Bhavnana

 

Twitter

சினிமா

நடிகை பாவனா: பாலியல் வன்கொடுமை, நிலைகுலைவு, போராட்டம், வெற்றி - ஒரு நம்பிக்கை கதை

பிரபல தென்னிந்திய நடிகை பாவனா மேனன் கேரளாவைச் சேர்ந்தவர். தமிழ் திரைப்படங்களிலும் நடித்திருக்கிறார்.இந்த 5 ஆண்டுகளில் அவர் அடைந்த பாதிப்பிலிருந்து மீண்டு வந்த கடினமான பயணத்தை பகிர்கிறார்.

Govind

பிரபல தென்னிந்திய நடிகை பாவனா மேனன் கேரளாவைச் சேர்ந்தவர். தமிழ் திரைப்படங்களிலும் நடித்திருக்கிறார். கேரளாவில் 2017 ஆம் ஆண்டில் அவர் கடத்தப்பட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளான கதையை ஐந்து ஆண்டுகள் கழித்து மனந்திறந்து பேசுகிறார். இந்த 5 ஆண்டுகளில் அவர் அடைந்த பாதிப்பிலிருந்து மீண்டு வந்த கடினமான பயணத்தை பகிர்கிறார். ஒரு பெண்ணாக அவர் அடைந்த துன்பம் என்பது அவரது பிரபலத்தால் இன்னும் அதிகரிக்கப்பட்டது. அதை எப்படி கடந்து வந்தார்?

Dileep

5 ஆண்டுகளுக்கு முன்பு என்ன நடந்தது?

பாவனா 80க்கும் மேற்பட்ட தென்னிந்திய திரைப் படங்களில் நடித்திருக்கிறார். பல முக்கியமான திரைப்பட விருதுகளையும் பெற்றிருக்கிறார். பிப்ரவரி 2017 இல் கேரளாவின் திருச்சூரில் இருந்து கொச்சிக்கு பயணம் செய்து கொண்டிருந்த போது ஒரு கும்பலால் தாக்கப்பட்டார்.

இந்த தாக்குதலுக்கு பின்னால் கேரளாவின் பிரபலமான நடிகர் திலீப் குற்றம் சாட்டப்பட்டது பத்திரிகைகளின் தலைப்புச் செய்தியானது. தன் மீதான குற்றச்சாட்டை திலீப் மறுத்தாலும் அவர் கைது செய்யப்பட்டு மூன்று மாதங்களுக்குப் பிறகு பிணையில் வந்தார். விசாரணை நீதிமன்றத்தில் இந்த வழக்கு நடந்து வந்தது.

“ நான் வேடிக்கையும் குறும்புமாக இருக்கும் ஒரு பெண்ணாக இருந்தேன். ஆனால் இந்த குற்றம் என் வாழ்க்கையை தலைகீழாக புரட்டிப் போட்டுவிட்டது. சமூக ஊடகங்களில் நான் புன்னகைத்துக் கொண்டிருக்கும் புகைப்படங்களை மக்கள் பார்ப்பார்கள். நானோ ஒரு நரக வாழ்க்கைச் சென்று திரும்பியிருக்கிறேன்" என்கிறார் தற்போது பெங்களூரூவில் வசிக்கும் பாவனா.

2020 ஆம் ஆண்டு வழக்கு விசாரணை துவங்கியது. நீதிமன்றத்தில் 15 நாட்கள் சாட்சியமளித்த பிறகு இந்த சம்பவத்தை மறக்க விரும்பியதாக கூறுகிறார் பாவனா. ஆனால் அப்படி மறக்க முடியவில்லை. இந்த சம்பவத்தைப் பற்றியும் வழக்கின் சிறு விவரங்களைக்கூட விடாமல் நினைத்துக் கொண்டிருந்ததில் இருந்தும் விடுபட முடியவில்லை என்கிறார் பாவனா.

அந்த சம்பவம் பற்றி விவரிக்கிறார். ஒரு படத்தின் டப்பிங் வேலைக்காக அவர் கொச்சிக்கு சென்று கொண்டிருந்த போதுதான் பாவனா தாக்கப்பட்டார். அவரைத் தாக்கிய கும்பல் அதை வீடியோவாக பதிவு செய்தது. அதை வைத்து அவர்கள் தன்னை அச்சுறுத்த நினைத்திருக்கலாம் என்கிறார் பாவனா.

Bhavana

நிலைகுலைந்து போன பாவனா

பாவனாவை விட நடிகர் திலீப் கேரளாவில் மிகவும் பிரபலமான நடிகர். எனவே இந்த வழக்கு இயல்பாகவே ஊடக வெளிச்சத்தில் அன்றாடம் தலைப்புச் செய்தியாக அடிபட்டது. தொலைக்காட்சி விவாதங்கள் தினசரி நடந்தன. அதில் பேசியவர்களில் பாவனாவுக்கு ஆதரவானவர்கள் மட்டுமல்ல எதிராக பேசியவர்களும் கணிசமாக இருந்தனர்.

பாவனா ஏன் காலை ஏழு மணிக்கு பயணம் செய்தார்? ஒரு பெண் இப்படி போகலாமா? என்று அவரது ஒழுக்கம் சமூக ஊடகங்களில் கேள்வி கேட்கப்பட்டு அவமானப்படுத்தப் பட்டது. பல வகைகளில் அவர் இழிவுபடுத்தப் பட்டார். இந்த வழக்கே பாவனா அரங்கேற்றிய செயற்கையான நாடகம், உண்மையல்ல என்றும் பிரச்சாரம் நடந்தது.

இது பாவனாவின் மனதை சுக்கு நூறாக உடைத்து விட்டது. அவர் ஆழமாக புண்படுத்தப் பட்டார். தனது நெஞ்சு வெடிப்பது போல கதற விரும்பினேன் என்கிறார் பாவனா. அவரது கண்ணியம் சுயமரியாதை பறிபோனதோடு சற்றும் இரக்கமின்றி அவர் அவமானப்படுத்தப்பட்டார்.

சட்டப்படி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகும் பெண்ணின் படமோ, பெயரோ இதர விவரங்களோ எதையும் ஊடகங்கள் வெளியிடக் கூடாது. முதலில் அவர் ஒரு காரில் ஒரு கும்பலால் கடத்தப்பட்டார் என்று செய்தி வெளியான போது பாவனாவின் பெயரும், படமும் ஊடகங்களில் வெளிவந்தன. பின்னர் இந்த சம்பவம் பாலியல் வன்கொடுமை என்று தெரிந்த உடன் ஊடகங்கள் பெயரையும் படங்களையும் மாற்றினார்கள். ஆனால் அதனால் என்ன பயன்? உலகத்திற்கே அந்தப் பெண் பிரபல நடிகை பாவனாதான் என்பது தெரிந்து விட்டது.

Bhavana

போராடத் துணிந்த பாவனா

இந்தக் கொடூரமான சம்பவம் நடந்து ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு இந்த ஆண்டு ஜனவரியில்தான் பாவனா இன்ஸ்டாகிராமில் ஒரு பதிவு போட்டார். அதில் தான் உயிர் பிழைத்து வந்தேன் என்று முதன்முறையாகக் குறிப்பிட்டார். இந்தப் பயணம் அத்தனை எளிதாக இருக்கவில்லை. பாதிப்பிலிருந்து மீண்டு வந்தது ஒரு மறு ஜென்மம் எடுத்தது போல என்று எழுதினார். அந்த சம்பவத்தை வைத்து அவரது பெயரும், ஆளுமையும் தாக்குதலுக்குள்ளானதை விவரிக்கிறார்.

தான் குற்றம் செய்தவள் இல்லை. ஆனாலும் தன்னை பேசாமல் முடக்கவும், அவமானப்படுத்தியும், தனிமைப் படுத்தவும் பல முயற்சிகள் நடந்தன என்கிறார். இந்த இக்கட்டான தருணங்களில் என் குரலுக்கு வலிமை சேர்க்க சிலர் முன்வந்தார்கள். இப்போது எனக்காக பலர் பேசுகிறார்கள். இப்போது நீதிக்கான இந்தப் போராட்டத்தில் தான் தனியாக இல்லை என்கிறார் பாவனா.

அவரது இன்ஸ்டாகிராம் பதிவு பிரபல மலையாள நடிகர்களான மோகன்லால், மம்முட்டி மற்றும் பலரால் பகிரப்பட்டது. பாலிவுட்டில் இருக்கும் நடிகைகள் அவருக்கு ஆதரவாக பேசினார்கள்.

இந்தப் போராட்டத்தில் தான் பிரபலமாக இருப்பது, கணவர் மற்றும் குடும்பத்தாரின் முழு ஆதரவு, வழக்கை நடத்துவதற்கான நிதி வசதி அனைத்தும் இருப்பது தனது அதிர்ஷம் என்கிறார் பாவனா. ஆனால் கடந்த ஐந்து ஆண்டுகள் அப்படி எளிதாக சென்று விடவில்லை.

"பல முறை இந்தப் போராட்டத்தை விட்டுவிடலாமா என்று நினைத்திருக்கிறேன். எனது நண்பர்கள், குடும்பத்தினர் மற்றும் என் வழக்கறிஞர்களிடம் கூட அப்படிக் கேட்டேன். இந்த நாட்டை விட்டு வெளியேறி எங்காவது ஒரு புதிய வாழ்க்கை துவங்கலாமா என்று கூட யோசித்தேன். ஏன், பலமுறை தற்கொலை செய்து கொள்ளும் எண்ணத்திலும் இருந்தேன்" என்கிறார் பாவனா.

அப்படி என்றால் இந்தத் தடைகளை கடந்து பாவனா எப்படி போராட்டத்தைத் தொடர்ந்தார்? எது தூண்டியது?

“ஒவ்வொரு முறையும் தான் பின்வாங்குவதை யோசிக்கும் போது அடுத்த நாள் போராடத்தான் வேண்டும் என என் எண்ணத்தை மாற்றிக் கொள்வேன். ஏனென்றால் இது எனது கண்ணியம், சுயமரியாதை சம்பந்தப்பட்டது. நான் குற்றமற்றவள், நான் எந்தத் தவறும் செய்வில்லை என்று நிரூபிக்க வேண்டும் என்ற வைராக்கியத்தை உருவாக்கிக் கொண்டேன்" என்று முடிக்கிறார் பாவனா.

ஒரு பிரபல நடிகையாக இருந்தாலும் பாவனா அடைந்த துன்பங்கள் சொல்லி மாளாது. தடைகளைத் தாண்டி நீதிக்கான போராட்டத்தில் அவர் வெற்றி பெறுவது என்பது பாலியல் வன்கொடுமைக்கு எதிராக போராடும் ஆயிரக்கணக்கான பெண்களுக்கு ஒரு உத்வேகமாக இருக்கும் என்று பிபிசியிடம் பேசிய அவர் தெரிவித்துள்ளார்.

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?