இன்றைய வங்கதேசம் அன்று கிழக்கு பாகிஸ்தானாக இருந்தது. மேற்கு பாகிஸ்தானின் ஒடுக்குமுறையை எதிர்த்து வங்கதேச மக்கள் போராடினர். இதையடுத்து பெரும் அகதிகள் இந்தியா வந்தனர். இப்படியாக இந்தியா பாக் போர் 3 டிசம்பர் 1971 அன்று துவங்கி 16 டிசம்பர் 1971 இல் டாக்கா வீழும் வரை போர் நடந்தது. மேற்கிலும் கிழக்கிலும் இந்தியா வெற்றி பெற்றதை அடுத்து பாக் சரணடைந்தது. கிழக்கு பாகிஸ்தான் வங்கதேசமாக பிறந்தது.
இந்தப் போரில் இந்தியாவிற்கு ஆதரவாக சோவியத் யூனியனும் பாகிஸ்தானுக்கு ஆதரவாக அமெரிக்காவும் செயல்பட்டன. அப்போது இரு வல்லரசு நாடுகளும் இந்த முரண்பாட்டை எப்படிக் கையாண்டன என்று பார்ப்போம்.
Russian Helps India in 1971 War
வங்கதேசம் பிரிந்து தனி நாடாக உருவாவது தனது போட்டியாளர்களான சீனா மற்றும் அமெரிக்காவின் நிலையை பலவீனப்படுத்தும் என்று சோவியத் யூனியன் நினைத்தது. சீனாவோ அமெரிக்காவோ இந்தியாவுடன் முரண்பட்டால் அதை தடுக்கும் நடவடிக்கை எடுக்கப்படும் என சோவியத் யூனியன் இந்தியாவிடம் உறுதியளித்திருந்தது. இந்த உத்திரவாதம் ஆகஸ்ட் 1971 இல் கையெழுத்திடப்பட்ட இந்தோ - சோவியத் நட்புறவு மற்றும் ஒத்துழைப்பு ஒப்பந்தத்தில் இடம்பெற்றுள்ளது.
அதே நேரம் சோவியத் ஒன்றியம் பாகிஸ்தானோடும் நல்லுறவை பேணியது. 1971 அக்டோபர் வரை பாகிஸ்தானுக்கு சோவியத்தின் பொருளாதார உதவிகள் கிடைத்து வந்தன. மேலும் இந்தியாவோடு முரண்பட்டால் அது பாகிஸ்தானுக்கு பெரும் சிக்கலை கொண்டு வரும் என்று சோவியத் யூனியன் பாகிஸ்தானை ரகசியமாக எச்சரித்திருந்தது.
அமெரிக்காவோ அரசியல், பொருளாதார ரீதியாக பாகிஸ்தானை ஆதரித்தது. அப்போது அமெரிக்காவின் அதிபராக நிக்சனும், வெளியுறவுத் துறை அமைச்சராக கிஸ்ஸிங்கரும் இருந்தனர். சோவியத் யூனியனும் இந்தியாவும் கூட்டணி வைத்திருப்பதால் அமெரிக்கா பாகிஸ்தானை ஆதரிப்பதன் மூலம் தெற்காசியாவில் சோவியத் யூனியனின் செல்வாக்கை குறைக்கலாம் என்று எண்ணியது.
கெடுபிடிப் போரின் காலம் முழுவதிலும் அமெரிக்கா பாகிஸ்தானை ஆதரித்து வந்தது. மேலும் சோவியத் யூனியனுடன் முரண்பட்ட சீனாவையும் தனக்கு ஆதரவாக கொண்டு வர முயற்சித்தது. அதற்காக அதிபர் நிக்சன் பிப்ரவரி 1972 இல் சீனா சென்று வந்தார். இந்நிலையில் பாகிஸ்தான் மீதான இந்தியாவின் போர் இப்பிராந்தியத்தில் சோவியத் ஆதிக்கத்தை கொண்டு வரும் என்று அமெரிக்கா எண்ணியது.
Richard Nixon
அதன் பொருட்டு இந்தியா பாக் போரின் போது அதிபர் நிக்சன் ஜோர்டான், ஈரான் மற்றும் சீனா மூன்று நாடுகளையும் பாகிஸ்தானுக்கு இராணுவ உதவி செய்யுமாறு கேட்டது. எனினும் பெரிய உதவிகள் எதுவும் பாகிஸ்தானுக்கு வரவில்லை. மேலும் அதிபர் நிக்சனது நிர்வாகம் கிழக்கு பாகிஸ்தானில் நடந்த இனப்படுகொலையை கண்டு கொள்ளாதது அமெரிக்காவிலும் சர்வதேச ஊடகங்களிலும் பெரும் கண்டனத்தைப் பெற்றது.
அப்போது ஐ.நா.சபையில் அமெரிக்காவின் தூதராக ஜார்ஜ் எச் டபிள்யூ புஷ் பணியாற்றி வந்தார். அவர் ஐ.நா.பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா பாக் போர் நிறுத்தம் மற்றும் இருநாடுகளும் தமது படைகளை திரும்பப் பெற வேண்டும் என்ற தீர்மானத்தைக் கொண்டு வந்தார். எனினும் சோவியத் யூனியன் இந்த தீர்மானத்தை தனது வீட்டோ அதிகாரத்தால் ரத்து செய்தது. மேலும் இதைத்தாண்டி நிக்சன் - கிஸ்ஸிங்கர் இருவரும் சோவியத் யூனியனுக்கு இந்தியாவை போரை நிறுத்தச் சொல்லி அழுத்தம் கொடுத்தாலும் அது பலனளிக்கவில்லை.
India Pakistan War
கிழக்கில் பாகிஸ்தான் தோல்வி உறுதியாகத் தெரிந்த உடன் அதிபர் நிக்சன் வங்காள விரிகுடாவில் அமெரிக்க கடற்படையின் பிரிவு ஒன்றை அனுப்பினார். யூஎஸ்எஸ் எண்டர்பிரைஸ் எனும் விமானந்தாங்கிக் கப்பலின் தலைமையில் அதன் துணைக்கப்பல்கள் வங்காள விரிகுடாவிற்கு வந்து சேர்ந்தன. இது சோவியத் யூனியன் மற்றும் இந்தியாவிற்கு ஒரு மிரட்டலாக இருக்கும் பொருட்டு அனுப்பப் பட்டது.
இதை அடுத்து சோவியத் யூனியனின் விளாடிவோஸ்டோக்கில் இருந்து இரண்டு குழு போர்க்கப்பல்கள் அனுப்பப்பட்டன. இவை அமெரிக்காவின் போர்க்கப்பல்களை பின் தொடர்ந்தன. இந்த பின்தொடர்தல் 18 டிசம்பர் 1971 முதல் 7 ஜனவரி 1972 வரை நடந்தது. மேலும் சோவியத் கப்பல் குழுவில் ஒரு அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பலும் இருந்தது. இத்தகைய சோவியத் அணிவகுப்பு அமெரிக்காவின் மிரட்டலுக்கு பதிலடியாக கருதப்பட்டது.
ஒருவேளை அன்று அமெரிக்க கடற்படை இந்தியக் கடற்படையைத் தாக்கியிருந்தால் இந்தியாவால் ஒன்றும் செய்திருக்க முடியாது. இந்தியாவின் கடற்படை பலம் அமெரிக்காவின் படையின் அருகே கூட நிற்க முடியாது.
இந்தியா பாகிஸ்தான் போர் தீவிரமடைந்த நிலையில் பாகிஸ்தான் படுதோல்வி அடையப் போவது அமெரிக்காவிற்குத் தெரிந்தது. இந்நிலையில் அமெரிக்க அதிபர் நிக்சன் சோவியத் யூனியனின் பிரஷ்நேவுடன் ஹாட்லைன் எனப்படும் நேரடி தொலைபேசி வழியாகப் பேசினார். இப்பேச்சில் இந்தியாவை சோவியத் யூனியன் கட்டுப்படுத்த வேண்டும் என்று நிக்சன் வலியுறுத்தினார். அதற்குள் பாகிஸ்தான் இராணுவப் படைகள் வங்கதேசத்தில் சரணடைந்த பிறகு போரும் முடிவுக்கு வந்தது.
India Pakistan War
1971 போருக்கு பிறகு தற்காலத்தில் அமெரிக்காவின் நிலை மாறியிருக்கிறது. தெற்காசியாவில் இந்தியாவின் முக்கியத்துவத்தை அமெரிக்கா அங்கீகரித்திருக்கிறது. தற்போது இருநாடுகளும் நெருக்கமான உறவைப் பேணுகின்றன. அமெரிக்காவுடன் பல ஒப்பந்தகளையும் இந்தியா போட்டிருக்கிறது. அதே போன்று சோவியத் யூனியனும் பாகிஸ்தானோடு நட்பு பாராட்ட முயன்றது. 1972 ஆம் ஆண்டில் பாகிஸ்தான் அதிபர் பூட்டோ அரசுமுறைப் பயணமாக சோவியத் யூனியன் சென்றார்.
தற்போது இந்தியா பாக் போர் குறித்த அமெரிக்க அரசின் செயல்பாடு அப்போது அதிபர், அமைச்சர்கள் என்ன பேசினார்கள் அனைத்தும் வெளியாகியிருக்கிறது. மேலும் இப்போரில் இராணுவ ரீதியாகவும் அரசியல் ரீதியாகவும் பெரும் பொறுப்பில் இருந்தவர்கள் பலர் தமது அனுபவங்களை புத்தகங்களாக எழுதியிருக்கின்றனர். ஆகவே அன்று என்ன நடந்தது என்பது எதுவும் இரகசியம் இல்லை.
நிக்சனும் கிஸ்ஸிங்கரும் பாகிஸ்தான் வெற்றிபெறும் என்று மிகையாக எண்ணினார்கள். மேலும் வங்கதேசத்தில் நடந்த இனப்படுகொலையை அவர்கள் கணக்கில் கொள்ளவில்லை. போரில் இந்தியாவின் கை ஓங்கிய போது உளவியல் ரீதியாக இந்தியாவை மிரட்டுவதற்கு கப்பற்படையை அனுப்பினார்கள். இவை அனைத்தும் அன்றைய அமெரிக்க அரசின் நிர்வாகத் தோல்வியாக இன்றைய அமெரிக்க ஆய்வுகள் கருதுகின்றன. மேலும் 1970 -களில் அமெரிக்கா, வியட்நாம் போரில் சிக்கியிருந்தது. அப்படி இருக்கும் போது இந்திய துணைக் கண்டத்தில் மற்றுமொரு போரில் அமெரிக்கா இறங்குவதற்கு வாய்ப்பே இல்லை.
உலகின் எந்த ஒரு போரும் வல்லரசு நாடுகளின் ஒப்பதலோ இல்லை மறுப்போ இன்றி நடப்பதில்லை. அந்த நிலைமை இன்றும் தொடர்கிறது. ஈராக் போர் முதல் உக்ரைன் போர் வரை அதற்கு பல சான்றுகள் இருக்கின்றன. உலகின் ஏதோ ஒரு மூலையில் நடக்கும் ஒரு போர் கூட வல்லரசு நாடுகளின் பங்கேற்பால் உலகப்போராக மாறும் அபாயம் அன்றும் இருந்தது. இன்றும் தொடர்கிறது.