றுவிப்பார்கள்.

வலதுசாரிகளால் நிலவும் அபாயத்தை மிகைப்படுத்துவது அவர்களுக்கு உரமாகிவிடும், குறைத்து மதிப்பிடுவதோ அவர்களுக்கு வழிவிடும் என்ற கருத்தும் முன்வைக்கப்படுகிறது.

Summary

About the story:

This story is about the rise of far-right politics in Europe. Discover the factors behind the growing influence of populist movements and nationalist ideologies, and their impact on social dynamics, immigration policies, and European unity. Gain insights into the ongoing debates surrounding identity, populism, and the future of Europe. Join us as we navigate the complexities of this phenomenon and explore its implications for democracy and multiculturalism. Get ready to delve into the intriguing story of the rise of far-right politics in Europe.

Summary

About the Author:

A.D. Bala, also known as அ.தா.பாலசுப்ரமணியன், is a highly experienced journalist with over two decades of dedicated service in the field. He has contributed his expertise to esteemed publications such as Dinamani, The New Indian Express, The Hindu, and even the renowned British Broadcasting Corporation (BBC). Throughout his illustrious career, Bala has been involved in the creation of more than 1000 compelling stories, covering a wide range of topics. His dedication to his craft and relentless pursuit of the truth have earned him a reputation for excellence in journalism.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com