ராணுவ அதிகாரிகள் என்றாலே கடுகடுப்பானவர்கள், நேர்மையானவர்கள் என ஒரு பொது பிம்பம் இருக்கிறது.
ஆனால் இதையெல்லாம் உடைத்து மிக இளம் வயதிலேயே பிரிட்டன் ராணுவத்தில் சேர்ந்து பணியாற்றி, வெனிசுலா ராணுவத்தில் மிக உயரிய ராணுவ அதிகாரியாக வளர்ந்த ஒருவர், மக்களிடம் ஆசை வார்த்தை கூறி மோசம் செய்த கதைதான் இது.
ஸ்காட்லாந்தில் கிரேகர் (Gregor) என்கிற பெயரில் ஒரு ராஜ வம்சாவளி தொடர்ந்து வாழ்ந்து வருகிறது. அப்பேற்பட்ட ராஜ குடும்பத்தைச் சேர்ந்த கிரகர் மெக்ரகோர் (GREGOR MACGREGOR) என்கிற 16 வயது இளைஞர் 1803 ஆம் ஆண்டு பிரிட்டன் ராணுவத்தில் சேர்ந்தார்.
1810 ஆம் ஆண்டு வரை பிரிட்டன் ராணுவத்தில் பணியாற்றிய இவர் தீபகற்ப போரில் எல்லாம் பங்கெடுத்தவர். பின்னாளில் 1812 ஆம் ஆண்டு வெனிசுலா நாட்டில் நடைபெற்று வந்த சுதந்திரப் போரில் குடியரசு படையின் பக்கம் நின்று போராடியவர்.
ஒரு கட்டத்தில் அந்நாட்டிலேயே ஜெனரலாக பதவி உயர்வு பெற்றவர். கிட்டத்தட்ட நான்காண்டு காலங்களுக்கு வெனிசுலா சார்பாக ஸ்பெயின் நாட்டை எதிர்த்து போரிட்டு அந்நாட்டில் ஒரு சூப்பர் ஹீரோவாக வலம் வந்தவர்.
கிரெகர் 1820 - 21 கால கட்டத்தில் பிரிட்டன் நாட்டுக்கு திரும்பிய போது, ஹோண்டுராஸ் வளைகுடாவில் உள்ள மஸ்கிட்டோ கோஸ்ட் பகுதியின் அரசர் ஜார்ஜ் ஃபரெட்ரிக் அகஸ்டஸ் தன்னை பொயைஸ் (Poyais) என்கிற பகுதிக்கு கசிக்காக (Cazique) நியமித்திருப்பதாக கூறிக் கொண்டார்.
பொதுவாக கசிக் என்றால் மலைவாழ் மக்கள் கூட்டத்தின் தலைவன் என்று பொருள்.
மெக்ரேகார் பிரிட்டனுக்கு வந்த கப்பலிலேயே அவருடைய மனைவி, உறவினர் மற்றும் தென் அமெரிக்காவின் தேச பக்தர்களில் ஒருவர் என்று அழைக்கப்பட்ட சைமன் பொலிவர் ஆகியோரும் வந்திறங்கினர்.
மெக்ரகோர் கூறிய வார்த்தைகளை பிரிட்டன் அரசாங்கமே நம்பியது. லண்டன் அரசு தரப்பில் இருந்து மெக்ரகோருக்கு முறையான அரசு மரியாதையோடு பலமான வரவேற்பு கொடுக்கப்பட்டது.
இவர் வெனிசுலா நாட்டிற்கு சுதந்திரம் கிடைக்க பாடுபட்ட செய்தி, அப்போதே பிரிட்டன் மக்களில் பலரும் அறிந்திருந்ததால், அவருக்கு ஒரு முகவரியைக் கொடுத்திருந்தது.
முன்பே கூறியது போல பொயைஸ் என்கிற பகுதியில் கசிக்காக தன்னை அரசர் நியமித்திருப்பதாகவும், அப்பகுதி சுமார் 13,000 சதுர மைல் வளமான நிலப்பரப்பு கொண்டது என்றும் பிரச்சாரம் செய்ய தொடங்கினார்.
பொயைஸ் பகுதியில் வளமான மண், இயற்கை வளங்கள், மூன்று போகம் விளைச்சலைக் கொடுக்கும் மண், தங்கம், முத்து, வைரம் என இயற்கை வளங்கள் கொட்டி கிடப்பதாக கூறப்பட்டன. அதே நேரம் அப்பகுதியை வளர்த்தெடுக்க ஆள் பலமும், பணமும் தேவை என்றும் கூறினார்.
அவரைத் தேடி வந்த பணத்தால், அவர் ஒரு மில்லியனராகவே உருவெடுத்துவிட்டார். 1823 ஆம் ஆண்டு "ஹோண்டுவராஸ் பாக்கெட்" (Honduras Packet) மற்றும் "கின்னர்ஸ்லீ காசில்" (Kinnersley Castle) என்கிற இரண்டு கப்பல்கள் சுமார் 250 பயணிகளோடு பொயைஸ் பகுதியை நோக்கி பயணப்பட்டன.
சுமார் இரண்டு மாத கால பயணத்திற்கு பிறகு, இரு கப்பல்களும் பொயைஸ் பகுதியை சென்றடைந்தன.
அப்பகுதியை பார்த்தவுடனேயே அந்த இரு கப்பல்களிலும் பயணித்த மக்களுக்கு, தவறான இடத்திற்கு வந்து விட்டோமோ என்ற சந்தேகம் வந்தது .
அவர்கள் சென்றடைந்த பகுதி ஒரு வனப்பகுதியாகவும் மனிதர்களைக் கடித்து துன்புறுத்தும் பூச்சி பொட்டுக்கள் மற்றும் விஷம் நிறைந்த பாம்புகள் கொண்ட நிலப்பகுதியாகவும் இருந்தது.
அப்போதுதான் அங்கு வந்து சேர்ந்த பிரிட்டன் மக்களுக்கு தங்கள் வாங்கியது ஒரு வெற்று நிலப்பரப்பு என்றும், அவர்கள் கையில் இருக்கும் நில பத்திரங்கள் மற்றும் ஆதாரங்கள் அனைத்தும் மதிப்பற்றவை என்பதையும் உணர்ந்தனர்.
இப்போது பொயைஸ் பகுதிக்கு சென்றடைந்த மக்கள் மீண்டும் நாடு திரும்ப முடியாத சூழலில் சிக்கினார்.
காரணம் அவர்கள் பிரிட்டனிலிருந்து பொயைஸ் வந்து சேர பயன்படுத்திய இரு கப்பல்களும் கடல் சீற்றங்களாலும் மோசமான வானிலை காரணமாகவும் சேதுமடைந்துவிட்டன.
பொயைஸ் பகுதியில் இருந்து 50க்கும் குறைவானவர்கள் மட்டுமே குத்துயிரும் கொலை உயிருமாக நாடு திரும்பினர். பிரிட்டனில் ஏமாற்றியது போலவே 1826 ஆம் ஆண்டு, சில மாதங்களோடு அதே திட்டத்தை பிரான்சில் அரங்கேற்றனர்.
சற்று சுதாரித்துக் கொண்ட பிரான்ஸ் நாடு அவர் மீது வழக்கு தொடுத்தது. அவரை நேரடியாக சிறையில் அடைக்க முடியவில்லை என்றாலும், அவரோடு பணியாற்றியவர்களில் ஒருவரை சிறையில் அடைக்க முடிந்தது.
பிரிட்டன் மற்றும் பிரான்ஸ் நாட்டில் அரங்கேற்றிய திட்டங்களைத் தொடர்ந்து, 1838 ஆம் ஆண்டு வெனிசுலா நாட்டுக்கே திரும்பினார் கிரகோர் மெக்ரகோர். அந்த நாடு, தன் முன்னாள் ஜெனரலை சகல மரியாதையோடு வரவேற்றது.
1845 ஆம் ஆண்டு வெனிசுலா நாட்டின் தலைநகரான கராகசில் தன் 58 வது வயதில் காலமானார் மெக்ரகோர். அவருக்கு முழு ராணுவ மரியாதைகளோடு கராகஸ் தேவாலயத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டார்.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust