Shardhul Thakur

 

Facebook

இந்தியா

Morning News Wrap : அசத்திய ஷர்துல் -அச்சுறுத்தும் புதிய கொரோனா - இன்றைய முக்கிய செய்திகள்

Antony Ajay R

அசத்திய ஷர்துல் - ஆல் அவுட் தென் ஆப்ரிக்கா



இந்தியா - தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ஜோகன்னஸ்பெர்க் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. மூன்று போட்டிகளைக் கொண்ட தொடரின் இரண்டாவது போட்டியின் இரண்டாவது நாள் ஆட்டம் நேற்று சூடு பிடித்தது. முதல் இன்னிங்ஸில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணியை முதல் நாளிலேயே 202 ரன்களுக்கு மடக்கியது தென் ஆப்ரிக்கா அணி. ஆனால் பேட்டிங்கில் விட்ட பிடியை பவுலிங்கில் இறுக்கப்பற்றிக் கொடுத்திருக்கிறார் ஷர்துல்.

அவரது அசத்தலான பந்துவீச்சால் கேப்டன் எல்கார், கீகன் பீட்டர்சன், வான்டர் டசன், பவுமா, விக்கெட் கீப்பர் வெர்ரேன், மார்கோ ஜேன்சன், லுங்கி இங்கிடி ஆகிய 7 பேரின் விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதனால் 229 ரன்களில் ஆட்டமிழந்தது தென் ஆப்ரிக்க அணி. பின்னர் இரண்டாவது இன்னிங்க்ஸை தொடங்கிய இந்திய அணியில் கே.எல் ராகுல் மாற்றும் மயங் அகர்வால் ஆட்டமிழக்க புஜாரா 35 ரன்களுடனும், ரஹானே 11 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.


இந்த போட்டியில் ஏழு விக்கெட்டுகளை கைப்பற்றியதன் மூலம் முதன்முதலாக ஒரே ஆட்டத்தில் 5 விக்கெட் வீழ்த்தியிருக்கிறார் ஷர்துல்.

இந்த போட்டியில் வெல்வதன் மூலம் தென் ஆப்ரிக்க அணியை அதன் சொந்த மண்ணில் முதன்முறையாக வீழ்த்துமா இந்தியா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்கவேண்டும்.

Indian Army 

கால்வான் பள்ளத்தாக்கில் இந்திய தேசியக்கொடி

கடந்த ஆண்டு ஜூன் மாதம் கால்வான் பள்ளத்தாக்கில் இந்திய மற்றும் சின ராணுவங்களுக்கு இடையில் மோதல் நடைபெற்றது. அதில் இருபக்கமும் பல வீரர்கள் காயமடைந்தனர். கால்வானில் பதற்ற சூழல் தொடர்ந்து வந்தது.


கடந்த புத்தாண்டில் சீனாவின் அரசு ஆதரவு பத்திரிக்கையான குளோபல் டைம்ஸ் - ன் ட்வீட்டர் பதிவில் “சீனாவில் நாடுமுழுவதும் ஐந்து நட்சத்திர கொடி ஏற்றப்பட்டுள்ளது. லடாக்கின் கால்வான் பள்ளத்தாக்கிலும்” எனக் குறிப்பிட்டிருந்தது. இதனால் கடந்த இரண்டாம் தேதி ராகுல் காந்தி, “இந்தியாவின் மூவர்ணக்கொடி கால்வானில் அழகாக இருக்கிறது. சீனா பதில் சொல்ல வேண்டும், மோடி ஜி மௌனத்தைக் களைக்கவும்” என ட்வீட் செய்துள்ளார்.


இந்நிலையில் நேற்று கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் உள்ளிட்ட பாஜக மத்திய அமைச்சர்கள் மற்றும் முக்கிய தலைவர்கள் இந்திய ராணுவ வீரர்கள் கால்வானில் இருக்கும் புகைப்படத்தை டிவிட்டரில் பகிர்ந்து “ராகுல் காந்தி ஏன் சீன ஆதரவு பிரச்சாரத்தை மேற்கொள்கிறார்” எனக் கேள்வி எழுப்பினர்.


ஆனால் நேற்று லடாக்கில் இருக்கும் பாங்காங் ஏரியில் சீனா பாலம் கட்டுவதாக வெளியான செய்தியைப் பகிர்ந்த ராகுல் காந்தி, “பிரதமரின் மௌனம் நம்மை செவிடாக்க கூடியது , நமது நிலம், நமது மக்கள், நமது எல்லைகள் சிறந்ததைப் பெறத் தகுதி வாய்ந்தது” என ட்வீட் செய்திருந்தார்.


இதுவரை லடாக் எல்லை பிரச்சனை குறித்து இரு நாட்டு ராணுவங்களும் பலதரப்பட்ட பேச்சுவார்த்தை நடத்தியும் பெரிய முடிவுகள் எதுவும் எடுக்கப்படவில்லை. லடாக்கின் கிழக்குப் பகுதியில் உள்ள அக்சாய் சின் ஏற்கெனவே சீனாவின் கட்டுப்பாட்டில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

அம்மா கிளினிக் 

அம்மா மினி கிளினிக்குகள் மூடல்

கடந்த ஆட்சிக்காலத்தில் நிறுவப்பட்ட அம்மா கிளினிக்குகள் மூடப்படுகிறது என அறிவிப்பு வெளியாகியிருக்கிறது. இது குறித்து வேப்பேரி பெரியார் திடலில் கொரோனா சித்த மருத்துவச் சிகிச்சைப் பிரிவைத் தொடங்கிவைத்த அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களிடம் கூறியதாவது, ''கடந்த அ.தி.மு.க ஆட்சிக்காலத்தில் செயல்படுத்தப்பட்ட அம்மா மினி கிளினிக் திட்டமானது ஓராண்டு திட்டத்தின் அடிப்படையில் கொண்டு வரப்பட்டது. பல இடங்களில் இது தற்காலிக மருத்துவமனையாகத்தான் இருந்துள்ளது. தற்போதைய ஆட்சியில் நீண்டகால மருத்துவத் திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. இதனால் அம்மா மினி கிளினிக்கில் பணியாற்றிய மருத்துவர்கள் வேறு பணிகளுக்கு அமர்த்தப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் மார்ச் 31 வரையில் கொரோனா பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இவர்களுடன் கூடுதலாக 1,820 பேர் சேர்க்கப்பட்டுள்ளனர். அவர்களும் கொரோனா பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்,''.


ஆனால் முன்னாள் முதல்வரும் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி தனது ட்வீட்டர் பக்கத்தில், “ஏழை, எளிய மக்கள் கிராமப்புறங்களிலும்,நகரப் பகுதிகளிலும், தாங்கள் குடியிருக்கும் பகுதிக்கு அருகிலேயே சிகிச்சை பெறுவதற்காக அம்மா மினி கிளினிக் திட்டம் துவங்கப்பட்டது. இத்திட்டத்திற்கு மாண்புமிகு அம்மா அவர்களின் பெயர் சூட்டப்பட்டுள்ளது என்ற ஒரே அரசியல் காழ்ப்புணர்ச்சியுடன், இத்திட்டம் இந்த விடியா அரசால் மூடப்படுகிறது என்ற அறிவிப்பு வன்மையான கண்டனத்திற்குரியது.


ஏழை எளிய மக்களின் நலனில் அக்கறையில்லாத அரசு என்பதை இந்த விடியா அரசு மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது” எனப் பதிவிட்டிருந்தார். முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவைக் குறிக்கும் “அம்மா” பெயரில் இயங்கிவரும் உணவகம் உள்ளிட்ட சேவைகள் அதே பெயரில் தொடர்வது குறிப்பிடத்தக்கது. மேலும், இந்தத் திட்டம் உருவாக்கப்பட்ட நோக்கத்தை அடையவில்லை எனவும் இதனை மூடுவதன் மூலம் மாதம்தோறும் 26 கோடியே 71 லட்சத்தைச் சேமிக்க முடியும் எனவும் சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

பாம்பை காப்பாற்ற முயன்று விபத்தில் சிக்கிய பேருந்து


சென்னையிலிருந்து மதுரை சென்று கொண்டிருந்த அரசு பேருந்து விழுப்புரம் அருகே விபத்துக்குள்ளானது. இந்த பேருந்தை மதுரை, கல்லுப்பட்டியைச் சேர்ந்த காமராஜ் என்பவர் ஒட்டி சென்று கொண்டிருந்தார். அப்போது சுமார் 6 அடி நீளமுள்ள பாம்பு ஒன்று சாலையைக் கடந்திருக்கிறது. பாம்பின் மீது பேருந்து ஏறிவிடாமல் பாதுகாக்கும் விதம் பேருந்தை வலது பக்கம் திரும்பியிருக்கிறார். அப்போது கட்டுப்பாட்டை இழந்த பேருந்து, சென்டர் மீடியான் மீது ஏறி இணைப்பு சாலையில் சென்றுகொண்டிருந்த ஆட்டோ மீது மோதியது இதனால் ஆட்டோ ஓட்டுநர் அறிவுக்கரசன் படுகாயமடைந்தார். பேருந்திலிருந்தவர்கள் எவ்வித காயமும் இன்றி தப்பினர். காப்பாற்றப்பட்ட பாம்பு அதன் போக்கில் பாதுகாப்பாகச் சென்றது!

Pandemic

பிரான்சில் புதியவகை கொரோனா!


கொரோனா வைரஸ் பரவல் நாளுக்கு நாள் வேகமடைந்து வரும் சூழலில் மற்றொரு புதிய வகை உருமாறிய வைரஸ் பிரான்சில் கண்டறியப்பட்டுள்ளது அச்சத்தை ஏற்படுத்தியிருக்கிறது. இப்போது பிரான்சில் உள்ள கொரோனா நோயாளிகளில் 60% ஒமிக்ரான் வகை வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள். 12 பேர் புதிய வகை வைரஸால் பாதிப்படைந்துள்ளனர். ஐ.ஹெச்.யூ மெடிட்டேரியன் ஆய்வகத்தில் கண்டறியப்பட்டதால் இதற்கு ஐ.ஹெச்.யு எனப் பெயரிடப்பட்டிருக்கிறது. இந்த வைரஸ் ஆப்ரிக்காவின் காங்கோ நாட்டில் உருவாகியிருக்கலாம் எனவும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர். புதிய வைரஸில் 46 வகை மரபணு மாற்றங்கள் கண்டறியப்பட்டுள்ளன. ஆய்வு முடிவுகள் உலக சுகாதார நிறுவனத்திடம் சமர்ப்பிக்கப்பட்டிருக்கின்றன.

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?