lazy NewsSense
ஹெல்த்

மனிதர்கள் இயற்கையாகவே சோம்பேறிகளா? - ஆய்வு கூறும் அட்டகாச தகவல்

Govind

கோவிட் தொற்றுநோய் பரவியபோது உலகம் முழுவதும் பொது முடக்கம் அறிவிக்கப்பட்டது. பல மாதங்கள் உலக மக்கள் தொகையில் பெரும் பகுதியினர் வீட்டிலேயே இருக்க நிர்ப்பந்திக்கப்பட்டார்கள். இது அனைவருக்கும் கிடைத்த ஓய்வு என்று எளிதாகப் பிரச்சாரம் செய்யப்பட்டது. ஆனால் மனிதர்களாகிய நாம் வேலையின்றி சும்மா இருக்க முடியுமா?

கோவிட்: வீட்டில் இருப்பது ஓய்வா, பிரச்னையா?

வீட்டில் இருங்கள், உடல்ரீதியான இடைவெளியை கடைப்பிடியுங்கள், முகக் கவசம் அணியுங்கள் என்று நமது சினிமா பிரபலங்கள் டிவிக்களில் பிரச்சாரம் செய்தார்கள். ஆனால் அமெரிக்கா கொஞ்சம் வேடிக்கையான நாடாயிற்றே. அதனால் கலிபோர்னியா ஆளுநர் அலுவலகம் வெளியிட்ட கோவிட் பிரச்சாரப் படம் வித்தியாசமாக இருந்தது.

வீடியோவில் நகைச்சுவை நடிகர் லாரி டேவிட் தனது கிண்டலான பாணியில் " முட்டாள்களே உங்களுக்கு என்ன எழவு பிரச்சினை? நாள் முழுக்க நாற்காலியில் இருந்து கொண்டு டிவி பார்க்கும் வாய்ப்பை இழக்காதீர்கள்" என்று திட்டினார்.

Online

கோவிட் பரவுவதை தடுக்க வீட்டிலிருக்குமாறு வலியுறுத்துவதை அவர் இவ்வாறு கூறினார்.ஆனால் உலகம் முழுவதும் மக்கள் பொது முடக்கத்தின் போது வீட்டில் சும்மா இருப்பதை விரும்பவில்லை. வேலை செய்யாமல் சும்மா இருப்பது நமது உயிரியல் அடிப்படையிலேயே கிடையாது.

ஏதோ ஒரு வேலை செய்யும் போதே நாம் நமது இருத்தலை உணர்கிறோம். ஓய்வெடுப்பது என்பது உழைத்துக் களைப்பதினால் வரும் ஒரு சமநிலை. அதை சும்மா வாரக்கணக்கில் ஓய்வெடுத்துப் பின்பற்ற முடியாது.எளிதான வழியை, வெற்றிக்கான குறுக்குவழியை நாம் அடிக்கடி தேடுகிறோம் என்பது உண்மைதான். ஆனால் உங்களிடம் ரிமோட் கண்ட்ரோல் இருந்தால், ஏன் எழுந்து டிவியில் சேனல்களை மாற்ற வேண்டும்? உங்களிடம் கார் இருந்தால், சூப்பர் மார்க்கெட்டுக்கு ஏன் சைக்கிள் ஓட்ட வேண்டும்? நாம் காணும் கனவில் கூட நாம் சும்மா சோம்பேறியாக இருப்பதில்லை. ஒரு சோம்பேறி கூட கனவில் ஏதோ ஒரு ஆசையை வேலை செய்தவாறே காண்கிறான்.

சும்மா இருப்பது குறித்து ஒரு ஆய்வு என்ன கூறுகிறது?

வர்ஜீனியா பல்கலைக்கழகத்தில் சில ஆண்டுகளுக்கு முன்பு நடத்தப்பட்ட ஒரு பிரபலமான ஆய்வில், பங்கேற்பாளர்கள் ஒரு நேரத்தில் அனைத்து கவனச் சிதறல்களும் அகற்றப்பட்ட முற்றிலும் வெறுமையான அறைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

அவர்களிடம் தொலைபேசி இல்லை, புத்தகங்கள் இல்லை, கணினி அல்லது டிவி திரைகள் இல்லை - மேலும் அவர்கள் தூங்க அனுமதிக்கப்படவில்லை. அவர்களின் கணுக்காலில் மின்முனைகள் பொருத்தப்பட்டு, 15 நிமிடங்களுக்கு அவர்கள் தனியாக விடப்பட்டனர். சிறிது நேரம் ஓய்வெடுக்க இது ஒரு வாய்ப்பாக இருந்தது.

இந்த ஓய்வு ஆய்வு எப்படிச் சென்றது? நன்றாக, தனியாக விடப்படுவதற்கு முன், பங்கேற்பாளர்களுக்கு மின்சார அதிர்ச்சியை வழங்கும் இயந்திரத்தை பயன்படுத்துவது எவ்வாறு அழுத்துவது என்று காட்டப்பட்டது.

ஒருமுறை முயற்சித்த பிறகு யாரும் அதை மீண்டும் செய்ய விரும்ப மாட்டார்கள் என்று நீங்கள் நினைக்கலாம். தவறு. உண்மையில், 71% ஆண்களும் 25% பெண்களும் தனிமையில் இருக்கும் போது குறைந்தபட்சம் ஒரு மின்சார அதிர்ச்சியைக் கொடுத்துள்ளனர்.

மேலும் ஒரு ஆண் தன்னை 190 முறை அதிர்ச்சிக்குள்ளாக்கினார். ஒன்றும் செய்யாமல் இருப்பது மிகவும் வேதனையானது என்று மாறிவிடுவதை இது காட்டுகிறது. பங்கேற்பாளர்களில் பலர் கவனச்சிதறல் இல்லாமல் தங்களைத் தாங்களே சித்திரவதை செய்ய விரும்பினர். ஆக சும்மா இருப்பதை நாம் விரும்பவில்லை. வேறு ஏதும் வாய்ப்பில்லை என்றால் மனிதர்கள் தம்மை துன்புறுத்திக் கொள்கிறார்கள்.

Cycle Travel

கார் வைத்திருக்கும் ஒருவர் மராத்தான் பயிற்சி செய்து ‘துன்பப்படுவது’ ஏன்?

இந்த சோதனை ஒரு தீவிர உதாரணம். ஆனால் இதை நாம் மக்களின் அன்றாட வாழ்விலிருந்து கூட அறியலாம். ஒரு டீக்கடை மாஸ்டரோ, துப்புறவு தொழிலாளியோ, உணவு விநியோகிக்கும் செயலி தொழிலாளிகளோ அனைவரும் ஒரு நாளைக்கு 12 மணிநேரத்திற்கும் அதிகமாக உழைக்கிறார்கள்.

இதை நிர்ப்பந்தம் என்று நீங்கள் நினைக்கலாம். ஆனால் எல்லா வசதி இருந்தும் மராத்தான் பயிற்சிக்காக தனது உடலை மாதக்கணக்கில் வருத்திக் கொள்பவர்களை என்ன சொல்கிறீர்கள். உண்மையில் அது வருத்திக் கொள்தல் இல்லை. உடலின் அதிவேக இயக்கத்தினால் வரும் மகிழ்ச்சி. அதே போன்று பூமியின் துருவங்களுக்கு கடும் பனியில் பயணம் செய்யும் சாகசக்காரர்களைப் பாருங்கள். இவை சொல்ல வருவது என்ன?

டொராண்டோ பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த Michael Inzlicht இதை முயற்சியின் முரண்பாடு என்று கூறுகிறார். சில சமயங்களில் நாம் சுலபமான பாதையில் குறைவாக வேலைசெய்து தப்பிக்க முயல்கிறோம். ஆனால் அது எல்லா நேரத்திலும் இருக்காது. சில தருணங்களில் நாம் கடும் உழைப்பை, முயற்சியை செலவிட வேண்டி இருந்தால் அதை மகிழ்ச்சியுடன் செய்கிறோம். ஒரு புதிரை மண்டையை உடைத்துக் கொண்டு பல மணிநேரங்களை செலவிட்டு தீர்க்க விரும்புகிறோமே அன்றி அதைக் கூகிளில் தேடி விடையை உடன் கண்டுபிடிப்பதில் நாம் மகிழ்வதில்லை.

baby

குழந்தைகள் கற்பது சோம்பேறித்தனத்தை அல்ல உழைப்பை

இதை நாம் வாழ்க்கையின் ஆரம்பத்திலேயே கற்றுக்கொள்கிறோம். குழந்தைகளாக இருக்கும் போது நாம் அதிக முயற்சி செய்தால் மட்டுமே முடிவில் ஒரு பரிசோ மகிழ்ச்சியோ கிடைக்கும் என்று கற்றுக் கொள்கிறோம். 5 வயதைத் தாண்டிய குழந்தைகள் பகலில் தூங்குவதில்லை. ஏதோ ஒன்றை விளையாடவோ,படிக்கவோ, தெரிந்து கொள்ளவோ விரும்புகிறார்கள். அவர்கள் சும்மா இருக்க இயல்பிலேயே விரும்புவதில்லை. ஆனால் பெற்றோர்கள்தான் குழந்தைகளின் தொந்தரவு தாங்காமல் ஒரு செல்பேசியை கொடுத்து பார்க்க வைக்கிறார்கள். அப்போதும் குழந்தைகள் தூங்குவதில்லை.

Travel

விமான சுற்றுலாவும், பைக் பயணமும் - எது நினைவில் நிற்கும்?

நீங்கள் லடாக்கிற்கு ஒரு பைக் பயணம் செய்கிறீர்கள் என்றால் அதை 20 வருடங்கள் கழித்துக் கூட உங்களால் மறக்க முடியாது. ஏனென்றால் அந்த பயணத்தில் நீங்கள் அடைந்த சிரமங்கள், அதிக முயற்சிகள், இறுதியில் பயணத்தை முடித்த பிறகு வரும் சாதனை மகிழ்ச்சி இவையெல்லாம் அந்த பயணத்தை மறக்க முடியாத ஒன்றாக மாற்றுகிறது. இதுதான் கற்றறிந்த உழைப்பு என்கிறார்கள்.

ஆனால் அதே லடாக்கிற்கு விமானம், ஹெலிகாப்டரில் பயணம் செய்துவிட்டு வந்தால் அது நமது மலரும் நினைவுகளாக இருப்பதில்லை. காரணம் அந்த பயணத்தில் நீங்கள் எந்த உழைப்பையும் போடவில்லை. விமானமும் இன்ன பிறவசதிகளும்தான் உங்களை அங்கே தூக்கிச் சென்று தாலாட்டியிருக்கிறது.

உலகில் உள்ள பல மலைகளில் உச்சிகளை ரோப் கார் அல்லது நாற்காலி லிப்ட் மூலம் அடையலாம். ஆனால் மலையேறுபவர்கள் இதற்கு மாறாகக் கடினமான பாறைகளில், கடுங்குளிரில், ஆபத்தான சிகரங்களில் பயணம் செய்கிறார்கள்.

"Ikea விளைவு" என்றால் என்ன?

மலையேறுபவர்கள் மலையேறுவதில் உள்ள சிரமங்கள் மற்றும் ஆபத்தில் இருந்து இத்தகைய சுவாரஸ்யத்தைப் பெறுவதை நீங்கள் தனிப்பட்ட முறையில் அடையாளம் காணாவிட்டாலும் கூட, நம்மில் பெரும்பாலோர் "Ikea விளைவு" மூலம் அடையாளம் காண முடியும். IKEA விளைவு என்பது அறிவாற்றல் சார்பு நிலையைக் குறிக்கும் வார்த்தை. சான்றாகச் சந்தையில் சில லட்சங்கள் விற்கும் பைக்கை விட ஒரு யமஹா ஆர்எக்ஸ் 100 பைக்கை அசெம்பிள் செய்து வாங்குவதற்கோ, அல்லது அசெம்பிள் செய்து விற்கப்படும் புல்லட் பைக்கையோ மக்கள் அதிக விலை கொடுத்து வாங்குகிறார்கள். இதுதான் IKEA விளைவு. இதன் பின்னே மனித உழைப்பை மதிப்புள்ளதாகப் பார்க்கும் மனநிலை நுகர்வோரிடம் இருக்கிறது.

உழைப்பின் தொடர்ச்சிதான் ஓய்வு

கோவிட் முடக்கத்தின் போது சில வாரங்கள் சோம்பேறியாக இருப்பது வேடிக்கையாக இருக்கும் என்று நாம் நினைக்கலாம், ஆனால் உண்மையில் அது நம்மை திசை திருப்பும். கட்டாயப்படுத்தப்பட்ட மற்றும் நீட்டிக்கப்பட்ட ஓய்வு நம்மிடம் பல பிரச்சினைகளைக் கொண்டு வரும். அமைதியின்மை மற்றும் எரிச்சல், காரணமில்லாமல் கோபமடைவது, டிவியையே பார்க்க விரும்பாத நிலை வருவது இப்படி பலபிரச்சினைகள் இருக்கின்றன.

லாக்டவுனின் போது, ​​சாதாரண வாழ்க்கையில் நாம் அடையும் சமநிலை உணர்வை அதாவது உழைப்பு மற்றும் ஓய்விற்கான சமநிலையை நம்மால் முடிந்தவரை கடைப்பிடிக்க வேண்டும்.

எனவே, உடற்பயிற்சி செய்வது, நமக்கு நாமே பணிகளை அமைத்துக் கொள்வது, முயற்சி மற்றும் கடினமான விஷயங்களைச் செய்வது முக்கியம். உளவியல் நிபுணர் Mihaly Csikszentmihalyi தனது Flow: The Psychology of Optimal Experience என்ற புத்தகத்தில் நாம் செயல்பாடுகளையும், அனுபவங்களையும் தேடிக் கொண்டிருக்கிறோம் என்கிறார். இவை ஓவியம் வரைவது அல்லது தோட்டம் அமைத்தல் அல்லது ஜிக்சாக்கள் (பகுதி பொருட்களை வைத்துச் செய்யப்படும் புதிர் விளையாட்டு) செய்வது போன்ற வேலைகளாக இருக்கலாம்.

அவை நம்மை உள்வாங்கிக் கொள்கின்றன, நேரம் கடந்து செல்வதை நாம் கவனிக்கவில்லை மற்றும் எல்லாவற்றையும் பற்றிக் கவலைப்படுவதையும் நிறுத்துகிறோம்.

சாதாரண நேரங்களில், நம்மில் பெரும்பாலோர் போதுமான அளவு ஓய்வெடுப்பதில்லை. எனவே இந்த விதிவிலக்கான காலகட்டத்தில், நம்மால் முடிந்தால் அதிகமாக ஓய்வெடுப்பதற்கான வாய்ப்பை நாம் ஏற்றுக் கொள்ள வேண்டும். ஆனால் இந்த கடினமான நேரத்தில், நாம் உள்ளுணர்வால் சோம்பேறி உயிரினங்கள் அல்ல என்பதைக் கண்டுபிடிப்போம். உண்மையில் ஒரு வித்தியாசமான முறையில் நாம் குறைவாகச் செய்வதும், அதிகமாக ஓய்வெடுப்பதற்குக் கூட ஆரம்பத்தில் நிறைய முயற்சிகள் தேவைப்படலாம்.

குரங்கு முதாதையிரிடத்திலிருந்து நாம் மனிதனாக பரிணமித்தலை சாத்தியமாக்கியது உழைப்பு. அந்த உழைப்பைக் கொண்டாடுவோம். அதுதான் நமது உயிரியில் பண்பு. சமூகத்திற்குத் தேவைப்படும் பண்பு கூட.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?