beast Review Twitter
சினிமா

Beast Movie Review : ஸ்கிரீனில் மிரட்டும் விஜய் - பாஸா, ஃபெயிலா?

NewsSense Editorial Team

ஹலமதி ஹபிபோ, ஜாலியோ ஜிம்கானா, டீஸர், டிரெய்லர் என பிரமோஷனில் ட்ரெண்டிங்கிலிருந்த பீஸ்ட், பெரிய எதிர்பார்ப்புகளுக்கிடையே இன்று திரைக்கு வந்தது.

விஜயின் மாஸ், நெல்சனின் டார்க் காமெடி ஃபிளேவர் காம்போவில் ஒரு ஃபேமலி என்டர்டெய்னாராக இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. அந்த எதிர்பார்ப்பை பூர்த்தி செய்திருக்கிறாரா இந்த ’பீ’ஸ்ட்’?

இந்திய உளவுப் பிரிவான RAW-ன் முன்னாள் உளவாளி விஜய். சென்னையின் மால் ஒன்றை பயங்கரவாதிகள் ஹைஜாக் செய்யும்போது, கூட்டத்தோடு விஜயும் சிக்கிக் கொள்கிறார். மாலுக்குள் இருப்பவர்களின் உயிர்களுக்கு பணையமாக, இந்திய சிறையிலிருக்கும் பாகிஸ்தான் தீவிரவாதியின் விடுதலையைக் கோருகிறது தீவிரவாதிகள் தரப்பு.

இந்திய உள்துறை அமைச்சரின் மனைவியும் மகளும் மாலில் சிக்கிக் கொள்கின்றனர். அடுத்த பிரதமர் யார் என்ற அரசியல் கலரும் சேர்கிறது. மக்களை எப்படி காப்பாற்றுகிறார், தீவிரவாதிகளை என்ன செய்கிறார், பாகிஸ்தான் தீவிரவாதியை விடுதலை செய்தார்களா என்பதுதான் கதை!

Beast FDFS

டிரெய்லர் வெளியானபோது, இது ” யோகிபாபுவின் கூர்கா படமாச்சே” என பேசப்பட்டது. ஆனால், படம் வந்த பிறகுதான் தெரிகிறது. கூர்காவோடு, துப்பாக்கியும் கதையில் கலந்திருக்கிறது. ஆனால், துப்பாக்கியில் இருந்தது போல சுவாரஸ்யமான காட்சிகளோ, டீடெய்லிங்கோ சொல்லிக் கொள்ளும் அளவுக்கு எதுவும் இல்லை. தட்டையாகவும், விறுவிறுப்பு இல்லாமலும் செல்கிறது திரைக்கதை.

விஜய்யின் Screen Presence அட்டகாசம். ஒவ்வொரு படத்துக்கும் மெருகேரிக்கொண்டே இருக்கிறது அவரது ஸ்மார்ட்னெஸ். ரசிகர்கள் விரும்பும்படி மாஸான ஷாட்களில் ஸ்டைலிஷாக அசத்துகிறார் விஜய்.

விஜய்க்கு அடுத்தபடியாக கவனம் ஈர்த்திருக்கிறார் இயக்குநர் செல்வராகவன். முக்கியமான பொறுப்பிலிருக்கும், ஒரு டேக் இட் ஈஸி கேரக்டரில் குட்மார்க்ஸ் வாங்குகியிருக்கிறார்.

படத்தில் அடுத்த ஹைலைட் அனிருத்தின் இசை. பிஜிஎம், காட்சிகளை சற்று தூக்கிக் கொடுத்திருக்கிறது. ஹலமதி ஹபிபோ பாடல் திணிக்கப்பட்டிருந்தாலும், ரசிகர்கள் கொண்டாட்டத்துக்கு சரியான தீணி. படம் தொடங்கி 15 நிமிடங்களுக்குள் ஹீரோ எண்ட்ரி, பாடல், காதல் என அனைத்தும் முடிந்து விடுகிறது. அப்போது அடங்கியது ரசிகர்களின் கொண்டாட்டம். அதன்பிறகு ஒரு சில டைலாக்குகள் மற்றும் ஷாட்களில் மட்டுமே ரசிகர்கள் கொண்டாடினர். அந்த Fanboy Moment-ஐ எதிர்பார்த்த ரசிகர்களுக்கு சற்று ஏமாற்றமே.

Vijay, Nelson, aniruth

திரைக்கதையில் உள்ள நெருடல்கள், படத்தின் போக்கை சற்று சளிப்படையச் செய்கிறது. ஹீரோ தீவிரவாதிகளை ஒவ்வொருவராக வீழ்த்துகிறார். மறைகிறார். மீண்டும் வீழ்த்துகிறார். மறைகிறார். ஆனால், இதையெல்லாம் எப்படி செய்கிறார் என்ற இடத்தில் சுவாரஸ்யம் குறைகிறது.

வாவ் என்று சொல்லும்படி எந்த காட்சியும் மனதில் நிற்கவில்லை. ஸ்டண்ட் காட்சிகள் கவரும் வகையிலிருந்தாலும், தொடக்கத்திலிருந்து எதிரிகள் கூட்டமாக சுட்டுக் கொண்டே இருக்கிறார்கள். ஒரு குண்டு கூட ஹீரோ மீது படாமல் அசராமல் நிற்கிறார். இன்னும் எத்தனை வருடங்களுக்குத்தான் தமிழ் சினிமா இயக்குநர்கள் இந்த காட்சிகளை மக்கள் நம்ப வேண்டும் என நினைப்பார்கள் எனத் தெரியவில்லை.

Money Heist போல முகமூடியெல்லாம் போட்டு டெரர் லுக்குடன் பில்ட் அப் கொடுக்கப்படும் தீவிரவாதிகளின் தலைவனின் ரியல் முகம் வெளியாகும்போது, ” நீயெல்லாம் வில்லனா” என்று எண்ணும் அளவுக்கு வில்லனுக்கான பிம்பம் உடைகிறது.

நெல்சனின் டாக்டர் திரைப்படம், லாஜிக்கல் ஓட்டைகள் கொண்டிருந்தாலும் மக்களை வயிறு குளுங்க சிரிக்க வைத்தது. கொரோனா 2-ம் அலைக்குப் பிறகு மக்கள் பெரியதொரு ஸ்டிரெஸ் பஸ்டராக அந்தப் படத்தைக் கொண்டாடினர். அந்த எதிர்பார்ப்பு, பீஸ்டில் ஏகத்துக்கும் இருந்தது. ஆனால், விடிவி கணேஷின் பகுதிகளைத் தவிர மற்றவர்களின் காமெடி போர்ஷன் வரும்போது தியேட்டரில் அமைதிதான் நிலவியது. நெல்சனின் டார்க் காமெடி பீஸ்டில் பெரிய அளவில் எடுபடவில்லை என்றே கூறமுடியும்.

Beast

டார்க் ஹுயூமர் சப்ஜெக்ட் என்ற பெயரில் பாலியல் வன்கொடுமையை கோலமாவு கோகிலாவிலும், ஆட்கடத்தலை டாக்டரிலும் சாதாரணமாக டீல் செய்திருப்பார் நெல்சன். அவை விமர்சனத்துக்குள்ளாகின.

அந்த வகையில் தமிழ் சினிமாவின் தொன்று தொட்ட கிளீஷேக்களில் ஒன்றான, இஸ்லாமியர்களைத் தீவிரவாதிகளாகவே சித்தரிக்கும் முயற்சி பீஸ்டிலும் நடந்திருக்கிறது. அதுவும் பாகிஸ்தான், காஷ்மீர், ஆஃப்கானிஸ்தான், தீவிரவாத தலைவரின் விடுதலைக்கான நிபந்தனை என அதே பழைய தேய்ந்த டேப், இன்னொரு முறை பலமாக தேய்க்கப்பட்டிருக்கிறது.

இஸ்லாமிய வெறுப்பு பிரசாரம் அதிகரித்திருக்கும் காலத்தில், அரசியல் பேசுகிறேன் என்ற பெயரில், மீண்டும் ஒரு தவறுதான் பீஸ்டில் நடந்திருக்கிறது. இஸ்லாமியர்களை நல்லவர்களாகவும் காட்டுகிறோம் என்ற பெயரில் சில இடங்களில் காட்டி தாங்கள் நடுநிலையாக படமெடுத்திருக்கிறோம் என காட்ட முயற்சி செய்திருக்கின்றனர்.

Beast

சீரியஸான கதைக்களம். அதில் வரும் சீரியஸான காட்சிகளில், காமெடி என்ற பெயரில் கதையின் கிரிப்பை நீர்த்துப் போகச் செய்திருக்கின்றனர்.

படம் எடுக்கப்பட்ட மால் அளவுக்கு பெரிய ஸ்பேஸ் இருந்தும், எந்தவித உணர்ச்சிகளோ, சுவாரஸ்யங்களோ, டீடெய்லிங்கோ இல்லாதபடி திரைக்கதை அமைத்திருக்கிறார். இயக்குநர் நெல்சன். ஒரு நேர்காணலில் நெல்சன் இப்படி சென்னார், “ நான் எடுக்குற படம் பாஸ் மார்க் வாங்க எவ்வளவு உழைப்பு தேவையோ, அவ்வளவுதான் effort போடுவேன். அதுவே போதும்” என்பார். அதைப் போலவே பாஸ் மார்க்குக்கு மட்டுமே படமெடுத்திருக்கிறார். இன்னும் கொஞ்சம் மெனக்கிட்டிருக்கலாம்!

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?