உலக அளவில் கொரோனா வைரஸ் ஏற்படுத்திய பாதிப்புகளிலிருந்து இன்னும் உலகம் முழுமையாக மீளவில்லை. ஆனால், கொரோனா அலை தற்போது தான் கொஞ்சம் ஓய்ந்திருப்பதாக உலகம் ஆசுவாசப்பட்டுள்ளது. அதற்குள் சீனாவில் மீண்டும் அடுத்த சுற்று கொரோனா வைரஸ் பரவத் தொடங்கியுள்ளது.
ஒரு சில வாரங்கள் இருக்கும்... மிஞ்சிப் போனால் ஒரு மாத காலம் இருக்கும். ஆனால் பிரிட்டனில் ஒரு நபர் சுமார் 16 மாத காலம் கொரோனாவால் அவதிப்பட்டுள்ளார். சரியாக நாட்களைக் குறிப்பிட வேண்டுமானால் 505 நாட்கள் அந்த மனிதர் கொரோனாவால் அவதிப்பட்டுள்ளதாகப் பிரிட்டனைச் சேர்ந்த மருத்துவர்கள் அதை ஆவணப்படுத்தியுள்ளதாக பிபிசியின் சுகாதார ஆசிரியர் மிஷெல் ராபர்ட்ஸ் ஒரு கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார்.
இதுவரை உலகிலேயே கொரோனாவால் நீண்ட நாட்கள் பாதிக்கப்பட்ட நபர் அவர் தான் எனப் பிரிட்டனில் அவரைக் குறித்த விவரங்கள் பிரிட்டன் மருத்துவர்களால் ஆவணப்படுத்தப்பட்டுள்ளன.
அந்த நபருக்கு கொரோனா தவிர மற்ற பல மருத்துவ ரீதியிலான உடல் நலக் கோளாறுகளும் இருந்ததாகவும் மிஷெல்லின் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
2020ஆம் ஆண்டின் தொடக்கத்தில் அவர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட போது பிசிஆர் பரிசோதனை மூலம் அவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. அந்த நபர், 2021ஆம் ஆண்டில் மருத்துவமனையில் சிகிச்சையிலிருந்த போதே காலமாகிவிட்டார் என்பது வருத்தத்துக்குரியது.
என்ன இருந்தாலும், ஒரு நபர் இத்தனை காலம் கொரோனாவால் பாதிக்கப்படுவது மிகவும் அரிதான விஷயம் என லண்டனைச் சேர்ந்த மருத்துவர்கள் கூறுகின்றனர்.
பொதுவாகவே, மனிதர்களின் உடல் கொரோனா வைரஸைக் கொன்று உடலைப் பாதுகாத்துக் கொள்ளும். ஆனால் அந்த நபரின் உடலிலிருந்த நோய் எதிர்ப்பு மண்டலம் மிகவும் பலவீனமாக இருந்ததாம்.
இது போலத் தீவிரமாக ஏற்படும் நோய்த் தொற்று குறித்து போதிய அளவுக்கு ஆராய்ச்சிகளை மேற்கொண்டால் தான், கொரோனாவால் ஏற்படும் இது போன்ற மோசமான அபாயங்களைக் குறித்த புரிதலைப் பெற முடியும் என நிபுணர்கள் கூறுகின்றனர்.
அந்த நபர் சிகிச்சையிலிருந்த போது கிட்டத்தட்ட்ட 50 முறைக்கு மேல் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அத்தனை முறையும் அவருக்கு கொரோனா இருந்தது உறுதி செய்யப்பட்டது.
இதில் ஆச்சரியமான விஷயம் என்ன என்றால், அந்த மனிதருக்கு ஏற்பட்ட முதல் முறை கொரோனா தொற்றே குணமாகவில்லை, அதே தொற்றால் தான் அவர் தொடர்ந்து பாதிக்கப்பட்டிருந்ததாக விரிவான ஆய்வக பரிசோதனை அறிக்கைகள் சுட்டிக்காட்டுவதாக, பிரிட்டனின் தேசிய சுகாதார சேவை, லண்டனில் உள்ள கிங்ஸ் கல்லூரி உட்பட பல்வேறு மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
அதாவது, அந்த நோயாளிக்கு கொரோனா வைரஸுக்கு எதிரான மருந்துகள் கொடுத்தும் கொரோனாவில் இருந்து அவர் மீளவில்லை.
கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு, நீண்ட நாட்களாக கொரோனா வைரஸ் அறிகுறிகள் உடலில் வெளிப்படுவது லாங் கோவிட் என்று அழைக்கப்படுகிறது.
மேலே குறிப்பிட்ட நபர் பாதிக்கப்பட்டு அவதிப்பட்டதற்கும், இந்த லாங் கோவிட்டுக்கும் நிறைய வேறுபாடுகள் உண்டு என்பது இங்குக் குறிப்பிடத்தக்கது.
"அவருக்கு எடுக்கப்பட்ட தொண்டை சுவாப் பரிசோதனைகள் அனைத்துமே நேர்மறையாக (பாசிடிவ்வாக) தான் காட்டியது. அவருக்கு எடுக்கப்பட்ட பரிசோதனையில் ஒரு முறை கூட எதிர்மறையான முடிவு வரவில்லை. அவர் ஒரு முறை பாதிக்கப்பட்ட கொரோனாவால் தான் தொடர்ந்து அவதிப்பட்டார் என்பதை மரபணு குறியீட்டை வைத்துக் கூறலாம். இந்த மரபணு குறியீட்டை வைரஸ் வரன்முறையில் (ஜினோம் சீக்வென்சிங்) மூலம் காணலாம்" என மருத்துவர் லூக் ப்ளாக்டன் ஸ்னெல் பிபிசியிடம் கூறினார்.
நீண்ட காலம் கொரோனாவால் பாதிக்கப்படுவது என்பது மிகவும் அரிதான விஷயம், அதே நேரத்தில் அதைக் கவனிக்க வேண்டியது அவசியமாகிறது. இப்படி ஒருவரின் உடலில் கொரோனா வைரஸ் நீண்ட காலத்துக்கு இருந்தால், அது புதிய கொரோனா வைரஸ் திரிபுகள் உருவாக வழிவகுக்கலாம். ஆனால் அதிர்ஷ்டவசமாக, மேலே குறிப்பிட்ட நபர் நீண்ட காலமாக கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருந்தாலும், அவர் உடலில் புதிய கொரோனா வைரஸ் திரிபுகள் புதிதாக உருவாகவில்லை.
உலக சுகாதார அமைப்பின் தரவுகள் படி, இதுவரை உலக அளவில் 50.58 கோடி பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். அவர்களில் 62.13 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர். இந்தியாவைப் பொருத்தவரை இதுவரை சுமார் 4.31 கோடி பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 5.22 லட்சம் பேர் மரணித்துள்ளனர்.
தொடர்ந்து சமூக இடைவெளியைக் கடைப்பிடிப்பது, முகக்கவசம் அணிவது, கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்வது மட்டுமே மக்களை கொரோனாவிலிருந்து காக்கும் வழிமுறைகள். எனவே அனைவரும் இதை கவனத்தில் எடுத்துக் கொண்டு பின்பற்ற வேண்டுமென உலக சுகாதார அமைப்பு வலியுறுத்தி வருகிறது
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com