உக்ரைன் மீது ரஷ்யா கடந்த பிப்ரவரி மாதம் முதல் போர் நடத்தி வரும் நிலையில் ரஷ்ய இராணுவத்தின் ஆக்கிரமிப்பு அதிகரித்திருக்கும் இடங்களுக்கு தன்னார்வலர்கள் கருத்தடை மருந்துகளை அனுப்பி வருகின்றனர்.
3000 பாக்கெட்டுக்கு மேல் அனுப்பப்படும் இந்த கருத்தடை மாத்திரைகள் பொதுவாகக் குழந்தைக்கான திட்டமிடல் இல்லாமல் உடலுறவு கொள்ளும் பெண்கள் உபயோகிப்பதாகும். சர்வதேச திட்டமிடப்பட்ட பெற்றோர் கூட்டமைப்பு ( International Planned Parenthood Federation - IPPF) இந்த மாத்திரைகளை வழங்கியுள்ளது.
தன்னார்வலர் குழுவைச் சார்ந்த கரோலின் ஹிக்சன் என்பவர் கூறுகையில், “பாலின ரீதியிலான வன்முறைக்கு ஆளாகியிருக்கும் உக்ரைன் பெண்கள் கருவுறுதலிலிருந்து தப்ப இந்த மாத்திரைகளை விரைவில் எடுத்துக்கொள்ள வேண்டியது அவசியம். ஏனெனில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு அதன் மூலம் கருவுறுதல் என்பது மிகக் கொடுமையானது” என்கிறார்.
கருத்தடுப்பு மாத்திரைகளுடன் கருவுற்று 5 மாதங்கள் வரை பயன்படுத்தக் கூடிய கருக்கலைப்பு மாத்திரைகளும் பாலியல் வன்கொடுமை சிகிச்சை உபகரணங்களும் விநியோகிக்கப்படுகிறது. உக்ரைனிலிருந்து லட்சக்கணக்கான மக்கள் வெளியேறியுள்ளதால் மருந்துகளை விநியோகம் செய்வதில் சிக்கல்கள் அதிகரித்திருக்கின்றன.
ரஷ்ய இராணுவம் ஆக்கிரமித்துள்ள பகுதிகளில் பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் அதிகப்படியாக அரங்கேறி வருகின்றன. கீவ் நகரைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் புச்சா நகரிலும் பாலியல் வன்கொடுமைகள் அதிகப்படியாக நடந்ததாகத் தகவல்கள் கூறுகின்றன. பெண்கள் மட்டுமின்றி குழந்தைகளும் ரஷ்ய இராணுவத்தால் பாதிக்கப்பட்டிருப்பதாகச் செய்திகள் வெளியாகியிருக்கிறகது. பாலின அடிப்படையில் தாக்கப்பட்டுள்ள பெண்கள் உளவியல் ரீதியாகவும் மன ரீதியாகவும் உடல் ரீதியாகவும் பாதிக்கப்பட்டுள்ளதாக உக்ரைன் மருத்துவமனைகள் கூறுகின்றன.
பாலியல் வன்கொடுமையை போர் ஆயுதமாக ரஷ்யா பயன்படுத்துகிறது என்ற குற்றச்சாட்டு தொடர்ந்து முன் வைக்கப்படுகிறது. அத்துடன் உக்ரைனிய பெண்களை கற்பமாக்குவதையே ரஷ்ய இராணுவம் நோக்கமாக வைத்திருப்பதாகவும் கூறப்படுகிறது.
ரஷ்ய இராணுவ ஆக்கிரமிப்பால் மரியுபோல் போன்ற பகுதிகளில் சிக்கியுள்ள உக்ரைன் வீரர்கள் மற்றும் பொது மக்கள் உணவின்றி தவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடதக்கது.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com