kabali Twitter
சினிமா

தலித் வரலாறு மாதம் : ஒடுக்கப்பட்ட மக்களைப் பேசும் தமிழ் திரைப்படங்கள்!

Antony Ajay R

இந்தியாவில் தலித் வரலாற்று மாதமாக ஏப்ரல் மாதம் அனுசரிக்கப்பட்டு வருகிறது. ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலைக்காகப் போராடிய தலைவர்களை நினைவு கூறுவது, தலித்திய கலைஞர்களைக் கொண்டாடுவது எனப் பல தரப்பட்ட கொண்டாட்டங்களை மேற்கொள்கின்றனர்.

இந்தியாவில் மொத்தம் உள்ள பட்டியலின மக்கள் தொகையில் 7.2% தமிழகத்தில் உள்ளனர். எனவே தமிழகத்தில் மற்ற மாநிலங்களை விட அதிகமாக ஒடுக்கப்பட்ட மக்களுக்கான முன்னெடுப்புகள் இருக்க வேண்டியது அவசியம். ஆனால் சாதிய கட்டுமானங்களின் இறுகிய பிடியில் நம் மாநிலம் சிக்கியிருப்பதை நாம் கண்கூடாகப் பார்க்கிறோம்.

ஒடுக்கப்பட்ட மக்களுக்கான விடுதலையைப் பேசுவதில் முக்கிய பங்கு வகிப்பது அனைத்து மக்களுக்கும் சாதிய தீமைகள் மற்றும் தலித் மக்கள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவது தான். அந்த பணியில் தமிழ் சினிமாவும் ஈடுபட்டு வருகிறது.

‘பாரதி கண்ணம்மா’, ‘பேராண்மை’, ‘ஜீவா’, ‘மாவீரன் கிட்டு’, ‘உறியடி’, ‘பரியேறும் பெருமாள்’, ‘மனுசங்கடா’, ‘அசுரன்’ என ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையைப் பேசும் படங்கள் ஏராளம்.

காலா

கடந்த சில ஆண்டுகளில் இயக்குநர் பா.ரஞ்சித்தின் வருகை தமிழ் சினிமாவில் ஒடுக்கப்பட்ட மக்கள் குறித்த திரைப்படங்களுக்கான புதிய கதவுகளைத் திறந்து விட்டிருக்கிறது. அட்டகத்தி முதல் சார்பட்டா பரம்பரை வரை அவரின் அனைத்துப் படங்களுமே அரசியல் பேசுகின்றன.

“காந்தி சட்டைய கழட்டியதுக்கும் அம்பேத்கர் கோட் போட்டதுக்குப் பின்னாடி அரசியல் இருக்கு” என தமிழின் முன்னணி நடிகரைப் பேச வைத்து தலித் சினிமாவை கடைக்கோடி மக்களுக்கும் எடுத்துச் சென்றார் ரஞ்சித்.

காலா படத்தின் மூலம் உரிமைகளை உரக்கக் கோரினார். இயக்கம் மட்டுமின்றி தயாரிப்பிலும் புதிய பாதையை உருவாக்கினார் ரஞ்சித். குடிசைக்குள் கதறி எறிந்த நான் யார்? தேர் ஏறாத சாமி இங்கு நான் யார்? உன் கை படாமல் தண்ணீர் பருகும் நான் யார்? ஊர் சுவர் கட்டி தூரம் வைக்க நான் யார்? மலக்குழிக்குள் மூச்சை அடைக்கும் நான் யார்? என ஒடுக்கப்பட்ட மக்கள் சார்பாகக் கேள்விகளை ஓங்கிக் கேட்டது அவரது முதல் தயாரிப்பான “பரியேரும் பெருமாள்” திரைப்படம். அதிலிருந்து மாரி செல்வராஜ் எனும் இயக்குநர் உருவானார்.

ரஞ்சித் மற்றும் மாரி செல்வராஜ்

இரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு, ரைட்டர், குதிரை வால் என அவரது நீலம் தயாரிப்பு நிறுவனம் ஆகச்சிறந்த படைப்புகளை உருவாக்கி வருகிறது.

சினிமா இயக்குநர் என்பதைத் தாண்டி தலித் சமூக விடுதலைக்காகக் கலை, இலக்கியம், பண்பாட்டு ரீதியிலான செயல்களில் ஈடுபடுகிறார் ரஞ்சித். நீலம் பண்பாட்டு மையம், கேஸ்ட்லெஸ் கலெக்டிவ் என அவரது முயற்சிகளை அடுக்கிக்கொண்டு போகலாம்.

தலித் வரலாறு மாதமான இந்த மாதத்தில் வானம் கலைத் திருவிழாவை ஏற்பாடு செய்து சிறப்பாக நடத்தி வருகிறார் பா.ரஞ்சித்.

பரியேரும் பெருமாள் திரைப்படத்தை இயக்கி திரைப்பட ரசிகர்கள் மத்தியில் அங்கீகாரம் பெற்ற மாரி செல்வராஜ் தொடர்ந்து கர்ணன் திரைப்படத்தை இயக்கினார். கர்ணனில் “நாங்க நிமிந்துட்டோம்… இனி குனிய மாட்டோம்.. நாங்க சன்டை போட போறோம்” என்ற வசனங்களின் மூலம் ஒடுக்கப்பட்ட மக்களின் எழுச்சியைப் பேசினார் மாரி செல்வராஜ்.

jai bhim

பெரிய நட்சத்திரங்கள், கலைத்தன்மை குறையாத படைப்புகள் என வளர்ந்து வரும் ஒடுக்கப்பட்ட மக்களுக்கான வணிக ரீதியிலாவும் பெரு வெற்றிகளை பெருகின்றன.

"நம்ம கிட்ட காசிருந்தா புடுங்கிக்குவானுவ, நிலமிருந்தா எடுத்துக்குவானுவ, படிப்ப மட்டும் ஒன்னும் செய்ய முடியாது, படிச்சு அதிகாரத்துக்கு வா, அதிகாரத்துக்கு வந்து அவன் உனக்கு செஞ்சத நீ யாருக்கும் நடக்கவிடாம பாத்துக்க" என அறிவுரை வழங்கும் அசுரன் வணிக வெற்றிக்கு ஒரு முக்கிய உதாரணம்.

கடந்த ஆண்டு வெளியான ஜெய் பீம் திரைப்படம் பழங்குடி மக்களின் வாழ்க்கைத் துயரை உலகறியச் செய்ததுடன் சமுகத்தில் பல உரையாடல்களை துவக்கியது. இவ்வாறு ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்வையும் வரலாற்றையும் எடுத்துரைப்பதில் தமிழ் சினிமா இன்றியமையாத பங்காற்றுகிறது.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?