Nawab Shaji Ul Mulk

 

Twitter

பிசினஸ்

அரபு நாட்டில் பல்லாயிரம் கோடிக்கு அதிபரான ஆந்திராவின் நவாப் ஷாஜி உல் முல்க்

Govind

ஷாஜி உல் முல்க், ஆந்திராவின் கர்னூல் மாவட்டத்தைச் சேர்ந்தவர். அங்கே வசித்து வந்த நவாம் வம்ச குடும்ப பாரம்பரியத்தைக் கொண்டவர். பிரிட்டீஷ் ஆட்சி முடிந்ததும் நவாப் வம்ச குடும்பங்கள் தமது பழைய செல்வாக்கை இழந்தன. புதிய உலகில் புதிய சூழலில் அவர்கள் தங்களை தகவமைத்துக் கொள்ள முயன்றனர். அப்படி முயன்று இன்று அமீரகத்தின் பில்லியனர்களில் ஒருவராக உயர்ந்து நிற்கிறார் முல்க்.

Nawab Shaji Ul Mulk

அவரது இளமைக் காலம்

1982 ஆம் ஆண்டில் தனது 23 வயதில் ஐக்கிய அரபு அமீரகத்திற்கு ஏதாவது ஒரு பிழைப்பைத் தேடி வந்தார் முல்க். அவரது கனவுத் திட்டத்தின் படி துபாய் வாழ்க்கை என்பது அமெரிக்காவில் உயர் படிப்பை முடித்து விட்டு பணியாற்றுவதற்கான ஒரு படிக்கட்டு.

அவர் ஆந்திராவின் வெங்கடேஸ்வரா பல்கலையின் தங்கப் பதக்கம் பெற்ற ஒரு பட்டதாரி. தனது உயர் படிப்பை அமெரிக்காவில் தொடர விரும்பினார். ஆனால் அதற்கு பணம் வேண்டுமே? அந்தப் பணத்தை சம்பாதித்து சேமிக்கும் பொருட்டு அவர் அமீரகம் வந்தார்.

அப்போது அவரது சகோதரியும் சகோதரியின் கணவரும் துபாயில் வசித்து வந்தனர். சகோதரியின் கணவர் ஐந்து ஊழியர்களுடன் சோலார் பேனலின் கண்ணாடி தடுப்புகளை விநியோகிக்கும் ஒரு சிறு நிறுவனத்தை நடத்தி வந்தார். அதில் சேர்ந்தார் முல்க். ஜன்னல்களை துடைத்து விட்டு கண்ணாடிகளை பொருத்ததுவதுதான் முல்க்கின் வேலை. ஷேக் ஹம்தான் காலனியில் வசித்து வந்த முல்க் இரண்டு ஷேர் டாக்சி மூலம்தான் ஷெர்ஜாவிற்கு வருவார். இன்று அவரிடம் விலையுயர்ந்த ஆடம்பரக் கார்கள் பல இருக்கின்றன.

மூன்று நாட்கள் வேலை பார்த்த பிறகு முல்க்கிற்கு வேறு எதாவது பெரிதாக செய்ய வேண்டுமென்ற எண்ணம் அவர் மனதில் ஓடியது. இதை அவரது சகோதரியின் கணவர் ஒத்துக் கொள்ளவில்லை. ஆனாலும் முல்க் அடுத்த நாள் வேலைக்கு போகாமல் சந்தைக்குச் சென்று தனியே கண்ணாடி தடுப்புகளை விற்பதற்கு முயன்றார். முதலில் எதுவும் விற்கவில்லை. ஆனால் சில நாட்களில் விற்பனை துவங்கியது. சில மாதங்களில் சகோதரியின் கணவரது நிறுவனம் மாதத்திற்கு எவ்வளவு கண்ணாடிகளை விநியோகித்ததோ அதே அளவை இவர் தனியாக விற்று சாதனை படைத்தார். அப்போது அவருக்கு நேரம் கிடைத்ததால் யோசித்தார். பின்னர் இதே கண்ணாடி பொருத்தும் வேலையை கான்ட்ராக்ட் எடுத்து செய்வதாக சகோதரியின் கணவரிடம் கூறினார்.

அதன்படி ஒரு வருடத்தில் முல்க் சேமித்த பணம் 30,000 டாலர். அதற்கு பிறகு அவர் அமெரிக்கா சென்று படிக்கும் கனவு நிறைவேற வாய்ப்பு கிடைத்தது. அமெரிக்காவின் பிரபலமான பிசினஸ் கல்லூரிகளின் ஒன்றான வார்ட்டன்ஸ் வணிகக் கல்லூரியில் அவருக்கு இடம் கிடைத்தது. விமான பயணத்திற்கான டிக்கெட்டையும் பதிவு செய்தாகி விட்டது.

Nawab Shaji Ul Mulk

நிதி நிறுவனத்தின் பங்குதாரர்

பயணத்தின் ஒரு வாரத்திற்கு முன்பு முல்க் தனது திட்டம் சரிதானா என்பதை நண்பர் ஒருவருடன் விவாதித்தார். முல்க்கிற்கு ஒரு குழப்பம். மேற்படிப்பிற்கு அமெரிக்கா செல்லலாமா? அல்லது சேமிப்பு பணத்தை வைத்து இங்கேயே தொழில் துவங்கலாமா? படித்தால் ஏதோ ஒரு நிறுவனத்தில் ஒரு நிர்வாகியாக காலத்தை ஓட்டலாம். தொழிலதிபரானால் சொந்த முயற்சியில் ஒரு சாம்ராஜ்ஜியத்தைக் கட்டலாம். தெளிவாக இரண்டாவதைத் தேர்ந்தெடுத்தார் முல்க். அமீரகத்தில் தனது வியாபாரத்தை தொடர்ந்தார்.

விரைவிலேயே ஒரு பெரும் நிதி நிறுவனத்தின் பங்குதாரராக உயர்ந்தார். ஆனால் முல்க்கின் சிந்தனை தனது சொந்தக்காலில் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று பயணித்தது. அவர் அமீரகத்தில் வணிகம் செய்து பத்து ஆண்டுகள் ஆகிவிட்டன. இனி அடுத்த அத்தியாயம் துவங்குகிறது.

அமீரகத்தில் இருந்த அஜ்மீன் சுதந்திர மண்டலத்தில் ஒரு பெரும் நிலத்தை வாங்கினார் முல்க். அங்கே ஒரு பெரும் தொழிற்கூடத்தை நிர்மாணிக்கிறார். மேலும் அவர் அமீரகத்தின் அலுபாண்ட் நிறுவனத்தின் பங்குகளையும் வாங்குகிறார். இந்த நிறுவனம் மத்திய கிழக்கில் தொழிற்கூடங்களை நிர்மாணித்து தரும் வேலையினை செய்து வந்தது. இதிலிருந்து தொழிலை கற்றுக் கொண்டு முல்க் தனியாக தனது நிறுவனத்தை துவங்கினார்.

தற்போது அவரது முல்க் ஹோல்டிங்ஸ் பலவகை தொழில்களை செய்து வருகிறது. அவற்றில் கட்டுமானம், புதுப்பிக்கத் தக்க ஆற்றல், பிளாஸ்டிக்ஸ், சுகாதாரம் என பல தொழில்கள் இருக்கின்றன. முல்க் ஹோல்டிங்ஸ் எனும் தாய் நிறுவனத்தின் கீழ் 18 துணை நிறுவனங்கள் இருக்கின்றன. உலக அளவில் அவரது நிறுவனங்களில் 7,000 பேர் பணி புரிகின்றனர். அவரது உற்பத்திக் கூடங்கள் அமெரிக்கா, ஐரோப்பா, இந்தியா, அமீரகம், ஓமன், கானா போன்ற நாடுகளில் இருக்கின்றன.

முல்க்கின் தனிப்பட்ட சொத்து மதிப்பு 2.7 பில்லியன் டாலராகும். அவரது முல்க் ஹோல்டிங்கின் வருடாந்திர வர்த்த மதிப்பு 1.8 பில்லியன் டாலர்.

மேலும் அவர் முல்க் பவுண்டேசன் எனும் சமூக சேவைக்கான அறக்கட்டளையையும் நடத்தி வருகிறார். அவரது முயற்சியால் அமீரகம் மற்றும் இந்தியாவில் இலவச மருத்துவம், இலவச நூலகங்கள், மாற்றுதிறனாளி குழந்தைகளுக்கு ஆதரவு, ஆதரவற்றோருக்கு திருமண உதவி போன்ற சேவைப்பணிகள் நடக்கின்றன.

அவரது நிறுவனத்தின் Alubond A2 எனப்படும் அலுமினிய பேனல் உலகிலேயே பிரபலமான ஒன்று. இதுவரை 25 மில்லியன் சதுர மீட்டர் பேனல்களை நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகளில் நிர்மாணித்திருக்கின்றனர். முல்க்கின் நிறுவனம் அமீகரகத்தில் பல விருதுகளை பெற்றிருக்கிறது.

இதற்கடுத்து முல்க் அமீரகத்தின் கிரிக்கெட் வாரியத்தின் ஒரே இந்திய உறுப்பினராகவும் இருக்கிறார். அமீரகத்தில் நடத்தப்படும் டி 10 கிரிக்கெட் லீகின் ஆலோசனையை இவர்தான் முன் மொழிந்திருக்கிறார். முல்க் ஒரு தீவிர கிரிக்கெட் ரசிகர்.

வாழ்வில் ஒரு திருப்புமுனையை ஏற்படுத்துவதற்கு இடர்களை சந்திக்க வேண்டியிருக்கும். ஆனால் முறையான ஆய்வு, கடின உழைப்பு இரண்டும் இருந்தால் இடர்களை கடந்து வெற்றிபெறலாம் என்கிறார் முல்க்.

23 வயதில் தங்கப் பதக்கம் வாங்கிய ஒரு பட்டதாரியாக அமெரிக்காவில் மேற்படிப்பு படிக்கும் கனவுடன் அமீரகம் வந்த முல்க் இன்று ஒரு பெரும் பெரும் பில்லியனராக உயர்ந்திருக்கிறார். பழைய நவாப்கள் தமது ஆடம்பர அரண்மனையில் கேளிக்கைகளுடன் பொழுதை போக்குவார்கள். இந்த நவாப் தனது சொந்த உழைப்பில் ஒரு பெரும் சாம்ராஜ்ஜியத்தையே கட்டியிருக்கிறார்.

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?