அரேபியர்கள் வாழும் பாலைவன நாடுகளில் பூச்செடிகளை வளர்க்கத் தேவையான, வளமான மண்ணுக்கு டிமாண்ட் இருப்பதாக ஒரு துண்டுச் செய்தி அவர் காதில் விழுந்தது. இப்படி ஒரு செய்தி நம் காதில் விழுந்திருந்தால் நாம் என்ன செய்திருப்போம், மண்ணா... அதை எப்படி ஏற்றுமதி செய்வது, என்ன லாபம் இருக்கும், நீண்ட காலத்துக்கு பலனளிக்குமா என்றெல்லாம் யோசித்திருப்போம்.
ஆனால் அம்பானியோ, சரக்கை கொடுத்தால் பணம் கிடைக்குமா? ஆம் என்கிற பதில் கிடைத்த உடன், நல்ல வளமான செழிப்பான மண் குவியல்களை பிரமாதமாக பார்சல் செய்து அரேபியர்களுக்கு அனுப்பி வைத்தார். ரியால்களும், தினார்களும் பாய்ந்து வந்து திருபாயின் பாக்கெட்டில் அமர்ந்து கொண்டன.
Dhirubai Ambani
ரிலையன்ஸ் கமர்ஷியல் கார்ப்பரேஷன் நிறுவனத்தின் தொடக்க காலத்தில்தான், தன்னைப்போலவே ஏமன் நாட்டுக்கு சென்று வேலைப்பார்த்து இந்தியா திரும்பிய தன் உறவினர் சம்பக்லால் தமானியை தன்னோடு ரிலையன்ஸ் நிறுவனத்தில் கூட்டாளியாக சேர்த்துக் கொண்டார்.
8 ரூபாய்க்கு பொருள் வாங்கி, 1.10 ரூபாய் செலவு செய்து, 10 ரூபாய்க்கு விற்று 90 பைசா லாபம் பார்க்கும் நிறைவான தொழில் அம்பானிக்கு மகிழ்ச்சியைத் தரவில்லை. அம்பானியின் மூளையில் வியாபாரம் பிரவாகமெடுத்து ஓடிக் கொண்டிருந்தது. அடுத்து எது சந்தையை புரட்டிப்போடும் என்கிற அம்பானியின் துருதுரு தேடலுக்கு சின்தடிக் ஆடை விடையாகக் கிடைத்தது.
அக்காலத்தில் இந்தியாவில் பிர்லாவுக்குச் சொந்தமாக ஒரு ஆலை மட்டும் விஸ்கோலை தயாரித்துக் கொண்டிருந்தது. ஒரு அரசு நிறுவனம் மட்டுமே நைலானை உற்பத்தி செய்து கொண்டிருந்தது. சின்தடிக் ஆடை சந்தையிலோ இவர்கள் உற்பத்தி செய்வதை விட பல மடங்கு அதிக டிமாண்ட் இருந்தது.
இந்தியாவின் பரம்பரை வியாபாரிகள், பக்குவமாக பருத்தியில் வியாபாரம் செய்து கொண்டிருக்க, திருபாய் அம்பானி தைரியமாக சின்தடிக் ஆடை வியாபாரத்தில் இறங்கினார். சின்தடிக்கை குறைவான விலைக்கு வாங்கி நல்ல லாபத்தில் விற்று கள்ளாகட்டினார். ஒரு கட்டத்தில் இந்திய சந்தையில் பல வியாபாரிகள் சிலநூறு டன் சின்தடிக்கை வாங்கி விற்றுக் கொண்டிருக்க, திருபாய் அம்பானி ஒரேயடியாக பல ஆயிரம் டன் சின்தடிக்கை வாங்கிக் குவித்தார்.
இதன் விளைவாக மற்றவர்களை விட, திருபாய்க்கு சின்தடிக் விலை மலிவாகக் கிடைத்தது. அடுத்து மும்பை மற்றும் அதனைச் சுற்றியுள்ள பல துணி & ஆடை உற்பத்தி ஆலைகளுக்கு சென்று தன்னால் மிகக்குறைந்த விலையில் நல்ல சின்தடிக் சரக்கை சப்ளை செய்ய முடியும் என்பதை விளக்கி, ஆலை உரிமையாளர்களைத் தன் வசம் ஈர்த்தார். பிறகென்ன லாபம் டிப்பர் லாரிகளில் வந்து அம்பானி வீட்டுக் கொள்ளையில் கொட்டியது. ரிலையன்ஸ் உயிர்விதை, அம்பானியின் மூளைக் கருப்பையில் ஆழமாகப் பதிந்து பரிணமிக்கத் தொடங்கியது.
என்னதான் மெல்ல மெல்ல வசதி வாய்ப்புகள் அதிகரித்தாலும் திருபாய் அம்பானியின் வாழ்க்கை முறையும் செலவழிக்கும் விதமும் பெரிதாக மாறவில்லை. அதே வேணிலால் எஸ்டேட்ஸில்தான் இத்தனை வளர்ச்சிக்குப் பிறகும் வாழ்ந்து கொண்டிருந்தார்.
அந்த தந்தி கதை நினைவிருக்கிறதா.... அப்படி வியாபாரத்திற்கும் சரி, வீட்டுக்கும் சரி, தேவையான செலவுகளை தயங்காமல் செய்யவும், சமாளித்து விடலாம் என்றால் எப்படியாவது தவிர்த்து விடவும் முயற்சித்தார் திருபாய். அம்பானியின் சிக்கனத்துக்கும், வியாபார முதலீட்டுக்கும் ஒரு நல்ல உதாரணமாக டெல்லிக்கு விமானத்தில் பயணித்ததையும், அசோகா ஹோட்டலில் ஆளை செட் செய்து கொண்டதையும் கூறலாம்.
டெல்லியில் பெரிய தொழிலதிபர்கள் மற்றும் அரசாங்க அதிகாரிகளை சந்திக்க செல்லும் போதெல்லாம் நேரத்தை மிச்சப்படுத்த விமானத்தில் பயணித்தார். திருபாயைப் பொறுத்த வரை அது ஒரு முதலீடு.
Ambani
ஒருநாள் மட்டுமே பயணித்து முடிக்க வேண்டிய வேலைக்கு டெல்லியில் அறை எடுத்து தங்குவது வீண் செலவு என அதைத் தவிர்த்தார். ஆனால், டெல்லியில் உள்ள பெரிய மனிதர்கள் மற்றும் அரசு உயர் அதிகாரிகள் அம்பானியைத் தொடர்பு கொள்ள வேண்டுமானால் பெரிய இடத்தில் தங்கியிருப்பதாக ஒரு பிம்பத்தை ஏற்படுத்த, டெல்லியின் பிரபல ஹோட்டல்களில் ஒன்றான அசோகாவில் இருக்கும் ஒரு ஊழியரோடு திருபாய் ஒரு ரகசிய ஒப்பந்தம் செய்துகொண்டார்.
டெல்லிக்கு வரும்போதெல்லாம் அந்த அசோகா ஹோட்டல் ஊழியருக்கு அம்பானி செய்தியனுப்பிவிடுவார். தொழிலதிபர்களோ அதிகாரிகளோ அம்பானியை தொடர்பு கொள்ள முயற்சித்து ஹோட்டலுக்கு அழைத்தால், அவர் வெளியே சென்று இருப்பதாகவும், அம்பானியிடம் தெரிவிக்க வேண்டிய தகவல்கள் என்னவென்று கேட்டு அறிந்து கொள்வார் அந்த ஊழியர். தொலைபேசியில் தொடர்பு கொண்ட பெரிய மனிதர்கள் கூறிய அத்தனை தகவல்களையும் சேகரித்து திருபாயிடம் கொடுத்துவிடுவார் அந்த அசோகா ஹோட்டல் ஊழியர். அந்த ஒருநாள் சேவைக்காக, அந்த ஊழியருக்கு தக்க சன்மானம் கொடுத்து அன்போடு நட்பு பாராட்டிவருவார். இது திருபாயின் சிக்கன முகம்.
மெல்ல, சின்தடிக் ஆடைகளைக் கடந்து, பாலியஸ்டர் என்கிற துணி வகை அம்பானியின் கவனத்துக்கு வந்தது. இந்த் அபாலியஸ்டர் தான் திருபாயை உலகரங்கில் உயர்த்தப் போகிறது என்பதை அம்பானியோ, இந்த மனிதர் தான் தன்னை இந்தியாவின் சந்து பொந்துகளுக்கெல்லாம் எடுத்துச் செல்லவிருக்கிறார் என்பதையோ இருவரும் அறிந்திருக்கவில்லை.
முந்தைய பகுதியைப் படிக்க