தமிழ் சினிமாவில் சூப்பர் பிஸியான முன்னணி நடிகரென்றால் அது விக்ரம் தான். அஜய் ஞானமுத்து இயக்கத்தில் கோப்ரா, மணிரத்னத்தின் பொன்னியின் செல்வன் படங்கள் மே 26 மற்றும் செப்டம்பர் 30ம் தேதிகளில் வெளியாகவிருக்கின்றன. அடுத்தடுத்த படங்களுக்கான லைன் அப் இருந்தாலும் படத்துக்குப் படம் கெட்டம் சேஞ் இருப்பதால் ஒவ்வொரு படத்தையும் முடித்த பின்னரே அடுத்த படத்துக்கு கால்சீட் கொடுக்கிறார். இதற்கிடையில் பல காலமாக கிடப்பில் இருக்கும் கௌதம் வாசுதேவ் மேனனின் துருவ நட்சத்திரம் படத்தின் டப்பிங் உள்ளிட்ட வேலைகளையும் முடித்துக்கொடுத்துள்ளார்.
சில நாட்களுக்கு முன்னர் இயக்குநர் பா.ரஞ்சித்திடம் கதை கேட்டிருக்கிறார் விக்ரம். அவர் வசமிருந்த ஒன்லைன்களில் ஒன்றைத் தேர்வு செய்து ஒப்பந்தம் செய்துள்ளார். கதை உருவாக்கும் பணிகளில் தீவிரமாக இறங்கியிருக்கிறார் ரஞ்சித். அவரது நட்சத்திரங்கள் நகர்கிறது திரைப்படம் இறுதிக்கட்ட வேளைகளில் இருக்கிறது.
இது தவிர இரண்டு படங்களில் நடிக்க உள்ளார் விக்ரம், 'கடைசி விவசாயி' மணிகண்டன் இயக்கத்தில் ஒரு படமும், கமலின் 'விஸ்வரூபம்2' மகேஷ் நாராயணனின் இயக்கத்தில் ஒரு படமும் பேச்சு வார்த்தை போய்க்கொண்டிருக்கிறது. இந்த இரண்டிலும் விஜய் சேதுபதி எதிர் நாயகனாக நடிக்கப் பேச்சுவார்த்தை நடந்துவருகிறது. இதில் மகேஷ் நாராயணனின் படத்தை கமல் தயாரிக்க உள்ளதாகவும் சொல்கிறார்கள்.