Frederic Tudor: யாரும் செய்யாத தொழிலில் உலகை திரும்பி பார்க்க வைத்த பிசினஸ் பிஸ்தா! Twitter
பிசினஸ்

Frederic Tudor: தொட்டதெல்லாம் தோல்வி; எத்திசைக்கும் ஏமாற்றம் - உலகின் ஐஸ் ராஜா வென்ற கதை!

தன் மனது சொல்வதைக் கேட்டு, ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் படிக்கும் வாய்ப்பைத் விடுத்து, பிற்காலத்தில் பெரும் பணக்காரர் ஆன ஒரு நபரைப் பற்றித் தான் இங்குப் பார்க்கப் போகிறோம். அவர் பெயர் ஃப்ரெடெரிக் டியூடர்!

Gautham

நல்ல பள்ளி மற்றும் கல்லூரிகளில் படித்துவிட்டு, யாரோ ஒருவர் தலையைப் பிய்த்துக் கொண்டு நடத்தும் நிறுவனத்தில் நிம்மதியாக நல்ல சம்பளத்துக்கு வேலைக்குச் சென்று, குடும்பம், குழந்தை, மாருதி அல்டோ என வாழ்கையை அனுபவிப்பதை விட்டுவிட்டு, "சுயதொழில் செய்கிறேன் எனச் சிரமத்து ஆளாவானேன்" என்று சிந்திப்பவர்கள் இந்தியர்கள் மட்டுமின்றி, மேற்கத்திய நாடுகளைச் சேர்ந்தவர்களிலும் இருக்கிறார்கள்.

சுற்றி இருக்கும் நண்பர்கள், குடும்பத்தினர் சொல்வதைக் கேட்டு லாபம் நஷ்டத்தைப் பார்த்து நடந்து கொள்வது ஒரு ரகம் என்றால், அவர்கள் சொல்வதெல்லாம் சரி தான் ஆனால் எனக்கு இதுதான் பிடித்திருக்கிறது என மனதின் குரலைக் கேட்டு நடப்பவர்கள் மற்றொரு ரகம்.

அப்படி, தன் மனது சொல்வதைக் கேட்டு, ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் படிக்கும் வாய்ப்பைத் விடுத்து, பிற்காலத்தில் பெரும் பணக்காரர் ஆன ஒரு நபரைப் பற்றித் தான் இங்குப் பார்க்கப் போகிறோம். அவர் பெயர் ஃப்ரெடெரிக் டியூடர் (Frederic Tudor).

1806ஆம் ஆண்டு, 23 வயதான ஃப்ரெடெரிக் டியூடர் தன் பெற்றோரோடு அமெரிக்காவில் உள்ள மசாசூட்ஸ் மாகாணத்தில் வாழ்ந்து வருகிறார். அப்பா எவ்வளவோ எடுத்துச் சொல்லியும் ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் படிக்கச் சேரவில்லை. ஒருவேளை அப்படிச் சேர்ந்து இருந்தால் நல்ல வேலை, சம்பளம் என செட்டில் ஆகி இருக்கலாம். 

ஆனால் ஃப்ரெடெரிக் டியூடருக்கு வியாபாரம் மீது தணியாத தாகம் இருந்தது. அண்ணாமலை படத்தைப் பார்த்துவிட்டு நானும் பணக்காரன் ஆகப் போகிறேன் என்பது போன்ற ஒரு நாள் இரு நாள் ஆசை அல்ல, 10 ஆண்டு கால கனவு அவரது.

தொழில் செய்ய வேண்டும் என முடிவு செய்த பின் இரண்டே வழிதான். 1. ஏற்கனவே உலகம் செய்து கொண்டிருந்த ஏதாவது ஒரு தொழிலில் தானும் குதித்து தனக்கென ஒரு இடத்தைப் பிடித்துக் கொள்ள வேண்டும் அல்லது 2. புதுமையாக தனக்கே ஒரு தொழிலையே உருவாக்கிக் கொள்ள வேண்டும்.

ஃப்ரெடெரிக் டியூடர் இரண்டாவதைத் தேர்வு செய்தார். ஐடியாவின் ஒன்லைன் இதுதான்: மாசாசூட்ஸ் போன்ற குளிர் பிரதேசத்தில் கிடைக்கும் பனிக்கட்டிகளை, வெப்ப மண்டல நாடுகளுக்கு விற்க வேண்டும்.

அட இதெல்லாம் ஒரு ஐடியாவா..? என 2022ஆம் ஆண்டில் நாம் கேட்கலாம். இன்று இந்தியாவில் ஏதோ ஒரு மூலையில், காலை ஆறு மணிக்கு மாட்டின் காம்பிலிருந்து கரக்கப்படும் பாலின் தன்மை மாறாமல் 24 மணி நேரத்துக்குள் உலகின் எந்த மூலைக்கும் கொண்டு செல்லும் அளவுக்குப் போக்குவரத்து வசதிகள், குளிர்பதன வசதிகள், பதப்படுத்தும் தொழில்நுட்பங்கள் என எல்லாம் சந்தையில் இருக்கின்றன. 

ஆனால் 1806ஆம் ஆண்டில் அமெரிக்காவிலிருந்து இந்தியாவுக்கு ஒரு கடிதம் வந்து சேர வேண்டும் என்றால் கூட சுமார் 3 - 4 மாதங்கள் ஆகும். கடல் பயணம் மட்டுமே ஒரே பெரிய சர்வதேசப் போக்குவரத்து. அப்படி ஒரு காலத்தில் தில்லாக இந்த ஒன்லைனை தன் சுற்றத்தாரிடம் சொன்ன போது "கிறுக்கு பிடிச்சிருக்கா உனக்கு" எனப் பதில் வந்தது.

நஷ்டமோ நஷ்டம் - கஷ்டமோ கஷ்டம்

ஒரு நல்ல நாள் பார்த்து தன் வீட்டுக்கு அருகிலிருந்த குடும்பத்துக்குச் சொந்தமான குளத்திலிருந்து ஐஸ் கட்டிகளை வெட்டி எடுத்தார். மரப் பட்டறையில் இருந்த மரத் துகள்களை அள்ளிக் கொண்டு வந்து பனிக்கட்டி வேகமாக உருகாமல் இருக்க அதன் மீது போட்டார். 

முதல் பனிக்கட்டி சரக்கு இன்று பிரான்ஸ் நாட்டில் இருக்கும் மார்டினிக் என்கிற நகரத்துக்கு அனுப்பி வைத்தார். எல்லா பனிக்கட்டியும் உருகிவிடவில்லை. ஆனால் செலவுகள் எல்லாம் போக 4,500 அமெரிக்க டாலர் நஷ்டம் ஏற்பட்டது.  அடுத்த மூன்று சரக்குகள் கியூபா நாட்டுக்கு அனுப்பி தன் நஷ்ட கணக்கை அதிகரித்துக் கொண்டார் ஃப்ரெடெரிக் டியூடர். 

1812ஆம் ஆண்டு ஃப்ரெடெரிக் டியூடர் திவாலானார். கடனைத் திருப்பிச் செலுத்த முடியாததால் சிறைத் தண்டனை எதிர்கொள்ள வேண்டி இருந்தது.  ஃப்ரெடெரிக் டியூடரின் தந்தை ஒரு பெரிய வழக்குரைஞர் என்பதால், படித்த பெரிய மனிதர்களோடு பழகும் அவரது குடும்பத்தினர் மற்றும் அக்கம் பக்கத்தினரால் படுமோசமாகப் பரிகசிக்கப்பட்டார். "எதுக்கு கண்ணு இந்த வேண்டாத வேலை எல்லாம்... அப்பாவுக்கு ஒத்தாசியா படிச்சி வக்கீலாகலாம்ல... புரிஞ்சு நடத்துக்கப்பா..." என அவருக்கு அட்வைஸ் சொல்லாத ஆள் இல்லை எனலாம்.

வியாபாரம் - லாபம் நஷ்டம் - அப்டேட் - ரிப்பீட்டு

எவன் ஒருவன் முதல் தாக்குதலிலேயே கலங்கிப் போகிறானோ, இரண்டாவது முறை தாக்குதல் நடத்தாமல் முடங்கிப் போகிறானோ, வெற்றி குறித்த நம்பிக்கையை இழக்கிறானோ அவன் ஒரு போதும் போரிலோ, காதலிலோ, தொழிலிலோ நாயகனாக ஜொலிக்கமாட்டான் என்பது ஃப்ரெடெரிக் டியூடரின் கருத்து, அறிவுரை.

அதன் தன் வாழ்நாளில் அப்படியே கடைப் பிடித்தார். சுமார் 10 ஆண்டுக் காலம் தன் ஐஸ் கட்டி வியாபாரத்தைத் தொடர்ந்து நடத்தினார். மெல்ல வியாபார நுணுக்கங்கள் கை வரப்பெற்றார் என்பதற்கு அவர் நிறுவனத்தின் லாபம் சாட்சி சொன்னது. 

கியூபாவுக்கு தொடர்ந்து பனிக்கட்டி ஏற்றுமதி செய்து நல்ல லாபம் பார்த்தார். பனிக்கட்டி வேகமாக உருகாமல் இருக்க, விரைவாகச் சரக்குகளைக் கொண்டு சேர்க்க என பல வகைகளில் வியாபாரத்தில் நஷ்டம் ஏற்படும் இடங்களை எல்லாம் அடைத்தார். அமெரிக்காவின் ஒரு பகுதி குளிர் பிரதேசம் என்றால், மற்றொரு பகுதி வெப்பம் சூழ்ந்தது. எனவே தன் பனிக்கட்டி வியாபாரத்தை அமெரிக்காவிலும் அரங்கேற்றினார். தனக்கென பல பனிக்கட்டி கடைகளை விரித்தார்.

இத்தினைக்கு பிறகும் மனிதர் சில இயற்கைப் பேரிடர்களை, வியாபார சொதப்பல்களைச் சந்தித்தார். உதாரணத்துக்கு வெப்பமண்டல நாடுகளில் விற்கப்படாத பனிக்கட்டிகளில், அந்நாட்டுப் பழங்களை ஏற்றிக் கொண்டு வந்தார். அமெரிக்காவின் நியூ இங்கிலாந்து பகுதிக்கு வந்து சேரும் போது அத்தனை பழங்களும் அழுகி இருந்தன. அத்தனையும் நஷ்டம்.

கொல்கத்தா எனும் அதிர்ஷ்ட தேவதை:

18 ஆம் நூற்றாண்டு (1772 - 73) முதல் கொல்கத்தா நகரம் பிரிட்டிஷ் இந்தியாவின் தலைநகராகச் செயல்படத் தொடங்கியது. இந்தியாவில் இமய மலைப் பகுதிகள், ஒரு சில மாநிலங்களைத் தவிர பெரும்பாலான பகுதி வெப்பமண்டலம் தான்.

குளிர்ச்சியான பகுதிகளில் வாழ்ந்து வந்த பிரிட்டிஷ்காரர்களுக்கு தங்கள் உணவுத் தேவைக்கும், சொகுசு வாழ்க்கைக்கும் பனிக்கட்டிகள் தேவையாக இருந்தன. அதைப் புரிந்து கொண்ட ஃப்ரெடெரிக் டியூடர் 1830களில் இந்தியாவுக்குப் பனிக்கட்டிகளை ஏற்றுமதி செய்தார்.

1806ஆம் ஆண்டு வியாபாரம் தொடங்கி, ஒரு சில தசாப்தங்களுக்குப் பிறகு இந்தியாவுக்குப் பனிக்கட்டி ஏற்றுமதி செய்யத் தொடங்கிய மனிதருக்கு அதிர்ஷ்ட தேவதை பணமழை கொட்டினாள். கிட்டத்தட்ட 16,000 மைல் தொலைவுக்கு தன் பனிக்கட்டிகள் உருகாமல் இருக்க தன்னால் முடிந்த வரை, தனக்குத் தெரிந்த, அந்த காலத்துத் தொழில்நுட்பத்தை எல்லாம் பயன்படுத்தினார். அப்படியும் ஐஸ் அதிவேகமாக உருகியது.

உதாரணத்துக்கு ஃப்ரெடெரிக் டியூடர் 180 டன் பனிக்கட்டிகளை ஏற்றினால் அது இந்தியா சென்று சேர்வதற்குள் 80 டன் கரைந்துவிடும். மீதமுள்ள 100 டன்னை விற்றே பெரிய மில்லியனர் ஆனார். பணக்காரன் ஆனாலும் சரி, நஷ்டம் ஏற்பட்டாலும் சரி... எப்போதும் ஃப்ரெடெரிக் டியூடர் தன் பனிக்கட்டிகளைப் பராமரிக்கும் தொழில்நுட்பத்தை அப்டேட் செய்வதில் கவனமாக இருந்தார்.

நான் வியாபாரம் செய்கிறேன்... நான் மட்டும் வியாபாரம் செய்வேன்

ஒருவர் தன் தொழிலில் ஓரளவுக்குச் சிறந்து விளங்கத் தொடங்கிய உடனேயே, தாங்கள் மட்டுமே அத்துறையில் ஜொலிக்க வேண்டும் என நினைப்பர். அது உலகிலுள்ள பெரும்பாலான தொழிலதிபர்களுக்கும் பொருந்திப் போகும். அது ஃப்ரெடெரிக் டியூடருக்கும் பொருந்தும்.

ஒரு சில வெப்ப மண்டல நாடுகளில், தான் மட்டுமே பனிக்கட்டி வியாபாரம் செய்ய, அந்நாட்டு அரசாங்கங்கள், அரசு அதிகாரிகளோடு சில ஒப்பந்தங்களைச் செய்து கொண்டார். அதற்கு லஞ்சத்தைக் கையில் எடுத்தார் என்பதையும் மறுப்பதற்கு இல்லை. 

குடும்பம்

தொழிலதிபர் வேட்கையில் செயல்பட்டு வந்த ஃப்ரெடெரிக் டியூடர், யுஃபேமியா ஃபென்னோ (Euphemia Fenno) என்கிற பெண்ணை 1814ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். அவருக்கு மொத்தம் 2 குழந்தைகள் என்கிறது விக்கிபீடியா பக்கம். ஃப்ரெடெரிக் டியூடர் ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் படிக்க கிடைத்த வாய்ப்பை மறுத்தாரோ, அவரது மூத்த மகன் ஹார்வ்ர்ட் பல்கலைக்கழகத்தில் படித்து பட்டம் பெற்றார். இவரது கொள்ளுப் பேத்தி (மகனின் பேத்தி) தான் 20ஆம் நூற்றாண்டு வாட்டர் கலரிஸ்டான டாஷா டூடர் என்பது குறிப்பிடத்தக்கது.

தன் வீட்டுக்கு அருகிலிருந்து குளத்தில் உறைந்து கிடந்த பனிக்கட்டிகளை வைத்து விளையாடிவிட்டு, அடுத்த வேலையைப் பார்க்காமல், அதே ஐஸ் கட்டிகளை வைத்து தனக்கென தனி சாம்ராஜ்ஜியமாக 'டியூடர் ஐஸ் கம்பெனி'யைத் தொடங்கி பல சாதனைகளைப் படைத்த ஃப்ரெடெரிக் டியூடர் 1864ஆம் ஆண்டு மாஸாசூட்ஸில் காலமானார். 

'உலகமே உன்னை எதிர்த்து நின்றாலும், நெவர் எவர் கிவ் அப்' என்கிற வாக்கியங்களுக்கு சத்திய சொந்தக்காரர் ஃப்ரெடெரிக் டியூடர்

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?