பகத் சிங் அவரது சிறுவயதில் எப்போதும் துப்பாக்கிகளை பற்றியே பேசிக்கொண்டிருப்பார். கல்லூரி பருவத்தில் நல்ல நடிகராக இருந்த அவர் ராணா பிரதாப் மற்றும் பாரத் - துர்தாஷா போன்ற நாடகங்களில் நடித்தார். ஜாலியன் வாலாபாக் படுகொலை அவரை மிகவும் பாதித்திருந்தது.
பகத்சிங்கிற்கு அவரது வீட்டினர் திருமணம் செய்து வைக்க முடிவு செய்தனர். அதனை மறுத்த பகத்சிங், "இந்தியா அடிமையாக இருக்கும் போது நான் திருமணம் செய்து கொண்டால், மரணம் மட்டுமே என் மணமகள்" எனக் கூறி வீட்டிலிருந்து வெளியேறி கான்பூருக்கு சென்றார். அங்கு இந்துஸ்தான் சோசலிச குடியரசு கழகத்தில் சேர்ந்தார்.
சிறு வயதிலேயே சோசலிச கருத்துக்களால் ஈர்கப்பட்டார் பகத்சிங். லெனின் தலைமையிலான சோசலிச புரட்சி குறித்து அதிகம் கற்றறிந்தார். "அவர்கள் என்னைக் கொல்லலாம், என் சிந்தனைகளை கொல்ல முடியாது. என் உடலை நசுக்கலாம், என் ஆத்மாவை ஒன்றும் செய்ய முடியாது" எனக் கூறுவார்.
லாலா லஜபதிராய் மரணத்திற்கு பழி வாங்கும் விதமாக பகத்சிங் மற்றும் சுக்தேவ் காவல் கண்காணிப்பாளர் ஜேம்ஸ் ஸ்காட்டை கொலை செய்ய திட்டமிட்டனர். ஆனால் தவறாக அடையாளம் காணப்பட்டு உதவி கண்காணிப்பாளர் ஜான் சாண்டர்ஸ் சுடப்பட்டார்.
பிறப்பால் சீக்கியரான பகத்சிங் கொலை வழக்கில் கைது செய்யப்படாமல் இருக்க தனது தாடியை ஷேவ் செய்து முடி வெட்டிக் கொண்டார். பிறகு, லாகூரில் இருந்து கொல்கத்தாவுக்கு தப்பிச் சென்றார்.
பகத் சிங்
ஓராண்டு கழித்து ஏப்ரல் 8, 1929ல் பகத் சிங், பதுகேஷ்வர் தத் இருவரும் சட்டமன்றத்தில் காலியாயிருந்த ஆளுங்கட்சி இருக்கைகள் மீது குண்டுகளை வீசினர். குண்டுவீசி விட்டு இருவரும் தப்பிச் செல்ல முயற்சிக்கவில்லை. இன்குலாப் ஜிந்தாபாத் (புரட்சி வாழ்க), சாம்ராஜ்யவாத் கோ நாஷ் ஹோ (ஏகாத்திபத்தியம் ஒழிக) என்று முழக்கமிட்டவாறே சிறைப்பட்டனர்.
அப்போது அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையின் போது தான் ஜான் சாண்டர்ஸ் கொலை பற்றி காவல் துறையினருக்கு தெரியவந்தது.
அக்டோபர் 7, 1930ல் பகத்சிங்கிற்கு தூக்கு தண்டனை அறிவிக்கப்பட்டது. அதனை அவர் உளப்பூர்வமான துணிச்சலுடன் ஏற்றார்.
சிறையில் இருந்த காலத்தில் வெளிநாட்டு கைதிகள் சொகுசாக நடத்தப்படுவதைக் கண்டித்து உண்ணாவிரத போராட்டம் மேற்கொண்டார்.
24 மார்ச் 1931ல் பகத்சிங்கிற்கு மரண நேரம் குறிக்கப்பட்டது. ஆனால் அவர் முன்னதாக 23 மார்ச் 1931 மாலை 7:30க்கு தூக்கிலிடப்பட்டார்.