கர்நாடக மாநிலம் மண்டியா மாவட்டத்தில் பி.யூ. கல்லூரியில் ஹிஜாப் அணிவதற்கு எதிர்ப்பு தெரிவித்து திடீரென போராட்டம் நடத்தப்பட்டது.
இஸ்லாமிய மாணவிகள் ஹிஜாப் அணிந்து வந்ததால், இந்து மாணவர்கள் காவி துண்டு அணிந்து கல்லூரிக்கு வந்து எதிர்ப்பு தெரிவித்தனர்.
போராட்டத்தின் போது பி.யூ. கல்லூரியில் படித்து வரும் மாணவி ஒருவர் ஹிஜாப் அணிந்து வந்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து, மாணவர்கள் காவி துண்டு அணிந்தபடி ‘ஜெய் ஸ்ரீராம்’ என்று கோஷமிட்டனர்.
அவர்களுக்கு எதிராக மாணவி முஸ்கான் ‘அல்லாகூ அக்பர்’ என்று பதில் கோஷமிட்டார். இந்த விவகாரம் இந்தியா முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.
இதுதொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது. இதற்கிடையில் இந்த வீடியோவைப் பார்த்த அல்கொய்தா பயங்கரவாத அமைப்பின் தலைவர் அய்மான் அல்சவாஹிரி மாணவியை பாராட்டி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அந்த மாணவி ‘தங்களது முஜாஹித் சகோதரி’ என்றும் இந்தியாவில் தங்களின் உண்மை நிலையை வெளிப்படுத்திய சகோதரிக்கு அல்லா வெகுமதி வழங்குவார் என்றும் கூறியிருந்தார்.
இந்த நிலையில் மாணவி முஸ்கான் கானின் தந்தை முகமது உசேன் கான் இந்த விவகாரத்திற்கு பதிலடி கொடுத்துள்ளார். என் குடும்பத்தினுடன் தாங்கள் இந்தியாவில் அமைதியாக வாழ்ந்து வருகிறோம், அல்கொய்தா பயங்கரவாத அமைப்பின் தலைவர் யார் என்று கூட தெரியாது என்றார்.
இந்தியாவில் எல்லோரும் அன்பு, நம்பிக்கையுடன் சகோதரர்களாக ஒற்றுமையாக வசித்து வருகிறோம். இந்த விஷயம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி உண்மையை வெளிக்கொண்டு வர வேண்டும் என்று கூறியிருந்தார்.
இந்த வீடியோ குறித்தும், அதன் பின்னணி குறித்தும், மாணவிக்கும், அல்கொய்தா அமைப்புக்கும் ஏதாவது ஒரு வழியில் தொடர்பு உள்ளதா? என்பது குறித்தும் எஸ்.ஐ.டி.இ. நுண்ணறிவு பிரிவினர் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.