Bahadur Shah Zafar

 

Twitter

இந்தியா

முகலாயப் பேரரசர் இரண்டாம் பகதூர் ஷா : பஞ்சத்தில் மாண்ட கடைசி பேரரசரின் கதை

இந்தியாவின் வரலாற்றில் கொடிகட்டிப் பறந்த மொகலாய சாம்ராஜ்ஜியத்தின் கடைசி மற்றும் இருபதாவது பேரரசர் இரண்டாம் பகதூர் ஷா

NewsSense Editorial Team

இந்தியாவின் வரலாற்றில் கொடிகட்டிப் பறந்த மொகலாய சாம்ராஜ்ஜியத்தின் கடைசி மற்றும் இருபதாவது பேரரசர் இரண்டாம் பகதூர் ஷா. 24 அக்டோபர் 1775 இல் அவர் பிறந்த போது மிர்சா அபு ஸாபர் சிராஜ் உத் தின் முகமது என்று அழைக்கப்பட்டார். அவர் ஒரு கவிஞர் என்பதால் பகதூர் ஷா ஸாபர் என்றும் அழைக்கப்பட்டார்.

அவரது தந்தை இரண்டாம் அக்பர் 1837 ஆம் ஆண்டில் இறந்தார். அதற்கு பின் பட்டத்திற்கு வந்த பகதூர் ஷா பெயரளவிற்குத்தான் பேரரசராக இருந்தார். ஏனெனில் அப்போது மொகலாய சாம்ராஜ்ஜியம் பழைய தில்லியின் கோட்டைக்குள் மட்டுமே சுருங்கியிருந்தது. 1857 இல் நடந்த சிப்பாய் கலகம் அல்லது முதல் இந்திய சுதந்திரப் போரில் அவரது பங்கு காரணமாக பிரிட்டீஷார் அவர் மீது குற்றங்களை சுமத்தி கைது செய்து பர்மாவின் ரங்கூனுக்கு நாடு கடத்தினர்.

இதற்கு முன்னரே பகதூர் ஷாவின் தந்தை இரண்டாம் அக்பர் பிரிட்டீஷாரால் கைது செய்யப்பட்டார். அக்பர் தனக்கு அடுத்து பகதூர் ஷாவை வாரிசாக தேர்ந்தெடுக்கப்படவில்லை. அக்பரின் மனைவிகளில் ஒருவரான பேகம் என்பவர் தனது மகன் மிர்சா ஜகாங்கீரை வாரிசாக அறிவிக்குமாறு கணவரை நிர்ப்பந்தித்தார். ஆனால் தில்லி செங்கோட்டையைத் தாக்கிய ஜஹாங்கீரை கைது செய்த கிழக்கிந்தியக் கம்பெனி அவரை நாடு கடத்தியது. இதன் மூலம் பகதூர் ஷா மன்னராக பதவியேற்க வாய்ப்பு கிடைத்தது.

The Last Mughal Emperor

முடிவுக்கு வந்த பேரரசு

தென்னிந்தியாவின் தக்காண பீடபூமியில் இருந்த மொகலாய சாம்ராஜ்ஜியத்தை மராத்திய அரசர்கள் முடிவுக்கு கொண்டு வந்தார்கள். இதனால் 19 ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் பேரரசு என்பது தில்லி மற்றும் அதனைச் சுற்றிய பகுதிகளில் மட்டும் இருந்தது.

19 நூற்றாண்டின் மத்தியில் பிரிட்டீஷாரின் கிழக்கிந்தியக் கம்பெனி இந்தியாவின் அரசியல் மற்றும் இராணுவ அரங்கில் செல்வாக்குடன் திகழ்ந்தது. தில்லிக்கு வெளியே இருந்த மொகலாயப் பேரரசை கம்பெனி கட்டுப்படுத்தியது. பகதூர் ஷாவை கம்பெனி மதித்து அவருக்கு ஓய்வூதியத் தொகையை வழங்கியது. அதற்கு ஈடாக பகதூர் ஷா தில்லியில் கம்பெனி வரி வசூலிப்பதற்கு அனுமதி வழங்கினார். மேலும் இராணவ தளத்தை வைத்துக் கொள்வதற்கும் அனுமதி கொடுத்தார். 1857 முதல் இந்திய சுதந்திரப் போருக்கு பிறகு அவர் கம்பெனியால் நாடு கடத்தப்பட்டார்.

பகதூர் ஷா உருது மொழியில் நன்கு அறியப்பட்ட ஒரு கவிஞர் ஆவார். பல உருது கஸல் கவிதைகளை எழுதியிருக்கிறார். அவற்றில் சில 1857 சிப்பாய் கலகத்தின் போது நடந்த போரால் அழிக்கப்பட்டன. பெருமளவு காப்பாற்றப்பட்டன. அவரது தர்பாரில் பல உருது அறிஞர்கள் மற்றும் கவிஞர்கள் இருந்தனர்.

The Last Emperor

பேரரசாக அறிவிப்பு

1857 இல் சிப்பாய் கலம் எனப்படும் முதல் இந்திய சுதந்திரப் போர் வட இந்தியாவில் பரவிய போது இந்திய சிப்பாய்களின் பிரிவு தில்லியின் மொகலாய அரசை அடைந்தது. பகதூர் ஷா அனைத்து மதங்களையும் மதித்து நடப்பவர் என்பதால் பல இந்திய அரசர்களும் இந்திய சிப்பாய்ப் பிரிவுகளும் அவரை இந்தியாவின் பேரரசராக அறிவித்தன.

கலகம் செய்த சிப்பாய்கள் முதலில் தில்லிக்கு வந்த போது பகதூர் ஷா தயங்கினார். அவர்களை பராமரித்து ஒரு ராஜ்ஜியத்தை ஆள்வது சிரமம் என்று கருதினார். இருப்பினும் சிப்பாய்கள் அவர் இல்லாமல் கிழக்கிந்தியக் கம்பெனியை வெல்வது கடினம் என்பதை தெரிவித்த பிறகு அவர் ஏற்றுக் கொண்டார்.

1857 மே மாதம் 16 ஆம் தேதி தில்லியில் சிப்பாயகளும் பகதூர் ஷாவின் பணியாட்களும் இணைந்து 52 ஐரோப்பியக் கைதிகளை கொன்றனர். இதை பகதூர் ஷா விரும்பவில்லை என்றாலும் அவரை மீறி நடந்த இப்படுகொலைக்கு அவர்தான் பொறுப்பு என பின்னர் அவர் பிரிட்டீஷ் அரசு நடத்திய வழக்கில் குற்றவாளியாக கருதப்பட்டார்.

தில்லியில் சிப்பாய்கள் ஆக்கிரமித்தாலும் அவர்கள் ஒரு அமைப்பாக திரண்டு செயல்படவில்லை. குழப்பங்களும் பிரச்சினைகளும் இருந்தன. பேரரசர் பகதூர் ஷா தனது மூத்த மகனான மிர்சா மொகலை தனது இராணுவத்தின் தளபதியாக நியமித்தார். ஆனால் மிர்சாவுக்கு பெரிய அளவு இராணுவ அனுபவம் இல்லை என்பதால் அவரை சிப்பாய்கள் நிராகரித்தனர். எனவே சிப்பாய்களின் பல பிரிவுகளுக்கு ஒரு தலைவர் என்று யாருமில்லை.

பிரிட்டீஷ் படைகள் தில்லியை முற்றுகையிட்டு போது அவர்களின் வெற்றி நிச்சயம் எனத் தெரிந்த போது பகதூர் ஷா தில்லிக்கு வெளியே உள்ள ஹூமாயுன் கல்லறை வளாகத்தில் தஞ்சமடைந்தார். அங்கே கம்பெனியின் படைகள் மேஜர் வில்லியன் ஹட்சன் தலைமையில் பகதூர் ஷாவை கைது செய்தது. அவரது மகன்கள், பேரன்கள், ஆதரவாளர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர். பிறகு தில்லி மீட்கப்பட்டதாக கம்பெனி அறிவித்தது. பகதூர் ஷாவை கம்பெனியின் படைகள் இழிவாக நடத்தின. தனது வாரிசுகள் அனைவரும் சுட்டுக்கொல்லப் பட்ட செய்தியைக் கேட்டு அவர் அதிர்ச்சியடைந்தார்.

The Last Mughal Emperor

21 நாட்கள் நடந்த வழக்கு

தில்லி செங்கோட்டையில் பிரிட்டீஷார், பகதூர் ஷாவுக்கு எதிரான வழக்கை 21 நாட்களுக்கு நடத்தினர். அவர் மீது இந்திய சிப்பாய்களின் கலகத்தை ஆதரித்தது, உதவி செய்தது, பிரிட்டீஷ் ஆட்சிக்கு எதிராக போர் நடத்தியது, கிறித்தவரகளை கொல்வதற்கு காரணமாக இருந்தது ஆகிய நான்கு குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டன.

தன் மீது வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகளை பகதூர் ஷா மறுத்தார். சிப்பாய்களின் முன்பு தான் கையறு நிலையில் இருந்ததாக கூறினார். அவரது அலுவலக முத்திரைகளை சிப்பாயகள் அவர்களாகவே பயன்படுத்தியதாக கூறினார் பகதூர் ஷா. சிப்பாய்களை கட்டுப்படுத்தும் அதிகாரத்தில் அவர் இல்லை என்றாலும் அவர்தான் கலகத்தின் மூலகர்த்தா என்று இவ்வழக்கில் குற்றம் சாட்டப்பட்டார்.

செய்யாத குற்றத்தை பகதூர் ஷா செய்ததாக அவரது பிரதான மந்திரியான அஷனுல்லா கான் நீதிமன்றத்தில் காட்டிக் கொடுத்தார். இந்தக் காட்டிக் கொடுத்தல் காரணமாக அவருக்கு மன்னிப்பு வழங்கப்பட்டது.

நாடு கடத்தப்பட்ட பகதூர் ஷா

பிறகு குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்ட பகதூர் ஷாவை கம்பெனி, பர்மாவின் ரங்கூனுக்கு நாடுகடத்தியது. அவருடன் அவரது மனைவி ஸீனத் மஹல் மற்றும் சில குடும்ப உறுப்பினர்கள் மாட்டு வண்டிகளில் பர்மாவிற்கு பயணித்தனர். அவர்களை கம்பெனியின் படைப்பிரிவு ஒன்று வழிநடத்தியது.

1862 ஆம் ஆண்டில் ரங்கூனில் இருந்த பகதூர் ஷாவிற்கு வயது 87. மிகவும் நோய்வாய்ப்பட்ட நிலையில் நவம்பர் 7 ஆம் தேதி அவர் மரணமடைந்தார். அன்று மாலையே அவரது உடல் அருகில் இருந்த ஒரு பகுதியில் புதைக்கப்பட்டது. அவரது சமாதி 1991 ஆம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்ட பிறகு அங்கே அவரது பெயரில் ஒரு தர்ஹா கட்டப்பட்டது.

பகதூர் ஷாவிற்கு நான்கு மனைவிகளும், 22 மகன்களும், 32 மகள்களும் இருந்தனர். பலர் அவரது வாரிசுகள் என்று அழைத்துக் கொண்டு ஹைதராபாத், அவரங்காபாத், தில்லி, போபால், கொல்கத்தா, பீகார் மற்றும் பெங்களூர் போன்ற இடங்களில் வாழ்கின்றனர். ஆனால் அவரது வாரிசுகள் என்ற உரிமை கோரல்கள் அடிக்கடி சிக்கலுக்குள்ளாவதுண்டு. அவற்றின் உண்மைத்தன்மை குறித்து சர்ச்சைகள் எழுவதுண்டு.

Bahadur Shah Zafar grave

சூஃபியிசம்


இஸ்லாமின் சூஃபி பிரிவில் பகதூர் ஷாவிற்கு பெரும் பக்தி உண்டு. அவரும் ஒரு சூஃபி ஞானியாக கருதப்படுகிறார். சூஃபி வழிபாட்டின் ஒரு பிரிவான பழைமைவாத மூடநம்பிக்கை கொண்ட சூஃபி கருத்துக்களும் அவரிடம் இருந்தன. அதே நேரத்தில் அவர் மத நல்லிணக்கம் கொண்டவராகவும் இருந்தார். அவருடைய கருத்துப்படி இஸ்லாம், இந்துமதம் இரண்டும் சாரத்தில் ஒரே உண்மையை பகிர்ந்து கொள்கின்றன. அவரது பல உருது கவிதைகள் அவரது வாழ்நாளிலேயே வெளியிடப்பட்டன. அவரது வாழ்க்கை நாடகங்களாகவும், தொலைக்காட்சி தொடராகவம், சில திரைப்படங்களிலும் வெளிவந்திருக்கின்றன.

மொகலாய சாம்ராஜ்ஜியத்தின் கடைசி பேரரசரான இரண்டாம் பகதூர் ஷாவின் காலம் இந்தியாவின் வரலாற்றையும் புரட்டிப் போட்ட காலம் என்றால் மிகையில்லை.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?