வரலாற்றில் சாமியார்களும் பிரச்னைகளும் இணைந்தே இருந்திருக்கின்றனர். ஆயுத வியாபாரியும் சாமியாருமான திரேந்திர பிரம்மச்சாரி, இந்திரா காந்தி பிரதமராக இருந்த போது அவரோடு நெருக்கமாக இருந்தார். பல குற்றச்சாட்டுகள் அவர் மீது இருந்தன. சங்கரமடம் ஜெயேந்திர சரஸ்வதி மீது பாலியல் குற்றச்சாட்டுகளும், சங்கரராமன் கொலை வழக்கும் இருந்தன. இன்றைக்கு இருக்கும் பாபா ராம்தேவ் பாஜகவிற்கு நெருக்கமான சாமியாராக இருந்து கொண்டு பதஞ்சலி எனும் பெரும் கார்ப்பரேட் நிறுவனத்தையே நடத்தி வருகிறார்.
ஜக்கி வாசுதேவ், ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர் போன்றோர் உலகம் முழுவதும் சீடர்களை வைத்து கார்ப்பரேட் சாமியார்களாக வலம் வருகின்றனர். நித்தியானந்தா தமிழகத்தின் சர்ச்சை சாமியாராக வலம் வருகிறார். தற்போது கைலாசம் எனும் தனிநாட்டை உருவாக்கி அங்கே சிஷ்யர்களுடன் வாழ்ந்து வருவதாக கூறிவருகிறார்.
அமெரிக்காவும் இத்தகைய சாமியார்களுக்கு அதாவது கிறிஸ்த மதபோதகர்களுக்கு புகழ் பெற்றது. பெந்தகோஸ்தே உள்ளிட்ட கடும்கோட்பாட்டு கிறிஸ்தவ மத சபைகள் அங்கே நிறைய இருக்கின்றன. அவர்களில் ஒருவர்தான் ஜிம் ஜோன்ஸ் என்று அழைக்கப்படும் ஜேம்ஸ் வாரன் ஜோன்ஸ்.
இவர் 1931 ஆம் ஆண்டு மே மாதம் 13 ஆம் தேதி அமெரிக்காவில் இருக்கும் இண்டியானா மாநிலத்தின் கிரீட் கிராமத்தில் பிறந்தார். இவரது தந்தை முதலாம் உலகப்போரில் கலந்து கொண்டு இரண்டு கால்களையும் இழந்தவர். ஜோன்ஸுக்கு 14 வயது இருக்கும் போது அவரது தந்தையும் தாயாரும் பிரிந்து விட்டனர்.
தாயாருடன் தனிமையில் வசித்து வந்த ஜோன்ஸுக்கு அதிகம் நண்பர்கள் கிடையாது. கல்லூரி காலத்தில் கொஞ்சம் முற்போக்கு கருத்துக்கள் மீது அவருக்குப் பிடிப்பு ஏற்பட்டது. கூடவே தேவாலயத்தில் பணிபுரிந்த அனுபவமும் அவருக்கு இருந்தது. அதன் மூலம் வெள்ளையர்களால் புறக்கணிக்கப்பட்ட அமெரிக்க கறுப்பின மக்களைக் குறி வைத்து தனது மதப் பிரச்சாரத்தை அவர் ஆரம்பித்தார்.
இனப்பாகுபாடு காட்டாமல் இருந்ததால் அவர் ஒரு வெள்ளையர் என்றாலும் அவருக்கு நிறைய கறுப்பின மக்கள் பின்தொடர்பவர்களாக இருந்தனர். விரக்தி, தீராத உடல் பிரச்சினை, வாழ்க்கையில் துயரம் என்றால் என்னுடன் வாருங்கள் என்று நம்மூர் பெந்தகோஸ்தே மதபோதகர் பிரச்சாரம் செய்வது போல அனைத்து பிரச்னைகளையும் தீர்த்து வைக்கிறேன் என்று ஜோன்ஸ் பிரச்சாரம் செய்து வந்தார். இதன் காரணமாக அதிக மக்கள் அவரை நாடி வரத் துவங்கினர்.
இதனையடுத்து 1955 ஆம் ஆண்டு ஜோன்ஸ் தனக்கென்று ஒரு புது தேவாலயத்தை சான்பிரான்சிஸ்கோவில் உருவாக்கி அதற்கு மக்கள் தேவாலயம் என்று பெயரிட்டார். உள்ளூர் ஊடகங்கள், கறுப்பின மக்கள், அரசியல்வாதிகள் மத்தியில் அந்த தேவாலயம் பெரும் சக்தியாக மாறத் துவங்கியது. குறிப்பாக கறுப்பின மக்கள் அவரை கடவுளாகவும், கடவுளின் தூதராகவும் நம்பத் துவங்கினர். மேலும் இவரது தேவாலயத்திற்குப் பணமும் குவிய ஆரம்பித்தது.
இதன் பின்னர் போதைப் பொருள் பயன்பாடு, பாலியல் குற்றச்சாட்டுகள் போன்ற சட்டவிரோத சம்பவங்கள் தேவாலயங்களில் நடைபெறுவதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்தன. தேவாலய வளாகத்தில் வாழும் மக்கள் மூளைச் சலவை செய்யப்பட்டு கடும் வேலைகளைச் செய்து வந்தனர். தங்களது முழு சொத்துக்களையும் அவர்கள் தேவாலயத்திற்கு எழுதிக் கொடுத்தனர். தங்களது ஏனைய குடும்ப உறுப்பினர்களோடு துண்டித்துக் கொண்டு இங்கே ஒரு கற்பனையான சமூக வாழ்க்கையை வாழ்ந்து வந்தனர். மேலும் பல குற்றங்கள் செய்ததாகப் பொய்யாக அவர்கள் கையெழுத்திட்டுக் கொடுத்தனர். இதன் மூலம் மக்கள் தேவாலய உறுப்பினர்களிடம் பிரச்னை செய்த போது மிரட்டப்பட்டனர்.
ஜோன்ஸுக்கு அணு ஆயுதப் போர் நடக்குமென்ற பயம் இருந்தது. அதனால் அவர் தனது மக்கள் தேவாலாயத்தைப் பாதுகாப்பான இடத்திற்கு மாற்ற விரும்பினார். இதற்காகத் தென் அமெரிக்காவில் முன்னர் பிரிட்டிஷ் காலனியாக இருந்த கயானாவிற்கு அவர் புலம் பெயர்ந்தார். 1977 ஆம் ஆண்டில் தேவாலாயம் கயானாவிற்கு மாற்றப்பட்டது.
கயானா அரசிடம் 3242 ஏக்கர் பரப்பளவு நிலத்தை ஜோன்ஸ் வாங்கினார். அங்கே ஒரு இலட்சிய சமூகத்தைப் படைக்கப் போவதாகவும் சூளுரைத்தார். கயானவில் இவர்கள் இருந்த நகரம்தான் ஜோன்ஸ்டவுண் என்று அழைக்கப்பட்டது. நம்மூர் நித்தியானந்தாவும் இப்படித்தான் கைலாசம் என்றொரு நாட்டை தென் அமெரிக்கத் தீவு ஒன்றில் உருவாக்கியதாகக் கூறி வருகிறார்.
கயானா அரசாங்கம் ஜோன்ஸுக்கு ஆதரவாக நடந்து கொண்டது. ஜோன்ஸ் டவுணில் பல்வேறு குற்றங்கள் நடைபெற்றதாக பின்னர் பலர் தெரிவித்துள்ளனர். அந்தக் குற்றங்களில் சிறை வைப்பு, சித்திரவதை, பாலியல் குற்றங்கள், கொலை என பல அடக்கம்.
மேலும் ஜோன்ஸின் சொல்பேச்சு கேட்டு நடக்காதவர்கள் கடுமையாகத் தண்டிக்கப்பட்டுள்ளனர். துப்பாக்கி ஏந்திய காவலர்கள் எப்போதும் கண்காணித்துக் கொண்டே இருக்க மக்கள் வேலை பார்த்தனர்.
ஆனால் ஜோன்ஸ் டவுணில் வாழ்ந்த அமெரிக்கர்களில் சிலர் தமது கொடூரமான அனுபவங்களை அமெரிக்காவில் இருக்கும் தமது குடும்ப உறுப்பினர்களுக்குக் கடிதம் மூலமாகத் தெரிவித்தனர். அந்தக் குடும்ப உறுப்பினர்களோ இதில் அரசு தலையிட்டு விசாரிக்க வேண்டும் என்று நெருக்கடி கொடுக்க ஆரம்பித்தனர்.
இதனையடுத்து அமெரிக்கக் காங்கிரஸ் உறுப்பினர்கள் ரயான் தலைமையில் ஒரு குழுவாக 1978 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் கயானாவில் உள்ள ஜோன்ஸ் டவுணுக்கு வந்தனர். இவர்களோடு செய்தியாளர்களும் வந்தனர். அவர்களை ஒரு நாள் ஜோன்ஸ் டவுணில் இருக்கச் செய்து மறுநாள் விமானநிலையத்தில் ஏறும் போது சுட்டுக் கொல்வதற்கு ஜோன்ஸ் ஏற்பாடு செய்திருந்தார்.
அதன்படி ஜோன்ஸின் சீடர்கள் துப்பாக்கிகள் மூலம் அமெரிக்கப் பாராளுமன்றக் குழுவினரைச் சுட்டனர். அதில் சிலர் கொல்லப்படப் பலர் காயமடைந்தனர். இந்த படுகொலை சம்பவம் நடந்த பிறகு ஜோன்ஸ் மிகவும் பயந்து போனார். அமெரிக்காவை பகைத்துக் கொண்டால் என்ன நடக்கும் என்பதறிந்த ஜோன்ஸ் ஒரு முடிவை எடுத்தார்.
அதன் படி ஜோன்ஸ்டவுணில் இருந்த மக்களை ஒன்று கூட்டி அனைவரும் உயிர் விடுமாறும் இது கடவுளின் கட்டளை என்றும் கூறியுள்ளார். அனைவரும் சயனைடு கலந்த பழச்சாற்றைப் பருகினர். மறுத்தவர்கள் துப்பாக்கி முனையில் குறிக்க வைக்கப்பட்டனர். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் சயனைடு பழச்சாற்றைப்பருகினர்.
தனது நாடாளுமன்ற குழு உறுப்பினர்கள் கொல்லப்பட்டார்கள் எனக் கேள்விப்பட்ட அமெரிக்கா உடனே இராணுவத்தை கயானாவிற்கு அனுப்பியது. அமெரிக்க இராணுவம் ஜோன்ஸ் டவுணில் இறங்கிய போது அங்கே அவர்களை 908 பிணங்கள் வரவேற்றன. மேலும் ஜோன்ஸும் துப்பாக்கியால் தன்னைச் சுட்டுக் கொண்டு தற்கொலை செய்து கொண்டார்.
செப்டம்பர் 11, 2001 க்கு முந்தைய காலத்தில் அதிக அமெரிக்கர்கள் கொலை செய்யப்பட்ட சம்பவமாக இந்த ஜோன்ஸ் டவுண் தற்கொலை இருந்தது. 1978 நவம்பரில் நடந்த இந்த தற்கொலைக்குப் பிறகு பலர் ஜோன்ஸைப் பற்றியும் அவரது மக்கள் தேவாலயம் வழிபாட்டைப் பற்றியும் பல நூல்கள், பல ஆவணப் படங்களை எடுத்துள்ளனர். சித்தப்பிரமை பிடித்த ஜோன்ஸ் எனும் ஒரு முரட்டு முட்டாள் மதபோதகர் ஈவிரக்கம் இல்லாமல் ஒரு சபையை உருவாக்கி கடைசியில் 900க்கும் மேற்பட்டோரைத் தற்கொலை மூலம் கொன்றிருக்கிறார். இறந்தவர்களில் கிட்டத்தட்ட 300 பேர் 17 வயதுக்கும் குறைவானவர்கள்.
இன்றைக்கும் அமெரிக்க மக்களுக்கு இந்த ஜோன்ஸ் டவுண் படுகொலை ஒரு கெட்ட கனவாக இருந்து வருகிறது.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust