ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின், தன்னுடைய நாட்டின் பொருளாதாரத்தை சிதைக்கக்கூடிய ஒரு போரை நடத்தி, ஆட்சிக்காலத்தின் மிக முக்கியமான காலகட்டத்தில் நின்றுகொண்டிருக்கிறார். புடினின் நெருங்கிய வட்டாரத்தில் இருந்தபடி அவருக்குத் தோள் கொடுப்பவர்கள் யார்?
ரஷ்யாவின் பாதுகாப்பு அமைச்சரான செர்கே ஷோய்கூ, புடினைப் போலவே மேலை நாடுகளின் அச்சுறுத்தலிலிருந்து ரஷ்யாவை மீட்கவேண்டும் என்ற எண்ணம் கொண்டவர். புடினின் அரசியல் வாரிசாகவும் கடந்த காலத்தில் பார்க்கப்பட்டார். சமீபத்தில் வெளியான ஒரு புகைப்படத்தில் இவர் புடினிடமிருந்து வெகுதூரத்தில் அமர்ந்திருப்பதுபோல் தோன்றுகிறது. இது இவருக்கும் புடினுக்குமான இப்போதைய டைவெளியை காட்டுகிறது என்று பத்திரிக்கையாளர்கள் எழுதிவருகிறார்கள்.
மற்றவர்களின் கருத்தை நிராகரிக்கிறார் ரஷ்ய பாதுகாப்பு வல்லுநரும் எழுத்தாளருமான ஆண்ட்ரே சோல்டடாவ். 2014 க்ரிமியா கைப்பற்றுதல் நிகழ்வை வெற்றிகரமாக நடத்தியவர், ஜி.ஆர்.யூ ராணுவ அமைப்பின் தலைவர் என்ற பல புகழாரங்களுக்கு சொந்தக்காரரான செர்கேவின் சொற்களுக்கு இன்னமும் மதிப்பு உண்டு என்றும், புடினின் ஆலோசகர்களில் செர்கேவுக்கே அதிகமான முக்கியத்துவம் தரப்படுகிறது என்றும் அவர் உறுதியாகக் கூறுகிறார். ரஷ்யாவின் ராணுவம் மட்டுமல்லாமல் ரஷ்ய செயல்பாடுகளின் அடிநாதமாக இருக்கும் கருத்தாக்கங்களுக்கும் செர்கேவின் பங்களிப்பு முக்கியம் என்று அவர் விளக்குகிறார்.
புடினின் நெருங்கிய வட்டாரத்தில் முக்கியமானவர் வாலரி கெராசிமோவ். ராணுவக் குழுவின் தலைவர் என்ற முறையில் உக்ரைன் மீதான படையெடுப்பை நிகழ்த்தும் பொறுப்பு இவருடையதுதான். 1999ம் ஆண்டு முதலே புடினின் ராணுவ செயல்பாடுகளில் முக்கியப் பங்கு வகித்துவரும் வாலரி, உக்ரைன் படையெடுப்பின் ஆரம்ப கட்டத் தடுமாற்றங்களாலும் ராணுவத்தினரின் மனச்சோர்வாலும் கொஞ்சம் மதிப்பிழந்திருக்கிறார் என்று உள்வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
செக்யூரிட்டி கவுன்சிலின் செயலாளரான நிக்கோலாய் பட்ரூஷேவ், 1970களிலிருந்தே புடினுக்கு நெருங்கிய அதிகாரியாக இருந்து செயல்பட்டு வருகிறார். இவருடன் பாதுகாப்பு சேவை தலைமை அதிகாரி அலெக்சாண்டர் போர்ட்னிக்காவ் மற்றும் வெளிநாடுகளுக்கான உளவுத் தலைமை அதிகாரி செர்கை நாரிஷ்கின் ஆகிய இருவரும் சேர்ந்தே புடினுடன் பயணித்துவருகிறார்கள். புடினுடைய உள் வட்டாரங்களுக்குள்ளேயெ இவர்கள் தனி முக்கியத்துவம் பெற்ற மும்மூர்த்திகளாகக் கோலோச்சுகிறார்கள். அமெரிக்கா ரஷ்யாவை உடைக்க விரும்புகிறது என்பதை படையெடுப்புக்கு முன்பு பட்ரூஷேவ் தீவிரமாக வலியுறுத்தியதாகத் தெரிகிறது.
ரஷ்யாவின் வெளியுறவுத்துறை அமைச்சரான செர்கே லாவ்ரோவ், 18 ஆண்டுகள் அரசியல் அனுபவம் கொண்டவர். முடிவுகள் எடுப்பதில் அவருக்கு முக்கியத்துவம் தரப்படவில்லை என்றாலும்கூட ரஷ்யாவின் கருத்துக்களை உலக அரங்கில் முன்வைப்பதில் இவருக்குத்தான் முதல் இடம். பேச்சுவார்த்தைக்காக இவர் தொடர்ந்து வலியுறுத்தியபோதும் புடின் இவருடைய சொற்களைக் காதில் போட்டுக்கொள்ளவில்லை என்பதால் உக்ரைன் விவகாரத்தில் இவர் ஓரங்கப்பட்டப்படுகிறாரா என்ற சந்தேகம் எழுந்திருக்கிறது.
ஃபெடரேஷன் கவுன்சிலின் உறுப்பினரான வாலண்டினா மாட்வியென்கோ, இந்த உள் வட்டாரத்தின் ஒரே பெண் அதிகாரி. பல ஆண்டுகளாக இவர் புடினுடன் பயணித்துக்கொண்டிருந்தாலும் இவர்களை முன்னிறுத்திவிட்டு தன்னுடைய முடிவுகளை புடின் மட்டுமே எடுக்கிறார் என்றும், உண்மையில் யார் யாருக்கு எத்தனை செல்வாக்கு இருக்கிறது என்பதைப் புரிந்துகொள்ளவே முடியவில்லை என்றும் ரஷ்யாவின் அரசியல் வல்லுநர்கள் தெரிவிக்கிறார்கள்.
ரஷ்யாவின் தேசிய பாதுகாப்புப் படை இயக்குநரான விக்டர் சொலோடாவ், புடினின் பாதுகாப்பு அதிகாரியாகவும் இருந்தவர். எதிர்பார்த்தபடி உக்ரைன் படையெடுப்பு சில நாட்களில் முடிவுக்கு வராததால், இவரது பாதுகாப்புப் படை இப்போது படையெடுப்பின் செயல்பாடுகளில் முன்னிலை வகிக்கிறது. ஆனால் இவருக்கு ராணுவப் பயிற்சி இல்லை என்பதால் விக்டரின் தலைமை பலனளிக்குமா என்பது போகப் போகத்தான் தெரியும்.
பொருளாதாரத்தை மீட்டெடுக்கவேண்டிய பொறுப்பில் இருக்கும் பிரதமர் மிக்கைல் மிஷுஸ்டின், மாஸ்கோ மேயர் செர்கே சோப்யானின், எண்ணெய் நிறுவன அதிபர் இகோர் செசின், கோடீஸ்வரர்களான போரிஸ் ராட்டென்பர்க் மற்றும் ஆர்காடி ராட்டன்பர்க் ஆகியோரும் உள்வட்டாரங்களில் இருந்து புடினுக்கு ஆலோசனை வழங்குவதாக அரசியல் வல்லுநர்கள் கூறுகிறார்கள்.