Economy

 

NewsSense 

பிசினஸ்

பணவீக்க அபாயம்: இந்தியாவில் உயரும் எரிபொருள் தேவை - என்ன நடக்கிறது?

Govind

இந்தியாவில் கோவிட் 19 பாதிப்புகள் குறைந்து, தொழிற்துறை மீள்வதோடு பொருளாதார இயக்கம் வேகம் பெறுவதால் இந்த ஆண்டு கச்சா எண்ணெய் நுகர்வு அதிகரிக்கும்.

ஒபெக் எனும் கச்சா எண்ணெய் உற்பத்தி செய்யும் நாடுகளது அமைப்பின் எதிர்பார்ப்பின் படி இந்த ஆண்டு எண்ணெய் தேவை இந்தியாவில் 8.2% அதிகரிக்கும். அதன்படி நாளொன்றுக்கு 5.15 மில்லியன் பீப்பாய் எண்ணெய் 2022 இல் தேவைப்படும். ஏற்கனவே எண்ணெயின் நுகர்வு 2021 இல் 5.5% அதிகரித்திருந்தது.

அதிகரிக்கும் பெட்ரோல், டீசல் தேவை

கோவிட் திரிபான ஒமிக்ரான் கட்டுப்படுத்தப் பட்ட நிலையில் 2022 ஆம் ஆண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 7.2% இருக்குமென்பதால் எண்ணெய் தேவை அதிகரிக்குமென ஒபெக் அறிக்கை கூறுகிறது. தேசிய மொத்த உற்பத்தியில் பெட்ரோல் மற்றும் டீசலின் பங்கு அதிகரிக்கும். தொழிற்துறையில் டீசல், எல்பிஜி நாப்தா தேவைகள் அதிகரிக்குமென்றும் அந்த அறிக்கை கூறுகிறது.

கிரிசில் ஆராய்ச்சி நிறுவனத்தின் படி போக்குவரத்திற்கான எரிபொருளின் தேவை நெகிழ்ச்சியற்றதாக இருந்தாலும் பொருளாதாரத்தின் மீட்பு நடவடிக்கை அதை சரி செய்யுமென எதிர்பார்க்கப்படுகிறது.

பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகத்தின் கீழ் உள்ள பெட்ரோலிய திட்டமிடல் மற்றும் பகுப்பாய்வு பிரிவு, 2022-23 ஆம் நிதியாண்டின் எண்ணைய்த் தேவை அதற்கு முந்தைய ஆண்டை விட அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கிறது. இது கடந்த ஐந்து ஆண்டுகளில் அதிகமான தேவையாகும். மேலும் ஒட்டுமொத்தமான பெட்ரோலியம் பொருட்களின் நுகர்வு 5.5% வளருமென்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் விமான எரிபொருள் தேவை 2023 நிதியாண்டில் மிகவும் உயருமென்றும் அதே போன்று டீசல் மற்றும் பெட்ரோலின் தேவையும் அதிகரிக்கும்.

Economy

பணவீக்க அபாயமும் தொடர்கிறது

கச்சா எண்ணெய் விலை உயர்ந்தாலும் எண்ணெய் நுகர்வு அதிகரிக்கும். பிரிட்டன், நார்வே நாடுகளுக்கு இடையில் இருக்கும் வடக்கு கடலில் எடுக்கப்படும் கச்சா எண்ணெயை பிரெண்ட் எண்ணெய் என்று அழைக்கிறார்கள். இது தொழிற்துறை தரத்தின்படி அடர்த்தி குறைந்து காணப்படும் மேம்பட்ட எண்ணெயாகும். இந்த பிரெண்ட் வகை கச்சா எண்ணெயின் விலை 14 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு ஒரு பீப்பாய் 139.13 டாலரைத் தொட்டு தற்போது 117 டாலராக இருக்கிறது. ஒரு ஆய்வு நிறுவனத்தின் படி ஆசியாவில் 2023 நிதியாண்டில் ஒரு பீப்பாயின் விலை ஏறத்தாழ 97 டாலரில் நிலைகொள்ளுமென எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் உணவு மற்றும் எரிபொருள் விலையின் தேவையை ஒட்டி இந்தியாவில் பண வீக்கத்தை 2 – 6% அளவுக்குள் இருக்குமென ரிசர்வ வங்கி எதிர்பார்க்கிறது.

Ukraine war

உக்ரைன் போரும் உலக பொருளாதார வளர்ச்சியும்

பொதுவில் பணவீக்கம் மற்றும் உலகின் எண்ணெய்த் தேவை இரண்டும் உக்ரைன் போர் போன்ற புவிசார் அரசியல் கொந்தளிப்பின் மூலம் மாறுவதையும் ஒபெக் கணக்கில் கொள்கிறது. உலகின் எண்ணெய் நுகர்வு 2021 இல் 6.28% வளர்ச்சி அடைந்ததை ஒப்பிடுகையில் 2022 இல் வளர்ச்சி 4.29% ஆக ஒரு நாளைக்கு 100.9 மில்லியன் பீப்பாய்களாக உயருமென எதிர்பார்க்கப்படுகிறது.

ஆனால் சர்வதேசப் பொருளாதார நிறுவனம் அதன் மார்ச் 2022 அறிக்கையில் உலகளாவிய எண்ணெய் தேவை இந்த ஆண்டு ஒரு நாளைக்கு 00.7 மில்லியன் பீப்பாய்கள் என்று கணித்துள்ளது. இது முந்தைய ஆண்டை விட 2.1% குறைவான வளர்ச்சியாகும். உக்ரைன் மீதான ரஷ்ய ஆக்கிரமிப்பால் அந்நாட்டிற்கு எதிராக விதிக்கப்பட்ட சர்வதேசத்தடைகள் உலகப் பொருளாதார வளர்ச்சியை கணிசமாக குறைக்குமென எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் பொருட்களின் விலை உயருமென்றும் அது முன்னறவிக்கிறது.

அமெரிக்கா, ரஷ்யா, கனடா, பிரேசில், கசகிஸ்தான், கயானா, நார்வே போன்ற நாடுகள் ஒபெக் அமைப்பில் அங்கம் வகிக்காமல் எண்ணெய் உற்பத்தி மற்றும் ஏற்றுமதியை 2022 இல் செய்கின்றன. எனினும் இந்த நாடுகள் தவிர மற்ற நாடுகளில் குறிப்பாக இந்தோனேசியா, எகிப்து போன்ற நாடுகளில் எண்ணெய் உற்பத்தி குறையுமென மேற்கண்ட நிறுவனத்தின் அறிக்கை கூறுகிறது. 2022 இல் இந்தியாவின் எண்ணெய் உற்பத்தி 2.2% அல்லது 0.77 மில்லியன் பீப்பாய்கள் உயருமென அந்த அறிக்கை மேலும் கூறுகிறது.

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?