பொதுவாக சமூகத்தின் மேல்மட்டத்தில் இருப்பவர்கள் பயன்படுத்தும் பொருட்கள் மற்றும் சேவைகள் தான், சிறிது காலத்துக்குப் பிறகு சமூகத்தின் அடித்தட்டில் இருக்கும் மக்கள் பரவலாகப் பயன்படுத்த தொடங்குவார்கள்.
மின்சாரம், இருசக்கர வாகனம், உணவு விடுதிகளில் சாப்பிடுவது, பீட்சா என பல உதாரணங்களை அடுக்கிக் கொண்டே போகலாம்.
ஆனால் ஜீன்ஸ் பேண்ட்கள் பணக்காரர்களுக்கும் சமூகத்தில் உச்சத்தில் இருக்கும் மனிதர்களுக்கும் தயாரிக்கப்பட்டது அல்ல. ஆனால் இன்று சமூக அந்தஸ்து, பாலினம் என எந்தவித வேறுபாடுமின்றி அனைத்து தரப்பினரும் ஜீன்ஸ் பேண்ட் அணிகிறார்கள்.
பச்சிளம் குழந்தை முதல் வயதானவர்கள் வரை, ஓய்வாக வீட்டில் ஒய்யாரமாக படுத்திருக்கும் தருணம் முதல் பரபரப்பாக அலுவலகத்தில் சுற்றித்திரிந்து வேலை பார்க்கும் சூழல் வரை, திருமணம், காதுகுத்து, ரயில் பயணம், விமான பயணம், துக்க நிகழ்வு என எப்போதும் அணிந்து கொள்ளக்கூடிய ஓர் ஆடையாக ஜீன்ஸ் பேண்ட்கள் பரிணமித்து இருக்கிறது.
இத்தனை புகழ்பெற்ற ஜீன்ஸ் பேண்ட் யாரால் கண்டுபிடிக்கப்பட்டது? முதன்முதலில் ஜீன்ஸ் பேண்ட்கள் யாருக்கு தைக்கப்பட்டது? அது எப்படி இன்று உலகம் முழுக்க பிரபலமானது? வாருங்கள் பார்ப்போம்.
அந்த ஒரு நாள்...
டென்ட் கொட்டகைகள், கம்பளிப் போர்வை போன்றவைகளை தைத்துக் கொடுக்கும் ஒரு சாதாரண தையல்காரர் தான் ஜேகப் டேவிஸ் (Jacob Davis). இவர் அமெரிக்காவில் உள்ள நெவாடா மாகாணங்களில் ரெனோ என்கிற ஊரில் ஒரு தையல் கடையை நடத்தி வந்தார்.
1850 களுக்குப் பிறகு உள்ளூரில் தொழிலாளியாக வேலை பார்க்கும் ஒருவரின் மனைவி, தையல்காரர் ஜேகப்பிடம் ஒரு வித்தியாசமான கோரிக்கையோடு வந்தார்.
"என் புருஷனுக்கு ஒரு ஜோடி பேண்ட் தச்சி கொடுங்க. அந்த பேண்ட் எளிதில் கிழியக் கூடாது. என் புருஷன் கடுமையாக உழைக்கக் கூடிய தொழிலாளிங்குறதால, அந்த அளவுக்கு பேண்டும் கடுமையா உழைக்கணும்" என ஒரு கோரிக்கை வைக்கிறார்.
இந்த புதிய கோரிக்கை ஜேகப்பை சிந்திக்க வைத்தது. அப்போது டெனிம் என்கிற துணியை வியாபாரம் செய்துவந்த லெவி ஸ்ட்ராஸ் அன்ட் கோ (Levi Strauss & Co) நிறுவனத்திலிருந்து துணியை வாங்கினார். எந்த பகுதி எல்லாம் எளிதில் கிழிந்துவிடும் என்று தோன்றுகிறதோ அந்த இடங்களில் எல்லாம் இரும்பு ரிவிட்டுகளைப் பயன்படுத்தினார். உதாரணத்துக்கு பேண்டிலுள்ள பாக்கெட்டுகளை குறிப்பிடலாம்.
தையல்காரர் ஜேகப் டேவிஸ் கருதியது போலவே, அவர் தைத்த பேண்ட் பல்வேறு கடினமான சூழ்நிலைகளை தாண்டியும் உறுதியாக நின்றது. உலகப் புகழ்பெற்ற ஜீன்ஸ் பேண்ட் அனாயாசமாகப் பிறந்தது.
டெனிம் துணியில் தைக்கப்பட்ட பேண்டுகளுக்கு, ஜீன்ஸ் என பெயர் வந்தது ஏன்?
தொடக்கத்தில் டெனிம் துணிகளில் பேண்ட் தைக்கப்பட்டாலும் காலப்போக்கில் இத்தாலியில் ஜெனோவா (Genoa) என்கிற நகரத்தில் விளைந்த பருத்தியால் தயாரிக்கப்பட்ட ஜெனெ (Gene) துணிகளில் தொழிலாளிகள் பயன்படுத்தும் ரஃப் & டஃப் பேண்டுகள் தயாரிக்கப்பட்டன. எனவே, காலப்போக்கில் ஜெனேவிலிருந்து தயாரிக்கப்பட்ட பேண்டுகள், ஜீன்ஸ் பேண்டுகள் என்று அழைக்கப்படத் தொடங்கியதாக இந்தியா டைம்ஸ் இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தன்னுடைய உறுதியான பேண்டுகள் சந்தையில் சக்கை போடு போடும் என்று நம்பிய தையல்காரர் ஜேகப் டேவிஸ், டெனிம் துணிகளை விற்று வந்த லெவி ஸ்ட்ராஸ் என்பவரோடு இணைந்து 1873 ஆம் ஆண்டு மே 20 ஆம் தேதி ஆண்கள் வேலைக்காக பயன்படுத்தும் பேண்டில் ரிவிட்டுகளைப் பயன்படுத்தி தயாரிக்கும் செயல் முறைக்கு காப்புரிமைப் பெற்றனர். இன்றுவரை உலக ஜீன்ஸ் ரசிகர்களால் மே 20ம் தேதி ஜீன்ஸின் பிறந்த நாளாக கருதப்பட்டு வருவதாக, லெவி ஸ்ட்ராஸ் அண்ட் கோ வலைதளத்தில் கூறப்பட்டுள்ளது.
ஏன் நீல நிறம்?
ஒரு துணியை எடுத்துக் கொண்டால் அதில் செங்குத்தாகவும் கிடைமட்டமாகவும் நூல் இழைகள் இருப்பதை பார்த்திருப்பீர்கள்.
டெனிம் துணி வகைகளில் செங்குத்தாக இருக்கும் நூல்களில் ஒன்று இண்டிகோ வண்ணத்தால் சாயம் ஏற்றப்பட்டதாகவும் மற்றொன்று வெள்ளை நிறத்தில் அல்லது வேறு ஏதாவது ஒரு நிறத்தில் இருந்தது. எனவே பொதுவாக அப்போது டெனிம் துணிகள் நீல நிறத்தில் வந்தன.எனவே தொடக்க காலத்தில் நீலநிறத்தில் இருந்த ஜீன்ஸ்கள் பிரபலமாக, இன்றுவரை ஜீன்ஸ் என்றால் நீல நிறம் தான் என்பது போல மக்கள் மனதில் பதிந்து விட்டது.
தொழிலாளர்களின் ஆடை டூ ஃபேஷன் ஆடை
முன்பே கூறியது போல ஜீன்ஸ் பேண்ட் என்றால் அது கடுமையான உடல் பணிகளைச் செய்யும் சுரங்கப் பணி ஊழியர்கள் போன்ற தொழிலாளிகளின் ஆடையாக மட்டுமே இருந்தது. மெல்ல இந்த உறுதியான கால்சட்டை பலதரப்பட்ட மக்களிடம் பரவ தொடங்கியது.
மறு பக்கம், ஜீன்ஸ் பேண்ட் குறித்து என்னவென்று தெரியாத மக்கள் மத்தியிலும் ஹாலிவுட் ஃபேஷன் என்கிற பெயரில் பிரபலப்படுத்தியது. 1953ஆம் ஆண்டு வெளியான 'தி வைல்ட் ஒன்' என்கிற படத்தில் அமெரிக்காவின் பிரபல நடிகர் மார்லன் பிராண்டோ படம் முழுக்க ஜீன்ஸ் பேண்டில் வலம்வந்தார்.
1955 ஆம் ஆண்டு ஜேம்ஸ் டீன் 'Rebel without a Cause' என்கிற படத்தில் ஜீன்ஸ் பேண்ட் அணிந்து வந்தார். ஹாலிவுட் மூலம் ஆண்கள் அனைவரும் ஜீன்ஸ் ஜுரம் பிடித்து அலைந்தனர்.
1961 ஆம் ஆண்டு 'தி மிஸ்ஃபிட்ஸ்' என்கிற படத்தில் ஜீன்ஸ் பேண்டில் வலம் வந்து பெண்களை பெருவாரியாக ஈர்த்தார் தேவதை மர்லின் மன்றோ. ஜீன்ஸ் பேண்ட் உலகில் பெண்களை அழைத்து வந்த பெருமை நடிகை மர்லின் மன்றோவையே சேரும்.
1960களில், தி பீட்டில்ஸ் இசைக்குழுவினர் தொடர்ந்து ஜீன்ஸ் அணிந்து, ஜீன்ஸ் பேண்டுக்கு இலவச விளம்பரம் செய்தனர். இப்படி பல தசாப்த காலமாக பிரபலமடைந்த ஜீன்ஸ் ஆடைகள், 21ஆம் நூற்றாண்டில் பலதரப்பு மக்களின் அன்றாட ஆடைகளில் ஒன்றாகிப் போய்விட்டது.
இன்று ஏழையோ பணக்காரனோ, உலகத்தின் எந்த கண்டத்தில் வாழ்பவராக இருந்தாலும் குறைந்தபட்சமாக ஜீன்ஸ் பயன்களை குறித்து அறிந்திருப்பர் என உறுதியாக கூறலாம்.
மாவீரர்கள் எதிரிகளை கொன்று காலத்தை வெல்கிறார்கள். வணிக ரீதியாக காலத்தை கடந்து நிற்கும் ஜீன்ஸ் ஆடைகளுக்கும் அது பொருந்தும்.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn: https://www.newssensetn.com/
Nalam360 : https://www.newssensetn.com/health
Newsnow: https://www.newssensetn.com/wow-news
Tamilflashnewsapp: https://www.newssensetn.com/tamilnadu