ஒரு காலத்தில் ஃபேஸ்புக், டிவிட்டர் ஆகிய நிறுவனங்கள் மட்டுமே கொடிகட்டிப் பறந்து கொண்டிருந்த இணைய இடத்தில் தற்போது யூடியூப் இருக்கிறது. இன்று வருமான வரிப் படிவத்தை தாக்கல் செய்வது எப்படி என்பது முதல் பாலியல் தொடர்பான சிக்கலான பிரச்சனைகள் வரை மக்கள் யூடியூபில் விடை தேடுகிறார்கள்.
அப்பேற்பட்ட யூடியூப் ஊடக நிறுவனம் இந்திய பொருளாதாரத்தில் ஒரு வலுவான தாக்கத்தை ஏற்படுத்தி இருப்பதாக ஆக்ஸ்ஃபோர்ட் எகனாமிக்ஸ் (Oxford Economics) என்கிற ஆய்வறிக்கை கூறுகிறது.
இந்த ஆய்வில் இந்தியாவைச் சேர்ந்த அல்லது இந்தியாவை பூர்வீகமாகக் கொண்ட 4,032 பயனர்கள், 1,203 காணொளி தயாரிப்பாளர்கள், 1,020 வியாபார மற்றும் வணிக அமைப்புகள் பங்கெடுத்தன. இக்கருத்துக் கணிப்பில் தமிழ், இந்தி, ஆங்கிலம், வங்கம், மராத்தி, தெலுகு, மலையாளம் போன்ற மொழிகளைச் சேர்ந்தவர்கள் பங்கெடுத்தனர்.
இதில் குறிப்பிடப்பட்டுள்ள தரவுகள் அனைத்தும் 2020ஆம் ஆண்டு விவரஙளை அடிப்படையாகக் கொண்டவை. அன்றைய தேதிக்கு இந்தியாவில் சுமார் 40,000 யூடியூப் சேனல்கள் 1 லட்சத்துக்கு மேற்பட்ட சப்ஸ்கிரைபர்களையும், கிட்டத்தட்ட 4,000 யூடியூப் சேனல்கள் 1 மில்லியனுக்கும் அதிகமான சப்ஸ்கிரைபர்களையும் கொண்டிருந்ததாக அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.
2020ஆம் ஆண்டில், இந்திய பொருளாதாரத்தின் ஒட்டுமொத்த ஜிடிபியில் சுமார் 6,800 கோடி ரூபாய் அளவுக்கு யூடியூப் ஊடகம் பங்களித்துள்ளதாக அவ்வறிக்கை கூறுகிறது. கிட்டத்தட்ட 6,83,900 முழு நேர வேலைவாய்ப்புகளையும் உருவாக்கியுள்ளதாகக் கோருகிறது.
யூடியூப் சேனல் வைத்து நேரடியாக சம்பாதிப்பவர்கள் அல்லது யூடியூப் சேனலுக்காக முழு நேரப் பணியாளர்களை வேலைக்கு எடுத்திருப்பவர்கள் அல்லது குறைந்தபட்சம் யூடியூப் சேனலுக்கு 10,000 சப்ஸ்கிரைபர் வைத்திருப்பவர்களை கிரியேட்டிவ் தொழில்முனைவோர்கள் (Creative entrepreneurs) என்றழைக்கிறது இவ்வறிக்கை.
இந்த கிரியேட்டிவ் தொழில்முனைவோர்கள் யூடியூப் ஊடகத்திலிருந்து நேரடியாக சம்பாதிக்கிறார்கள். அது போக விளம்பர வருமானங்கள், சேனல் உறுப்பினராக இருப்பதற்கான கட்டணம், சூப்பர் சேட், பாடல்களைப் பதிவு செய்யும் பாடகர்கள் மற்றும் இசைக் கலைஞர்களுக்கு யுடியூபில் இருந்து வழங்கப்படும் ராயல்டி தொகை போன்றவை நேரடி வருமானமாக அவர்கள் கைக்குச் செல்கிறது.
இதை நேரடி தாக்கம் என்கிறது ஆக்ஸ்ஃபோர்ட் அறிக்கை.
இது போக யூடியூப் பிரபலங்கள் ஏதேனும் கல்விச் சாலை, கல்லூரி, நிறுவனங்களில் பேசுவதற்கோ, இசை நிகழ்ச்சி நடத்துவதற்கோ, பாடம் எடுப்பதற்கோ அழைக்கப்படுகிறார்கள். அதன் மூலமும் யூடியூப் பிரபலங்களுக்கு தனி வருமானம் கிடைக்கிறது. அது போக பிராண்டுகள் அவர்களைத் தொடர்பு கொண்டு தங்கள் பிராண்டின் பொருட்களை விளம்பரப்படுத்த அழைக்கிறார்கள். இதுவும் யூடியூபினால் கிடைத்த வாய்ப்பு என்பதால் யூடியூபர்கள் மற்ற வழிகளிலும் நேரடியாகச் சம்பாதிக்கிறார்கள்.
இதே யூடியூபர்கள் மற்றும் அவரிடம் வேலை பார்ப்பவர்கள் அல்லது அவர்களின் பணிச் சூழலில் உதவுபவர்கள், யூடியூப் சூழலில் பணியாற்றும் காணொளி தொகுப்பாளர்கள், கேமராமேன்கள், கிராஃபிக்ஸ் கலைஞர்கள், குரல் வளக் கலைஞர்கள்.... எல்லாம் கேமரா, எடிட்டிங் சாதனம், மைக், ட்ரைபாட், எடிட்டிங் மென்பொருள், ஸ்மார்ட்ஃபோன் போன்றவற்றுக்குச் செலவழிப்பது இந்திய பொருளாதாரத்தில் மற்றொரு மறைமுக தாக்கத்தை ஏற்படுத்துவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
யூடியூபில் காணொளியைப் பதிவேற்றி அதில் வரும் விளம்பரங்கள் மூலம் அவர்களுக்கு கிடைக்கும் வருமானம் மிக முக்கியமானது என கருத்துக் கணிப்பில் பங்கெடுத்த கிரியேட்டிவ் தொழில்முனைவோர்களில் 72% பேர் கூறியுள்ளனர்.
தங்களுடைய தொழில்முறையிலான இலக்குகளில் யூடியூப் ஒரு நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தி இருப்பதாக 80% கிரியேட்டிவ் தொழில்முனைவோர்கள் கூறியுள்ளனர்.
யூடியூப் ஊடகம் தங்களுக்கு புதிய வாய்ப்புகளைத் தேடிக் கொடுத்திருப்பதாக 63% கிரியேட்டிவ் தொழில்முனைவோர்கள் கூறியுள்ளனர்.
தங்களுடைய வாடிக்கையாளர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க யூடியூப் உதவியதாக, யூடியூப் சேனலை வைத்திருக்கும் 90% சிறு குறு தொழில் நிறுவனங்கள் கூறியுள்ளன.
யூடியூபிள் விளம்பரம் செய்த 87% சிறு குறு தொழில் நிறுவனங்கள், தங்களின் வியாபாரம் அதிகரிக்க உதவியதாகக் கூறியுள்ளனர்.
யூடியூபில் எளிதாக விவரங்கள் கிடைப்பதால், தங்கள் ஊழியர்கள் இன்னும் சிறப்பாக வேலை செய்ய உதவியதாக 88% சிறு குறு தொழில் நிறுவனங்கள் கூறியுள்ளன.
யூடியூபில் தங்கள் நிறுவனம் இருப்பதால், வாடிக்கையாளர்கள் தங்கள் நிறுவனத்தைக் கண்டுபிடிக்க உதவிகரமாக இருப்பதாக 93% நிறுவனங்கள் கூறியுள்ளன.
18 வயதுக்கு மேற்பட்ட இளைஞர்கள் தங்கள் வீட்டுப் பாடம் அல்லது கல்வி சார்ந்த விஷயங்களுக்கு யூடியூப் உதவிகரமாக இருப்பதாக 94% மாணவர்கள் கூறியுள்ளனர்.
மாணவர்கள் தங்கள் வேகத்துக்குத் தகுந்தாற் போல பாடத்தைக் கற்றுக் கொள்ள உதவுவதாக யூடியூபைப் பயன்படுத்தும் 81% ஆசிரியர்கள் கூறியுள்ளனர்.
யூடியூபைப் பயன்படுத்தும் 91% பெற்றோர், தங்கள் குழந்தைகள் பாடங்களைக் கற்றுக் கொள்ள உதவுவதாகக் கூறியுள்ளனர்.
தகவல்களைத் தெரிந்து கொள்ள யூடியூபைப் பயன்படுத்துவதாக 98% பயனர்கள் கூறியுள்ளனர். கடந்த 12 மாதங்களில் வேலையை தேடியவர்களில் 59% பேர் தங்களை மேம்படுத்திக் கொள்ளவும் , புதிய விஷயங்களைக் கற்றுக் கொள்ளவும் யூடியூபை பயன்படுத்தியதாகக் கூறியுள்ளனர்
காணொளி தயாரிப்பாளர்கள் மற்றும் கலைஞர்களுக்கு சர்வதேச மேடை கொடுத்த யூடியூப்
தங்கள் படைப்புகளை சர்வதேச அரங்கில் எடுத்துச் செல்ல யூடியூப் உதவியதாக 79% கிரியேட்டிவ் தொழில்முனைவோர்கள் கூறியுள்ளனர்.
இந்திய கலைஞர்களின் காணொளிகளில் 15 சதவீதத்துக்கு மேற்பட்ட பார்வை நேரம் வெளிநாடுகளிலிருந்து வருகிறது.
இந்திய இசை வெளிநாடுகளில் பிரபலமடைந்ததற்கு யூடியூப் ஒரு முக்கிய பங்கு வகித்ததாக யூடியூப் சேனலை வைத்திருக்கும் 95% இசை மற்றும் ஊடக நிறுவனங்கள் கூறியுள்ளன.
இப்படி இந்தியாவின் பொருளாதாரத்தில் நேரடியாகவும் மறைமுகமாகவும் யூடியூப் ஒரு பெரிய தாகத்தை ஏற்படுத்தி இருப்பதாக ஆக்ஸ்ஃபோர்ட் எகனாமிக்ஸ் அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust