எலான் மஸ்க் Twitter
பிசினஸ்

எலான் மஸ்க்: சிறு வயதில் மோசமான நெருக்கடிகள் முதல் உலகின் No 1 பணக்காரர் வரை - யார் இவர்?

Gautham


டெஸ்லா, ஸ்பேஸ் எக்ஸ், போரிங் கம்பெனி, ஹைப்பர் லூப் போன்ற உலகின் பிரபலமான நிறுவனங்களின் தலைவர், உலகின் நம்பர் 1 பணக்காரர், அறிவியல் மேதை + பிரமாதமான தொழிலதிபர் என நீங்கள் எலான் மஸ்கை குறித்துப் படித்திருக்கலாம்.

அதே எலான் மஸ்க் தான் தென்னாப்பிரிக்காவில், தன் குழந்தைப் பருவத்தில் மிக மோசமான சூழலில் வளர்ந்தது குறித்துப் படித்திருக்கிறீர்களா?

அவர் பட்டப் படிப்பை எங்குப் படித்து முடித்தார். ஆப்பிள் நிறுவனத்தின் ஸ்டீவ் ஜாப்ஸ், ஃபோர்ட் நிறுவனத்தின் ஹென்றி ஃபோர்ட், மைக்ரோசாஃப்டின் பில் கேட்ஸ் போன்ற உலகின் ஆகச் சிறந்த திறமைசாலிகளோடு ஓப்பிடும் அளவுக்கு எலான் மஸ்க் செய்தது என்ன?

அவர் நாள் ஒன்றுக்கு எத்தனை மணி நேரம் உழைப்பார்? படிப்பு பிடிக்குமா? இப்படிப் பல விஷயங்களை இக்கட்டுரையில் பார்ப்போம்.

எலான் மஸ்கின் தாய் ஒரு மாடல் மற்றும் ஊட்டச்சத்து நிபுணர். அவரது தந்தை ஒரு பொறியாளர். அவர் சகோதரர் கிம்பல் மஸ்க் ஒரு வெஞ்சர் முதலீட்டாளர் மற்றும் சுற்றுச்சூழல் ஆர்வலர். அவர் சகோதர் டோஸ்கா மஸ்க் ஒரு பிரபல தயாரிப்பாளர் மற்றும் இயக்குநர். சுருக்கமாகச் சொல்ல வேண்டுமானால் அவரது குடும்பமே ஒரு சாதனையாளர் குடும்பம்.

சிறு வயதில் எலான் மஸ்க்

இளம் வயது & கல்வி

எலான் மஸ்க் இளம் வயதிலிருந்தே ஒரு புத்தகப் புழு என அவரே கூறியுள்ளார். என்சைக்ளோபீடியா தொடங்கி காமிக்ஸ் வரை கண்ணில் பட்டதை எல்லாம் படிப்பாராம்.

அதே போல 10 வயதிலேயே Commodore VIC - 20 கணினியில் புரொகிராமிங் செய்யும் அளவுக்கு எலான் மஸ்க் தொழில்நுட்பத்தில் கை தேர்ந்தார். அந்த இளம் வயதிலேயே பிளாஸ்டர் என்கிற வீடியோ கேமுக்கான அடிப்படை கோடிங்கை 'பிசி அண்ட் ஆஃபிஸ் டெக்னாலஜி' என்கிற பத்திரிகைக்கு $500 டாலருக்கு விற்று காசு பார்த்தார்.

ஒருகட்டத்தில் அண்ணன் தம்பியாகச் சேர்ந்து ஒரு வீடியோ கேம் விளையாடும் மையத்தைத் திறக்கும் அளவுக்குச் சென்றனர். அவர்களுடைய பெற்றோர்கள் தான் தடுத்து நிறுத்தினாராம்.

தாய் தந்தையின் விவாகரத்தைத் தொடர்ந்து, எலான் மஸ்க் தென்னாப்பிரிக்காவில் தந்தையோடு வளர்ந்தார். தந்தையின் வளர்ப்பு அத்தனை நன்றாக இல்லை. தினமும் பல்வேறு சிக்கல்களை மஸ்க் எதிர்கொள்ள வேண்டி இருந்தது.

Elon Musk

கனடா குடியேற்றம்

தென்னாப்பிரிக்காவில் ராணுவத்தில் பணியாற்ற வேண்டிய கட்டாயத்தைத் தவிர்க்க வேண்டி 1980களின் பிற்பகுதியில், தன் 17ஆவது வயதில் கனடாவுக்குக் குடியேறினார். பின், கனடாவிலேயே குடியுரிமை பெற்றார். கிங்ஸ்டனில் உள்ள க்வின்ஸ்

பல்கலைக்கழகத்தில் சேர்ந்தார். அங்குதான் அவரது முதல் மனைவி ஜஸ்டின் வில்சனைச் சந்தித்து பின்னாளில் கரம் பிடித்தார். இந்த தம்பதிகளுக்கு மொத்தம் ஐந்து குழந்தைகள் பிறந்தனர்.

அமெரிக்கா

க்வின்ஸ் பல்கலைக்கழகத்தில் ஈராண்டு காலத்துக்குப் பிறகு, எலான் மஸ்க் தன் பட்டப்படிப்பை அமெரிக்காவில் உள்ள பென்சில்வேனியா பல்கலைக்கழகத்துக்கு மாற்றிக் கொண்டார். அங்கு இயற்பியல் மற்றும் பொருளாதாரம் எடுத்துப் படித்தார். அமெரிக்காவில் படித்துக் கொண்டிருக்கும் போது 10 படுக்கை அறைகளைக் கொண்ட ஒரு வீட்டை வாங்கி, ஒரு இரவு கிளப் போல நடத்தி வந்ததும் இங்குக் குறிப்பிடத்தக்கது.

Musk

பே பல் & எக்ஸ்.காம்

தன் 24 வயதில் இயற்பியலில் முனைவர் படிப்புக்கு ஸ்டான்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தில் விண்ணப்பித்துவிட்டு, இரு தினங்கள் மட்டும் பல்கலைக்கழகத்துக்குச் சென்றுவிட்டு, தொழில் தொடங்கினார்.

அப்படி 1995ஆம் ஆண்டு வெறும் $28,000-த்தில் தொடங்கப்பட்டது தான் Zip2. அந்நிறுவனத்தை காம்பேக்கின் அல்டாவிஸ்டா என்கிற நிறுவனம் சுமார் 340 மில்லியன் கொடுத்து வாங்கியது.

அந்த பணத்தைக் கொண்டு எக்ஸ்.காம் என்கிற நிறுவனத்தைத் தொடங்கினார். பிறகு அந்நிறுவனம் கன்ஃபினிடி என்கிற நிறுவனத்தோடு இணைக்கப்பட்டு இன்று பேபல் என்றழைக்கப்படுகிறது.

பேபல் நிறுவனத்திலிருந்து எலான் மஸ்க் வெளியேற்றப்படுவதற்கு முன், இ பே நிறுவனம் 1.5 பில்லியன் டாலர் கொடுத்து பேபலை வாங்கியது. அப்போது எலான் மஸ்க் கையில் 180 மில்லியன் டாலர் மதிப்பிலான பங்குகள் இருந்தன.

அப்பணத்தைக் கொண்டு டெஸ்லா மற்றும் ஸ்பேஸ் எக்ஸ் என இரண்டு நிறுவனத்தையும் நிறுவினார்.

Elon Musk Family

தொலைநோக்கு சிந்தனையும் கடின உழைப்பும்

இன்று இரு நிறுவனங்களும் உலகின் போக்கையே மாற்றியமைக்கும் நிறுவனங்களாக வெற்றி நடைபோட்டு வருகின்றன. இது போக ஹைப்பர் லூக் என்கிற திட்டத்தையும் செயல்படுத்தி வருகிறார் எலான் மஸ்க்.

உலகமே காகித ரசீதில் எழுதி பணம் செலுத்திக் கொண்டிருந்த போது, ஆன்லைனில் பணம் செலுத்த ஒரு மிக எளிய வழியைக் கண்டு பிடித்து உலகைத் திரும்பிப் பார்க்க வைத்தார். உலகம் லிட்டருக்கு 30 கிலோமீட்டர் கொடுக்கும் காரை கண்டுபிடிக்க முயன்று கொண்டிருந்த போது, எலெக்ட்ரிக் காரை அறிமுகப்படுத்தி, அதை அமெரிக்காவில் பிரபலமாக்கினார். அதற்கான மின்சாரத்தை சோலார் ஒளித்தகடுகள் மூலம் தயாரிக்க தனி சார்ஜிங் மையங்களையும் நிறுவினார்.

நிலவில் மனிதன் குடியிருப்பது குறித்துப் பேசிக் கொண்டிருக்கும் போதே, செவ்வாயில் குடியேறத் திட்டமிட்டுக் கொண்டிருக்கிறார் எலான் மஸ்க். இப்படிப்பட்ட தொலைநோக்கு சிந்தனையும் சாதனையும் தான் அவரை பல்வேறு உலக சாதனையாளர்களோடு ஒப்பிட வைக்கிறது.

நாள் ஒன்றுக்குச் சராசரியாக 12 - 18 மணி நேரம் வரை அசால்டாக உழைக்கக் கூடியவர் எலான் மஸ்க். இன்று அவரின் சொத்து மதிப்பு, ப்ளூம்பெர்க் பில்லியனர் ரியல் டைம் குறியீட்டின் படி சுமார் 257 பில்லியன் டாலர்.

Elon Musk

எலான் மஸ்க் தன் மனதில் பட்டதை அதிரடியாகவும், வெளிப்படையாகவும் சட்டென பொதுவெளியில் பேசக் கூடியவர்.

ட்விட்டரில் எடிட் பட்டன் வைக்கலாமா வேண்டாமா? என ட்விட்டரிலேயே வாக்கெடுப்பு நடத்துவது, பில் கேட்ஸ் சுற்றுச்சூழலுக்காக நிதி கேட்கும் போது, என் டெஸ்லா பங்குகளுக்கு எதிராக முதலீடு செய்துள்ளார்களா என்று கேட்பது எனப் பல அதிரடிகளுக்குச் சொந்தக்காரர்.

சமீபத்தில் உலகின் மிக முக்கிய மற்றும் வலிமையான சமூக வலைத்தளங்களில் ஒன்றான ட்விட்டரையும் வாங்கவிருக்கிறார். ட்விட்டரை வாங்குவதற்கு எலான் மஸ்க் கூறிய திட்டத்துக்கு, ட்விட்டர் இயக்குநர்கள் குழு ஒப்புதல் கொடுத்துள்ளது. விரைவில் அதுவும் எலான் மஸ்கின் பாக்கெட்டுக்குச் சென்றுவிடும்.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?