சூரியன் மஞ்சள் நிறமுடையது,
வானம் நீல நிறமுடையது,
சஹாரா தான் உலகின் மிகப்பெரிய பாலைவனம்,
எவரெஸ்ட் தான் உலகின் மிக உயரமான சிகரம்.... என மேலே குறிப்பிட்டவைகள் அனைத்தையும் ஆமோதிக்கிறீர்களா..?
வேறு ஒரு கோணத்தில் பார்க்கும் போது, இவை சரியான விடை இல்லையோ என தோன்றுகிறது. அந்த மாறுபட்ட கோணத்தைத் தான் இங்கு பார்க்கப் போகிறோம்.
உலகின் மிக உயரமான சிகரமாகக் கருதப்படும் எவரெஸ்ட், கடல் மட்டத்திலிருந்து சுமார் 8,848 மீட்டர் உயரம் கொண்டதாக இமய மலையில் மணிமுடமாகத் திகழ்கிறது.
ஆனால், அமெரிக்காவின் ஹவாய் நகரத்தில் உள்ள மானா கியா (Mauna Kea) என்கிற மலை 10,205 மீட்டர் உயரமுடியது. அதன் 60 சதவீதம் கடலில் மூழ்கிக் கிடக்கிறது. இதன் ஆதித் தொடக்கப் புள்ளி எது என இப்போதுவரை விவாதிக்கப்பட்டு வருகிறது.
எனவே கடல் மட்டத்திலிருந்து 4,205 மீட்டர் மட்டுமே தென்படுவதால் உலகின் மிக உயரமான மலை என்கிற பெருமையை மானா கியா பெறவில்லை.
எவரெஸ்ட் என்றதும் மற்றொரு சுவாரசிய விஷயமும் நினைவுக்கு வருகிறது. இந்தியாவின் சர்வேயர் ஜெனரலாக இருந்தவர்தான் கர்னல் சர் ஜார்ஜ் எவரெஸ்ட். அவர் தன் பெயரை ஈவ்-ரெஸ்ட் (Eve-rest) என்று தான் அழைத்துக் கொண்டாராம். அவர் பெயரைத்தான் உலகின் மிக உயரமான சிகரத்துக்கு வைக்கப்பட்டது. ஆனால் இன்று அனைவரும் அச்சிகரத்தை எவரெஸ்ட் என்று அழைத்து வருகிறோம்.
நம் சூரிய குடும்பத்தில், பூமிக்கு மிக அருகில் இருக்கும் நட்சத்திரம் என்றால் அது சூரியன் தான். பூமியிலிருந்து சுமார் 149 மில்லியன் கிலோமீட்டர் தொலைவில் இருக்கிறது சூரியன்.
பொதுவாக நம் கண்களுக்கு சூரியன் இளஞ்சிவப்பாக அல்லது மஞ்சல் நிறத்தில் தெரியும். ஆனால் அது சூரியனின் உண்மையான நிறமல்ல. அப்படியானால் சூரியனின் உண்மையான நிறம் என்ன?
வெள்ளை நிறத்தில் இருக்கும் சூரியன், உண்மையில் எல்லா நிறங்களிலும் வெளிச்சத்தை வெளியிடுகிறது.
புவியின் வளிமண்டலம் சிவப்பு நிறத்தை விட நீல நிறத்தை சிறப்பாக பரவச் செய்கிறது. இந்த சிறிய பற்றாக்குறையால், நம் கண்களுக்கு சூரியன் மஞ்சள் நிறத்தில் இருப்பதாகத் தெரிகிறது. இதே காரணத்தால் தான், பகலில் மனித கண்களுக்கு வானம் நீல நிறமாகத் தெரிகிறது.
உலகையே தன் வரலாற்றைப் படிக்க வைத்த மாவீரன் நெபோலியன் உண்மையிலேயே குட்டையான மனிதரா? என்றால் 'அத்தனை குட்டையான மனிதர் அல்ல' என ஒரு வாதம் முன் வைக்கப்படுகிறது.
19ஆம் நூற்றாண்டில் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த ஆண்களின் சராசரி உயரத்தில் தான் நெபோலியனும் இருந்தார் என்கிறது கின்னஸ் வேர்ல்ட் ரெக்கார்ட்ஸ் வலைதளம்.
அது போக, அவரது இறப்புச் சான்றிதழில் குறிப்பிடப்பட்ட அவரது உயரத்தை பலரும் பல விதத்தில் விளக்கி, சுமார் 1.7 மீட்டர் (5 அடி 7 அங்குலம்) என குறிப்பிட்டிருப்பதாகவும் அதே வலைதளத்தில் பிரசுரமாகியுள்ளது.
19ஆம் நூற்ராண்டில் பிரென்ஞ் இன்ச் என ஒரு அளவை பயன்படுத்தப்பட்டு வந்தது. அதன் படி பிரான்ஸ் நாட்டில் ஒரு இன்ச் என்றால் 2.71 சென்டிமீட்டர். தற்போதைய வழக்கப்படி ஒரு இன்ச் என்றால் 2.54 சென்டிமீட்டர் என்பது குறிப்பிடத்தக்கது.
சமீபத்தில் ஜெர்மனியில் சுற்றுப் பயணம் மேற்கொண்டிருந்த இந்திய பிரதமர், பத்திரிகையாளர்களைப் பார்த்து 'ஓ மை காட்' என்று கூறியது இணையத்தில் வைரலானது.
இந்த 'ஓ மை காட்' என்கிற சொல்லின் சுருக்கம்தான் OMG என்பதை இன்றைய தலைமுறையினர் அறிவர். இந்த OMG என்கிற சொல் கடந்த சில ஆண்டுகளாகத்தான் புழக்கத்தில் இருப்பதாக நீங்கள் கருதினால், மன்னிக்கவும். அது தவறு.
இது 1917ஆம் ஆண்டே பயன்படுத்தப்பட்ட சொல். 1917ஆம் ஆண்டு செப்டம்பர் 9ஆம் தேதி பிரிட்டனின் கடற்படை அட்மிரல் ஜான் ஃபிஷ்ஷர் OMG - ஓ மை காட் என்கிற சொல்லை தன் குறிப்பு ஒன்றில் எழுதியுள்ளார்.
1994ஆம் ஆண்டு செப்டம்பர் 24ஆம் தேதி rec.arts.tv.soaps என்கிற வலைதளம் முதல்முறையாக OMG என்கிற சொல்லை இணையத்தில் பயன்படுத்தியது.
எதற்கும் பயன்படுத்த முடியாத, மிகக் குறைவான அல்லது மழைபொழிவே இல்லாத தரிசு நிலத்தைத் தான் பாலைவனம் என்கிறோம்.
இந்த கூற்றுப்படி பார்த்தால், உலகின் மிகப்பெரிய பாலைவனம் சஹாராவாக இருக்க முடியாது, அன்டார்டிகாவைத் தான் மிகப் பெரிய பாலைவனம் என்று கூற வேண்டும்.
அன்டார்டிகா சுமார் 14 மில்லியன் சதுர கிலோமீட்டர் பரப்பு கொண்டது. உலகின் மிகப் பெரிய நன்னீரையும் (30 மில்லியன் கன சதுர கிலோமீட்டர்) தன்னுள் கொண்டிருக்கிறது அன்டார்டிகா. இது உலகின் ஒட்டுமொத்த நன்னீரில் சுமார் 70 சதவீதம்.
அண்டார்டிகாவில் ஆண்டுக்கு 50 மில்லி மீட்டருக்கும் குறைவாகவே மழை பொழிகிறது.
சஹாராவோ 9.1 மில்லியன் சதுர கிலோமீட்டர் பரப்பு கொண்டது. ஆண்டுக்கு சராசரியாக 100 - 250 மில்லிமீட்டர் மழை பொழிவைக் காண்கிறது.
இப்போதும் உலகின் குளிர்ச்சியான பாலைவனமாக அன்டார்டிகா இருக்கிறது. பிரிட்டிஷ் அண்டார்டிக் சர்வே அமைப்பின் படி, அன்டார்டிகாவில் குளிர்காலத்தில் சராசரியாக -10 முதல் -30 டிகிரி செல்ஷியஸ் வரை தட்ப வெப்பநிலை போகும். இன்னும் அண்டர்டிகாவின் உட்பகுதிகளுக்குச் சென்றால் தட்பவெப்பநிலை -60 டிகிரி செல்ஷியஸை விட குறைவாகச் செல்லும் என்கிறார்கள்.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp