வேற்றுகிரகவாசிகள் 400,000 ஆண்டுகளுக்கு முன்பாக மனிதக்குலத்துடன் எந்த தொடர்பும் கொள்ள மாட்டார்கள் என்று கூறுகிறது புதிய ஆய்வு ஒன்று.
வேற்றுக்கிரக உயிரினங்களை நம்பும் கணிசமான அமெரிக்கர்களுக்கு இது ஒரு கெட்ட செய்தி. ஏலியன்ஸ் குறித்து சதிக்கோட்பாடுகளை நம்பும் மக்கள் எந்த ஆய்வையும் ஏற்க மாட்டார்கள் என்றாலும், அறிவியலை நம்புவார்கள் இந்த புதிய ஆய்வு குறித்து அறிந்து கொள்வது அவசியம். சமீபத்திய ஆய்வின்படி வேற்றுக் கிரகவாசிகள் நம்மை அதாவது மனித குலத்தை தொடர்பு கொள்ள குறைந்தது 4,00,000 ஆண்டுகளுக்கு மேலாக ஆகும்.
இந்த புதிய ஆராய்ச்சியின் படி வேற்று கிரகவாசிகளின் அறிவார்ந்த நாகரிகங்களை (CETIs - Communicating Extraterrestrial Intelligent Civilizations ) தொடர்புகொள்வதில் நிறையச் சிக்கல் இருக்கிறது. இந்த ஆய்வுக் கட்டுரை பெய்ஜிங் நார்மல் பல்கலைக்கழகத்தின் வானியல் துறையை சேர்ந்த எழுத்தாளர்களான வென்ஜி சாங் மற்றும் ஹீ காவ் ஆகியோரால் எழுதப்பட்டது.
இந்த ஆய்வுக் கட்டுரை இரண்டு அறிவியல்பூர்வமான சாத்தியங்களை முன்வைக்கிறது. முதலாவதாக, எத்தனை கிரகங்கள், உயிரினங்கள் வாழக்கூடியதாக இருக்கின்றன. மற்றும் இந்த கிரகங்களில் உயிர்கள் எப்படி அறிவார்ந்த நாகரீகமாக (CETIs) எவ்வளவு காலத்தில் அடிக்கடி உருவாகின்றன. இரண்டாவதாக ஒரு நட்சத்திரத்தின் பரிணாம வளர்ச்சியின் எந்த கட்டத்தில் ஒரு CETI அல்லது தொடர்பு கொள்ள கூடிய வேற்றுக் கிரவாசிகளின் அறிவார்ந்த நாகரீகங்கள் பிறக்கலாம்.
இந்த ஆசிரியர்கள் பல்வேறு மாடலிங் மாதிரிக் காட்சிகளை தங்களது ஆய்வில் பயன்படுத்தினர். அந்த ஆய்வு அளவுருக்களின் (parameters) அடிப்படையில், அத்தகைய நாகரிகங்கள் மனிதக்குலத்துடன் தொடர்பு கொள்ள எவ்வளவு காலம் எடுக்கும் என்பதற்கான நம்பிக்கையான மற்றும் அவநம்பிக்கையான முடிவுகளுக்கு ஆராய்ச்சியாளர்கள் வந்தடைந்தனர்.
நம்பிக்கையான சூழ்நிலையின்படி, வேற்றுக்கிரவாசிகள் தோன்றுவதற்கு முன் ஒரு நட்சத்திரம் அதன் வாழ்நாளில் குறைந்தபட்சம் 25 சதவிகிதம் அழியாமல் இருக்க வேண்டும். இதன்படி அந்த நட்சத்திர மண்டலத்தில் உயிரினங்கள் வாழ்வதற்கு தேவையான கிரகங்கள் இருப்பதற்கும், அப்படி வாய்ப்புள்ள கிரகங்களில் வேற்றுக்கிரக வாசிகள் தோன்றுவதற்கான வாய்ப்பு 0.1 சதவிகிதம் மட்டுமே இருக்கிறது.
இந்த காட்சியானது நமது சூரிய குடும்பம் இருக்கும் மில்க்கிவே எனப்படும் பால்வெளி அண்டத்தில் 42,000 எண்ணிக்கையிலான கிரகங்களில் அறிவார்ந்த வேற்றுகிரகவாசிகள் இருக்கலாம் எனச் சொல்கிறது. அப்படி இருக்கும் பட்சத்தில் வேற்றுகிரகவாசிகளுடன் தொடர்பை ஏற்படுத்த மனிதர்கள் சுமார் 2,000 ஆண்டுகள் காத்திருக்க வேண்டும் என்று இந்த நம்பிக்கையான சூழல் குறித்த ஆய்வு முன்வைக்கிறது.
இப்போது,அவநம்பிக்கையான சூழ்நிலையின் மாதிரிகள் கூறுவதை பார்ப்போம். இதன்படி அறிவார்ந்த வேற்றுக்கிரவாசிகள் நாகரீகம் தோன்றுவதற்கு முன், ஒரு நட்சத்திரம் அதன் வாழ்நாளில் குறைந்தபட்சம் 75 சதவிகிதம் உயிர்வாழ வேண்டும். மேலும் பூமியைப் போன்று உயிரினங்கள் வாழ்வதற்காக கிரகங்கள் தோன்றுவதற்கும் அதில் அறிவார்ந்த வேற்றுக்கிரக வாசிகள், தோன்றுவதற்கான வாய்ப்பு 0.001 சதவிகிதம் மட்டுமே.
இந்த காட்சியானது பூமி இருக்கும் மில்க்கிவே எனப்படும் விண்மீன் மண்டலத்தில் வெறும் 111 அறிவார்ந்த நாகரீகங்கள் வாழும் கிரகங்கள் இருக்கலாம் என்று ஊகம் செய்கிறது. இந்த பால்வெளி விண்மீன் மண்டலத்தில் 100 முதல் 400 பில்லியன் நட்சத்திரக் குடும்பங்கள் உள்ளன. அதில் ஒன்றுதான் நமது சூரியக் குடும்பம். எனில் பால்வெளி மண்டலத்தின் பிரம்மாண்டத்தை புரிந்து கொள்ளலாம். எனவே, அடிப்படையில், வேற்றுகிரகவாசிகள் மனிதர்களுடன் தொடர்பு கொள்ள இன்னும் 400,000 ஆண்டுகள் ஆகும் என்று இந்த அவநம்பிக்கை மாதிரி காட்சி தெரிவிக்கிறது.
தி ஆஸ்ட்ரோபிசிகல் ஆய்விதழில் வெளியிடப்பட்ட இந்த ஆய்வு, அவநம்பிக்கையான சூழலில் மனிதர்கள் வேற்றுகிரகவாசிகளுடன் தொடர்பு கொள்ள வாய்ப்பில்லை என்று வாதிடுகிறது. ஏனெனில் மக்கள்தொகை பிரச்சினைகள், அணுசக்தி போரால் வரும் பேரழிவு, திடீர் காலநிலை மாற்றம், முரட்டு வால்நட்சத்திர தாக்குதல் மற்றும் சுற்றுச்சூழல் மாற்றங்கள் போன்ற காரணிகளால் 4,00,000 ஆண்டுகளுக்கு முன் மனித இனம் அழிந்து விடும். நாம் அழிந்த பிறகு வேற்றுக்கிரகவாசிகள் வந்தாலும் தொடர்பு கொள்வதற்கு இங்கே அறிவார்ந்த மனிதக் குலமோ, இல்லை உயிரினங்களோ இருக்காது.
நாட்டிங்ஹாம் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்களால் 2020 இல் வெளியிடப்பட்ட முந்தைய ஆய்வு ஒன்று, பால்வெளி அண்டத்தில் 36 வேற்று கிரக அறிவார்ந்த நாகரிகங்கள் (CETIs) இருக்கக்கூடும் என்று மதிப்பிட்டுள்ளது.
ஆக மொத்தம் இதுவரை ஆய்வு செய்யப்பட்டதின் படி வேற்றுக்கிரக வாசிகள் நம்மைத் தொடர்பு கொள்வதன் அறிவியல் பூர்வமான கணிப்பு இதுதான். மாறாக வேற்றுக்கிரவாசிகள் நம்மை தொடர்பு கொள்வதில் ஏதும் நேர்மறையான தகவல் கிடைத்தால் இந்த ஆய்வின் கணிப்பு மாறும். ஆனால் அதுவரை வேற்றுகிரக வாசிகளோடு நமது தொடர்பு என்பது வெறும் ஊகமாக மட்டுமே இருக்கும். அந்த ஊகத்தின் படி இரண்டு சாத்தியங்கள் இருக்கின்றன.
ஒன்று வேற்றுக்கிரக வாசிகள் நம்மை தொடர்பு கொள்ள 2,000 ஆண்டுகள் ஆகலாம். இரண்டு நாம் அவர்களை தொடர்பு கொள்ள 4,00,000 ஆண்டுகள் ஆகலாம். ஆனால் அதற்குள் பூமியில் உயிரினங்களின் வாழ்க்கை இயற்கையாகவோ, செயற்கையாகவோ அழிக்கப்பட்டுவிடும்.
இப்போது சொல்லுங்கள், நீங்கள் எதை நம்புகிறீர்கள்?
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn: https://www.newssensetn.com/
Nalam360 : https://www.newssensetn.com/health
Newsnow: https://www.newssensetn.com/wow-news
Tamilflashnewsapp: https://www.newssensetn.com/tamilnadu