இந்தியாவின் மிகப்பெரிய காப்பீட்டு நிறுவனமான லைஃப் இன்ஷூரன்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா, தனது 3.5% பங்குகளை கடந்த மே 4ஆம் தேதி முதல் 9ஆம் தேதி வரை ஐபிஓ மூலம் இந்திய பங்குச் சந்தையில் வெளியிட்டது.
மொத்த பங்கு வெளியீட்டில் 50 சதவீத பங்குகளை நிறுவன முதலீட்டாளர்களுக்கும், மீதமுள்ள 50 சதவீத பங்குகளில் 35 சதவீத பங்குகள் சிறு முதலீட்டாளர்கள் மற்றும் 15 சதவீத பங்குகள் நிறுவனம் அல்லாத முதலீட்டாளர்களுக்கும் ஒதுக்கப்பட்டது.
சுமார் 20,500 கோடி ரூபாயைத் திரட்டும் இந்தத் திட்டத்தில், எல் ஐ சி நிறுவனத்தின் ஒரு பங்கின் விலை 902 ரூபாய் முதல் 949 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டது.
ஏற்கனவே எல் ஐ சி நிறுவனத்தின் பாலிசிகளை வாங்கியிருக்கும் பாலிசிதாரர்களுக்கு ஒரு பங்குக்கு 60 ரூபாயும், சிறு முதலீட்டாளர்கள் மற்றும் எல் ஐ சி நிறுவன ஊழியர்களுக்கு ஒரு பங்குக்கு 45 ரூபாயும் தள்ளுபடி வேறு கொடுக்கப்பட்டது.
இன்று காலை பி எஸ் இ சந்தையில் எல் ஐ சி பங்குகள் பட்டியலிடப்பட்ட போது 8.62% விலை வீழ்ச்சி கண்டு 867 ரூபாய்க்கு பட்டியலிடப்பட்டு வர்த்தகமாகத் தொடங்கியது. அதே போல என் எஸ் இ சந்தையில் 8.11% பங்கு விலை வீழ்ச்சி கண்டு 872 ரூபாய்க்கு வர்த்தகமாகத் தொடங்கியது.
இதில் ஆச்சர்யமான விஷயம் என்னவென்றால், எல் ஐ சி பங்குகள் பொதுவாக 2.95 மடங்கு கூடுதலாக விண்ணப்பிக்கப்பட்டது.
நிறுவன முதலீட்டாளர்கள் 2.83 மடங்கும், நிறுவனமில்லா முதலீட்டாளர்கள் 2.91 மடங்கும், தனிநபர் முதலீட்டாளர்கள் 1.99 மடங்கும், பாலிசிதாரர்களுக்கான பங்குகள் 6.12 மடங்கும், ஊழியர்களுக்கான பங்குகள் 4.4 மடங்கும் கூடுதலாக விண்ணப்பிக்கப்பட்டன.
இருப்பினும் பங்குச் சந்தையில் பல்வேறு காரணங்களால் இன்று எல் ஐ சி நிறுவன பங்குகள் சற்றே விலை வீழ்ச்சி கண்டு வர்த்தகமாகி வருகிறது. தற்போது எல் ஐ சி பங்குகள் சுமாராக 886 ரூபாய்க்கு வர்த்தகமாகி வருகின்றன.
உலக அளவில் மிக நெருக்கடியான சூழல் நிலவும் போது கூட, எல் ஐ சி ஐபிஓ கூடுதலாக விண்ணப்பிக்கப்பட்டது, முதலீட்டாளர்கள் மத்தியில் அந்நிறுவனத்துக்கு இருக்கும் மதிப்பு மற்றும் அந்நிறுவனத்தின் வியாபாரம் ஈட்டும் லாபத்துக்கு இருக்கும் மரியாதையை பறைசாற்றுவதாக இருக்கிறது. இது எல் ஐ சி நிறுவனத்துக்கும் அதன் ஐபிஓவுக்கும் கிடைத்த வெற்றிதான்.
எனவே இப்போதைக்கு எல் ஐ சி பங்குகள் சற்றே விலை குறைந்தாலும் நீண்ட காலத்துக்கு எல் ஐ சி நல்ல லாபம் ஈட்டி, அப்பங்குகளின் விலை ஏறலாம் என பல்வேறு பங்குச் சந்தை நிபுணர்களும் எல் ஐ சி குறித்து நேர்மறையாகவே கூறியுள்ளனர்.
எல் ஐ சி நிறுவனத்துக்கு நல்ல வலுவான வியாபாரம், நம்பகமான பிராண்ட், இந்தியாவின் லைஃப் இன்ஷூரன்ஸ் சந்தையில் அந்நிறுவனம் செலுத்தும் ஆதிக்கம், இன்னும் இந்தியாவில் காப்பீட்டு நிறுவனங்களுக்கு இருக்கும் வியாபார வாய்ப்புகளை எல்லாம் வைத்து பார்க்கும் போது எல் ஐ சி வளர நிறைய வாய்ப்புகள் இருக்கின்றன. காப்பீட்டுச் சந்தை இந்தியாவில் ஆண்டுக்கு 15% என வளர்ந்து வருகிறது. எனவே நீண்ட காலத்துக்கு எல் ஐ சி ஒரு புளூ சிப் நிறுவனம் போல நிலையான வருமானம் ஈட்டி பங்கு விலை அதிகரிக்கலாம் என டி ஐ டபிள்யூ (TIW) கேப்பிட்டல் குழுமத்தின் நிர்வாக கூட்டாளி மோஹித் ரல்ஹன் இந்தியன் எக்ஸ்பிரஸிடம் கூறியுள்ளார்
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp