Gautam Adani Twitter
இந்தியா

அதானி குழுமத்தை விரட்டும் பங்குச் சந்தை சரிவுகள் - விடைசொல்லாத ஆளும் அரசு

ஒட்டுமொத்தமாக அதானி குழும பங்குகள் எவ்வளவு சரிந்திருக்கின்றன? இன்று அதானி குழும பங்குகளில் எத்தனை பங்குகள் தரைதட்டி இருக்கின்றன? தற்போது உலகப் பணக்காரர்கள் பட்டியலில் கௌதம் அதானிக்கான இடம் என்ன?... போன்ற விவரங்களை இந்தக் கட்டுரையில் விரிவாக பார்ப்போம்.

NewsSense Editorial Team

இந்தியாவின் மிகப்பெரிய தொழில் குழுமங்களில் ஒன்றான அதானிக்கு எதிராக, ஹிண்டன்பெர்க் ஆராய்ச்சி நிறுவனம் தன் குற்றச்சாட்டுகள் நிறைந்த அறிக்கையை வெளியிட்ட பிறகு நான்காவது வாரமிது.

கடந்த வாரம் இந்திய நாடாளுமன்றத்தின் மக்களவை மற்றும் மாநிலங்கள் அவையில், இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவரான ராகுல் காந்தி, திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் மஹுவா மொய்த்ரா உட்பட பலரும் அதானி குழுமம் குறித்தும், கெளதம் அதானிக்கும் பிரதமர் நரேந்திர மோதிக்கும் இடையிலான உறவு குறித்தும் கேள்வி எழுப்பினர்.

ஆனால் அதற்குத் தகுந்த பதில்கள் பிரதமர் ஆற்றிய நீண்ட நெடிய உரையிலோ, நிதியமைச்சரின் உரையிலோ கிடைக்கவில்லை என மீண்டும் எதிர்கட்சியினர் தங்கள் வருத்தத்தைப் பதிவு செய்துள்ளனர். மேலும் நாடாளுமன்ற கூட்டு குழு (Joint Parliamentary Comittee) ஒன்றையும் எதிர்கட்சிகள் கேட்டிருக்கின்றன. அது குறித்து ஆளும் அரசு வாய் திறந்ததாகத் தெரியவில்லை.

கடந்த மூன்று வார காலமாக தொடர்ந்து அதானி குழும பங்குகளின் விலை தடாலடி சரிவை எதிர்கொண்டு வருகின்றன. இதனால் அதானி குழுமத்தின் தலைவராக இருக்கும் கௌதம் அதானியின் சொத்து மதிப்பும் சர்வதேச அளவில் நாளுக்கு நாள் பல பில்லியன்கள் கரைந்து கொண்டிருக்கின்றன.

ஒட்டுமொத்தமாக அதானி குழும பங்குகள் எவ்வளவு சரிந்திருக்கின்றன? இன்று அதானி குழும பங்குகளில் எத்தனை பங்குகள் தரைதட்டி இருக்கின்றன? தற்போது உலகப் பணக்காரர்கள் பட்டியலில் கௌதம் அதானிக்கான இடம் என்ன?... போன்ற விவரங்களை இந்தக் கட்டுரையில் விரிவாக பார்ப்போம்.

உச்ச விலை டு அச்சம் தரும் சரிவு:

இந்திய பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்டிருக்கும் அதானி குழுமத்தின் ஏழு நிறுவனங்களின் பங்கு விலை, தன் உச்சத்தில் இருந்து குறைந்தபட்சமாக 43 சதவீதம் முதல் 77 சதவீதம் வரை சரிந்து இருக்கின்றன.

அதானி கிரீன் எனர்ஜி நிறுவனத்தின் பங்கு விலை தன்னுடைய 52 வார உச்சவிலையான 3,050 ரூபாயில் இருந்து சுமார் 77 சதவீதம் சரிந்து இன்று சுமார் 688 ரூபாய்க்கு வர்த்தகமாகி கொண்டிருக்கிறது.

இதனைத் தொடர்ந்து அதானி டோட்டல் கேஸ் நிறுவனத்தின் 52 வார உச்ச நிலையான 4,000 ரூபாயில் இருந்து சுமார் 70% சரிந்து கிட்டத்தட்ட 1,192 ரூபாய்க்கு வர்த்தகமாகி வருகிறது.

stock market

அதானி டிரான்ஸ்மிஷன் நிறுவனத்தின் பங்கு விலை தன்னுடைய 52 வார உச்ச விலையான 4,236 ரூபாயிலிருந்து சுமார் 73 சதவீதம் சரிந்து தற்போது 1,127 ரூபாய்க்கு வர்த்தகமாகி கொண்டிருக்கிறது.

அதானி பவர் நிறுவனத்தின் பங்கு விலை தன் 52 வார உச்ச விலையான 432 ரூபாயிலிருந்து சுமார் 64% சரிந்து கிட்டத்தட்ட 156 ரூபாய்க்கு வர்த்தகம் தேங்கி நிற்கிறது. அதானி என்டர்பிரைசஸ் நிறுவனத்தின் பங்கு விலை தன்னுடைய 52 வார உச்ச விலையான 4,190 ரூபாயிலிருந்து சுமார் 58% சரிந்து 1,740 ரூபாய்க்கு வர்த்தகமாகி வருகிறது.

அதானி வில்மர் நிறுவன பங்குகள் தன்னுடைய 52 வார உச்ச விலையான 878 ரூபாயிலிருந்து கிட்டத்தட்ட 53 சதவீதம் சரிந்து 414 ரூபாய்க்கு வர்த்தகமாகி கொண்டிருக்கிறது.

அதானி போர்ட்ஸ் அண்ட் ஸ்பெஷல் எகனாமிக் சோன் நிறுவன பங்குகளின் விலை தன்னுடைய 52 வார உச்சவிலையான 987 ரூபாயிலிருந்து சுமார் 43.7 சதவீதம் சரிந்து 555 ரூபாய்க்கு வர்த்தகமாகி கொண்டிருக்கிறது.

அதானி

லோயர் சர்க்யூட் வலையில் அதானி பங்குகள்:

அதானி குழுமத்தைச் சேர்ந்த ஏழு பங்குகளில் ஐந்து பங்குகள் லோயர் சர்க்யூட் விலையை தொட்டு வர்த்தகம் செய்ய முடியாமல் தேங்கிக் கிடக்கின்றன.

லோயர் சர்க்யூட் என்றால் என்ன?

ஒரு நாளில், ஒரு பங்கின் விலை அதிக அளவில் விலை சரிவைக் காணக் கூடாது என்பதற்காக, ஒரு குறிப்பிட்ட விலைக்குக் கீழ் பங்கு வர்த்தகத்தை மேற்கொள்ள முடியாத விலையை தான் லோயர் சர்க்யூட் ப்ரைஸ் (Lower Circuit Price) என்கிறார்கள்.

உதாரணமாக… அதானி பவர் நிறுவனத்தை எடுத்துக் கொள்ளலாம். இந்த அதானி பவர் நிறுவன பங்குகளின் விலை கடந்த பிப்ரவரி 8ஆம் தேதி 181.90 ரூபாய்க்கு வர்த்தகம் நிறைவடைந்தது. அடுத்த நாளான பிப்ரவரி 9ஆம் தேதி, 5% விலை சரிந்து லோயர் சர்க்யூட் விலையில் 172.8 ரூபாய்க்கு வர்த்தகம் நிறைவடைந்தது. எனவே அந்த நாள் முழுக்க 172.8 ரூபாய்க்குக் கீழ் அதானி பவர் நிறுவனத்தை எவராலும் வாங்கவோ விற்கவோ முடியாது. ஆக பிப்ரவரி 9ஆம் தேதி அதானி பவர் நிறுவனத்தின் லோயர் சர்க்யூட் விலை 172.8 ரூபாய்.

இப்படி…

அதானி கிரீன் எனர்ஜி,

அதானி டோட்டல் கேஸ்,

அதானி டிரான்ஸ்மிஷன்,

அதானி பவர்,

அதானி வில்மர்…

ஆகிய ஐந்து பங்குகளும் 5% லோயர் சர்க்யூட் விலையில் தரை தட்டியுள்ளன.

கெளதம் அதானிக்கு எத்தனையாவது இடம்?

நான்கு வார காலத்திற்கு முன், இந்தியாவின் நெருங்க முடியாத நம்பர் ஒன் பணக்காரர், ஆசியாவின் தொட முடியாத நம்பர் ஒன் பணக்காரர், உலகின் மூன்றாவது மிகப்பெரிய பணக்காரராக வலம் வந்த கௌதம் அதானியின் சொத்து மதிப்பு அப்போது சுமார் 120 பில்லியன் அமெரிக்க டாலராக இருந்தது.

ஆனால் கடந்த நான்கு வார காலத்திற்குள், ஹிண்டன்பெர்க் ஆராய்ச்சி நிறுவனத்தின் அறிக்கை வெளியான பிறகு, சுமார் 64.7 பில்லியன் அமெரிக்க டாலர் சரிந்து, 55.8 பில்லியன் அமெரிக்க டாலரோடு, உலகின் 21வது மிகப்பெரிய பணக்காரராக வலம் வந்து கொண்டிருக்கிறார் கெளதம் அதானி.

இப்போதைக்கு உலகின் டாப் 10 மிகப்பெரிய பில்லியனர்கள் பட்டியலில் இந்தியர்கள் & ஆசியர்கள் எவரும் இல்லை. ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் தலைவர் முகேஷ் அம்பானி 80.3 பில்லியன் அமெரிக்க டாலரோடு உலகின் 11ஆவது மிகப்பெரிய பணக்காரராகவும், ஆசியாவின் நம்பர் ஒன் பணக்காரராகவும் இருக்கிறார். விட்ட இடத்தைப் பிடிப்பாரா கெளதம் அதானி..? காலம் தான் பதில் சொல்ல வேண்டும்.

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?