சாட்விக் போஸ்மென், மைக்கெல் பி ஜோர்டன் ஆகியோர் நடித்து, கடந்த 2018ஆம் ஆண்டு வெளியான பிளாக் பேந்தர் திரைப்படத்தில் பலரும் சிறப்பாக பங்களித்திருப்பதாக பல தரப்பு ரசிகர்களால் பாராட்டப்பட்டது.
அப்படத்தில், வகாண்டா என்கிற கற்பனை சாம்ராஜ்ஜியத்தின் சிறப்புப்படைப் பிரிவைச் சேர்ந்தவராக வந்த டோரா மிலாஜே என்கிற கதாபாத்திரம் அதிக ரசிகர்களைக் கவர்ந்தது.
அது வெறும் கற்பனையில் உதித்த கதையல்ல, உண்மையிலேயே அப்படி ஒரு பெண் வீராங்கனைகளைக் கொண்டு உருவாக்கப்பட்ட ராணுவம் நிஜத்தில் இருந்தது.
அந்த பெண்கள் ராணுவப்படை தொடங்கப்பட்டு, அவர்கள் எதிரிப்படைகளோடு போரிட்டு வெற்றிகளைக் குவித்து, போர்களத்தில் மாண்டுள்ளனர் என இணையத்தில் கட்டுரை ஒன்றில் படிக்க முடிந்தது.
நம்மை மேலும் ஆச்சரியப்படுத்தும் விஷயம் என்னவென்றால், இன்று வரை அப்படையினர் தன் ராணிக்கு மெய்க்காவலர்கலாக பணியாற்றி வருகிறார்கள் என்பது தான்.
மேற்கு ஆப்பிரிக்காவில் இருக்கும் பெனின் குடியரசு தான் ஒரு காலத்தில் தஹோமெ சாம்ராஜ்ஜியமாக இருந்தது. அங்கு தான் ஃபான் (தஹோமெ) இன பெண்கள் மட்டுமே நிறைந்த ராணுவம் உருவாக்கப்பட்டது.
யார் உருவாக்கினார்? ஏன், எப்போது இந்த ராணுவம் உருவாக்கப்பட்டது?
தஹோமெ சாம்ராஜ்ஜியம் அடிக்கடி அருகிலுள்ள மேற்கு ஆப்பிரிக்க நாடுகளோடு போரிட்டுக் கொண்டிருந்ததால், ஆண்களின் எண்ணிக்கை கணிசமாகக் குறைந்தது.
போரிட ஆண்கள் இல்லை என்கிற காரணத்தால் மட்டும் எதிரிகளிடம் மண்டியிட முடியாது என வீர முழக்கமிட்டனர். அதன் விளைவாகத் தான் மெய்காவலர்களாக இருந்த பெண்கள் படை ராணுவத்தில் சேர்க்கப்பட்டதாக ஒரு கருத்து நிலவுகிறது.
இந்த அமேசான் பெண்கள் மெய்க்காவலர்கள் படையை ராணி ஹாங்பே உருவாக்கியதாக பிபிசி வலைதளக் கட்டுரை ஒன்றில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.
சுமார் 17ஆம் நூற்றாண்டில் இந்தப் படையை அவர் உருவாக்கி இருக்கலாம் என சில வலைதளங்கள் சொல்கின்றன.
வேறு சில வலைதளங்களோ ஹங்பே என ஒரு ராணியே ஒரு கட்டுக்கதை, அப்படி ஒருவர் தஹோமெ சாம்ராஜ்ஜியத்தில் வாழவே இல்லை என்றும் கூறுகின்றன.
1625ஆம் ஆண்டு முதல் 1894ஆம் ஆண்டு வரை தஹோமெ சாம்ராஜ்ஜியத்தின் முன்களப் போர் வீரர்களாக தஹோமெ அமேசான்கள் போரிட்டதாக பிபிசி வலைதளக் கட்டுரை கூறுகிறது.
இந்த பெண்கள் படை, தொடக்கத்தில் யானையை வேட்டையாடுபவர்களாக இருந்தததாகவும், பிற்காலத்தில் மனிதர்களை வேட்டையாடக் கூடியவர்களாக மாறினர் என ஒரு கருத்து நிலவுகிறது.
இந்த பெண் மெய்க்காப்பாளர்கள் ஹாங்பே ராணிக்கும், அவருக்குப் பிறகு ராஜ்ஜியத்துக்கு தலைமை தாங்கிய அரசர்களுக்கும் மெய்க்காவலர்களாக வாழ்ந்தனர் என்கிற கருத்தை பெரும்பாலானோர் ஏற்றுக் கொள்கின்றனர்.
அண்டை பகுதிகளில் உள்ள பழங்குடிகளை வெல்லும் போராக இருக்கட்டும் அல்லது ஐரோப்பிய படைகளுக்கு எதிர்வினையாற்றுவதாக இருக்கட்டும், அமேசான் பெண்கள் படை அச்சமற்றதாகவும், வீரதீரர்களாகவும் விளங்கினர்.
1892ஆம் ஆண்டு, தஹோமெ ராஜ்ஜியம் பிரெஞ்சு காலனியாக மாறுவதற்கு முன், நடைபெற்ற போரில் கலந்து கொண்ட 434 மெய்காப்பாளர்களில் 17 பேர் மட்டுமே உயிருடன் நாட்டுக்கு திரும்பியதாக சில சிலிர்ப்பூட்டும் வீரக் குறிப்புகளை பிபிசி கட்டுரையில் பார்க்க முடிகிறது.
தஹோமெ சாம்ராஜ்ஜியத்தை 1818 முதல் 1858 வரை ஆட்சி செய்tஹார் மன்னர் கெசோ (Ghezo). இவர் தான் முதல் முறையாக தமது ராணுவப்படையில் அமேசான் பெண்களை அதிகாரபூர்வமாக இணைத்துக் கொண்டாரெனவும் ஒரு கருத்து நிலவுகிறது.
அந்த காலத்தில் ஐரோப்பிய அடிமை வர்த்தகம் நடைபெற்று வந்ததால், ராணுவத்தில் ஆள் பற்றாக்குறையைச் சமாளிக்க, இந்த பெண் மெய்க்காப்பாளர்களை படையில் சேர்க்கும் திட்டத்தை மன்னர் கெசோ கொண்டு வந்திருக்கலாம் என வரலாற்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
எது எப்படியோ, தஹோமெ ராஜ்ஜியத்தில் அமேசான் பெண்கள் அங்கீகரிக்கப்பட்ட படை வீராங்கனைகளான பிறகு அவர்களின் வலிமை பெருகியது.
தஹோமெ வீராங்கனைப் பெண்களைப் பார்த்த பிறகு, கிரேக்க புராணக் கதைகளில் கூறப்பட்ட ஐரோப்பிய காலனித்துவ நாடுகளைச் சேர்ந்தவர்கள் தஹோமெ வீராங்கனைகளை 'கருப்பின அமேசான்கள்' என்று அழைத்தனர். இன்று அந்தப் பெயரே அப்படைக்கு நிலைத்துவிட்டது.
வரலாறுப்படி, ஹாங்பே 18ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் தமது இரட்டை சகோதரர் அகாபா இறந்த பிறகு அரச பொறுப்பை ஏற்றுக் கொண்டதாகவும் அதிகாரப்பசி கொண்ட தன் இளைய சகோதரரான அகாஜாவால் அவர் அரியணையில் இருந்து இறக்கப்பட்டு அதிகாரத்தைக் கைப்பற்றியதாகவும் கூறப்படுகிறது.
அகாஜா அதிகாரத்துக்கு வந்த பின், ஆண்கள் மட்டுமே அரச பதவியில் இருக்க வேண்டும் என்கிற நம்பிக்கை கொண்டிருந்தார். இதனால், தன் மூதாதையர்கள் விட்டுச் சென்ற அனைத்து வரலாற்றுக் குறிப்புகள் மற்றும் அகாஜா தடயங்களை அழித்ததாக தற்போதைய ராணி ஹாங்பே கூறியதாக சில குறிப்புகளை இணையத்தில் காண முடிகிறது.
அபோமி அரண்மனை சுவற்றின் சில பகுதிகளில், நாடாண்ட ராஜ வம்சம் குறித்த விவரங்கள் சிற்பக்காட்சிகளாக வடிக்கப்பட்டுள்ளன. அதில் ஹாங்பே பற்றிய குறிப்புகள் ஏதும் இல்லையென ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
பல ஐரோப்பிய அடிமை வர்த்தகர்கள், மிஷனரிகள், காலனித்துவவாதிகள் தங்களுடைய குறிப்புகளில், இந்த வீர மங்கைகளுடனான சந்திப்பு குறித்து பதிவு செய்திருக்கிறார்கள். ஆனாலும், அப்பெண்கள் பற்றிய பல வரலாற்றுக் குறிப்புகள் நம்பக்கூடியவைகளாக இல்லை.
இன்று, வரலாற்றாசிரியர்கள் இந்த பெண் மெய்க்காப்பாளர்களை மினோ என்று குறிப்பிடுகின்றனர். இதை உள்ளூர் ஃபான் மொழியில் 'எங்கள் தாய்மார்கள்' என்று பொருளாம்.
இப்போது தஹோமெ சாம்ராஜ்ஜியம் நவீன கால பெனின் குடியரசாக உள்ளது. தஹோமெ என ஒரு சாம்ராஜ்ஜியம் இருந்ததற்கான பல தடயங்கள் இப்போதும் இங்கு பரவலாகக் காணப்படுகின்றன.
தஹோமெ போர் வீராங்கனைப் பெண்கள் இப்போதும் வாழ்ந்து வருகிறார்கள். தங்களுடைய மூதாதையர்களின் பாரம்பரியத்தை இப்போதும் அவர்களில் சிலர் போற்றிப் பாதுகாக்கிறார்கள்.
தஹோமெ ராஜ்ஜியத்தின் ராணி, அவர்களுடைய பாரம்பரிய வழக்கத்தின்படி சில பட்டங்கள் மற்றும் சில அதிகாரத்தோடு வலம் வருகிறார்.
தங்களுடைய தலைமுறையிலும் ராணியாக இருப்பவருக்கு முறையாக மரியாதை செய்கிறார்கள் அந்த வீர மங்கைகள். ஒரு அரசியை எப்படி காவல் காப்பார்களோ அப்படி, அந்த ராணியைச் சுற்றி பெண்கள் மெய்காவலர்களாக இருக்கிறார்கள்.
"இவர் எங்களுடைய அரசர். எங்களுடைய கடவுள். அவருக்காக நாங்கள் உயிரையும் துறப்போம்" என்கிறார் அரசியோடு நெருக்கமாக பழகும் ஒரு மெய்க்காப்பாளர்.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust