பொன்னியின் செல்வன்  Twitter
சினிமா

பொன்னியின் செல்வன்: திரையுலகின் 70 ஆண்டு கனவு; படம் வென்றதா? காரை அக்பர் விமர்சனம்

NewsSense Editorial Team

கதை நிகழும் காலத்துக்குள் வாசகரை கடத்திவிடும் காலயந்திர வாசிப்பனுபவத்தை வழங்கும் நாவல் அமரர் கல்கி எழுதிய பொன்னியின் செல்வன். தமிழில் அதிகம் விற்பனையாகும் நாவல் எனும் சாதனையை எழுபதாண்டுகளுக்கு பிறகும் தக்கவைத்துக்கொண்டு, எம்ஜிஆர் கமலஹாசன் தொடங்கி தமிழ் திரைத்துறையின் எத்தனையோ பிரபலங்களின் மனதில் திரை காவிய கனவாய் கனன்று கொண்டிருந்த பொன்னியின் செல்வன், மணிரத்னத்தின் இயக்கத்தில் எப்படிப்பட்ட திரை அனுபவத்தைத் தருகிறது ?...

பொன்னியின் செல்வன்

நாவலின் அடிப்படை வரிசையில் காட்சிகளை எதிர்பார்ப்பதை மட்டுமல்லாமல் பாகுபலி படத்தின் நினைவுகளையும் துறந்துவிட்டு திரையரங்கத்துக்கு செல்வது முக்கியம் !

பாகுபலி திரைக்காகவே எழுதப்பட்ட ஆக்சன் கதை, "Epic action film". பொன்னியின் செல்வனோ முழு படைப்பு சுதந்திரத்துடன் எழுதப்பட்ட ஐந்து பாக நாவல். அந்த நாவலின் சாரம் கெடாமல் திரைக்குள் அடக்குவதே பெரும் சாதனை ! அதன் திரை ஆக்கத்தை "Epic period drama" வாகத்தான் வகைப்படுத்த முடியும்.

ராட்சச காட்டெருமை, ஒரே அடியில் பூமியை பிளப்பது போன்ற கிராபிக்ஸ் காட்சிகளுக்கெல்லாம் பொன்னியின் செல்வனில் இடம் கிடையாது !

ஆதித்த கரிகாலன்

ஆதித்த கரிகாலனாக விக்ரம்...

மணிரத்ன பட்டறையில் விக்ரமின் நடிப்பு ஜொலிப்பு எப்போதுமே சற்று அதிகம் தான் ! இப்படத்திலும் அப்படியே !!

குதிரையில் வாள் சுழற்றி வரும் காட்சியில் தொடங்கும் படத்தின் ஆரம்ப காட்சிகளிலேயே தன் இருப்பையும் நடிப்பையும் அழுந்த பதிவு செய்துவிடுகிறார். குதிரையில் அமர்ந்து எதிரிகளை பந்தாடியபடியே தனக்கு பின்னால் வரும் வந்தியத்தேவனை கண்டவுடன் உதிர்க்கும் பெருமை புன்னகை ஒரு சோறு பதம்.

நெஞ்சின் நினைவு ரணம் நிரந்தர சினமாக முகத்தில் நிழலாட, வேட்டைக்கு அலையும் வேங்கையின் உடல்மொழி ! தன் உள்ளக் குமுறலை வார்த்தை எரிமலையாய் நண்பனிடம் வெடிப்பதிலும், அதே கோப குமுறலை வேறுவிதமாய் குந்தவையிடம் கொட்டிவிட்டு, அவளை தன்னருகே அமரச் சொல்லி சைகை காட்டுவதிலும் நடிப்புக்களமாடியிருக்கிறார் விக்ரம்.

கார்த்தி

வந்தியத்தேவனாக கார்த்தி...

பயம் தயக்கம் என்றால் என்னவென்றே தெரியாத, துடுக்கும் துள்ளலும் நக்கலும் நிறைந்த பாத்திரத்துக்கு கன பொருத்தம் ! பிரமிப்பு, காதல், நட்பு என எந்த உணர்ச்சியையும் அவரது கண்களும் சிரிப்புமே அலட்சியமாக கடத்திவிடுகின்றன !

படை வீரர்கள் துரத்தும் போது அலட்சியமாய் மோர் அருந்துவது, நந்தினியின் தோழிகளிடம் வம்பளந்தபடி நந்தவன நீரில் முகம் கழுவது என எந்த சூழலிலும் சளைக்காதவனாக,

நந்தினியின் அழகில் உறைந்து, குந்தவையின் அழகில் குழைந்து, அருள்மொழி வர்மனின் மணிமுடியைப் பம்மி தயங்கி ஏற்றுக்கொண்டு பின்னர் ஆழ்வார்க்கடியானிடம் "கெத்து" காட்டி, கல்கியின் வந்தியத்தேவனாகவே வாழ்த்திருக்கிறார் !

பொன்னியின் செல்வன்

அருள்மொழி வர்மனாக ஜெயம் ரவி...

இடைவேளைக்கு பிறகே இன்னிங்சை ஆரம்பித்தாலும், சோழ மக்களின் உள்ளங்களைக் கொள்ளை கொண்ட கதை நாயகன் "பொன்னியின் செல்வனை" போலவே, ரசிகர்களின் உள்ளங்களையும் கொள்ளை கொண்டு விடுகிறார் ஜெயம் ரவி ! மென்மையும் வீரமும் ஒரு சேர கலந்த கதாபாத்திரத்துக்கு சரியான தேர்வு !

மேற்சொன்ன மூவரின் குதிரையேற்ற காட்சிகள் சமகால தமிழ் சினிமாவுக்கு புதிது. அந்த காட்சிகளில் இவர்களின் கடுமையான உழைப்பும் தெரிகிறது.

கல்கியின் கதாபாத்திரமாகவே மாறிய மற்றொரு நடிகர் ஜெயராம் ! வந்தியத் தேவனுடன் நாவல் நெடுகிலும் பயணிக்கும் ஆழ்வார்க்கடியான் நம்பி பாத்திரத்துக்கு இவரை தவிர வேறொரு நடிகரை கற்பனைகூட செய்ய முடியாத அளவுக்கு, குடுமி தலையும் தொப்பை வயிறுமாய் அப்படி ஒரு பொருத்தம் !

Trisha

வயதுக்கு மீறிய நிர்வாக ஞானத்துடன் இளமைக்குரிய கனவுகளும் நிறைந்த குந்தவையாக திரிஷா. உடல் மொழியிலும் பேச்சிலும் பாத்திரமறிந்து நடித்திருக்கிறார் ! வந்தியத்தேவனிடம் "தலை பத்திரம்" என அலட்சியமும் அக்கறையும் ஒரு சேர கூறிவிட்டுச் செல்லும் காட்சியில் கொள்ளை அழகு ! குளித்துவிட்டு கரையேறும் தருணத்தில், அழுது கொண்டு ஓடி வரும் வானதியை அணைத்துக்கொள்ளும் காட்சியில் தான் ஏற்ற குந்தவை பாத்திரத்தின் அறிவு முதிர்ச்சியை மிக சரியாக வெளிப்படுத்தியிருக்கிறார்.

மனதில் பூண்ட உறுதி கண்களில் மின்னி, வார்த்தைகளில் தெறிக்கும் நந்தினி ஐஸ்வர்யா ராய். சட்டென முதுகைக் காட்டி ஆபரணங்களை கழட்ட செய்து பெரிய பழுவேட்டரையரின் கோபம் தணிக்கும் காட்சியில் கவர்ச்சியாய் மின்னும் அதே கண்களில், ஆதித்த கரிகாலனிடம் மண்டியிடும் போது பரிதவிப்பு கெஞ்சல் ! அப்புறம் அதே கண்களில் பழி உணர்வின் தீப்பொறி ! கால்கள் வீசி நடக்கும் கம்பீர நடை, சுற்றி நிகழும் அனைத்தையும் எடைபோடும் பார்வையுடன் கூடிய பேச்சு என நந்தினியை மிக நன்றாகவே பிரதிபலித்திருக்கிறார் ஐஸ்வர்யா ராய் !

"அட, ஒரு வகையில் இவனது கோரிக்கையும் நியாயமானது தானே" என சற்றே பரிதாபப்படவைக்கும் மதுராந்தகராக ரகுமான். சிற்றரசர்களுக்கு நடுவே சாந்தமான கண்களுடன் கை குவித்து தயங்கி தன் ஆசையை வெளிப்படுத்தி, தாயிடம் பொரிந்து தள்ளி அசத்தியிருக்கிறார்.

உடல் தளர்ந்தாலும் மன உறுதி குன்றாத முதிர் சிங்கம் போன்ற சுந்தர சோழன் பிரகாஷ் ராஜ். சிற்றரசர்களின் வார்த்தைகள் அவரது மனதில் ஏற்படுத்தும் வலியை பிரதிபலிப்பதாய் அமைந்திருக்கும் அக்குபஞ்சர் சிகிச்சை காட்சியில் அவரது தனி முத்திரை !

மேலும், அரங்கத்தில் தீர்க்கமான பார்வையுடன் அதிகார மாற்றத்துக்குத் திட்டங்கள் தீட்டிவிட்டு அந்தப்புரத்தில் இளம் மனைவியின் அழகில் சித்தம் இழந்துவிடும் பெரிய பழுவேட்டரையர் சரத்குமார் தொடங்கி பார்வையாலேயே பயமுறுத்தும் சின்ன பழுவேட்டரையர் பார்த்திபன், அருள்மொழி வர்மனுடன் தோள் நிற்கும் விக்ரம கேசரி பிரபு என படத்தின் அத்தனை நடிகர் நடிகையரும் அவரவர் பாத்திரத்தை சிறப்புடன் செய்துள்ளார்கள்.

வந்தியத் தேவன், ஆதித்த கரிகாலன், அருள்மொழி வர்மன் ஆகிய மூன்று கதை நாயகர்களின் முக்கியத்துவத்துக்கு சற்றும் குறையாத மூன்று திரை நாயகர்கள் ஒளிப்பதிவாளர், இசையமைப்பாளர் மற்றும் கலை இயக்குநர்.

வந்தியத்தேவனுடன் ஓடி, குதிரைகளுடன் பாய்ந்து, வாள் வீச்சுகளுடன் சுழன்று பயணிக்கும் கேமரா. அரண்மனைகளின் ஒளிரும் திரைகள், வரப்போகும் ஆபத்தை கட்டியங்கூறும் பனிப் புகை படர்ந்த இலங்கை கடற்கரை எனப் பொன்னியின் செல்வனை திரையில் சாத்தியப்படுத்தியதில் ரவிவர்மன் டச் அநேகம்.

சினிமா இலக்கணத்துக்குள் வரும் மன்னர் கால ஜிகினா பளபளப்புகள் ஏதுமற்ற மரப்பிடி ஈட்டி, உபயோகப்படுத்திய அடையாளங்களை கொண்ட குறுவாள், அந்த கால இயல்பு வாழ்க்கையை பிரதிபலிக்கும் கடை வீதிகள் என சோழர் கால யதார்த்தத்தை ஒட்டிய கலையாக்கத்தில் தோட்டா தரணியின் அனுபவமும் மிளிர்கிறது !

தேவராளன் ஆட்டம் பாடலில் பதைபதைக்க வைத்து, ராட்சச மாமனில் குதூகலித்து, அலைகடல் பாடலில் கடலுடனேயே கரைந்தது மட்டுமல்லாமல் பல்வேறு இசைக்கருவிகளுடன் காட்சி சூழலுக்கு ஏற்ப மாறி மாறி ஒலிக்கும் பின்னணியிலும் பின்னியெடுத்திருக்கிறார் ஏ.ஆர்.ரகுமான்.

Ponniyin Selvan

தேவையற்ற காட்சிகள் என எதுவும் தோன்றாதபடி ஏ.ஸ்ரீகர் பிரசாத்தின் குறுகத்தரித்த எடிட்டிங் சிறப்பு ! தூய தமிழுக்கும் நடப்பு தமிழுக்கும் நடுவே மிக சரியான மீட்டரை பிடித்து, கல்கியின் வசனங்களையும் சரியாக பயன்படுத்திக்கொண்ட ஜெயமோகனின் வசனங்களும் ஜெயம் ! இலங்கை சந்தை வீதியில் வந்தியத்தேவன் பேசும், "குதிரை விலையாக இருக்குதய்யா" வசனம் அங்கு நிகழும் இன்றைய அரசியல் சூழலுக்குமான குறியீடு ?!

மணிரத்னம் இளங்கோ கூட்டணியின் திரைக்கதையில் மாற்றங்கள் நிறைய இருந்தாலும் மூல நாவலின் சாரம் சமரசங்கள் எதுவுமின்றி இருப்பது பாராட்டுக்குரியது !

படத்தின் பெரும்பாலான காட்சிகள் கிராபிக்ஸ் ஜாலங்கள் இன்றி ஒளி வடிவமைப்பின் மூலமே சிறப்பாக காட்சிப்படுத்தப்பட்டிருக்கின்றன. கோட்டை கொத்தள காட்சிகளில் கூட கற்கோட்டைகள், பாசி படிந்த கோட்டைச் சுவர்கள் என இயன்றவரைச் செயற்கை எதுமின்றி காட்சிப்படுத்த மெனக்கெட்டிருப்பது தெரிகிறது.

அருள்மொழி வர்மனை ஆபத்து நெருங்க நெருங்க விண்ணில் தெரியும் தூமகேது தொடங்கி, படத்தில் வரும், கதையையும் படத்தையும் இணைக்கும் பல குறியீடுகளை கதையை ஆழ்ந்து படித்தவர்களால் மட்டுமே புரிந்துகொள்ள முடியும்...

கதைப்படி பாண்டிய ஆபத்துதவிகளின் திட்டத்தை காட்டில் மறைந்திருந்து கேட்கும் ஆழ்வார்க்கடியானை அவர்கள் கண்டுபிடித்துவிட கூடிய சூழலில், ஒரு ஆந்தையின் அலறல் அவர்களைத் திசைதிருப்பிவிடும். ஆபத்துதவிகள் சோழர்களை அழிக்க உறுதியேற்கும் படக் காட்சியின் பின்னணி ஒலி சேர்க்கையாகத் தூரத்து ஆந்தையில் அலறல் !

வந்தியத் தேவைனை இலங்கை தீவில் சேர்த்துவிட்டு படகில் சாய்ந்து தேங்காய் சாப்பிடுகிறாள் "சமுத்திரக்குமாரி" பூங்குழலி...

நாவலில் பூங்குழலியை கல்கி அறிமுகப்படுத்தும் அத்தியாயத்தில் அவள் நந்தி சிலையில் சாய்ந்து, பட்டர் கொடுத்த தேங்காய் மூடி பிரசாதத்தை சாப்பிடுவதாக சித்தரித்திருப்பார் !

சில முக்கிய நிகழ்வுகளின் ஆரம்பங்கள் காட்சிகளின்றி கதாபாத்திரங்களின் உரையாடல்கள் மூலமாகவே கடத்தப்படுவதால் நாவலை படிக்காதவர்கள் சற்று கவனமாக பார்க்க வேண்டும் !

மேலும், சில முக்கிய கதாபாத்திரங்கள் மின்னல் வேகத்தில் அறிமுகமாகி மறைந்துவிடுவது தவிர்க்கப்பட்டு அவர்களுக்கு இன்னும் ஓரிரு காட்சிகள் சேர்க்கப்பட்டிருக்கலாம் ! வந்தியத் தேவன் கோட்டைக்குள் புகுந்து சிற்றரசர்களின் திட்டத்தை அறிந்துகொள்ள துருப்புச்சீட்டாக விளங்கும் அவனது நண்பன் கந்தமாறன் பாட்டினூடே வந்து மறைவதை உதாரணமாக சொல்லலாம். சேந்தன் அமுதன் கதாபாத்திரமும் அப்படியே.

பூங்குழலி அறிமுகமாகும் "அலைகடல்" பாடல் காட்சி நாயகன் படத்தின் "நிலா அது" பாடல் காட்சியை நினைக்கத் தூண்டுவதாக அமைந்திருப்பது தவிர்க்கப்பட்டிருக்கலாம் ! ரவிதாசனாக தோன்றும் கிஷோர் தொடங்கி பாண்டிய ஆபத்துதவிகளின் பாத்திர அமைப்பில் இன்னும் சற்றே கூடுதல் கவனம் செலுத்தியிருந்தால் சராசரி தமிழ் பட வில்லனின் அடியாட்கள் போல அவர்கள் தோற்றம் தருவதை தவிர்த்திருக்கலாம் !

இனி சில நாட்களுக்கு பொன்னியின் செல்வன் பற்றிய விமர்சனங்களும் வாதங்களும் பரபரக்கும். இப்படத்தின் வர்த்தக வெற்றி எத்தகைய வீச்சில் அமைந்திருக்கும் என உடனடியாக கணிக்க இயலாது.

விமர்சனங்களும் வணிக ரீதியான வெற்றியும் எப்படி அமைந்தாலும், மணிரத்னமும் அவரது குழுவினரும் சினிமாவுக்கும் நாவலுக்கும் ஒரு சேர நேர்மையாக இருக்க முயன்று அதில் வெற்றியும் அடைந்து விட்டார்கள். பொன்னியின் செல்வன் நாவலை முழுவதும் ஆழ்ந்து வாசித்த கல்கியின் வாசகர்களுக்கு இது நிச்சயம் புரியும் !

பொன்னியின் செல்வன் திரைப்படம் தமிழ் திரையுலகின் மற்றுமொரு முக்கியமான மைல்கல். இதன் வெற்றியையும் வரவேற்பையும் பொறுத்து இன்னும் பல பிரமாண்ட திரை முயற்சிகள் முன்னெடுக்கப்படலாம். பிரெஞ்சு நாடக இலக்கியத்தின் உச்சங்களில் ஒன்றாக போற்றப்படும் "Cyrano de Bergerac" படைப்பு 1946லிலிருந்து இன்றுவரையிலும் பல முறை திரைப்படமாக்கப்பட்டதை போல பொன்னியின் செல்வன் நாவலும் வருங்காலத்தில் பல திரை படைப்புகளாக உருவாக்கப்படலாம். அப்படியான வருங்கால முயற்சிகளுக்கான தமிழ் திரையுலகின் "முன்னத்தி ஏராக" மாறியிருக்கிறார் மணிரத்னம் !

மணிரத்னம் மற்றும் அவரது குழுவுக்கு மட்டுமல்லாமல் இதனை சாத்தியப்படுத்திய லைகா நிறுவனத்துக்கும் ஹேட்ஸ் அப் !

- காரை அக்பர்

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?