இலங்கையில் அரசியல் நெருக்கடி உச்சக் கட்டத்தை எட்டியிருக்கிறது. மக்கள் போராட்டம் ஒருபுறம், கூட்டணியிலிருந்த கட்சிகள் வெளியேறியது மறுபுறம் என கோத்தபயா ராஜபக்ஷே அரசு சிக்கலில் தவிக்கிறது. அங்கு என்ன நடக்கிறது என்பதைப் பார்க்கலாம்.
பரபரப்பான சூழலில் இலங்கை நாடாளுமன்றம் இன்று கூடியது.
கோத்தபயா ராஜபக்ஷேவின் ‘ இலங்கை பொதுஜன பெரமுனா’ கட்சிக்குக் கொடுத்து வந்த ஆதரவை 11 கூட்டணிக் கட்சிகள் விலக்கிக் கொள்வதாக அறிவித்தன.
இதனால் 41 நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவை ராஜபக்ஷே அரசு இழந்திருக்கிறது. 225 சீட்கள் கொண்ட இலங்கை நாடாளுமன்றத்தில், ஆட்சியமைக்கத் தேவையான மெஜாரிட்டி 113
கூட்டணிக் கட்சிகள் ஆதரவை விலக்கிக் கொண்டதால், ராஜபக்ஷே அரசு மெஜாரிட்டியை இழக்கும் சூழ்நிலையில் இருக்கிறது.
அதிபர் கோத்தபயா ராஜபக்ஷே, பதவியை ராஜினாமா செய்ய மாட்டேன் என்றும், எந்த கட்சிக்கு மெஜாரிட்டி இருக்கிறதோ அவர்கள் ஆட்சியமைக்கட்டும் என, கட்சியின் மூத்த நிர்வாகிகளிடம் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.
பிற்பகலில் அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெற்ற நிலையில், பெரும்பான்மைக்கான வாக்கெடுப்பு நடக்க வாய்ப்பிருப்பதாகக் கூறப்படுகிறது.
மறுபுறம் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸா, தேர்தல் ஒன்றே தீர்வு என வலியுறுத்தி வருகிறார்.
நேற்று தற்காலிக நிதியமைச்சராகப் பதவியேற்ற அலி சேப்ரி, இன்று தனது பதவியை ராஜினாமா செய்தார்.
தற்போது இலங்கை சந்தித்து வரும் சிக்கலை புதிய முறையில், சிறப்பான செயல்முறை கொண்டு சீர்படுத்த, சரியான நிதியமைச்சரை அதிபர் கோத்தபயா தேர்ந்தெடுக்க வேண்டும் எனத் தனது ராஜினாமா கடிதத்தில் சேப்ரி தெரிவித்திருக்கிறார்.
சர்வதேச நாணய நிதியம் (IMF) இலங்கையின் அரசியல், பொருளாதார நிலைகளை உன்னிப்பாகக் கவனித்து வருவதாகத் தெரிவித்திருக்கிறது. பொருளாதார நெருக்கடியிலிருந்து தப்பிக்க, சர்வதேச நாணய நிதியத்தைக் கடைசி வாய்ப்பாக நம்பியிருக்கிறது இலங்கை!