18 ஆண்டுகள், 13,000 கிமீ: காதலியை பார்க்க கண்டங்கள் கடந்த நாரை - ஒரு காவிய காதல் கதை!

குணமடைந்தபோதிலும், பலத்த காயம் ஏற்பட்டிருந்ததால் அந்த பறவையினால் தொலைதூரப் பயணங்களை மேற்கொள்ள முடியாமல் போனது...
18 ஆண்டுகள், 13,000 கிமீ: காதலியை பார்க்க கண்டங்கள் கடந்த நாரை -  ஒரு காவிய காதல் கதை!
18 ஆண்டுகள், 13,000 கிமீ: காதலியை பார்க்க கண்டங்கள் கடந்த நாரை - ஒரு காவிய காதல் கதை!twitter

காதல், அதற்காக ஒருவர் செய்யும் தியாகம் பற்றி பேசுகையில், ரோமியோ ஜூலியட், லைலா மஜ்னு என்ற பெயர்களை தான் நாம் எடுத்த எடுப்பில் உச்சரிப்போம். ஆனால் இந்த பாசமும், பிணைப்பும் மனிதர்களுக்கு மட்டுமே உரியது அல்லவே?

உயிருள்ள எந்த ஒரு ஜீவராசிக்கும், உணர்வுகள் இருக்கும், குறிப்பாக காதல் என்ற உணர்வு இருக்கும் என இது போன்ற கதைகளை கேட்கையில் நமக்கு தெரிகிறது.

இது க்ளெபடன் மலினா இணையின் காதல் கதை. கிட்ட தட்ட 18 ஆண்டுகளாக, தனது காதலி மலினாவுக்காக சுமார் 13,000 கிலோமீட்டர் தூரம் பயணித்தார் க்ளெபடன்.

2021ல் மலினா இறக்கும் வரை, இந்த பயணம் தொடர்ந்தது.

யார் இந்த மலினா - க்ளெபடன் இணை? இவர்களின் காதல் கதையை ஏன் உலகம் கொண்டாடுகிறது?

மலினா மற்றும் க்ளெபடன் நாரை இனப் பறவைகள்.

அது 1993ஆம் வருடம். ஐரோப்பிய நாடான குரொஷியாவின் ப்ராட்ஸ்கி வரோஸ் என்ற கிராமத்தில் வசிப்பவர் வோகிக் என்பவர். இவர் ஒரு முறை மீன்பிடிக்க சென்ற போது படுகாயம் அடைந்திருந்த ஒரு பெண் நாரையை கண்டெடுத்தார்.

வேடர்கள் சுட்டதில் தனது இறக்கையில் காயம் அடைந்திருந்தது அந்த நாரை. அதனைக் காப்பாற்றி எடுத்துவந்து, உரிய சிகிச்சை அளித்தார் வோகிக்

குணமடைந்தபோதிலும், பலத்த காயம் ஏற்பட்டிருந்ததால் அந்த பறவையினால் தொலைதூரப் பயணங்களை மேற்கொள்ள முடியாமல் போனது.

இதனால் நாரைக்கு மலினா எனப் பெயரிட்டு, வீட்டின் கூரையில் ஒரு கூடும் கட்டி, தன் மகள் போல் அவளை வளர்க்க தொடங்கினார் வோகிக்.

மலினாவுக்காக தினமும் மீன் பிடித்து வந்தார். உணவளித்தார், விளையாடினார், வெளியில் செல்லும்போது தன்னுடன் கூட்டிச்சென்றார்.

காரில் பயணிக்க தொடங்கியதிலிருந்து, மலினாவுக்கு என்று ஒரு தனி இருக்கை ஒதுக்கப்பட்டது.

இப்படியாக சென்றுக் கொண்டிருக்க, 8 ஆண்டுகளுக்கு பின் மலினாவின் வாழ்க்கையில் ஒரு மாற்றம் தோன்றியது.

2001ல் வசந்த காலம் வந்தபோது, ஒரு ஆண் நாரை மலினாவை சந்தித்தது. இருவருக்குள்ளும் காதல் மலர்ந்தது என்றே சொல்லவேண்டும்.

இவர்களின் நெருக்கத்தை பற்றி அறிந்த வோகிக், அந்த நாரைக்கு க்ளெபடன் என பெயரிட்டார், அதற்காக கூட்டையும் பெரிதாக்கினார்

அது நாரைகளின் புலம்பெயர் காலம் என்பதால், ஆப்பிரிக்காவில் இருந்து பறவைகள் இடம்பெயர ஆரம்பித்திருந்தன.

வசந்த காலத்தில் மலினாவும் க்ளெபடனும் சந்தோஷமாக வாழ்ந்து வந்தனர். மலினாவின் நிலையறிந்த க்ளெபடன், மனைவிக்காக தினமும் உணவு எடுத்து வந்தான். காதலில் திளைத்த இருவரும் குழந்தைகளையும் பெற்றெடுத்தனர்

ஆனால், பருவம் மாறியது.

திடீரென ஒரு நாள் க்ளெபடன் பறந்து சென்றது.

தன் காதலன் இன்று திரும்புவான், நாளை திரும்புவான் எனக் காத்திருந்த மலினாவுக்கு ஏமாற்றம் தான் மிஞ்சியது...

18 ஆண்டுகள், 13,000 கிமீ: காதலியை பார்க்க கண்டங்கள் கடந்த நாரை -  ஒரு காவிய காதல் கதை!
சுபாஷ் சந்திர போஸ்: "என் இதயத்தின் ராணி நீ தான்!" நேதாஜியை ஆட்டிப்படைத்த ஆஸ்த்ரிய காதல்

மன உளைச்சலுக்கு ஆளான மலினா, உணவு உண்பதை தவிர்த்து, தினமும் வானத்தையே பார்த்தவண்ணம் காத்திருந்தாள். மிகவும் சிரமப்பட்டு, வலுக்கட்டாயமாக தன் மகளுக்கு உணவளித்தார் வோகிக்.

அவரும் க்ளெபடனின் செயலால் பாதிக்கப்பட்டிருந்தார். இவர்களின் குழந்தைகளும் வளர்ந்து பறந்து சென்று விட, மலினாவின் வாழ்வில் தனிமையின் இருள் சூழ தொடங்கியது.

மாதங்கள் சென்று, மீண்டும் வசந்த காலம் வந்தபோது, ஒரு நாள் மலினாவிடம் வந்தடைந்தான் க்ளெபடன்.

நாரைகள் இடம்பெயரும் காலமென்பதால், மீண்டும் ஆப்பிரிக்காவுக்கே பறந்து சென்ற க்ளெபடன், வசந்த காலம் வந்ததும் மனைவியிடம் வந்துவிட்டது.

ஆண்டுதோறும், வசந்த காலம் தொடங்கியவுடன் முதலில் பறந்து வருவது க்ளெபடன் தான். பருவம் முடிந்து பறவைகள் வீடு திரும்பும்போது கடைசியாக செல்வதும் அவனே!

இப்படியாக 18 ஆண்டுகள் மலினாவும் க்ளெபடனும் வாழ்ந்து வந்தனர். இந்த 18 ஆண்டுகளில் இவர்களுக்கு 66 குழந்தைகள் பிறந்தது.

மலினாவுடன் இருப்பதற்காக தென் ஆப்பிரிக்காவிலிருந்து ஐரோப்பா வரை, சுமார் 13,000 கிலோமீட்டர் பறந்தது க்ளெபடன்.

ஆனால் 2017ஆம் ஆண்டு மலினாவை சந்திக்க க்ளெபடன் வரவில்லை. தவிதவித்து போனாள் மலினா.

நாரை பறவைகளின் வழக்கமான இடம்பெயர் வழியை பற்றி தெரிந்துகொண்ட வோகிக், லெபனனில் இப்பறவைகள் வேட்டையாடப்படுவதாக கண்டறிந்தார்.

உடனடியாக லெபனன் அதிபருக்கு கடிதம் எழுதினார் வோகிக். தன் மகளின் காதல் கதையை பற்றி மட்டுமே எழுதாமல், பறவைகள் வேட்டையாடப்படுவதை தவிர்க்க நடவடிக்கை எடுக்குமாறும் அக்கடிதத்தில் கேட்டுக்கொண்டார்.

இந்த கடிதத்தால் கவரப்பட்ட லெபனன் அதிபரும், பறவைகளை பாதுகாக்க சட்ட ரீதியிலான மாற்றத்தை வரவழைத்தார்.

இந்த கடிதம் இணையத்தில் பரவ, உலக நாடுகளின் ஊடகங்கள், மலினா க்ளெபடனின் காதலை 21ஆம் நூற்றான்டின் சிறந்த காதல் கதையாக போற்றினர்.

18 ஆண்டுகள், 13,000 கிமீ: காதலியை பார்க்க கண்டங்கள் கடந்த நாரை -  ஒரு காவிய காதல் கதை!
விக்டோரியா மகாராணியின் இந்திய காதல்? யார் இந்த அப்துல் கரீம் - ரகசிய வரலாறு

இவையெல்லாம் ஒரு புறம் இருந்தாலும், க்ளெபடன் திரும்பவில்லை. மலினாவின் கூட்டுக்கு அருகில் கேமராக்கள் பொறுத்தப்பட்டு, உலக நாடுகளின் முக்கிய இடங்களில் அவளின் தினசரியை கவனிக்க ஆரம்பித்தனர். க்ளெப்டனின் வருகைக்காக அவர்களும் காத்திருந்தனர், பிரார்த்தித்தனர்.

வெகு நாட்களாகியும் அவன் வராததால், க்ளெப்டன் இறந்துவிட்டதாகவே பலர் முடிவெடுத்துவிட்டனர்.

ஒரு நாள் க்ளெபடன் திரும்பினான், உடலில் பல காயங்கள் இருந்தன.

இருப்பினும், மலினாவுடன் சேர்ந்து உலகமே அவர்கள் இணைந்ததை அவர்கள் வாழ்வின் மிகச் சிறந்த நாளாக கொண்டாடினர்.

அதன் பிறகு 2021ஆம் ஆண்டு மலினாவின் உயிர் பிரிந்தது.

"மனிதர் உணர்ந்துகொள்ள இது மனித காதல் அல்ல, அதையும் தாண்டி புனிதமானது" என குணா படத்தின் பாடல் வரிகளை எந்த நேரத்தில் கவிஞர் எழுதினாரோ, அது இன்றளவும் நிதர்சனமாக இருந்து வருகிறது.

18 ஆண்டுகள், 13,000 கிமீ: காதலியை பார்க்க கண்டங்கள் கடந்த நாரை -  ஒரு காவிய காதல் கதை!
பாகிஸ்தான் பெண்ணை 7 ஆண்டுகளுக்கு பின் கரம் பிடிக்கும் இந்தியர்- கடல் கடந்த காவிய காதல் கதை

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com