ஜூன் மாதம் சீனாவின் நிதி மையமான ஷாங்காயில் இருந்து தலைநகர் பெய்ஜிங்கிற்கு அதிவேக ரயிலில், பயணிகள் சென்று கொண்டிருந்தார்கள். பாதி வழியில் கோவிட் கவச ஆடை அணிந்த அதிகாரிகள் பயணி ஒருவருக்கு கோவிட் தொற்று இருப்பதால் அனைவரும் இறங்க வேண்டுமென ஒலிபெருக்கியில் அறிவித்தனர்.
கோவிட் வைரஸ் தொற்று நோயின் ஆரம்பத்தில் அரசு சொல்வதைக் கேட்ட சீன மக்கள் இப்போது அப்படி இருக்கவில்லை. பயணிகள் ஏன் நாங்கள் இறங்க வேண்டும் எனக் கூச்சலிட்டனர். எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால் பயன் ஒன்றுமில்லை. அனைவரும் நூற்றுக்கணக்கான கிலோமீட்டர் தொலைவில் உள்ள தனிமைப்படுத்தப்பட்ட மையத்திற்குக் கொண்டு செல்லப்பட்டனர்.
இத்தகைய கடும் நடவடிக்கைகள் சீனாவின் சமரசமற்ற பூஜ்ஜிய கோவிட் தடுப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாகும். இதைத் தவிர வேறு எந்த வழிமுறையையும் ஏற்க முடியாது என்று அதிபர் ஜி ஜின்பிங் பலமுறை எச்சரித்துள்ளார்.
உலகில் வுஹானில் தான் முதலில் கோவிட் வைரஸ் 19 தோன்றியது. அதன் பிறகு நாடு முழுவதும் பாதுகாப்பு அம்சம் பலப்படுத்தப்பட்டது.
அதனால் மற்ற நாடுகள் போல இல்லாமல் சீனாவில் இறப்பு விகிதம் குறைவுதான். ஆனால் அதற்கான செலவை தற்போது சீனா கொடுத்துக் கொண்டிருக்கிறது. அதுதான் அரசியல் ரீதியான ஆபத்து.
மக்களிடையே அதிருப்தி வெடிக்குமா என சீன கம்யூனிஸ்ட் கட்சி அஞ்சுகிறது. மேலும் இந்த ஆண்டின் பிற்பகுதியில் நடைபெறும் கட்சி மாநாட்டில் மூன்றாவது முறையாகப் பதவியேற்கும் ஜி ஜின்பிங் இதை விரும்பவில்லை.
உலகின் பிற பகுதிகள் கோவிட் உடன் வாழ முயற்சிக்கும் அதே வேளையில் வைரஸுக்கு எதிரான போராட்டத்திற்கு முன்னுரிமை அளிக்கும் ஒரே பெரிய பொருளாதார நாடு சீனா மட்டும்தான்.
வெகுஜன சோதனை, கண்காணிப்பு, கடுமையான தனிமைப்படுத்துதல் ஆகியவற்றை உள்ளடக்கியதுதான் சீனாவின் பூஜ்ஜிய கோவிட் நடவடிக்கைகள். ஒரு சில பேருக்குத் தொற்றுகள் இருந்தாலே அந்த நகரமே தனிமைப்படுத்தப்பட்டு பொது முடக்கம் அறிவிக்கப்படுகிறது. இந்தக் காட்சியை நீங்கள் உலகில் எங்கும் பார்க்க இயலாது.
தலைநகர் பெய்ஜிங்கில் 2 கோடியே 10 இலட்சம் மக்கள் வாழ்கின்றனர். அவர்களில் சிலருக்கு மட்டுமே நோய்த்தொற்றுகள் இருக்கின்றது. ஆனால் ஒட்டு மொத்த மக்களும் பொதுவெளிக்குப் போவதற்கோ இல்லை அருகாமை கடைகளை அணுகுவதற்கோ மூன்று நாட்களுக்கு ஒரு முறை பிசிஆர் சோதனை செய்து கொள்ள வேண்டும்.
ஒருவருக்கு நோய்த் தொற்று என்றாலே ஒரு முழு புறநகர் பகுதியும் விரைவாக சுற்றி வளைக்கப்படலாம். கடைகள், பார்கள், உணவகங்கள் போன்ற வியாபாரிகள் இதனால் கடுமையாகப் பாதிக்கப்படுகின்றனர். இதை இன்னும் எத்தனை காலத்திற்கு மக்கள் பொறுத்துக்கொள்வார்கள் என்பதுதான் கேள்வி.
இதைப் பற்றி கட்சி கவலைப்படாமல் இருந்தால் ஷாங்காய் நகரத்தில் நடந்த கலவரங்கள் போல நாடு முழுவதும் நடப்பது உறுதி.இருப்பினும் சீனா தனது கோவிட் அணுகுமுறையை மாற்றிக் கொள்ளவில்லை. அதற்கு அரசியல் மற்றும் தடுப்பூசி என இரண்டு காரணங்கள் உள்ளன.
அனைவருக்கும் தேவையான தடுப்பூசி போடுவதை சீனா எப்படி கோட்டை விட்டது என்பது தெளிவாக இல்லை. பரவலான கோவிட் தொற்று, மருத்துவமனைகளை நிரப்பி பல இறப்புகளை ஏற்படுத்தும் என்று அதிகாரிகள் அஞ்சுகின்றனர்.
பாதிக்கப்படக்கூடிய பிரிவினருக்கு இரண்டு டோஸ்கள் அல்லது பூஸ்டர் டோஸ் முழுமையாகப் போடப்படவில்லை என்று சீனாவின் தேசிய சுகாதார ஆணையத்தின் பேராசிரியர் ஒருவர் மார்ச் மாதமே கூறியிருக்கிறார்.
சீனாவின் மக்கள் தொகையில் 89% பேர் இரண்டு டோஸ் தடுப்பூசிகளைப் போட்டிருந்தாலும் பூஸ்டர் டோஸ் தேவையானவர்களுக்கு 56% மட்டுமே போடப்பட்டுள்ளது.
குறிப்பாக வயதானவர்களுக்கு மத்தியில் இது கவலையளிக்கிறது. ஹாங்காங்கில் இறந்தவர்களில் பெரும் பகுதியினர் வயதானவர்கள் மற்றும் தடுப்பூசி போடாதவர்கள். ஏப்ரலில் ஷாங்காயில் தொற்று தீவிரமடைந்த போது 60 வயதுக்கு மேற்பட்டவர்களில் 38% பேர் மட்டுமே மூன்று டோஸ்களை போட்டுள்ளனர்.
80 வயதுக்கு மேற்பட்டவர்களில் 15% பேர் மட்டுமே முதல் இரண்டு டோஸ்களை பெற்றுள்ளனர். நாடு முழுவதும் எடுத்துக் கொண்டால் 80 வயதுக்கு மேற்பட்டவர்களில் 19.7% பேர் மட்டுமே பூஸ்டர் டோஸ்களை போட்டுள்ளனர்.
ஓமிக்ரான் திரிபுக்கு முன்பு கோவிட் தொற்றைக் கட்டுப்படுத்துவதில் அரசாங்கத்தின் வெற்றி தடுப்பூசி போடுவதின் அவசரத்தைக் குறைத்துள்ளது. இதன் பொருட்டு வெளிநாட்டுப் பயணிகள்தான் சீனாவிற்கு வைரஸின் திரிந்த உருபுகளைக் கொண்டு வந்ததாக அதிகாரிகள் குற்றம் சாட்டினர்.
பலரும் இதை நம்பினர். இன்றும் மக்களிடையே இத்தகைய நம்பிக்கைகள் இருக்கின்றன. அரசாங்கம் செய்யும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் சரிதான் என்று சிலர் கருதுகின்றனர். ஆனால் இதை எத்தனை நாளைக்கு பின்பற்ற முடியும் என்பது பலருக்கு பிரச்சனை.
மற்ற நாடுகள் போல கோவிட் நிலைமை, மக்கள் கருத்து பற்றி சீனாவில் முழுமையான ஊடக கவரேஜ் இல்லை. காரணம் அரசின் தணிக்கை. இந்நிலையில் அரசு சொல்வதைத்தான் மக்கள் நம்ப வேண்டும். இது போக மக்கள் எப்படி எதிர்ப்பு காண்பிக்கிறார்கள் என்ற செய்தியும் பொது வெளிக்கு வருவதில்லை. சான்றாக ஷாங்காயில் லாக்டவுன் மூலம் உணவுப் பற்றாக்குறையால் பாதிக்கப்பட்ட மக்கள் போராடினர்.
பெய்ஜிங் நகர அரசாங்கம் பொது இடங்களுக்குச் செல்ல விரும்புவோர் தடுப்பூசி ஆதாரத்தைக் காட்ட வேண்டும் என்று கடந்த வாரம் அறிவித்தனர். ஆனால் சில நாட்களுக்குள் இது கட்டாயமில்லை என்று அதிகாரிகள் பின்வாங்குவதாக அரசு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதெல்லாம் மக்களின் எதிர்ப்பினால் மட்டுமே நடந்திருக்க வேண்டும்.
கோவிட் பிரச்னையை கட்சி பிரச்சாரத்தின் மூலம் தீர்த்து விடலாம் என்று அதிகாரிகள் அதீத நம்பிக்கை வைத்திருந்தனர். தற்போது அது தகர்ந்து வருகிறது. சீனாவை ஆளும் அதிபர் எத்தனை முறை வேண்டுமானாலும் பதவியில் இருக்கலாம் என்பது மாவோ காலத்திலிருந்தது. பின்னர் டெங்சியோபிங் அதை இரண்டு முறை என்று மாற்றினார். ஆனால் ஜி ஜின்பிங் மீண்டும் அவர் விரும்பும் வரை பதவியில் இருக்கலாம் என்று மாற்றியுள்ளார். இது சாதாரண மாற்றம் அல்ல.
தற்போது கோவிட் நடவடிக்கைகளோடு பொருளாதார நெருக்கடியும் போட்டிப் போட்டுக்கொண்டு வளர்ந்து வருகிறது. இந்த நெருக்கடியைக் கையாள சீனா திணறி வருகிறது. மூத்த கட்சி உறுப்பினர்கள் ஜி ஜின்பிங்கை அதிகாரத்தில் வைத்திருக்கும் ஆபத்து, அவரை எதிர்ப்பதில் உள்ள ஆபத்தை விட அதிகம் என்று முடிவு செய்ய வேண்டும்.
மே மாதம் சீன அரசியலின் அதிகார உச்சியில் இருக்கும் கட்சியின் ஏழு பேர் கொண்ட பொலிட்பீரோ, தொற்று நோய்க்கு எதிரான உறுதியான போராட்டத்தின் அவசியத்தை வலியுறுத்தியது. மக்களிடையே எதிர்ப்பு இல்லையென்றால் இந்த அவசியத்தை வலியுறுத்த வேண்டிய அவசியமில்லை.
சீனாவின் பெரிய பொருளாதாரத்தை கோவிட் அழித்து வருகிறது. வைரஸின் உண்மையான தாக்கத்தை மறைக்கப் புள்ளிவிவரங்கள் மறைக்கப்படுவதாகப் பொருளாதார வல்லுநர்கள் யூகிக்கின்றனர்.
சீனாவின் உண்மையான ஜிடிபி வளர்ச்சி 2022 ஜூனில் 4.3% ஆகக் குறையுமென உலக வங்கி கணித்துள்ளது. இதற்குக் காரணம் ஒமிக்ரானின் பரவல் மற்றும் பல நகரங்களின் பொது முடக்கம். ஜி ஜின்பிங் தான் மூன்றாவது முறையாக அதிபராக தெரிவு செய்யப்படுவதற்கு முன்பு கோவிட் அலை குறையும் என்று நம்புகிறார்.
பல இடங்களில் பொது முடக்கத்தால் மக்கள் சோர்ந்து போய் விரக்தியில் உள்ளனர். சமூக ஊடகங்களில் அரசாங்கத்தை வெளிப்படையாகக் கேலி செய்கின்றனர். சீனாவில் இது அசாதாரணமான ஒன்று. ஷாங்காய் நகரம் மூடப்பட்டதும், உணவு பற்றாக்குறை ஏற்பட்டதும் அதை எதிர்த்து மக்கள் பாடல்களை வெளியிட்டனர்.
கடந்த வாரம் பெய்ஜிங்கின் கட்சிச் செயலர் பூஜ்ஜிய கோவிட் அணுகுமுறை இன்னும் 5 ஆண்டுகளுக்கு நடைமுறையில் இருக்கும் என்று பேசியதும், சமூக ஊடகங்களில் அதற்குப் பலத்த எதிர்ப்பு எழுந்தது.
இப்படியாகச் சீனா மத்தளத்திற்கு இருபக்கமும் அடி என்று மாட்டிக் கொண்டுள்ளது. கோவிட் தொற்றையும் குறைக்க வேண்டும், மக்கள் அதிருப்தியையும் சமாளிக்க வேண்டும். நிச்சயம் அதிபர் ஜி ஜின்பிங்கிற்கு சீன அரசுக்கும் இது ஒரு சவாலான விசயம்தான்.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust