இந்திய சந்தையில் கோக கோலா நிறுவனம் இதுவரை பார்த்திராத மிகப்பெரிய விற்பனையைக் கடந்த காலாண்டில் பதிவு செய்துள்ளதாக எகனாமிக் டைம்ஸ் பத்திரிகையில் செய்தி வெளியாகியுள்ளது.
இந்தியாவில் இத்தனை பிரமாதங்களை நிகழ்த்திக் கொண்டிருக்கும் இந்த குளிர்பான நிறுவனத்தின் கால்படாத இடமில்லை என்பார்கள். எந்த ஒரு வணிக நிறுவனத்தை எடுத்துக் கொண்டாலும், Coca-cola போல் வளர வேண்டும், உலகம் முழுக்க வியாபாரம் செய்ய வேண்டும் என சொல்வதைக் கேட்டிருக்கலாம்.
ஆனால், உண்மையில் Coca-cola உலகில் உள்ள எல்லா நாடுகளிலும் கிடைப்பதில்லை என்பதை அறிவீர்களா..? அப்படி எத்தனை நாடுகள் இருக்கின்றன?
முதலாளித்துவத்தின் பிரதிநிதிதான் கோககோலா பிராண்ட் என்றும் சிலர் கூறுவர். ஒரு நாட்டில் கோககோலா ஏற்றுமதி செய்யத் தொடங்கப்பட்டால் அந்நாட்டில் மாற்றங்கள் வரத் தொடங்குவதாகப் பொருள்கொள்ளலாம் என்றும் சிலர் கூறுவர்.
ஆனால் இன்றைய தேதி வரை உலகில் இரு நாடுகளில் கோக கோலாவின் பாட்டில்கள் கால்பதிக்கவில்லை.
1. கியூபா
2. வட கொரியா.
இரு நாடுகளின் மீதும் அமெரிக்க அரசின் கடுமையான பொருளாதாரத் தடைகள் நீண்டு காலமாக இருந்து வருகின்றன.
கியூபா மீது 1962ஆம் ஆண்டும், வட கொரியா மீது 1950ஆம் ஆண்டும் கடும் வர்த்தக கட்டுப்பாடுகளை விதித்தது அமெரிக்கா. இதுநாள் வரை இந்த இரு நாடுகளிலும் கோககோலா விநியோகிக்கப்படுவதில்லை.
இதில் மற்றொரு வேடிக்கையான விஷயம் என்னவென்றால், 1906ஆம் ஆண்டு கோககோலா நிறுவனம், அமெரிக்காவுக்கு வெளியே தன் குளிர்பானத்தைப் பாட்டிலில் அடைக்கத் தேர்ந்தெடுத்த 3 நாடுகளில் கியூபாவும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.
1960களில் கியூபாவின் அதிபராக ஃபெடல் காஸ்ட்ரோ பொறுப்பேற்ற பின், பல தனியார் சொத்துக்களை அரசுடைமையாக்கினார். அதன் பின் கோக கோலாவும் கியூபாவுக்குள் நுழையவில்லை.
வட கொரியாவிலும் இதே கதை தான். கடந்த பல தசாப்த காலமாக இருநாடுகளுக்கு மத்தியிலான அரசியல் பிரச்சனைகளால் அந்நாட்டிலும் கோக கோலா
கால் பதிக்கவில்லை.
ஆனால் கருப்புச் சந்தைகள் மூலமாக இந்த இரு நாடுகளில் கோககோலா விற்கப்பட வாய்ப்பு இருக்கிறது என்பதையும் இங்கு மறுப்பதற்கில்லை.
1886ஆம் ஆண்டு ஜார்ஜியா மாகாணத்தில் அட்லாண்டா நகரத்தில் உருவாக்கப்பட்ட கோக கோலா, தொடக்கத்திலிருந்தே உலகம் முழுக்க விற்பனை செய்ய வேண்டும் என்கிற நோக்கில் வேலை செய்து வருகிறது. 1900களின் தொடக்க காலத்திலேயே ஆசியா மற்றும் ஐரோப்பாவில் பாட்டில்களில் அடைக்கப்பட்டு விற்கப்பட்டன.
குறிப்பாக இரண்டாம் உலகப் போர் காலகட்டத்தில் அமெரிக்க துருப்புகளுக்கு வெளிநாட்டிலும் கோக கோலா பானம் வழங்கப்பட்டது. ஆகையால், கோக கோலா நிறுவனத்துக்கு உலகம் முழுக்க 60க்கும் மேற்பட்ட ராணுவ பாட்டில் ஆலைகள் போர் காலத்தில் செயல்பட்டு வந்தன. மறுபக்கம் உள்ளூர் மக்களுக்கும் கோக கோலாவின் சுவை நாக்கில் ஒட்டுக் கொண்டது.
உலகப் போர் காலத்தில் பல அத்தியாவசியப் பொருட்கள் ரேஷன் முறையில் தனிநபர்களுக்கும், குடும்பங்களுக்கும், நிறுவனங்களுக்கும் வழங்கப்பட்டன. அதில் சர்க்கரையும் ஒன்று. ஆனால், கோக கோலா நிறுவனத்துக்கு சர்க்கரை ரேஷனில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டது.
போர் காலகட்டத்தில் அமெரிக்க படைகளின் உச்சபட்சத் தலைவராக இருந்த ட்வைட் ஐசன்ஹோவர் தனிப்பட்ட முறையில் கோக கோலாவின் ரசிகனாக இருந்ததாகச் சில குறிப்புகள் இருக்கின்றன. வட ஆப்பிரிக்க பகுதிகளில் கோக கோலா பானம் கிடைப்பதை அவர் உறுதி செய்ததாகவும் சில செய்திகள் வெளியாயின.
சோவியத் ரஷ்யாவின் உச்சபட்ச ஜெனரல்களில் ஒருவராக இருந்த ஜியார்ஜி சுகோவ்க்கே (Georgy Shukov) கோக கோலாவை ஐசன்ஹோவர் அறிமுகப்படுத்தினார் என்றும் கூறப்படுகிறது. ஜியார்ஜியோ நிறமற்ற வோட்காவைப் போலத் தோற்றமளிக்கும் கோக கோலாவைக் கேட்டதாக பிபிசி வலைதளக் கட்டுரை ஒன்றில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.
இன்றும் இந்தியாவில் கோக கோலா மனித இனத்துக்கு தீமை விளைவிப்பதாகப் போராடும் சிலரையோ, நீதிமன்றத்தில் கோலா பானங்களைத் தடை செய்யுமாறு வழக்கு தொடுத்ததாகவோ கேள்விப்பட்டிருப்பீர்கள்.
இப்படி தன் சமூகத்துக்கே கேடுவிளைவிக்கும் என ஒரு காலத்தில் பிரெஞ்சுக்காரர்கள் கோக கோலாவுக்கு எதிராகப் போராடியுள்ளார்கள். கோக கோலா டிரக்குகள் திறப்பி அனுப்பப்பட்டிருக்கின்றன, கோக் பாட்டில்கள் அடித்து நொறுக்கப்பட்டிருக்கின்றன.
சோவியத் ரஷ்யாவில் கோக கோலா விற்கப்பட்டால், அதனால் ஏற்படும் லாபம் முழுக்க ரஷ்யாவுக்குச் சென்று சேரும் என அந்நாட்டில் பல காலம் கோக கோலா வியாபாரம் செய்யவில்லை. அவ்வெற்றிடத்தை பெப்ஸி நிரப்பியது.
அதே போல பெர்லின் சுவர் 1989ஆம் ஆண்டு வீழ்த்தப்பட்ட போது, பல கிழக்கு ஜெர்மானியர்கள் கோக கோலாவை வாங்கிப் பருகினர். கோக கோலா அங்கு சுதந்திரத்தின் அடையாளமாக பார்க்கப்பட்டது. மறுபக்கம் இஸ்ரேலில் கோக கோலா விற்கப்படுவதால் 1970கள் முதல் 1990களின் தொடக்க காலம் வரை மத்தியக் கிழக்கு நாடுகளில் கோக கோலா புறக்கணிக்கப்பட்டது.
2003ஆம் ஆண்டு இராக் நாட்டில் அமெரிக்கப் படைகள் நுழைந்ததற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் தாய்லாந்தில் போராட்டக்காரர்கள் கோக கோலா பானத்தை சாலையில் கொட்டித் தீர்த்தனர்.
கோக கோலா அரசியலை விரும்பினாலும் விரும்பாவிட்டாலும், அதன் மீது பலமுறை பல்வேறு அரசியல் சாயங்கள் பூசப்பட்டுள்ளன. அமெரிக்கத்தன்மையைப் பிரமாண்டமாகப் பிரதிபலிக்கும் கோக கோலா பலமுறை சர்வதேச அரசியலால் மிகக்கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
ஆனால் 125 ஆண்டுகளைக் கடந்த கோக கோலா நிறுவனம் இப்போதும் புத்தம் புது கம்பெனி போல தன் விற்பனை எண்ணிக்கையை அதிகரித்துக் கொண்டே செல்கிறது. குறிப்பாக இந்தியா, சீனா, பிரேசில் போன்ற நாடுகளில் விற்பனையை அதிகரிக்க முனைப்போடு செயல்பட்டு வருகிறது கோக கோலா.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust