அதானிக்கு 20,000 கோடி எப்படி வந்தது? பாஜகவுக்கு செக் - ராகுலிடம் இருக்கும் ஆதாரம் என்ன? Twitter
இந்தியா

அதானிக்கு 20,000 கோடி எப்படி வந்தது? பாஜகவுக்கு செக் - ராகுலிடம் இருக்கும் ஆதாரம் என்ன?

Antony Ajay R

ஹிண்டன்பெர்க் ஆராய்ச்சி நிறுவனம். கடந்த சில மாதங்களாகத் தான் இந்தியாவில் உள்ள பலருக்கும் இப்படி ஒரு நிறுவனம் இயங்கி வருவதாகவும், இவர்கள் ஒரு நிறுவனத்திற்கு எதிராக ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வெளியிடும் தகவல்களால் அந்நிறுவன பங்குகள் தரை தட்டும் என்பதையும் கண்கூடாக கண்டோம்.

ஹிண்டன்பெர்க் ஆராய்ச்சி நிறுவனம் உலகின் டாப் 3 பில்லியனர்களில் ஒருவராக இருந்த கௌதம் அதானி நிர்வகித்து வந்த அதானி குழுமத்திற்கு எதிராக பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்தது. அதன் காரணமாக, இந்திய பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டிருக்கும் அதானி குழுமத்திற்குச் சொந்தமான 7 பங்குகளின் விலையும் அபரீவித சரிவைக் கண்டன.

இப்போது வரை, ஹிண்டன்பெர்க் ஆராய்ச்சி நிறுவனம் தொடுத்த தாக்குதலில் இருந்து அதானி குழுமப் பங்குகளின் விலை மீளவில்லை என்பதே உண்மை. ஹிண்டன்பெர்க் - அதானி சர்ச்சை வெறுமனே ஒரு கார்ப்பரேட் சர்ச்சை என கடந்து செல்ல முடியாத அளவுக்கு, இப்பிரச்சனையில் அரசியல் மசாலா அதிகமாகவே உள்ளது.

இந்திய நாடாளுமன்றத்தில், கிட்டத்தட்ட பிரதான எதிர்க்கட்சியாக செயல்பட்டு வரும் இந்திய தேசிய காங்கிரஸ், அதானி விவகாரத்தை கெட்டியாக பிடித்துக் கொண்டு நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணை வேண்டும் என வலியுறுத்தி வருகிறது. அதானிக்கும் பிரதமர் மோடிக்கும் என்ன தொடர்பு என்றும் தொடர்ந்து கேள்வி எழுப்பி வருகிறது.

இந்திய ஒன்றிய அரசின் ஆட்சிப் பீடத்தில் அமர்ந்திருக்கும் பாரதிய ஜனதா கட்சியோ, அதானி குறித்த விவகாரத்தை நாடாளுமன்றத்தில் விவாதிக்க முடியாத அளவுக்கு திசை திருப்புகிறது அல்லது அவையை அமைதியாக நடத்தவிடாமல் தடுக்கிறது.

அதானி குழுமத்தின் மீதான தாக்குதல், வெளிநாட்டவர்களின் சதி என்கிற அளவுக்கு பாஜக தரப்பில் கூறப்படுகிறது. அதானி குழுமப் பிரச்சனையை முழுமையாக விவாதித்து ஒரு முடிவுக்கு வருவதற்குள், இந்திய தேசிய காங்கிரஸின் முக்கிய தலைவர்களில் ஒருவரான ராகுல் காந்தி கடந்த சனிக்கிழமை மற்றொரு முக்கிய பிரச்சனையை சுட்டிக் காட்டி உள்ளார்.

இந்தியாவின் பாதுகாப்புத் துறையில் செயல்பட்டு வரும் பல்வேறு அதானி குழும நிறுவனங்களுக்கு, பல்லாயிரம் கோடி ரூபாய் போலி நிறுவனங்களில் இருந்து வந்திருப்பதாகவும், அது குறித்து இந்திய ஒன்றிய பாதுகாப்பு அமைச்சகம் வாய் திறக்காமல் இருப்பது ஏன் என்றும் ராகுல் காந்தி கேள்வி எழுப்பினார்.

முழு குற்றச்சாட்டு என்ன?

திடீரென அதானியின் போலி நிறுவனங்களில் 20,000 கோடி ரூபாய் வந்து சேர்ந்திருக்கிறது. இதில் சில நிறுவனங்கள் இந்தியாவின் பாதுகாப்பு துறையில் இயங்கி வருகின்றன. இந்த பணம் எங்கிருந்து வந்தது? யாருடைய பணம் இது? இந்தப் பணப் பரிவர்த்தனை தொடர்பாக இந்திய ஒன்றிய அரசின் பாதுகாப்பு அமைச்சகம் கேள்வி எழுப்பாமல் இருப்பது ஏன்? என இந்தியாவின் தலைநகரான டெல்லியில் நடந்த பத்திரிக்கையாளர் சந்திப்பில் கேள்வி எழுப்பினார் ராகுல் காந்தி.

மேலும் இதில் சீனாவை சேர்ந்த ஒருவர் ஈடுபட்டு இருப்பதாகவும், அந்த சீனர் யார் என எவரும் கேள்வி எழுப்பாதது ஏன்? என்றும் கேள்வி எழுப்பினார் ராகுல் காந்தி.

இத்தனை விஷயங்களை தெளிவாக கேட்ட ராகுல் காந்தி, யாரிடமிருந்து தனக்கு இது போன்ற விவரங்கள் கிடைத்தது என்பது குறித்து எதையும் பகிர்ந்து கொள்ளவில்லை. ஆனால் அதே நேரத்தில், பைனான்சியல் டைம்ஸ் பத்திரிகையின் கட்டுரை ஒன்றில், கடந்த 2017 முதல் 2022 ஆம் ஆண்டுக்குள் அதானி குழுமத்தோடு தொடர்புடைய பல்வேறு வெளிநாட்டு நிறுவனங்களில் இருந்து குறைந்தபட்சமாக 2.7 பில்லியன் அமெரிக்க டாலர் முதலீடுகள் வந்திருப்பதாக குறிப்பிடப்பட்டு இருக்கிறது. இது அதானி குடும்பத்திற்கு கிடைத்த அந்நிய நேரடி முதலீட்டில் கிட்டத்தட்ட 50 சதவீதம் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

கடந்த 2017 ஆம் ஆண்டு தான் அதானி குழுமம் பாதுகாப்பு மற்றும் ஏரோ-ஸ்பேஸ் வணிகத்தில் குதித்தது. ஆனால், கிட்டத்தட்ட அதானி குழுமத்திற்கு சொந்தமாக 11 பாதுகாப்பு துறை சார்ந்த நிறுவனங்கள் செயல்பட்டு வருவதாக இந்தியா டுடே கட்டுரை ஒன்றில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. மேலும் அதானி குழுமத்தில் உள்ள பாதுகாப்புத்துறை நிறுவனங்களின் நிகர சொத்து மதிப்பு 1,263 கோடி ரூபாய் மதிப்புடையது என கடந்த 2023 ஜனவரி மாதம் வெளியான ரெட் ஹெரிங் ப்ராஸ்பெக்டஸ் ஆவணத்தில் குறிப்பிடப்பட்டிருப்பதாக இந்தியா டுடே கட்டுரை ஒன்றில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

அதானி குழுமத்திலுள்ள பாதுகாப்புத் துறை சார் நிறுவனங்களுக்கு பணம் வந்ததற்கான ஆதாரங்கள் இந்திய தேசிய காங்கிரஸிடம் இருப்பதாகவும், நாடாளுமன்றக் கூட்டுக் குழு விசாரணைக்கு உத்தரவிட்டால், அங்கு இந்த ஆதாரங்களை சமர்பிக்கத் தயார் என்றும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான ப்ரொமோத் திவாரி கூறினார்.

அதானி பாதுகாப்பு நிறுவன அமைப்பு

அதானி டிஃபென்ஸ் சிஸ்டம்ஸ் & டெக்னாலஜிஸ் லிமிடெட் (ஏ டி எஸ் டி எல்) நிறுவனம் தான், அதானி குழுமத்தின் பாதுகாப்புத் துறை நிறுவனங்களின் அடிநாதம். இந்த நிறுவனத்தின் 100% பங்குகளை அதானி எண்டர்பிரைசஸ் வைத்திருக்கிறது. இந்த அதானி டிஃபென்ஸ் சிஸ்டம்ஸ் & டெக்னாலஜிஸ் லிமிடெட் நிறுவனம் போர் விமானங்கள், ஆளில்லா விமானங்கள், ஹெலிகாப்டர்கள், நீர்மூழ்கிக் கப்பல்கள், ஏவுகணைகள், சிறு ஆயுதங்களை உற்பத்தி செய்யும் நிறுவனமாக நிறுவியுள்ளனர். இந்த நிறுவனத்தின் கீழ் 10 துணை நிறுவனங்கள் உருவாக்கப்பட்டு இருக்கின்றன.

அதில் ஒன்று தான் Ordefence Systems Limited. இந்த நிறுவனம் கடல், நிலம், வானம், விண்வெளி பாதுகாப்பு அமைப்புகலை உருவாக்கும் நிறுவனமாகப் பதியப்பட்டுள்ளது. Adani Naval Defence Systems and Technologies Limited என்கிற நிறுவனம் போர் கப்பல் அமைப்புகளை உருவாக்கும் நிறுவனமாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த நிறுவனம் ஆல்ஃபா டிசைன் டெக்னாலஜீஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் 26.26% பங்குகளை கையகப்படுத்திக் கொண்டது.

எலாரா இந்தியா ஆப்பர்ச்சூனிட்டிஸ் ஃபண்ட் லிமிடெட் நிறுவனம், அதானி எண்டர்பிரைசஸ் நிறுவனத்தில் முதலீடு செய்து இருக்கிறது என்பதை நாம் முன்பே அறிவோம். அதே நிறுவனம் ஆல்பா டிசைன் நிறுவனத்தில் 0.53 சதவீத பங்குகளை வைத்திருப்பதும் தெரியவந்துள்ளது.

கடந்த 1951 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட ஏர் வொர்க்ஸ் என்கிற விமான பராமரிப்பு & ரிப்பேர் நிறுவனத்தை சுமார் 400 கோடி ரூபாய்க்கு அதானி குழுமம் வாங்க இருப்பதாக கடந்த 2022 அக்டோபர் காலகட்டத்தில் கூறப்பட்டதும் இங்கு நினைவுகூரத்தக்கது.

அந்த 20,000 கோடி ரூபாய் யாருடையது என்கிற ராகுல் காந்தியின் கேள்விக்கு விடை கிடைக்குமா? காலம் தான் பதில் சொல்ல வேண்டும்.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?