ஆசியாவின் மிகப் பெரிய இரு பணக்காரர்கள், இந்தியப் பார்வையாளர்களுக்காக மல்லுக்கட்டக் களமிறங்க உள்ளனர். இந்த கரடுமுரடான போரில், நெட்ஃப்ளிக்ஸ், அமெசான், சோனி வரை பல வெளிநாட்டுப் பெருந்தலைகள் கூட அடி வாங்கலாம் என சந்தை நிபுணர்கள் ஆரூடம் கூறுகின்றனர். அப்படி இவர்கள் மோதப் போகும் களம் எது? யார் எதில் முதலீடு செய்ய உள்ளார்கள்? வாருங்கள் பார்க்கலாம்.
கெளதம் அதானி மற்றும் முகேஷ் அம்பானி ஆகிய இருவரும் முறையே 122 பில்லியன் டாலர் மற்றும் 103 பில்லியன் டாலர் சொத்து மதிப்போடு முதல் ஆசியாவின் முதல் இரு பெரும் பணக்காரர்களாக வலம் வந்து கொண்டிருக்கின்றனர்.
இப்போது இந்த இருபெருந்தலைகளும், இந்திய ஊடகச் சந்தையில் அழுத்தமாக கால்பதிக்க உள்ளனர் என்பது தான் ஊடகத் துறையில் உள்ள நிறுவனங்களின் பெரும் அச்சமாக உள்ளது.
ஏற்கனவே முகேஷ் அம்பானி நெட்வொர்க் 18 என்கிற நிறுவனத்தை வாங்கியிருக்கிறார். அதே போல வயாகாம் 18 என்கிற ஊடக நிறுவனத்திலும் 51 சதவீதம் பங்குதாரராக இருக்கிறது நெட்வொர்க் 18 குழு. தற்போது அந்த வயாகாம் 18 நிறுவனத்தில், அமெரிக்க ஊடக ஜாம்பவான் ருபர்ட் மர்டாக்கின் மகன் ஜேம்ஸ் மர்டாக் முதலீடு செய்ய உள்ளார்.
ஜேம்ஸின் ஆதரவு பெற்ற போதி ட்ரீ சிஸ்டம்ஸ் என்கிற நிறுவனம், வயாகாம் 18 நிறுவனத்தில் 13,500 கோடி ரூபாயை முதலீடு செய்ய உள்ளது.
மறுபக்கம் அதானி எண்டர்பிரைசஸ் நிறுவனம், தனியே ஒரு ஊடக நிறுவனத்தைத் துணை நிறுவனமாக நிறுவியுள்ளதாகச் செய்தி வெளியிட்டுள்ளது. இந்திய ஊடகச் சந்தையைக் கைப்பற்றுவதே தங்கள் நோக்கம் எனவும் குறிப்பிட்டுள்ளது அதானி குழுமம்.
ஒட்டுமொத்த ஊடகத் துறையைப் பொறுத்த வரை, இந்தியா போன்ற பன்மொழி கொண்ட நாட்டில் பிராந்திய மொழிகளின் திரைப்படத்துறைகள் வலுவாக இருப்பது, வளர்ந்து வரும் நடுத்தர மக்கள் எண்ணிக்கை, அதிவேகமாகப் பரவி வரும் இணைய வசதி போன்ற சாதக அம்சங்கள் இங்குக் குறிப்பிடத்தக்கது.
அதே நேரத்தில், வியாபார ரீதியில் பார்த்தால் இந்தியா ஒரு கடினமான சந்தை என்பதையும் மறுப்பதற்கு இல்லை. நெட்ஃப்ளிக்ஸ் போன்ற சந்தாவை அடிப்படையாகக் கொண்டு செயல்படும் மிகப் பெரிய நிறுவனங்களே, புதிய சந்தாதாரர்களைச் சேர்க்க முடியாமல் தடுமாறுவதையும் பார்க்க முடிகிறது. அதற்குச் சமீபத்தில் நெட்ஃப்ளிக்ஸ் நிறுவனம் தன் சந்தாவைக் குறைத்ததே நல்ல சாட்சி.
சீனாவைத் தவிர்த்து, இந்தியா தான் ஊடகத் துறையில் முழுமையாக வளரக் கூடிய, அதிக வளர்ச்சி வாய்ப்புக்குச் சாத்தியமுள்ள சந்தை என மீடியா பார்ட்னர் ஏஷியா என்கிற அமைப்பின் செயல் இயக்குநர் விவேக் குடோ கூறியுள்ளார்.
முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனம் ஏற்கனவே நெட்வொர்க் 18 மூலம் இந்திய ஊடகத் துறையில் அழுத்தமாகக் கால்பதித்து தன் தடத்தை விரிவாக்கிக் கொண்டிருக்கிறது.
ஆனால் அதானி குழுமம் தற்போது தான் இந்திய ஊடகத் துறைக்குள் நுழையத் தொடங்கியுள்ளது. சமீபத்தில் ப்ளூம்பெர்க் நிறுவனத்தின் இந்திய கூட்டாளியாக இருக்கும் குவின்டில்லியனில் ஒரு கணிசமான பங்கை வாங்க அதானி மீடியா வெஞ்சர்ஸ் நிறுவனம் சம்மதித்தது நினைவுகூரத்தக்கது.
போதி ட்ரீ நிறுவனத்திலிருந்து முதலீடு செய்யப்படும் 1.8 பில்லியன் டாலர் + ரிலையன்ஸ் குழுமத்தின் 216 மில்லியன் டாலர் என அனைத்தையும் சேர்த்து, வயாகாம் 18 நிறுவனம், ஐபிஎல் போட்டியை ஒளிபரப்பும் உரிமத்தில் டிஸ்னி, அமேசான், சோனி ஆகிய நிறுவனங்களுக்கு மிகக் கடுமையான சவாலைக் கொடுக்க உள்ளது. இது குறித்த விஷய மறிந்தவர்கள், ஐபிஎல் ஒளிபரப்பு ஏலம் சுமார் 5 பில்லியன் டாலர் வரை செல்லலாம் எனக் கூறியுள்ளனர்.
கடந்த ஆண்டு ஐபிஎல் போட்டிகள் சுமார் 38 கோடி பார்வையாளர்களை ஈர்த்தது. எந்த நிறுவனம் ஐபிஎல் போட்டிகளை ஒளிபரப்பும் உரிமத்தைப் பெற்றாலும், அந்த நிறுவனம் அதிக போட்டி நிறைந்த இந்தியச் சந்தையில் பல புதிய வாடிக்கையாளர்களைப் பெறும் என எதிர்பார்க்கலாம்.
கடந்த 2019ஆம் ஆண்டு, இந்தியாவின் பிரபல ஓடிடி தளமான ஹாட் ஸ்டாரை வாங்கியது டிஸ்னி. தற்போது வரை ஸ்டார் குழுமம் தான் ஐபிஎல் போட்டிகளை ஒளிபரப்பி வருகிறது. கிரிக்கெட் ரசிகர்களில் பலரும் ஐபிஎல் போட்டிகளை ஓடிடி தளத்தில் பார்க்க விரும்பினால் அவர்கள் டிஸ்னி ஹாட் ஸ்டார் தளத்தைத் தான் அதிகம் பயன்படுத்துகிறார்கள் என்பதை வேறு தனியாகச் சொல்ல வேண்டுமா என்ன?
இந்த போட்டியில் நெட்ஃப்ளிக்ஸ், சோனி, அமேசான் வெல்வார்களா, பில்லியனர் பட்டியலில் அம்பானியை பின்னுக்குத் தள்ளிய கெளதம் அதானி, இந்த போட்டியிலும் வெல்வாரா? காலம் தான் பதில் சொல்ல வேண்டும்.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com