<div class="paragraphs"><p>Money Heist</p></div>

Money Heist

 

Facebook

சினிமா

Money heist : முதலில் புறக்கணிக்கப்பட்ட தொடர் உலக அளவில் வெற்றி பெற்றது எப்படி? | பகுதி 2

Govind

ஸ்பெயினை மனதில் கொண்டு எடுக்கப்பட்ட மணி ஹெய்ஸ்ட் உலக அளவில் வெற்றி பெற்றது சுவாரசியமான ஒன்று. தற்செயலாக நடந்த நிகழ்வுகள் கூட சில சமயம் வரலாற்றைப் புரட்டிப் போடுவது உண்டு. அது மணி ஹெய்ஸ்ட்டுக்கும் நடந்திருக்கிறது. தற்செயலாக நடந்திருந்தாலும் அது வெற்றி பெறுவதற்கான அவசியமான அடிப்படை ரசனைகள் உலகில் இருந்திருக்க வேண்டும். இந்த இரண்டும் எப்படி இணைந்தன, என்பதை பார்ப்பதற்கு முன் இந்த வெற்றி சாத்தியமான பாதையையும் அதன் விளைவுகளையும் முதலில் பார்த்து விடுவோம்.

Netflix

நெட்பிளிக்சின் அவாலோஸ்

மணி ஹெய்ஸ்ட் இரண்டு சீசனை வெளியிட்ட ஆன்டெனா 3 தொலைக்காட்சியும், எழுத்தாளர் அலெக்ஸ் பினாவும் நெட்பிளிக்ஸ் நிறுவனத்தோடு தொடர்பில் உள்ளவர்கள்தான். முதல் சீசன் ஒளிபரப்ப படுவதற்கு முன்பேயே நெட்பிளிக்ஸ் நிறுவனத்தின் துணைத் தலைவர் டியாகோ அவாலோஸுக்கு ஒரு பென்டிரைவில் தனது படைப்பை அனுப்பியிருந்தார் அலெக்ஸ் பினா. இந்த ஏற்பாடு இரு தரப்பினருக்கும் அதிர்ஷடமான ஒன்று.

“விமானத்தில் லாஸ் ஏஞ்செல்ஸுக்கு திரும்பிச் செல்லம் போது அதை பார்த்தேன். அதில் ஏதோ சிறப்பு இருப்பதாக அறிந்தேன்” என்கிறார் நெட்பிளிக்சின் அவாலோஸ்.

பிறகு நெட்பிளிக்ஸ் மணி ஹெய்ஸ்ட்டின் இரண்டு சீசனையும் வாங்கி ஒளிபரப்ப ஒத்துக் கொண்டது. இரண்டு சீசனில் 15 நீண்ட அத்தியாயங்களாக இருந்த தொடரை 22 தொடர்களாக மறு எடிட் செய்து, சப்டைட்டில், டப்பிங் போன்ற மாற்றங்களை செய்யுமாறு பினாவை நெட்பிளிக்ஸ் கேட்டுக் கொண்டது, இத்தகைய மாற்றங்கள் உலக அளவிலான ரசிகர்களுக்கு தேவையான ஒன்று என்பதைத் தாண்டி வேறு சிறப்புகள் இல்லை.

Alex Pina

லா காசா டி பாபெல் எனும் தொடரின் பெயர் “மணி ஹெய்ஸ்ட்” என்று மாற்றப்பட்டது

நெட்பிளிக்ஸின் ஆங்கிலம் பேசும் சந்தையைக் குறிவைத்து La Casa de Papel லா காசா டி பாபெல் எனும் தொடரின் பெயர் “மணி ஹெய்ஸ்ட்” என்று மாற்றப்பட்டது. பாருங்கள் தலைப்பில் கூட அவர்கள் பெரிய அளவுக்கு மெனக்கெடவில்லை. பணத் திருட்டு என்பதுதான் அதன் பொருள்! மேலும் நெட்பிளிக்ஸ் நிறுவனம் இந்த தொடரை ஒளிபரப்புவதற்கு எந்த விளம்பரமும் செய்யப் போவதில்லை என்றும் பினாவிடம் தெரிவித்து விட்டது. அதாவது மார்க்கெட்டிங்கிற்கு 0 டாலர்தான்.

இப்படியாக நெட்பிளிக்சின் கேட்லாக்கில் மணி ஹெய்ஸ்ட் அதிர்ஷடவசமாக நுழைந்து விட்டது. பிறகு நடந்தது எல்லாம் மாஜிக்தான். 2018-ம ஆண்டு வாக்கில் ஆங்கிலமல்லாத மொழிகளில் அதிகம் பார்க்கப்பட்ட மொழித் தொடராக மணிஹெய்ஸ்ட் மாறியது. நெட்பிளிக்ஸில் அதிகம் பார்க்கப்பட்ட முதல் ஐந்து தொடர்களில் மணிஹெய்ஸ்ட் நுழைந்தது. விளம்பர இடைவெளிகள் இல்லாமல் மக்கள் தொடரைப் பார்த்தார்கள்.

ஆரம்பத்தில் அடுத்த வாரம் வரை காத்திருக்க வேண்டியிருப்பது, தொடரில் ஒன்ற முடியாத நிலையை ஏற்படுத்தலாம். இது பார்ப்போரை தொடரில் ஒன்றாமல் அல்லது அதற்கு அடிமையாதல் நிலைக்கு கொண்டு வரத் தடையாக இருந்தது.

பின்னர் நெட்பிளிக்ஸ் அந்த காத்திருப்பை பூர்த்தி செய்ய மேலும் இரண்டு சீசன்களை வெளியிட்டு பார்வையாளரின் தேவையை பூர்த்தி செய்தது. தீடிரென மூன்றாவது நான்காவது சீசன் எடுக்க வேண்டும் என்ற போது அலெக்ஸ் பினாவும், இயக்குநரும், நடிகர்களும் அதிர்ச்சி அடைந்தனர். அவர்களது கருத்தின்படி அதன் கதை முடிந்து விட்டது. இப்போது தீடீரென உலக வெற்றி வந்த பிறகு அடுத்த இரண்டு சீசன்களை எப்படி எடுப்பது? பிரம்மாண்டமான வெற்றியை தக்க வைப்பது எப்படி? இப்படி பல தயக்கங்களோடு இருமாதம் யோசித்து விட்டு கதைக் களத்தையும் தயார் செய்து விட்டு ஒப்புக் கொள்கிறார் அலெக்ஸ் பினா.

Salvador Dali Mask

சிவப்பு கவச உடையும், டாலி முகமூடிகளும்

தற்போது ரசிகர்கள் ஐந்தாவது மற்றும் இறுதி சீசனுக்காக காந்திருந்தார்கள். இறுதி சீசனைப் பொறுத்த வரை 2021 செப்டம்பரில் ஐந்து அத்தியாயங்களும், டிசம்பரில் ஐந்து அத்தியாயங்கள் வெளியிடுவதாகத் திட்டம். தற்போது அவை வெளியாகி பெரும் வெற்றி பெற்று விட்டது.

ராயல் மிண்ட் ஸ்பெயினில் இருக்கும் பாதுகாப்பை விட நெட்பிளிக்ஸ் தனது ஒளிபரப்பு புள்ளிவிவரங்களை வெளியிடமால் தவிர்க்கும் பொருட்டு வைத்திருக்கும் பாதுகாப்பு அதிகமானது. ஆனால மணி ஹெய்ஸ்ட்டின் புள்ளிவிவரங்களை நெட்பிளிக்ஸ் வெளியிட்டது. ஜெயித்த பிறகு அப்படி வெளியிடுவது கூட ஒரு மார்க்கெட்டிங் தந்திரம்தானே. நான்காவது சீசன் வெளியிட்ட பிறகு உடனேயே 6.5 கோடி குடும்பங்கள் தொடரை ரசித்ததாக அதன் அறிக்கை கூறியது.

மணி ஹெய்ஸ்ட் பார்ப்போரின் எண்ணிக்கையை மட்டும் ஒரு குடியரசு நாடாக உருவாக்கினால் அது ஐக்கிய இராச்சியம் எனப்படும் இங்கிலாந்திற்கும் தான்சானியாவிற்கும் இடையே உள்ள உலகின் 23-வது அதிக மக்கள் தொகை கொண்ட நாடாக இருக்கும்.

புள்ளிவிவரங்கள் ஒரு விசயமென்றால் நிகழ்ச்சி தொடங்கிய பிறகு அதன் கலாச்சார அலையின் பாதிப்பு மற்றொரு விசயம். மக்கள் படத்தின் குறியீடுகளை தமது வாழ்வில் பயன்படுத்த ஆரம்பித்தார்கள். “ஸ்டார் வார்ஸ் கதாபாத்திரங்கள் எப்படி இருக்குமென்பது அனைவருக்கும் தெரியும்” என்று ஹாலிவுட்டின் புகழ் பெற்ற இயக்குநர் ஜார்ஜ் லூகாஸ் தன்னிடம் கூறியதை நினைவு கூர்கிறார் மணி ஹெய்ஸ்ட்டின் இயக்குநர் ஜேசஸ் கோல்மனார். தானும் அதையே விரும்பியதாகவும் அவர் கூறினார். முகமூடியும் சிவுப்பு சீருடையும் உலக நிகழ்வுகளின் குறியீடுகளாகின.

போர்ட்டோ ரீக்கோவில் நடந்த போராட்டங்கள் முதல் கிரேக்கத்தில் நடந்த கால்பந்து போட்டி வரை சிவப்பு கவச உடையும், டாலி முகமூடிகளும் எல்லா இடங்களிலும் நுழையத் துவங்கின.

பிரேசில், இந்தியா மற்றும் பிரான்சின் நிஜக் கொள்ளையர்கள் மணி ஹெய்ஸ்ட்டின் முகமூடிகளை காப்பி அடித்து தமது திருட்டுகளை அரங்கேற்றினர்.

அமெரிக்காவின் எழுத்தாளரான ஸ்டீபன் கிங், பிரேசிலின் காலபந்து நட்சத்திரம் மணி ஹெய்ஸ்ட் தொடரை ரசித்ததாக அறிவித்தனர்.

Money Heist's Artist

பெல்லா சியாவோ - 19-ம் நூற்றாண்டின் நாட்டுப்புற எதிர்ப்பு பாடல்

மணி ஹெய்ஸ்ட்டின் தீம் சாங்கான பெல்லா சியாவோ 19-ம் நூற்றாண்டில் இத்தாலியில் தொழிலாளர்களால் எழுதப்பட்ட ஒரு நாட்டுப்புற எதிர்ப்பு பாடல். பின்னர் இரண்டாம் உலகப் போரின் போது பாசிச எதிர்ப்பு சக்திகளால் ஏற்றுக் கொள்ளப்பட்டது. அந்தப் பாடலுக்கு ஸ்டீவ் ஆக்கி அளித்த ரீமிக்ஸ் கச்சிதமாக வேலை செய்த்து. ஒரு டிவி தொடரின் கற்பனையான திருடர் குழு ஏதோ போராளிகள் போன்று பாசிச எதிர்ப்பு பாடல் மூலம் மக்களின் இதயத்தை வென்றது.

மணி ஹெய்ஸ்ட்டின் கதை சொல்லியான டோக்கியோ பாத்திரத்தில் நடித்தவர் உர்சுலா கார்பெரோ. 2017-ம் ஆண்டின் இறுதியில் உர்சுலா தனது காதலன் மற்றும் குடும்பத்தினருடன் உருகுவேயில் புத்தாண்டு கொண்டாட்டத்தில் இருந்தார். தீடிரெனெ எல்லாரும் அவரிடம் வந்து “டோக்கியோ நீங்கள் ஒரு தேவதை, மிகவும் உறுதியானவர், உங்களை நேசிக்கிறோம்” என்றெல்லாம் சொல்ல ஆரம்பித்தார்கள். என்னநடக்கிறது என்பதே உர்சுலாவிற்கு தெரியவில்லை. தொடரை பார்த்தவர்கள் இந்த விருந்திற்கு எப்படி வந்தார்கள் என்று அவருக்கு குழப்பம்.

டோக்கியோவின் காதலனும், சிறு வயது ஹேக்கராகவும் மணி ஹெய்ஸ்ட்டில் நடித்த மிகுவல் ஹெரான் தனது 45 நிமிட கார் பயணத்தின் போது நடந்த ஒரு மாஜிக்கை குறிப்பிடுகிறார். அவரது இன்ஸ்டா கிராமை பின்தொடர்பவர்கள் 50,000த்திலிருந்து தீடிரென பத்து இலட்சமாக உயர்ந்தார்கள்.

மணி ஹெய்ஸ்ட்டின் தொடரில் வங்கி ஊழியராக நடித்து பின்னர் கொள்ளைக்கூட்டத்தில் சேர்ந்தவர் ஸ்டாக்ஹோம். இந்த பாத்திரத்தில் நடித்த எஸ்தர் அசெபோவின் செல்பேசியில் திடீரென சமூக ஊடக கணக்குகளுக்கான நோட்டிபிகேஷன்கள் தொடர்ந்து ஒலிக்க ஆரம்பித்தன. அவற்றை நிறுத்திய பிறகே அமைதி வந்த்து என்கிறார் எஸ்தர்.

தொடரில் பெர்லின் எனும் அடாவடியான பாத்திரத்தில் நடித்தவர் பெட்ரோ அலோன்சோ. இத்தாலியின் ஃப்ளோரன்சில் மைக்கல் ஏஞ்சலோவின் டேவிட் எனும் மாஸ்டர் பீஸ் சிலையை அவர் பார்த்து ரசிக்கிறார். தீடீரென பார்த்தால அந்த காட்சியகத்தில் உள்ள அனைவரும் மைக்கல் ஏஞ்சலோவின் தலை சிறந்த படைப்பைப் பார்ப்பதற்கு பதில் தன்னைப் பார்ப்பதை உணர்ந்தார்.

ரசிகர்கள் கூட்டம் கூடி மனதை இழக்கத் துவங்கிய பின் படப்பிடிப்பை ரத்து செய்துவிட்டு நடிகர்களோடு இத்தாலியில் காரில் பயணித்த நிகழ்வை நினைவு கூர்கிறார் அலெக்ஸ் பினா. “எங்களை ரோலிங் ஸ்டோன் குழு போல மக்கள் எங்களைப் பின்தொடர்ந்தனர்” என்று நினைவு கூர்கிறார். ரோலிங் ஸ்டோன் எனும் பிரிட்டீஷ் ராக் இசைக்குழுவினர் 1962 முதல் துவங்கி இப்போது வரை பிரபலமாக இருக்கின்றனர். அவர்கள் பிரபலமாவதற்கு பல ஆண்டுகள் ஆனது என்றால் மணி ஹெய்ஸ்ட் குழுவினருக்கு அது சில மாதங்கள் மட்டும் போதுமானதாக இருந்தது.

Money Heist Series

அலெக்ஸ் பினா கேட்கிறார்: “ நான் நினைப்பது என்னவென்றால் உலகம் தொட்டு விடும் தூரத்தில் இருக்கிறது. என்னதான் நடக்கிறது?”

ஆம். என்னதான் நடக்கிறது? மணி ஹெய்ஸ்ட்டின் தொடரில் மக்கள் மனதைப் பறிகொடுத்த்தற்கு காரணம் என்ன? அதன் பாத்திரங்கள், காஸ்ட்யூம், கதை முடிச்சுக்கள், பாடல்கள் போன்றவற்றோடு மக்கள் ஒன்றுவதற்கு என்ன அடிப்படை? அடுத்த பாகத்தில் பார்ப்போம்.

வளர்ப்பு நாய்க்கு ₹2.5 லட்சத்தில் தங்கச் சங்கிலி பரிசளித்த பெண்!

2500 ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட நிலநடுக்கத்தால் திசை மாறிய கங்கை நதி - ஆய்வு சொல்வதென்ன?

Nikhila vimal: அழகிய லைலா நிகிலா விமலின் ரீசண்ட் புகைப்படங்கள்!

3.5 ஆண்டுகள் வரை கர்ப்ப காலம் கொள்ளும் விலங்குகள் பற்றி தெரியுமா?

உள்நாட்டு இந்திய விமானங்களில் எவ்வளவு மது எடுத்துச் செல்லலாம்?