ஊருக்குச் செல்ல விரும்புவது ஓகே. தொழில் செய்ய வேண்டும் என்பதும் சரியான முடிவு தான். ஆனால் எப்போது செல்வது? இன்றே ஊருக்கு கிளம்பினாள் தொழில் செய்ய தேவையான முதல் தொகையை யார் கொடுப்பார்கள்..? என்கிற கேள்வி எழுந்தது. அதோடு மனைவி, தாய் மற்றும் குடும்பத்தையும் பார்த்துக் கொள்ள வேண்டிய பொறுப்பு திருபாய் அம்பானிக்கு இருந்தது.
ஏமன் நாட்டுக்குள் ஒரு அலுவலக உதவியாளராக வந்த திருபாய் அம்பானி, தன் திறமையால் 25 வயதுக்குள் சந்தைப்படுத்துதலில் மேலாளராக வளர்ந்திருந்தார். அப்போது மாதம் கிட்டத்தட்ட 1,200 ரூபாய்க்கு மேல் சம்பளம் வாங்கிக் கொண்டிருந்தார் அம்பானி.
Yemen Silver Coin
இந்தியா சென்று தொழில் தொடங்குவது என முடிவு செய்த பின், தன் மனதுக்குள் ஒரு தொகையை முடிவு செய்து கொண்டார். அப்பணத்தை சேர்த்த பிறகு ஊருக்கு கப்பல் ஏற வேண்டியதுதான் என முடிவு கட்டினார் திருபாய்.
வழக்கம்போல அலுவலகப் பணிகள் போக, மற்ற பணிகள் மூலமாகவும் பணம் சம்பாதித்துக் கொண்டிருந்தார். அப்போது அவர் கையிலிருந்த ஏமன் நாட்டின் 'ரியால்' நாணயத்தைப் பார்த்தார். அந்தகாலத்தில் ஏமன் நாடு தன் நாணயங்களை வெள்ளியில் அச்சடித்து வெளியிட்டுக் கொண்டிருந்தது. அந்த நாணயத்தின் எடையை உணர்ந்த திருபாய்க்கு, நாணயத்தின் மதிப்பை விட வெள்ளிக்கு மதிப்பு அதிகமாக இருக்குமோ எனத் தோன்றியது. அப்போது உலக அளவில் தங்கம் வெள்ளி போன்ற உலோகச் சந்தைகளில் வெள்ளியின் விலையும் நன்றாக இருந்தது.
இந்த வெள்ளி நாணயத்தை உருக்கி கட்டிகளாக மாற்றி சந்தையில் விற்றால் என்ன? என்று தோன்றியது. உடனடியாக செயலில் இறங்கினார் திருபாய். தன்னிடம் இருந்த, தன் நண்பர்களிடம் இருந்த வெள்ளி நணயங்களை எல்லாம் உருக்கி கட்டிகளாக மாற்றி வெள்ளிச்சந்தையில் ஒருமுறை விற்றுப் பார்த்தார். வெள்ளியின் நாணய மதிப்பை விட, வெள்ளியை உருக்கி கட்டிகளாக மாற்றிய போது கிடைத்த பணம் அதிகமாக இருந்தது.
அம்பானிக்கு பணம் பார்க்க ஒரு வழி கிடைத்துவிட்டது. வருவோர், போவோர்.என அனைவரிடமும் வெள்ளி நாணயத்தை வாங்கிக்கொண்டு கரன்சி நோட்டுகளை கொடுக்கத் தொடங்கினார். திரட்டிய வெள்ளி நாணயங்களை எல்லாம் உருக்கி, விற்று ஒரு நல்ல லாபத்தைப் பார்த்தார் திருபாய் அம்பானி. அவர் மனதில் குறித்து வைத்திருந்த அளவுக்கான பணம் வெகுவிரைவிலேயே ஈட்டிவிட்டு இந்தியாவுக்கு டிக்கெட் எடுத்தார்.
Dhirubai Ambani
1957ஆம் ஆண்டு, திருபாய் அம்பானியின் மூத்த மகன் முகேஷ் அம்பானி பிறந்தார். 1958ஆம் ஆண்டு, ஏமனில் தன் வனவாசத்தை முடித்துக் கொண்டு குஜராத்துக்கு திரும்பினார் திருபாய். அப்போது ஏழு ஆண்டு கால பணி அனுபவம் மற்றும் அவர் ஏமனிலேயே தங்குவதற்கன உரிமையையும் விட்டுக் கொடுத்துவிட்டு குஜராத்துக்கு கப்பலேறினார்.
தாய் மண்ணைத் தொட்டு வணங்கி, வலது காலை எடுத்து வைத்த பின், குஜராத்தில் தன் சொந்த மாகாணத்திலேயே நல்ல தொழில் தொடங்க விரும்பினார். நண்பர் கிருஷ்ணாகாந்தோடு அலைந்துவிட்டு, குஜராத்தில் தொழில் செய்வது தோதுபட்டு வராதென முடிவுக்கு வந்தார் திருபாய். தொழில் தொடங்க பம்பாய்தான் சரியான நகரமென மொத்த குடும்பத்தையும் வேணிலால் எஸ்டேட்ஸில் குடியேற்றினார்.
என்ன தொழில் தொடங்கலாம் என்பதை தேர்வு செய்ய அம்பானிக்கு கொஞ்சம் கால அவகாசம் தேவைப்பட்டது. மும்பையின் பல சந்தைகள், சந்து பொந்துகளில் எல்லாம் அலைந்து திரிந்த பிறகு ஏற்றுமதி இறக்குமதி வர்த்தகத்தில் இறங்கத் தீர்மானித்தார்.
1958 ஆம் ஆண்டு சிறிய அளவில் 'ரிலையன்ஸ் கமர்ஷியல் கார்ப்பரேஷன்' என்கிற நிறுவனத்தை மும்பை மஸ்ஜித் பந்தர் பகுதியில், நர்சினாதன் தெருவில் 350 சதுர அடி அறையில் தொடங்கினார். இதில் மற்றொரு சுவாரசிய விஷயம் என்னவென்றால், மும்பைக்கு வந்த புதிதில் திருபாய் அம்பானிக்கு குஜராத்தி தவிர வேறு இந்திய மொழிகள் எதுவும் அத்தனை சரளமாக பேச வராதாம். மனிதர் என்ன தைரியத்தில் மும்பையில் வந்து தொழில் தொடங்கினார் என்பது அவருக்குத் தான் வெளிச்சம்.
Dhirubai Ambani
கச்சா எண்ணெய் விநியோகத்தில் வேலை பார்த்த அம்பானி, இப்போது ஏற்றுமதி - இறக்குமதி வியாபாரம் தொடங்கி, அதன் நெளிவு சுளிவுகளை கற்றுக் கொள்ளத் தொடங்கினார்.
1960களில் இந்தியா என்கிற ஒட்டு மொத்த சந்தையும் வெகு சில வியாபார குடும்பங்களின் கையில் தான் இருந்தன. அவர்களின் ஆதரவின்றி ஒருவரால் பெரிய அளவில் வளரவோ, வியாபாரத்தை வளர்த்தெடுக்கவோ முடியாது. அதையும் மீறி வளர முயல்பவர்களுக்கு போதுமான ஆதரவு கிடைக்காமல் விழுந்த கதைகள் ஏராளம். இத்தனை பிரச்சனைகள் இருப்பதை அறிந்துதான் திருபாய் அம்பானி இந்தியாவில் கம்பெனியைத் தொடங்கினார்.
மசாலா பொருட்களை ஏற்றுமதி செய்யத் தொடங்கிய அம்பானி, காலப் போக்கில் இதை ஏற்றுமதி செய்யலாம், இந்தப் பொருட்களுக்கு கிராக்கி அதிகம், இதில் ரிஸ்க் அதிகம்... என அத்தனை தன்னைத் தானே சுருக்கிக் கொள்ளாமல், சந்தையில் என்ன தேவை இருக்கிறதோ அதை ஏற்றுமதி செய்து ஓரளவுக்கு நல்ல லாபம் பார்த்துக் கொண்டிருந்தார் திருபாய். அப்போது தான் மண்ணை ஏற்றுமதி செய்யலாமென தீர்மானித்தார் அம்பானி. ஆம், நீங்கள் படித்தது சரி தான்... நம் நாட்டில் கொட்டிக் கிடக்கும் மண்ணை ஏற்றுமதி செய்யத் தீர்மானித்தார் திருபாய்.
முந்தைய பகுதியைப் படிக்க