ஆரஞ்சு பழத்தைவிட 8 மடங்கு வைட்டமின் சி சத்துகள் அதிகமாக உள்ள ஒரு உணவு. பெர்ரி பழங்களைவிட 2 மடங்கு ஆன்டிஆக்ஸிடன்ட் அதிகம் கொண்ட ஒரு மூலிகை. 17 மாதுளைகளுக்குச் சமமான ஒரே ஒரு காய். சூப்பர் ஃபுட் என்று சொல்வதற்கு முதல் இடத்தைப் பிடித்திருக்கும் ஒரு கனி. தினம் ஒன்று சாப்பிட்டாலே வாழ்நாள் முழுக்கக் கிடைக்கிறது, ஆரோக்கியமும் அழகும். இதைத் தருவது எது? பார்க்கலாம்.
வைட்டமின் சி சத்துகள் நிறைந்து கிடக்கும் ஒரு உணவு, நெல்லிக்காய். ஆம்லா, இண்டியன் கூஸ்பெர்ரி போன்ற பெயர்களால் அழைக்கப்படுகிறது. உடலில் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்கும் உணவுகளில் முதல் இடத்தைப் பிடிப்பது, நெல்லிக்காய்தான். ஆயுர்வேத அறிவியல் படி, நோய் எதிர்க்கும் சக்திக்காக, சருமத்தை அழகாக, பொலிவாக்க, பளிச்சிட வைக்க, ரத்தத்தைச் சுத்தமாக்க, பார்வைத்திறனை அதிகரிக்க நெல்லிக்காயை உணவிலும் ஆயுர்வேத மருந்துகளிலும் பயன்படுத்துகிறார்கள்.
நெல்லிக்காயை வெறுமனே சாப்பிடப் பலருக்கும் பிடிக்காது. எனவே, நெல்லிக்காய் ஜூஸாக, உப்பு, மிளகாய் சேர்த்தும், உலர் நெல்லிக்காயாக, தேன் நெல்லிக்காயாகச் சாப்பிடுகிறார்கள். நெல்லிக்காயை எப்படிச் சாப்பிட்டாலும் பலன்கள் கிடைப்பது உறுதி. வாதம், பித்தம், கபம் பற்றிக் கேள்விப் பட்டிருப்பீர்கள். இதில் பித்தத்தைக் குறைத்துப் பித்தம் தொடர்பான நோய்களைக் குணப்படுத்த நெல்லிக்காயோ, நெல்லிக்காய் ஜூஸோ, நெல்லி துவையலாகவோ காலையில் சாப்பிட்டு வருவது நல்லது.
காலையில் அல்லது வெறும் வயிற்றில் பசி வந்த பிறகு முதல் உணவாகச் சாப்பிடுவது மிகவும் நல்லது. தினமும் சாப்பிட ஏற்றது. சில நாட்களில் சலிப்பு ஏற்பட்டால் கொஞ்ச நாட்கள் விட்டு, மீண்டும் தொடங்கலாம்.
1-3 வரை சாப்பிடலாம். ஜூஸாக குடித்தால் 2-3 பயன்படுத்தலாம். காயாகச் சாப்பிட்டால் ஒன்று சாப்பிடலாம்.
உடலில் ஏதேனும் தொற்றுகள் வந்துவிட்டால் அதை அழித்து உடலுக்குப் பலம் தருவது நெல்லிக்காய் சாறுதான்.
நெல்லிக்காய், புளிப்பு, துவர்ப்பு, இனிப்பு, குளிர்ச்சி தன்மை கொண்டது. உடலில் உள்ள வறட்சியை முற்றிலும் போக்கும்.
செரிமானத் தொல்லையால் அவதிப்படுபவர்கள், தினம் சிறிதளவு நெல்லிக்காய் ஜூஸை காலையில் குடித்து வந்தாலே போதும். மேலும், நெஞ்செரிச்சல் எனும் அசிடிட்டியைப் போக்கும்.
சர்க்கரை நோயாளிகள், நெல்லிக்காய் ஜூஸை குடித்து வர ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவு கட்டுக்குள் வரும்.
சிறு வயதிலேயே முதுமையான தோற்றத்தை அடையும் பிரச்சனையைத் தடுக்கும். நரைமுடி வருவதையும் தடுக்கிறது, நெல்லி ஜூஸ்.
குடலில் கட்டிப்போகியிருக்கும் மலத்தைச் சுலபமாக வெளியேற்ற நெல்லிக்காய் உதவும்.
பசி இல்லை என்று சொல்பவரும் உண்டு, அதிகமாகப் பசி எடுக்கும் பிரச்சனையும் உண்டு. இந்தப் பசி பிரச்சனையை முழுமையாகத் தீர்ப்பது, நெல்லிக்காய் ஜூஸ்தான்.
உடலில் உள்ள கெட்ட கொலஸ்ட்ரால், அதிகமாக டிரைகிளசரைட்ஸ் போன்றவை நீங்க நெல்லிக்காய் சாற்றைப் பருகுங்கள்.
வயிற்றில், குடலில் ரத்தம் கசிந்து மலம் வழியாக வெளியேறும் பிரச்சனை இருப்பவர்களுக்கு, நெல்லிக்காய் சிறந்த மருந்து. வயிற்றில் உள்ள பிரச்சனையைச் சரிசெய்யும்.
நடக்க முடியாத, தாங்கி தாங்கி நடக்கும் எலும்பு தொடர்பான பிரச்சனைகள் இருப்பவர்கள், அடிக்கடி நெல்லிக்காய் ஜூஸ் குடித்து வர மூட்டுக்களின் பிரச்சனைகள் நீங்கிக் குணமாகும். மூட்டு வலி, மூட்டுப் பாதிப்புகளும் குணமாகும்.
கணையம் வீக்கமாக இருந்தால், அவற்றைச் சரிசெய்ய நெல்லிக்காய் ஜூஸ் மட்டுமே போதும்.
வைட்டமின் சி சத்துகள் 600-700mg அளவுக்கு நிறைந்துள்ளதால் புற்றுநோயாளிகள் சாப்பிட வேண்டிய முதல் உணவு, நெல்லிக்காய்தான். புற்றுநோய் செல்களை அழிக்கும். புற்றுநோய் கட்டி மேலும் வளராமல் தடுக்கும்.
வயிற்றுப் பிடிப்பு, சுளுக்கு இருப்பவர்கள், மாதவிடாய் காலங்களில் வருகின்ற வயிற்றுபிடிப்புக்கு நெல்லிக்காய் ஜூஸ் மிகுந்த பலனைத் தருகிறது.
தொடர்ந்து நெல்லிக்காய் ஜூஸ் குடித்து வந்தால், கல்லீரலின் இயக்கம் சீராக இருக்கும். கல்லீரல் எந்தவித பாதிப்பும் இல்லாமல் ஆரோக்கியமாகும். எலிகளுக்கு நெல்லிக்காய் ஜூஸ் கொடுத்து நடத்திய ஆய்வில், எலிகளின் ஃபேட்டி லிவர் நெல்லிகாய் ஜூஸ் தொடர்ந்து பருகிய பின்னர் முற்றிலும் குணமானதாக ஆய்வு கூறுகிறது.
நெஞ்செரிச்சல், அமில ஏப்பம், எதுக்களிக்கும் பிரச்சனைகள் உள்ள 68 நோயாளிகளுக்கு, 50mg நெல்லிக்காய் மாத்திரை கொடுத்து வந்தார்களாம். 4 வாரம் கழித்து இந்தப் பிரச்சனை குணமானதாகச் சொல்கிறார்கள்.
இன்னொரு ஆய்வில், 98 நோயாளிகளுக்கு 50mg அளவு கொண்ட நெல்லிக்காய் மாத்திரை கொடுக்கப்பட்டது. கெட்ட கொழுப்பு குறைந்து இதயம் ஆரோக்கியமானதாகச் சொல்லப்படுகிறது. மாத்திரைகளாகச் சாப்பிடுவதைவிட நெல்லிக்காய் அல்லது ஜூஸ் அல்லது உலர் நெல்லி அல்லது தேன் நெல்லியாகச் சாப்பிட ஆயுர்வேத மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர்.
நெல்லிக்காய், இளநீர் கலந்த சீரத்தைத் தலைமுடியில் தேய்த்து வந்த 42 நோயாளிகளுக்கு, முடியின் வளர்ச்சி, அடர்த்தி அதிகமானதாகச் சொல்கிறார்கள். 90 நாட்கள் தொடர்ந்து நடத்திய ஆய்வில், நெல்லிக்காய் முடி வளர்ச்சிக்கு உதவுகிறது எனக் கண்டுபிடித்துள்ளனர். நெல்லிக்காயைச் சாப்பிடவும் செய்யலாம். முடியிலும் எண்ணெய்யாக, சீரமாக, ஹேர் பேக்காக பயன்படுத்தலாம்.
கிட்னி பிரச்சனை கொண்ட வயதான எலிகளுக்கு, நெல்லிக்காய் ஜூஸ் கொடுத்து வர கிட்னியின் இயக்கத்தில் முன்னேற்றம் காணப்பட்டுள்ளது.
நெல்லிக்காய் - 2 அல்லது 3
மிளகு - 2
கறிவேப்பிலை - ஒரு கொத்து
தண்ணீர் - 150 mL
இவற்றை எல்லாம் சேர்த்து அரைத்து, வடிகட்டி தேன் கலந்து குடிக்கலாம். தேன் இல்லையெனில் கருப்பட்டி அல்லது நாட்டுச் சர்க்கரை சேர்க்கலாம்.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust