சிங் ஷி : ஒரு பாலியல் தொழிலாளி உலகை உலுக்கிய கடற்கொள்ளையர் ஆன கதை - ஒரு விறுவிறு வரலாறு

வறுமையான குடும்பத்தில் பிறந்து ஒரு பாலியல் தொழிலாளியாக மாறினார் சிங் ஷி. பின்னர் அவர் கடற்கொள்ளையராக மாறி ஒரு தலைவியான போது அவரது படையில் 1,800 கடற்கொள்ளை கப்பல்களும், 80,000 கொள்ளையர்களும் பணியாற்றினர்.
Ching Shih
Ching ShihTwitter
Published on

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பார்த்துக் களித்த திரைப்படம், “பைரேட்ஸ் ஆஃப் தி கரீபியன்". ஜேக் ஸ்பாரோவின் சாகசங்களை மையமாக வைத்து வெளியான இத்திரைப்படம் ஒரு தொடராக வெளிவந்து ரசிகர்களை வசப்படுத்தியது. ஒரு படத்தில் உலகெங்கிலும் உள்ள கடற்கொள்ளையர்களின் மாநாடு சிங்கப்பூரில் நடைபெறும். அதில் சீனாவிலிருந்து ஒரு பெண் கலந்து கொள்வார்.

இத்திரைப்படம் ஒரு புனைவு என்றாலும் இந்த சீனப் பாத்திரம் வரலாற்றில் உண்மையாகவே கடற்கொள்ளை ராணியாக வாழ்ந்தவர். அவர்தான் சிங் ஷி.

சீனாவை கிங் வம்ச அரச பரம்பரை ஆண்டபோது இந்தப் பெண் கடலில் ஒரு கொள்ளையராக ஆதிக்கம் செலுத்தினார். வரலாற்றில் மிகவும் வெற்றிகரமான ஒரு கடற்கொள்ளையராகவும் கருதப்படுகிறார்.

வறுமையான குடும்பத்தில் பிறந்து ஒரு பாலியல் தொழிலாளியாக மாறினார் சிங் ஷி. பின்னர் அவர் கடற்கொள்ளையராக மாறி ஒரு தலைவியான போது அவரது படையில் 1,800 கடற்கொள்ளை கப்பல்களும், 80,000 கொள்ளையர்களும் பணியாற்றினர்.

ஏழ்மையில் பிறந்த சிங் ஷி

தென்கிழக்கு சீனாவின் குவாங்டாங் மாகாணத்தில் 1775 ஆம் ஆண்டு ஒரு ஏழைக் குடும்பத்தில் பிறந்தார் சிங் ஷி. குடும்ப வருமானத்தின் பொருட்டு அவர் பருவ வயதில் பாலியல் தொழிலாளியாக சேர்க்கப்பட்டார். கான்டோனீஸ் துறைமுக நகரத்தில் மலர் படகு என்று அழைக்கப்படும் ஒரு மிதக்கும் விபச்சார விடுதியில் வேலை பார்த்தார்.

அவரது அழகு, அறிவு, விருந்தோம்பல் காரணமாக அப்பகுதியில் விரைவிலேயே பிரபலமனார். அவரது வாடிக்கையாளர்களில் அரச குடும்பத்தைச் சேர்ந்த பிரமுகர்கள், இராணுவத் தளபதிகள் மற்றம் பணக்கார வணிகர்கள் உண்டு.

ஒரு கடற்கொள்ளைத் தளபதியை மணந்த சிங் ஷி

கடற்கொள்ளை உலகில் பிரபலமாக இருந்த தளபதி ஜெங் யி ஒரு முறை தற்செயலாக சிங் ஷியை சந்தித்தார். அந்தப் பெண்ணின் அழகு, அறிவுக் கூர்மையால் தளபதி கவரப்பட்டார். பிறகு அவரைத் திருமணம் செய்து கொள்வதாக விருப்பத்தை தெரிவித்தார். சிங் ஷியும் அதை ஏற்றுக் கொண்டார். ஆனால் அந்தப் பெண்ணை கடற்கொள்ளையரான தளபதி வலுக்கட்டாயமாக ஆட்களை வைத்து கடத்தினார் என்றும் கூறப்படுகிறது. எது எப்படியோ சிங் ஷி கடற்கொள்ளை உலகில் நுழைந்து விட்டார்.

பைரேட்ஸ் ஆஃப் தி கரீபியன்
பைரேட்ஸ் ஆஃப் தி கரீபியன்Twitter

ஆனால் திருமணத்திற்கு முன்பே சிங் ஷி இரண்டு நிபந்தனைகளைக் கோரினார். ஒன்று தளபதி ஜெங் யி தனது வருவாயில் 50% தரவேண்டும். இரண்டாவது கடற்கொள்ளைப் படையில் ஒரு பகுதியைத் தனது தலைமையில் இயங்க அனுமதிக்க வேண்டும். இரண்டையும் தளபதி ஜெங் யி ஏற்றுக் கொண்டார். இப்படியாக ஒரு கடற்கொள்ளை ராணி உருவானார்.

செங்கொடி கடற்கொள்ளை கடற்படையில் சிங் ஷி செய்த சீர்திருத்தம்

ஜெங் யின் கடற்கொள்ளை படை செங்கொடி கடற்படை என்று அழைக்கப்பட்டது. அதன் இரகசிய பரிவர்த்தனை அத்தனையிலும் சிங் ஷி பங்கேற்றார். பிறகுத் தனது கடற்கொள்ளை படையில் பல விதிகளை நடைமுறைப்படுத்தினார். மறுப்பவர்களுக்கு மரண தண்டனை வழங்கப்பட்டது. சிறைபிடித்த பெண்களை பாலியல் வன்புணர்ச்சி செய்வது, திருமணத்திற்கு வெளியே உறவு வைத்துக் கொள்வது போன்றவை குற்றமாக அறிவிக்கப்பட்டு மரணதண்டனை வழங்கப்பட்டது.

இத்தகை சீர்திருத்தங்களால் செங்கொடி கடற்படையால் சிறை பிடிக்கப்பட்ட பெண்கள் மரியாதையுடன் நடத்தப்பட்டனர். அழகில்லாதவர்கள், கர்ப்பிணிப் பெண்கள் உடனே விடுதலை செய்யப்பட்டனர். கவர்ச்சியான பெண்கள் விற்கப்பட்டனர் அல்லது பரஸ்பர சம்மதத்துடன் ஒரு கடற்கொள்ளையரைத் திருமணம் செய்து கொள்ள அனுமதிக்கப்பட்டனர். கொள்ளையர்கள் விசுவாசமாகவும், நேர்மையாகவும் நடந்து கொண்டால் அவர்களுக்கு ஊக்கப் பரிசுகள் வழங்கப்பட்டன.

Ching Shih
மான்சா மூசா : பில்கேட்ஸ், அமேசான் ஜெஃப் பெசாஸைவிட உலகின் மிகப்பெரிய பணக்கார தங்க அரசன் கதை

செங்கொடி கடற்படை உலகின் மிகப்பெரிய கொள்ளையர் கடற்படையாகத் தலையெடுத்தது

ஜெங் யி மற்றும் சிங் ஷி இருவரது கூட்டுத் தலைமையில் செங்கொடி கடற்படை வளர்ந்து வந்தது. பல கட்டுப்பாடுகள் இருந்தாலும் கொள்ளையர்களுக்கு அவ்வப்போது நியாயமான வெகுமதிகள் அளிக்கப்பட்டன. இதனால் செங்கொடி கொள்ளையர் கடற்படை செழிப்புடன் காணப்பட்டது. அப்பகுதியில் உள்ள பல சிறு கடற்படைகள் செங்கொடியுடன் தம்மை இணைத்துக் கொண்டன.

இருவரது திருமணத்தின் போது செங்கொடி அணியிலிருந்த கப்பல்கள் எண்ணிக்கை 200 மட்டுமே. சில மாதங்களில் அந்த எண்ணிக்கை 1,800 ஆனது. இதன் விளைவாக உலகிலேயே மிகப்பெரும் கொள்ளையர் கடற்படையாகச் செங்கொடி மாறியது.

கடற்கொள்ளையர்கள்
கடற்கொள்ளையர்கள்Twitter

தத்தெடுத்த மகனை மணந்த சிங் ஷி

தளபதி ஜெங் யீ மற்றும் சிங் ஷி இருவரும் அருகிலுள்ள ஒரு கடற்கரை கிராமத்திலிருந்து 20 வயதே ஆன சியுங் போ எனும் மீனவ இளைஞனைத் தத்தெடுத்தனர். இதனால் ஜெங் யீக்கு அடுத்தபடியான தளபதியாக சியுங் போ ஆனார். ஆனாலும் சிங் ஷியும் அந்த இளைஞனும் இரகசிய காதல் உறவைக் கொண்டிருந்ததாகப் பல கதைகள் கூறுகின்றன.

சிங் ஷியின் கணவர் ஜெங் யீ 1802 ஆம் ஆண்டில் தனது 42 வயதில் காலமானார். இதனால் சிங் ஷியின் தலைமை கேள்விக்கிடமானது. ஆனாலும் தனது அறிவு மற்றும் கப்பல்களில் உள்ள தனது தொடர்புகளைப் பயன்படுத்தி அதிகார வெறி கொண்ட கப்பல் தளபதிகளை அவர் நிதானப்படுத்தினார். மேலும் தனது வளர்ப்பு மகனை செங்கொடி கடற்படையில் தலைவராக நியமித்தார்.

கணவர் இறந்த 2 வாரத்திற்குள் ஜெங் யி தனது வளர்ப்பு மகனை திருமணம் செய்து கொள்வதாக அறிவித்தார். ஜெங் யியின் காதலனாக மாறிய சியுங் போ தனது விசுவாசத்தை முழுமையாக காதலியிடம் காட்டினார். இதனால் சிங் ஷி செங்கொடி கடற்படையை திறம்பட ஆட்சி செய்ய முடிந்தது.

கடற்கொள்ளையர்கள்
கடற்கொள்ளையர்கள்Twitter

தென் சீனக் கடலில் ஆதிக்கம் செலுத்திய செங்கொடி கடற்படை

சிங் ஷியின் தலைமையின் கீழ், செங்கொடி கடற்படை புதிய கடலோர கிராமங்களைக் கைப்பற்றியது. மேலும் தென் சீனக் கடலின் முழு கட்டுப்பாட்டையும் கைப்பற்றியது. அப்பகுதியில் உள்ள முழு கிராமங்களும் கடற்படைக்காக வேலை செய்தன. கொள்ளையர்களுக்குத் தேவையான பொருட்கள் மற்றும் உணவுகளைக் கிராமத்தினர் வழங்கினர். மேலும் தென் சீனக் கடலைக் கடக்க விரும்பும் எல்லாக் கப்பல்களுக்கும் வரி விதிக்கப்பட்டது. அவர்கள் அடிக்கடி பிரிட்டிஷ் மற்றும் பிரெஞ்சு நாட்டுக் கப்பல்களைக் கொள்ளையடித்தனர்.

பிரிட்டனின் கிழக்கிந்திய கம்பெனியைச் சேர்ந்த ஊழியரான ஆங்கிலேயர் ரிச்சர்ட் கிளாஸ்பூல் செங்கொடியால் சிறை பிடிக்கப்பட்டு 4 மாதங்கள் தடுப்புக் காவலிலிருந்தார். இவர்தான் பின்னர் விடுதலையானதும் சிங் ஷியின் தலைமையில் 80,000 கடற்கொள்ளையர் இருப்பதாக மதிப்பிட்டார்.

சிங் ஷி
சிங் ஷிTwitter

குயிங் வம்ச கடற்படையைத் தோற்கடித்த சிங் ஷி

சீனாவின் குயிங் வம்ச அரசு செங்கொடி கொள்ளையர்களுக்கு முற்றுப் புள்ளி வைக்கும் முகமாக ஒரு பெரும் கடற்படையை அனுப்பியது. இரு படைகளும் மோதினாலும் சில மணி நேரங்களுக்குள் குயிங் அரச கடற்படை தோற்கடிக்கப்பட்டது. அரச கடற்படையில் இருக்கும் வீரர்கள் செங்கொடி படையில் இணைந்தால் தண்டிக்கப்பட மாட்டார்கள் என சிங் ஷி அறிவித்தார். இதையடுத்து பெரும் அரச படை செங்கொடியில் இணைந்தது.

Ching Shih
Sex Strike : உள்நாட்டு போர்களை நிறுத்திய பெண்களின் செக்ஸ் நிறுத்தம் - ஓர் ஆச்சர்ய வரலாறு!

இறுதியில் போர்த்துக்கீசியர்களால் தோற்கடிக்கப்பட்ட சிங் ஷி

ஒரு பெண் சீனப் பேரரசருக்குச் சொந்தமான நிலம், கடல், மக்கள் மற்றும் வளங்களில் பெரும் பகுதியைக் கட்டுப்பாட்டில் வைத்திருப்பதை பெரும் அவமானமாகச் சீனப் பேரரசர் கருதினார். செங்கொடி கடற்படையின் அனைத்து கடற் கொள்ளையர்களுக்கும் பொது மன்னிப்பு வழங்குவதன் மூலம் பேரரசர் அமைதிக்கு முயன்றார்.

இதே காலத்தில் போர்த்துக்கீசியக் கடற்படை செங்கொடி படையைத் தாக்கியது. இரண்டு முறை போர்த்துக்கீசியர்கள் தோற்றுப் போனாலும் மூன்றாவது முறை அவர்கள் பெரும் பலத்துடன் வந்து தாக்கினர். இதன் விளைவாகச் செங்கொடி கடற்படை தோற்கடிக்கப்பட்டு அழிக்கப்பட்டது.

மூன்று வருடக் கொடூரமான கடற்கொள்ளை ஆட்சிக்குப் பிறகு சிங் ஷி 1810 ஆம் ஆண்டில் சீன அரசின் பொது மன்னிப்பின் கீழ் ஓய்வு பெற்றார்.

கடற்கொள்ளை
கடற்கொள்ளைTwitter

செங்கொடி கொள்ளையர்களின் சகாப்தம் முடிந்தது

இறுதியில் செங்கொடி கடற்கொள்ளையர்கள் அனைவரும் சரணடையுமாறு நிர்பந்திக்கப்பட்டனர். அதே வேளையில் அவர்களுக்கு சில சலுகைகளும் வழங்கப்பட்டன. இதுவரை அவர்கள் கொள்ளையடித்த பொருட்களை வைத்துக் கொள்ளலாம். மேலும் சீன அரசின் இராணுவம், கடற்படையில் சேர்ந்து கொள்ளலாம். சிங் ஷியின் தத்தெடுப்பு மகனும் கணவனும் ஆகிய சியூங் போ கூட குவாங்டாங் மாகாணத்தின் கப்பற்படை தளபதியாக நியமிக்கப்பட்டார்.

Ching Shih
எல் டொராடோ எனும் தங்க நகரம் உண்மையில் இருந்ததா? - ஒரு சாகச பயணம்

சூதாட்ட – விபச்சார விடுதியைத் திறந்த சிங் ஷி

சிங் ஷிக்கு 1813 இல் ஒரு மகனும் பின்னர் ஒரு மகளும் பிறந்தனர். சிங் ஷியின் இரண்டாவது கணவரான சியூங் போ 1822 இல் கடலில் இறந்து போனார். இதன் பிறகு பெரும் பணக்காரப் பெண்மணியாக இருந்த சிங் ஷி குவாங்டாங் மாகாணத்தின் தீபகற்ப பகுதியான மக்காவ்விற்கு திரும்பினார். அங்கே அவர் ஒரு சூதாட்ட விடுதியையும் ஒரு விபச்சார விடுதியையும் திறந்தார். மேலும் உப்பு வணிகத்திலும் ஈடுபட்டார்.

குடும்பத்தினர் சூழ தனது 69 ஆவது வயதில் சிங் ஷி அமைதியாக இறந்து போனார். இன்றும் அவரது வாரிசுகள் அப்பகுதியில் சூதாட்ட, விபச்சார தொழிலைத் தொடர்வதாகச் சொல்லப்படுகிறது.

Ching Shih
பூமியின் வரைபடத்தில் இல்லாத மர்மப் பகுதிகள் - காரணம் என்ன?

ஆனால் சிங் ஷி எனும் இந்த கடற்கொள்ளை ராணி இன்றும் பல திரைப்படங்கள், தொலைக்காட்சி தொடர்கள், நாட்டுப்புறக் கதைகள் மூலம் நினைவு கூறப்படுகிறார். உலகின் மிகவும் வெற்றிகரமான கடற்கொள்ளையர்களில் சிங் ஷியும் ஒருவராகக் கருதப்படுகிறார்.

Ching Shih
Mao History : சீன பழமை வாதத்தை எதிர்த்து கம்யூனிச புரட்சி ! மா சே துங் வரலாறு

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com