யூடியூபில் கலந்து கட்டிய ஆடியன்ஸ் இருந்தாலும் "குடும்பங்கள் கொண்டாடும் வெற்றி" என்று சொல்லக்கூடிய இடத்துக்கு வருவது மிக சில சேனல்கள் தான். அப்படி ஒரு இடத்தைப் பிடித்திருக்கும் சேனல்தான் நக்கலைட்ஸ்.
சென்னை போன்ற நகரங்களைத் தாண்டி கிராமத்து மக்களையும் யூடியூப் வீடியோ பார்க்க வைத்தது நக்கலைட்ஸ். தமிழகத்தில் மிகப் பெரிய ரசிகர் பட்டாளத்தை கொண்டிருக்கும் இந்த சேனலின் நட்சத்திரப் பட்டாளத்தை பட்டியலிட்டாலே ஒரு கட்டுரைத் தீர்ந்துவிடும்.
சசி, அருண், பிரசன்னா, தனலட்சுமி, ஶ்ரீஜா, நிவேதிதா, மித்ரா, சாவித்திரி, முத்தமிழ், மனோஜ், மாணிக்கம், தினேஷ்... என பெயர்களை அடுக்கிக்கொண்டு போகாமல் நக்கலைட்ஸுக்குள் போகலாமா?
சென்னையில் இருப்பவர்களுக்கு மட்டுமே சினிமா என்றிருக்கும் சூழலில் எடுத்த எடுப்பில் சென்னை வந்து சினிமாவில் நுழைய முயற்சிப்பது மூடத்தனமாக இருக்கும் நிலையில் கோயமுத்தூரைச் சுற்றிய சில கிராமப்புரத்து இளைஞர்கள் தங்கள் கலையாசையை தீர்த்துக்கொள்ள ஒதுங்கிய நிழல் தான் நக்கலைட்ஸ்.
இந்த பட்டரையில் நுழைந்திருக்கிற எல்லாருக்கும் தனித்தனியான கதவுகளும் கதைகளும் இருக்கிறது. உண்மையில் யாரிடம் இருந்து எங்கு தொடங்கி எங்கு முடிப்பது என குழப்பும் இந்த கதையை நக்கலைட்ஸ் இயக்குநர் ராஜேஷிடம் இருந்து தொடங்கலாம்.
ராஜேஷ்வர் கோயம்புத்தூர் அருகே சாவடி எனும் கிராமத்திலிருந்து வந்தவர். கோவையின் காந்தி புரத்தைக் கூட அடிக்கடி கண்டிராத கிராமத்து பால்யம். வயல், கம்மாய், குளம், குட்டை, தும்பிகளைத் தாண்டி அவரின் பிஞ்சு மனதில் பழுத்திருந்தது சினிமா கனவு. அந்த கனவுக்கு கைக்கொடுத்தது புத்தகங்கள் மட்டும் தான்.
"புத்தகங்கள் படிச்சுட்டு கனவு காண்றது தான் சின்ன வயசுல எனக்கு ரொம்ப பிடிச்சு இருந்துச்சு"ராஜேஷ்வர்
சினிமாவுக்காக அடம் பிடித்து சென்னை வந்து விஸ்காம் சேர்ந்து படிக்கத் தொடங்கினார் ராஜேஷ்வர். சினிமா சரி, சினிமாவில் என்ன? என்ற கேள்விக்கு இயக்குநர் தான் என்று பதில் கொடுத்திருந்தது கல்லூரி வாழ்வு.
தன்னுடைய பைலட் படம் ஒன்றை இயக்கி முடித்திருந்த ராஜேஷ்வருக்கு பிரசன்னாவின் அறிமுகம் கிடைத்தது.
இடையில் ராஜேஷ்வர் தொடங்கியிருந்த விளம்பர ஏஜென்ஸியும் ஓரளவு பிக் அப் ஆகியிருந்தது.
ராஜேஷையும் பிரசன்னாவையும் அரசியலும் புத்தகங்களும் ஒன்று சேர்த்தது. இரண்டு பேரும் இணைந்து "ஆண்ட பரம்பரை" என்ற படத்தை முடித்தனர். அது கருத்து சுதந்திரம் குறித்து பேசும் ஒரு படைப்பு.
அந்த நேரத்தில் இனி சினிமா தான் என ஒரு மனதாக முடிவு செய்திருந்த ராஜேஷ்வர் வேறு காரணமின்றி தன்னுடைய ஏஜென்சியை மூடினார்.
ஆண்ட பரம்பரை முடித்த பின்னர் சென்னை வந்து உதவி இயக்குநராக பணி செய்யத் தொடங்கினார் ராஜேஷ்வர். அவர் பணியாற்றிய படம் இடையிலேயே நிறுத்தப்பட்டு மீண்டும் கோயமுத்தூருக்கே திரும்பினார்.
சடசடவென வளர்ந்த சினிமா வாழ்வு முறிந்து போனது போல இருந்தாலும் நம்பிக்கையுடன் புதிய வழிகளைத் தேடினார் ராஜேஷ்வர்.
என் லைஃப்ல எப்போதுமே என் கூட இருந்தது புத்தகங்கள், சினிமா, கொஞ்ச பிரண்ட்ஸ் மட்டும் தான்ராஜேஷ்வர்
அதன் பின்னர் வந்து சிறிது சிறிதாக மனதிலிருக்கும் சிந்தனைகளை வீடியோக்களாக எடுக்கத் தொடங்கினார் ராஜேஷ்வர்.
அப்படி தான் பணமதிப்பிழப்பு சம்பவத்துக்காக எடுக்கப்பட்ட வீடியோ வைரலானது. சில வீடியோக்களிலேயே மக்கள் மனதில் இடம் பிடித்தது நக்கலைட்ஸ்.
நக்கலைட்ஸ் சேனல் தொடங்கப்பட்டு கிட்டத்தட்ட ஐந்து ஆண்டுகள் முடிவடைந்து விட்டது. இப்போது நக்கலைட்ஸ் என்றால் மனதுக்குள் முதலில் தோன்றுவது அவர்களின் கோயமுத்தூர் ஸ்லாங்தான்.
அம்முச்சி சீரிஸின் அனைத்து எபிசோடுகளையும் ஒரே சிட்டிங்கில் பார்த்த பின்னர் யாராக இருந்தாலும் கேர்ள் ஃப்ரெண்டிடம் கூட ஏனுங்... இம்புட்டு அழகா இருக்கீங்களே... என்று தான் பேசுவார்கள்.
பெண்களுக்கான சிக்கல்கள், மாதவிடாய் அலப்பறைகள், அண்ணன் - தம்பி சிக்கல், அம்மா - தங்கை உறவுக்குள் நடக்கும் சண்டைகள் என கோவையின் குடும்ப வாழ்க்கையை கண்முன்னே காட்டியது நக்கலைட்ஸ் யூடியூப் சேனல்!
என்ன தான் வெரைட்டியாக வீடியோக்கள் செய்தாலும் அரசியல் நையாண்டி தான் நக்கலைட்ஸின் ட்ரேட் மார்க். அங்கிருந்து தான் அரம்பித்தது நக்கலைட்ஸின் பயணம்.
இப்போது அரசியலுக்காக அர்பன் நக்கலைட்ஸ் என்ற தனி சேனல் செயல்பட்டு வருகிறது.
எல்லா வீடியோக்களிலும் குறைந்தபட்சம் மக்களுக்கு தேவையான கருத்துக்களை சொல்ல முயற்சிப்பது நக்கலைட்ஸின் சிறப்பு என்றே கூறலாம்.
ஐந்து பேராக இருந்த குழு 10 ஆனது, 20 ஆனது, இப்போது கிட்டத்தட்ட 50 பேராக வளர்ந்து நிற்கிறது நக்கலைட்ஸ் சேனல்.
இதனை வழிநடத்துபவராக ராஜேஷ்வர் இருக்கிறார்.
நாடகங்களிலிருந்து வந்த ஶ்ரீஜா, சாதாரணமாக ஷார்ட் ஃபிலிம் நடிக்க வந்த நிவேதிதா, புரட்சிகாரியாகவே வாழ்ந்த தனம் அம்மா என நக்கலைட்ஸின் பெண்கள் பற்றி சொல்லிக்கொண்டே போகலாம்.
அம்முச்சி, பேக் டு ஸ்கூல் போன்ற சீரிஸ்கள் நக்கலைட்ஸின் பேஸ்ட் எனலாம்.
அதிக மேக் அப் இல்லாத யதார்த்தமான முகங்கள், அதிக பகட்டில்லாத யதார்த்தமான நடிப்பு, திரைப்படங்கள் போல சிரத்தை இல்லாத கொங்கு தமிழ் என எளிமையாக மனதில் குடிபுகும் இவர்களது குழு மேலும் வளர வாழ்த்துவதற்கு முன் வீடியோஸ ஒரெட்டு போய் பாத்துபோட்டு வாங்...
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust