Eknath Shinde News Sense
இந்தியா

பாஜக ஏக்நாத் ஷிண்டேவை BJP முதல்வராக்கியது ஏன்? மறைந்திருக்கும் 5 அரசியல் கணக்கு என்ன?

106 சட்டமன்ற உறுப்பினர்களை வைத்திருக்கும் பாஜக ஆட்சி அமைக்காமல், கிட்டத்தட்ட 39 சட்டமன்ற உறுப்பினர்களை மட்டுமே வைத்திருக்கும் சிவ சேனாவிலிருந்து பிரிந்து வந்த ஏக்நாத் ஷிண்டே ஏன் ஆட்சி அமைக்கிறார் என்பது பல்வேறு அரசியல் விமர்சகர்களால் ஆச்சர்யத்தோடு பார்க்கப்படுகிறது.

NewsSense Editorial Team

ஏக்நாத் ஷிண்டே மகாராஷ்டிர மாநிலத்தின் முதல்வராக பதவிப் பிரமாணம் செய்து கொண்டார். பாஜகவின் தேவேந்திர ஃபட்னாவிஸ் துணை முதல்வராக பதவி ஏற்றுக் கொண்டார். இந்திய பிரதமர் நரேந்திர மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோர் வாழ்த்து தெரிவித்தனர்.


சிவசேனா கட்சிப் பிளவுக்கும், தங்களுக்கும் எந்த ஒரு தொடர்பும் இல்லை என பாஜகவின் சில நிர்வாகிகள் கூறி வந்தாலும், ஏக்நாத் ஷிண்டே ஆட்சி அமைக்க பாஜக தன் ஆதரவைக் கொடுத்துள்ளது.

106 சட்டமன்ற உறுப்பினர்களை வைத்திருக்கும் பாஜக ஆட்சி அமைக்காமல், கிட்டத்தட்ட 39 சட்டமன்ற உறுப்பினர்களை மட்டுமே வைத்திருக்கும் சிவ சேனாவிலிருந்து பிரிந்து வந்த ஏக்நாத் ஷிண்டே ஏன் ஆட்சி அமைக்கிறார் என்பது பல்வேறு அரசியல் விமர்சகர்களால் ஆச்சர்யத்தோடு பார்க்கப்படுகிறது. பாஜகவின் அடுத்த திட்டம் என்ன என்று பல தரப்பினர் தங்கள் மூளையை கசக்கிப் பிழியத் தொடங்கியுள்ளனர்.


சரி, ஏன் ஏக்நாத் ஷிண்டேவை ஆட்சி அமைக்க வைத்தது பாஜக?

1. காத்திருக்கும் சட்டப் போராட்டம்


சிவ சேனாவின் தலைவர் உத்தவ் தாக்கரேவின் பரிந்துரையின் பேரில் மகாராஷ்டிராவின் துணை சபாநாயகர் நர்ஹாரி சீதாராம் சிர்வால் 16 சட்டமன்ற உறுப்பினர்களை தகுதிநீக்கம் செய்தார். சீதாராம் செய்தது சரியா தவறா என உச்ச நீதிமன்றத்தில் விவாதிக்கப்பட்டு வருகிறது. இது முதல் சட்டப் பிரச்னையாக பலரால் பார்க்கப்படுகிறது. இது உடனே தீரக் கூடிய வழக்கல்ல.


சிவசேனாவில் இருந்து பிரிந்து வந்த சட்டமன்ற உறுப்பினர்கள் மீது கட்சித் தாவல் தடைச் சட்டம் பாயக் கூடாது என்றால் 1. அவர்கள் பாஜக உடன் இணைய வேண்டும், குறைந்தபட்சம் ஒரு தனிக் குழுவாக தேசிய முற்போக்குக் கூட்டணியை ஆதரிக்க வேண்டும் 2. தாங்கள் தான் உண்மையான சிவ சேனா என நிரூபிக்க வேண்டும். இதை எல்லாம் செய்தால் கூட தங்கள் தரப்பில் நியாயம் இருப்பதாக சிவ சேனா நீதிமன்றங்களை நாட அதிக வாய்ப்புள்ளதாக ஊடகங்களில் கூறப்படுகிறது.

2. நீடித்து நிற்பார்களா?


என்ன தான் பாஜக இப்போது சிவசேனா கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்களை தங்கள் பக்கம் இழுத்திருந்தாலும், அவர்களால் தொடர்ந்து சிவ சேனா கட்சியை எதிர்த்து ஆட்சி செய்ய முடியுமா என்கிற கேள்வியை பாஜக கேட்டுக் கொள்கிறது. சிவசேனாவில் இருந்து பிரிந்து வந்த எம் எல் ஏக்களிலேயே இரு பிரிவு இருப்பதாக பல வலைதளங்களில் செய்தி வெளியாகியுள்ளது.


அது போக, உள்ளூரில் சிவ சேனா கட்சியின் சின்னம், பால் தாக்கரேவின் பெயரைச் சொல்லி ஓட்டு வாங்கியவர்களால் தற்போது அந்த பின்புலங்களின்றி கட்சிக்குள் காலம் தள்ள முடியுமா என சிவ சேனா சட்டமன்ற உறுப்பினர்கள் கணக்கு போட வாய்ப்புள்ளது.


இதெல்லாம் விட, கொஞ்சம் ஆக்ரோஷமான போக்கு கொண்ட சிவ சேனாவின் அடிமட்டத் தொண்டர்கள் மத்தியில் இனி இவர்கள் எப்படி காலம் தள்ள முடியும் என்கிற கேள்வியையும் கேட்டுக் கொள்வர். எனவே சிவ சேனாவின் சட்டமன்ற உறுப்பினர்களை முழுமையாக நம்பாமல் தான் பாஜக ஆட்சிக் கட்டிலில் அமராமல் ஏக்நாத் ஷிண்டேவை அமர வைத்துள்ளதாக குவின்ட் பத்திரிகையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

3. சிவசேனாவை பலவீனப்படுத்து - ஒரே இந்துத்வாவை நிலைநாட்டு


சமீபத்தில் பாஜகவின் தேவேந்திர ஃபட்நாவிஸ் பேசிய போது, ஏக்நாத் ஷிண்டே தரப்பு தான் உண்மையான சிவ சேனா என வலியுறுத்துவது போலப் பேசினார்.


'சிவ சேனாவிலிருந்து ஒருவரை முதல்வராக்குங்களேன், நானே முதல்வர் பொறுப்பை விட்டுக் கொடுக்கிறேன்' என உத்தவ் தாக்கரே அறைகூவல் வேறு விடுத்தார்.


பாஜக தரப்பு ஒரே கல்லில் இரண்டு மாங்காய்களை அடிப்பது போல, ஏக்நாத் ஷிண்டேவை முதல்வராக்கி உத்தவ் தாக்கரேவின் வாதத்துக்கு பலமான பதிலடி கொடுத்துவிட்டது. இது உத்தவ் தாக்கரேவை கட்சியிலும், ஆட்சியிலும் பலவீனப்படுத்திவிட்டது.


ஏதோ சிவசேனா கட்சியே இரண்டாகப் பிளவுபட்டு, சிவ சேனாவிலிருந்தே ஒரு புதிய முதல்வர் உருவானது போலொரு பிம்பத்தை ஏற்படுத்திவிட்டது. சிவசேனா பலவீனப்பட்டுவிட்டது.


இந்தியாவில் பல கட்சிகள் இருந்தாலும், இந்துக்களுக்கும், இந்துத்துவத்துக்கும் குரல் கொடுக்கும் ஒரே கட்சி என தன்னை பறைசாற்றி வருகிறது பாஜக. அந்த இடத்தை சிவ சேனாவும் கடந்த காலங்களில் நிரப்பிக் கொண்டிருந்தது. இப்போது சிவ சேனாவை பலவீனப்படுத்தியதன் மூலம், இந்தியாவில் இந்துத்துவத்தின் குரல் என்றால் அது பாஜகவின் குரல் மட்டுமே என்பது போல, சிவசேனாவின் முதுகெலும்பையே இது உடைத்துவிட்டது.

4. மக்களவைத் தேர்தல் - மிஷன் 2024


கடந்த 2019 மக்களவைத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி (23) மற்றும் சிவசேனா (18) இணைந்து மகாராஷ்டிரத்தில் உள்ள 48 இடங்களில் 41-ல் வெற்றி பெற்றனர்.


அதனைத் தொடர்ந்து 2019 அக்டோபரில் அறிவிக்கப்பட்ட 14ஆவது சட்டமன்றத் தேர்தலில் பல்வேறு குழப்பங்களைத் தொடர்ந்து என் சி பி, காங்கிரஸ், சிவ சேனா இணைந்து ஆட்சியை அமைத்தனர்.


இந்த கூட்டணி தொடர்ந்தால் 2024ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் தேசிய முற்போக்குக் கூட்டணி கணிசமான இடங்களில் தோல்வி காண்பதற்கான வாய்ப்பு ஏற்பட்டிருக்கும்.


இப்போது சிவசேனாவை பிளந்ததன் மூலம், வலுவான என் சி பி, காங்கிரஸ், சிவ சேனா கூட்டணியையே உடைத்துவிட்டது பாஜக. இன்னும் சுமார் இரண்டு ஆண்டு காலத்துக்குள் பாஜக தன் கூட்டணியை வலுப்படுத்த, எதிரணியை வலுவிழக்கச் செய்ய அனைத்து வேலைகளையும் மேற்கொள்ளும் என எதிர்பார்க்கலாம்.

5. சாதி அரசியல் & ஏற்படுத்தும் அரசியல் பிம்பம்


இத்தனை சிரமப்பட்டு ஆட்சி கைக்கு வரும் போது, ஏக்நாத் ஷிண்டேவை முதல்வர் ஆக்கியது, பாரதிய ஜனதா கட்சி, ஏழை எளிய அரசியல் தலைவர்களை ஆதரிக்கிறது என்பது போன்ற பிம்பத்தை ஏற்படுத்தியுள்ளது.


அதோடு ஏக்நாத் ஷிண்டே ஒரு மராத்தா சமூகத்தைச் சேர்ந்தவர் என்பது, அச்சமூகத்தின் மத்தியிலும் ஒரு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.


இதை எல்லாம் கணக்கில் எடுத்துக் கொண்டு பாஜக, ஏக்நாத் ஷிண்டேவை முதல்வராக்கி இருக்கலாம் என பல்வேறு தளங்களில் பலர் தங்கள் கருத்துக்களைப் பதிவு செய்துள்ளனர்.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?