Human Brain pixabay
ஹெல்த்

நம் மூளையின் அதிகபட்ச வெப்பநிலை என்ன தெரியுமா? - ஆச்சர்யமூட்டும் மனித மூளையின் செயல்பாடு

சாதாரணமாக ஒருவரின் மூளை வெப்ப நிலை, நாம் நினைத்துக்கொண்டு இருப்பதைப் போல, நிலையான ஒரே அளவாகவும் இருப்பதில்லை என்பதும் இந்த ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது. இதே சமயம், மூளையின் வழக்கமான செயல்பாட்டில் எந்தக் குறைபாடும் இல்லை; ஆரோக்கியமாகவே இருக்கிறது என்பதில் மாற்றம் இல்லை.

NewsSense Editorial Team

”என்னா..து... மூளையின் வெப்பநிலையா?” எனக் கேட்பது தெரிகிறது... புதிய மருத்துவ ஆய்வு ஒன்றின் முடிவை அறிந்துகொண்டால் இந்தக் கேள்வியை இனி கேட்க மாட்டோம் என்பது மட்டும் உறுதி.

ஐக்கிய இராச்சியம் எனப்படும் பிரிட்டனின் எடின்பர்க் மருத்துவக் கல்லூரியிலேயே இந்த ஆய்வு நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. 40 தன்னார்வலர்களைக் கொண்டு நடத்தப்பட்ட ஆய்வில், மனித மூளைக்குத் தனி வெப்ப நிலை இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

Human Brain

முன்னர் கருதப்பட்டு வந்ததைவிட அதிகமான வெப்பநிலை கொண்டதாக மனித மூளை இருக்கிறது என மருத்துவ அறிவியலாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

அது மட்டுமின்றி, சாதாரணமாக ஒருவரின் மூளை வெப்ப நிலை, நாம் நினைத்துக்கொண்டு இருப்பதைப் போல, நிலையான ஒரே அளவாகவும் இருப்பதில்லை என்பதும் இந்த ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது. இதே சமயம், மூளையின் வழக்கமான செயல்பாட்டில் எந்தக் குறைபாடும் இல்லை; ஆரோக்கியமாகவே இருக்கிறது என்பதில் மாற்றம் இல்லை.

ஆரோக்கியமான ஒரு பெண்ணுக்கோ ஆணுக்கோ வாய்ப்பகுதி வெப்பநிலை 37 டிகிரி செல்சியஸ் ஆக இருக்கையில், மூளையின் வெப்ப நிலை 38.5 டிகிரி செல்சியஸ் என்கிறது மெடிக்கல் எக்ஸ்பிரஸ் செய்தி.

பகல் நேரத்தில் மூளையின் உள் பகுதிகளில் 40 டிகிரி செல்சியஸ் வரை கூட வெப்ப நிலை பதிவாகி இருக்கிறது.

Human Brain

மூளை வெப்பநிலையை அளவிட புது நுட்பம்

இதுவரையிலான மூளையின் வெப்பத்தை அளவிடும் முறைகள் அனைத்துமே, மூளையில் காயம்பட்டு தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு உள்ளவர்களிடமிருந்து பெறப்படும் தகவல்களையே அடிப்படையாகக் கொண்டிருந்தன.

இப்போது, எம்.ஆர்.எஸ். எனப்படும் காந்த அதிர்வலை திசு வேதிம ஊடுருவல் (magnetic resonance spectroscopy) முறை மூலம் புதிய தொழில்நுட்பத்தை மருத்துவர்கள் கையாள முயற்சி செய்திருக்கின்றனர். இந்த முறையின் மூலம் ஆரோக்கியமான நபர்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாதபடி மூளையின் வெப்பநிலை கணிக்கப்படும்.

மேலும், இந்தப் புதிய ஆய்வில், மனித மூளை வெப்பநிலையின் முதல் நாற்பரிமாண(4டி) வரைபடத்தை உருவாக்கி இருக்கிறார்கள், மூலக்கூறு உயிரியலுக்கான மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் ஆய்வகத்தின் அறிவியலாளர்கள்.

Human Brain

முந்தைய முடிவுகளைப் போல அல்லாமல், இந்த வரைபடமானது மூளை வெப்பநிலையை, அதன் பகுதி, வயது, பாலினம்... ஏன் ஒரே நாளின் வெவ்வேறு நேரங்களின் அடிப்படையிலும் கூட மிகவும் குறிப்பாகப் பதிவுசெய்து இருக்கிறது.

ஒவ்வொரு மனிதருக்கும் அவரின் மூளைக்கும் ஒரே வெப்ப நிலைதான் இருக்கும் என்கிற நீண்ட கால நம்பிக்கையையும் இந்த ஆய்வு முடிவு துவம்சம் செய்துவிட்டது.

ஆய்வுக்கு உள்ளாக்கப்பட்ட தன்னார்வலர்கள், 20 வயது முதல் 40 வயதுவரை உள்ளவர்கள். இவர்கள் ஒவ்வொருவருக்கும் நாள்தோறும் காலை 9 மணி, மாலை 4 மணி, இரவு 11 மணி என மூன்று முறை ஸ்கேன் எடுக்கப்பட்டது. ஒவ்வொருவரின் தனிப்பட்ட உடல் கடிகாரம் எனப்படும் அன்றாட உடலியங்குக் கணக்கை அளவிட, அனைவருக்கும் கையில் மானிட்டர் ஒன்றும் பொருத்தப்பட்டது.

nerve cells

ஆய்வு முடிவு சொல்வது என்ன?

இந்த மூளை ஆய்வின் நிறைவாகப் பல புதிய கண்டறிவுகள் தெரியவந்தன. ஆய்வில் கலந்துகொண்ட ஆரோக்கியமான பங்கேற்பாளரின் சராசரி மூளை வெப்பநிலை 38.5 டிகிரி செல்சியஸ். இது, அவரின் நாக்குக்கு அடியில் வைத்து அளக்கப்பட்ட உடல் வெப்பநிலையைவிட இரண்டு டிகிரி அளவுக்கு கூடுதலாகும்.

முன்னரே கூறப்பட்டபடி, மூளையின் வெப்ப நிலையானது அனைவருக்கும் ஒரேமாதிரியாக இருக்கவில்லை. அன்றைய வெப்பநிலை நிலவிய நேரம், மூளையின் பகுதி, ஆணா பெண்ணா என்ன பாலினம், குறிப்பாக மாதவிடாய்ச் சுற்றின்போது, வயது எனப் பல காரணிகளை வைத்து, பங்கேற்பாளர்களின் மூளை வெப்ப நிலை இருந்தது.

ஆய்வில் கலந்துகொண்டவர்களில் ஒருவருக்கு அதிகபட்சமான மூளை வெப்பநிலை 40.9 டிகிரி செல்சியஸாகப் பதிவாகி இருந்தது. பொதுவாக, பிற்பகல் பொழுதுகளில் அனைவரின் மூளை வெப்பநிலையும் அதிகமானதாக இருந்தது. இரவுப் பொழுதுகளில் குறைவாகப் பதிவானது.

ஆண்களின் மூளைகளை ஒப்பிடப் பெண்களின் மூளை வெப்பநிலை 0.4 டிகிரி செல்சியஸ் கூடுதலாகப் பதிவாகி இருந்தது. பெண்களைப் பொறுத்தவரை அவர்களில் பெரும்பாலானவர்களுக்கு ஓவலேசன் எனப்படும் கருமுட்டை வெளியான காலத்துக்குப் பின்னர்தான் அவர்களுக்கு ஸ்கேன் எடுக்கப்பட்டது என்பது ஒரு காரணமாக இருக்கும் என்கின்றனர், இந்த ஆய்வில் ஈடுபட்ட மருத்துவ அறிவியலாளர்கள்.

இந்த ஆய்வில் கிடைத்த முடிவுகளை, விபத்தால் மூளை பாதிப்பு ஏற்பட்டு சிகிச்சை பெற்றுவரும் நோயாளிகளின் மூளை விவரங்களுடன் அவர்கள் ஒப்பிட்டுப் பார்த்தனர். இதன் அடிப்படையில் அந்த நோயாளிகளுக்கு இன்னும் மேம்பட்ட சிகிச்சையை வழங்க முடியும் என்பது எடின்பர்க் மருத்துவர்களின் நம்பிக்கை.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?