இந்தியாவின் 48வது பெரிய பணக்காரரும், இந்தியப் பங்கு சந்தையின் மன்னன், இந்தியாவின் வாரன் புஃப்ஃபெட் என்றழைக்கப்படுபவருமான ராகேஷ் ஜுன்ஜுன்வாலா உடல் நலக்குறைவு காரணமாக தனது 62வது வயதில் காலமானார். இந்திய பிரதமர் மோடி முதலானவர்கள், ராகேஷின் மரணத்திற்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
சமீபத்தில் இவர் தொடங்கிய ஆகாசா ஏர் நிறுவனம் தனது முதல் விமான இயக்கத்தை ஆரம்பித்தது. இதன் நிகழ்ச்சிக்கு கூட ராகேஷ் வீல்சேரில் தான் வந்திருந்தார்.
ஆகாசா ஏர் விமான நிறுவனத்தை ராகேஷ், முன்னாள் ஜெட் ஏர்வேஸ் சிஇஓ வினய் தூபே மற்றும் முன்னாள் இண்டிகோ நிறுவன தலைவர் ஆதித்யா கோஷுடன் இணைந்து துவங்கியிருந்தார். இதன் முதல் விமானம் மும்பையிலிருந்து அகமதாபாத் வரை இயக்கப்பட்டது. ஆகாசா ஏர் இந்தியாவின் குறைந்த கட்டண விமான சேவையாகும். இதில் 40 சதவிகித பங்குகளுக்கு 35 மில்லியன் டாலர் முதலீடு செய்திருந்தார் ராகேஷ்.
ஜூலை 5, 1960ல் மும்பையில் பிறந்தவர் ஜுன்ஜுன்வாலா. இவரது தந்தை வருமான வரித்துறை ஆணையராக பணியாற்றியவர். பட்டயகணக்காளர் படிப்பை சிடென்ஹாம் கல்லூரியில் முடித்திருந்த ஜுன்ஜுன்வாலாவுக்கு தனது தந்தையின் மூலம் தான் பங்குசந்தை முதலீட்டில் ஆர்வம் தொடங்கியது.
பங்குச்சந்தை என்றாலே புரிந்துகொள்வதற்கும், நிலைத்து நிற்பதற்கும் கடினமாக இருக்கும் என்று நினைத்தவர்கள் மத்தியில், இளம் வயதிலேயே அந்த உலகிற்குள் நுழைந்து கோலோச்சியிருந்தார் ஜுன்ஜுன்வாலா.
இதனால் கல்லூரியில் படித்துக்கொண்டிருக்கும்போதே பங்கு சந்தையில் முதலீடு செய்வதை துவங்கியிருந்தார். இந்திய பட்டயகணக்காளர்கள் நிறுவனத்திலும் ஜுன்ஜுன்வாலா பணியாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது
ஆனால், இந்த முதலீட்டுக்கான பணத்தை அவரது தந்தை ஜுன்ஜுன்வாலா கொடுக்கவில்லை. மேலும், தனது நண்பர்களிடமிருந்தும், அல்லது யாரிடமும் கடன் வாங்கக் கூடாது என்றும் தடை விதித்திருந்தார். இதனால், தான் சேமித்து வைத்திருந்த 5000 ரூபாயை வைத்து முதன் முதலில் 1985ல் பங்குச்சந்தை உலகுக்குள் கால் பதித்தார். அது நாளடைவில் 11,000 கோடியாக உயர்ந்தது.
இந்தியாவின் வாரன் பஃபெட், ஆரக்கிள் ஆஃப் தலால் ஸ்ட்ரீட், பிக் புல் ஆஃப் இந்தியன் மார்கேட் என்ற பட்டப்பெயர்களை ராகேஷ் தனது கைதேர்ந்த முதலீட்டு யுக்திகளால் சம்பாதித்திருந்தார். பட்டய கணக்காளராக இருந்தாலும், அவரது கவனமும் ஆர்வமும் பங்குச்சந்தை முதலீட்டின் மேல் இருந்தபடியால், மும்பையின் தலால் ஸ்ட்ரீட்டை தேர்வு செய்திருந்தார் ஜுன்ஜுன்வாலா.
ஹங்காமா மீடியா, ஆப்டெக் ஆகிய நிறுவனங்களின் தலைவரான இவர் வைஸ்ராய் ஹோட்டல்ஸ், கான்கார்ட் பயோடெக், ப்ரோவோக் இந்தியா மற்றும் ஜியோஜித் பைனான்சியல் சர்வீசஸ் போன்ற நிறுவனங்களின் இயக்குநர்கள் குழுவிலிருந்தார்.
1986ஆம் ஆண்டு, டாடா டீ நிறுவனத்தின் 5000 பங்குகளை 43 ரூபாய்க்கு வாங்கியபோது, ஜுன்ஜுன்வாலா தனது முதல் பெரிய லாபத்தை கண்டார். இந்த பங்கு மூன்றே மாதங்களில் 143ரூபாய்க்கு உயர, மூன்று வருடங்களில் ஜுன்ஜுன்வாலா 25லட்சம் வரை சம்பாத்திருந்தார். இதை தவிர சேஷ் கோவா நிறுவனத்திலும் ராகேஷ் ஜுன்ஜுன்வாலா முதலீடு செய்திருந்தார். இவரது முதலீட்டிலேயே மிகவும் லாபகரமான முதலீடு என்பது டைட்டன் நிறுவனப் பங்கில் செய்த முதலீடு தான்
ஜுன்ஜுன்வாலா பங்குச் சந்தையில் நுழைந்தபோது, சென்செக்ஸ் 150 புள்ளிகளிலிருந்தது.
அவரது பங்கு வர்த்தக நிறுவனமான Rare Enterprises நிறுவனத்தின் பெயரை, அவரது பெயரின் முதல் இரண்டு எழுத்துகளை கொண்டும், அவரது மனைவி ரேகாவின் பெயரின் முதல் இரண்டு எழுத்துகளை கொண்டும் நிறுவினார். ராகேஷின் மனைவி ரேகாவும் பங்கு சந்தை முதலீட்டாளர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஸ்டார் ஹெல்த், டைட்டன், ரேலீஸ் இந்தியா, எஸ்கார்ட்ஸ், கனரா வங்கி, இந்தியன் ஹோட்டல்ஸ் கம்பெனி, அக்ரோ டெக் ஃபுட்ஸ், நசாரா டெக்னாலஜிஸ், டாடா மோட்டார்ஸ் போன்ற நிறுவனங்கள் இவரது போர்ட்ஃபோலியோ முதலீடுகள்.
ஃபோர்ப்ஸ் நிறுவனத்தின் அறிக்கைப்படி இன்றைய தேதியில் ராகேஷ் ஜுன்ஜுன்வாலாவின் சொத்து மதிப்பு 5.8 பில்லியன் டாலர்கள்.
ராகேஷின் மரணம் ஒரு சகாப்தத்தின் முடிவு என நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust