valimai

 

Twitter

சினிமா

Morning News Tamil : வலிமை படக்குழு FDFS ஸ்பாட் விசிட், ஜெயலலிதா இடத்தில் ஸ்டாலின்

Antony Ajay R

வலிமை FDFS ஸ்பாட் விசிட் செய்த போனிகபூர், ஹூமா குரேஷி

வலிமை படத்தின் முதல் காட்சி இன்று காலை 4 மணிக்கு திரையிடப்பட்டது. நேற்று இரவு முதலே தியேட்டர் முன் குவிந்த அஜித் ரசிகர்கள் பட்டாசுகள் வெடித்தும், அஜித்தின் பேனருக்கு பாலாபிஷேகம் செய்தும் கொண்டாடினர்.


நேர்கொண்ட பார்வை படத்தின் வெற்றியை தொடர்ந்து எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடித்துள்ள 2-வது படம் வலிமை. இப்படத்தை மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தயாரித்துள்ளார். குடும்ப செண்டிமெண்ட் நிறைந்த அதிரடி ஆக்‌ஷன் திரைப்படமாக வலிமை தயாராகி உள்ளது. இதில் அஜித் போலீஸ் அதிகாரி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் ஹீரோயினாக காலா பட நடிகை ஹூமா குரேஷி நடித்துள்ளார்.

இப்படம் பலத்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் இன்று ரிலீசாகி உள்ளது. வலிமை படத்தை பார்க்க அதிகாலையிலேயே அஜித் ரசிகர்கள் திரையரங்குகள் நோக்கி படையெடுத்த வண்ணம் உள்ளனர். இன்று காலை 4 மணிக்கு வலிமை படத்தின் முதல் காட்சி திரையிடப்பட்டது. தியேட்டர் முன் குவிந்த அஜித் ரசிகர்கள் பட்டாசுகள் வெடித்தும், அஜித்தின் பேனருக்கு பாலாபிஷேகம் செய்தும் கொண்டாடினர்.


வலிமை படத்தின் முதல் காட்சியை ரசிகர்களோடு பார்க்க வலிமை படக்குழுவினரும் வந்துள்ளனர். சென்னையில் உள்ள ரோகினி திரையரங்கில் தயாரிப்பாளர் போனி கபூர், நடிகை ஹூமா குரேஷி, வில்லன் நடிகர் கார்த்திகேயா ஆகியோர் ரசிகர்களோடு காலை 4 மணிக்கே திரையரங்குக்கு வந்து படத்தை பார்த்தனர்.

ஜெயக்குமார்

முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் புழல் சிறைக்கு மாற்றம்

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலின்போது பல்வேறு இடங்களில் தி.மு.க.வினர் அத்துமீறி வாக்குச்சாவடிகளுக்குள் நுழைந்து கள்ள ஓட்டு போட்டதாக அ.தி.மு.க. தரப்பில் குற்றம்சாட்டப்பட்டது. ராயபுரம் பகுதியில் கள்ள ஓட்டு போட முயன்றதாக தி.மு.க. பிரமுகரை அ.தி.மு.க.வினர் பிடித்து முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் முன்னிலையில் தாக்கினர்.


தி.மு.க. பிரமுகரை தாக்கியது தொடர்பாக, முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் உள்பட 40 பேர் மீது தண்டையார்பேட்டை காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. விசாரணைக்குப் பின் ஜெயக்குமாரை காவல்துறையினர் கைது செய்தனர்.


நீதிமன்றக்காவலில் பூந்தமல்லி கிளைச்சிறையில் அடைக்கப்பட்டு இருந்த ஜெயக்குமார், தனக்கு ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனுவை ஜார்ஜ் டவுன் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதையடுத்து, பூந்தமல்லி சிறையில் இருந்து புழல் சிறைக்கு ஜெயக்குமார் மாற்றப்பட்டுள்ளார்.

MK Stalin

ஜெயலலிதாவுக்கு பின் ஸ்டாலின்!

நடந்து முடிந்த உள்ளாட்சித் தேர்தலில் தமிழ்நாட்டில் மொத்தமுள்ள 21 மாநகராட்சிகளையும் திமுக கைப்பற்றியது. சென்னை மாநகராட்சியில் மொத்தம் உள்ள 200 வார்டுகளில் திமுக 153, அதிமுக 15, திமுக கூட்டணி கட்சிகளான காங்கிரஸ் 13, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி 4, விடுதலை சிறுத்தைகள் கட்சி 4, மதிமுக 2, இந்திய கம்யூனிஸ்டு கட்சி 1, பாஜக 1, அமமுக 1, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி 1 வார்டு என தங்கள் வெற்றிகளை பதிவு செய்தன. அத்துடன் சுயேச்சை வேட்பாளர்கள் 5 இடங்களில் வெற்றி பெற்றனர்.

அதிமுகவின் கோட்டையாக இருந்த கொங்கு மண்டலத்தையும் திமுக கைப்பற்றி வரலாற்று சாதனை படைத்தது. அங்குள்ள பெரும்பாலான இடங்களில் திமுக வெற்றி பெற்றது. மொத்தம் உள்ள 138 நகராட்சிகளில் திமுக 132 இடங்களையும், அதிமுக 3 இடங்களையும், மற்ற கட்சிகள் 3 இடங்களையும் கைப்பற்றின. அதேபோல், 489 பேரூராட்சிகளில் திமுக 435 இடங்களையும், அதிமுக 15 இடங்களையும், பாஜக 5 இடங்களையும், மற்ற கட்சிகள் 25 இடங்களையும் பிடித்தன.


2011-ல் நடந்த உள்ளாட்சி தேர்தலில் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா தலைமையிலான அதிமுக, அன்று இருந்த 10 மாநகராட்சிகள் அனைத்தையும் கைப்பற்றி சாதனை படைத்தது. அப்போது, சென்னை, கோவை, மதுரை, திருச்சி, ஈரோடு, திருப்பூர், சேலம், வேலூர், திருநெல்வேலி, தூத்துக்குடி ஆகியவை மாநகராட்சிகளாக இருந்தன.

அதன் பின்னர், தமிழகத்தில் 11 மாநகராட்சிகள் கூடுதலாக உருவாக்கப்பட்டு தற்போது 21 மாநகராட்சிகள் இருக்கும் நிலையில், அனைத்து மாநகராட்சிகளையும், தற்போதைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக கைப்பற்றி சாதனை படைத்துள்ளது.


இந்நிலையில், வெற்றி பெற்ற உறுப்பினர்கள் அனைவரும் மார்ச் 2ஆம் தேதி பதவி ஏற்றுக்கவுள்ளனர். அதனைத் தொடர்ந்து மாநகராட்சி மேயர், துணை மேயர், நகராட்சி தலைவர், துணைத்தலைவர், பேரூராட்சி தலைவர், துணைத்தலைவர் ஆகிய பதவி இடங்களுக்கு மார்ச் 4ஆம் தேதி மறைமுக தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தலில் வார்டு உறுப்பினர்களாக வெற்றி பெற்றவர்கள் வாக்களிப்பார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

DOG 

மும்பையில் காணாமல் போன தெரு நாய் திரும்பி வந்ததை கொண்டாடிய மக்கள்

மும்பை: மும்பை அருகே காணாமல் போன தெரு நாய் திரும்பி வந்ததையடுத்து, அதற்கு ஆரத்தி எடுத்து வரவேற்று கொண்டாடி உள்ளனர் அப்பகுதி பொதுமக்கள்.

மும்பையின் தாதர் அருகே உள்ள நைகான் பகுதியில் விஸ்கி என்ற நாய் வசித்து வந்தது. அப்பகுதி பொதுமக்கள் விஸ்கிக்கு உணவுப்பொருட்களை வழங்கி வந்துள்ளனர். இந்நிலையில் கடந்த 8-ம் தேதி விஸ்கி காணாமல் போய் உள்ளது. இதையடுத்து, விஸ்கியை தேடும் பணியில் அப்பகுதி மக்கள் ஈடுபட்டனர். குறிப்பாக, சமூக வலைதளங்களில் விஸ்கி காணாமல் போன தகவலை தெரிவித்து கண்டுபிடித்துத் தர உதவுமாறு கோரிக்கை வைத்தனர்.

ஒரு வார தேடலுக்குப் பிறகு தெற்கு மும்பையின் வில்சன் கல்லூரி அருகே இருந்த விஸ்கியை கண்டுபிடித்து நைகான் பகுதிக்கு ஒரு டாக்சியில் அழைத்து வந்தனர். இதை அறிந்த அப்பகுதி மக்கள், விஸ்கியை ஆரத்தி எடுத்தும் இனிப்புகளை வழங்கியும் மலர்களை தூவியும் உற்சாக வரவேற்பு கொடுத்தனர். இது தொடர்பான வீடியோவை சிலர் சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்துள்ளனர். இதைப் பார்த்த ஏராளமானோர், தங்கள் பங்குக்கு லட்சக்கணக்கானோருக்கு பகிர்ந்து வருகின்றனர். இந்த வீடியோவுக்கு ஏராளமானோர் லைக் தெரிவித்து தங்கள் கருத்துகளையும் தெரிவித்து வருகின்றனர்.

Billgates

உலக நாடுகளுக்கு மலிவு விலையில் இந்தியா தடுப்பூசி..! - பில்கேட்ஸ் பாராட்டு

அமெரிக்க தலைநகர் வாஷிங்டனில் உள்ள இந்திய தூதரகம், இந்திய- அமெரிக்க சுகாதார கூட்டாண்மை குறித்து காணொலிக்காட்சி வழியாக வட்டமேஜை மாநாடு ஒன்றை நடத்தியது.


உலக நாடுகளுக்கு மலிவு விலையில் தடுப்பூசிகள் கிடைக்க, இந்திய அமெரிக்க கூட்டுறவை மேம்படுத்தும் வகையில், இரு நாடுகளின் முக்கிய பங்குதாரர்களை ஒருங்கிணைப்பதுதான் இந்த மாநாட்டின் நோக்கம் ஆகும்.


இதில் ‘மைக்ரோசாப்ட்’ நிறுவனத்தின் நிறுவனர் பில்கேட்ஸ் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் இந்தியாவின் தடுப்பூசி தயாரிப்பு திறமைகளையும், உலகுக்கு மலிவு விலையில் தடுப்பூசிகளை வழங்குவதற்கான நாட்டின் தடுப்பூசி உற்பத்தியாளர்களின் முயற்சிகளையும் பாராட்டினார்.

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?