Will Smith Twitter
இந்தியா

Morning News Today : ஆஸ்கார் விழாக்களில் பங்கேற்க வில் ஸ்மித்துக்கு 10 ஆண்டுகள் தடை!

NewsSense Editorial Team

ஆஸ்கார் விழாக்களில் பங்கேற்க வில் ஸ்மித்துக்கு 10 ஆண்டுகள் தடை!


94-வது ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழா அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற்றது. இதில் சிறந்த நடிகருக்கான ஆஸ்கர் விருது ஹாலிவுட் நடிகர் வில் ஸ்மித்திற்கு வழங்கப்பட்டது. 'கிங் ரிச்சர்ட்' திரைப்படத்தில் நடித்ததற்காக இந்த விருதை அவர் வென்றார்.

விருது வழங்கும் விழாவில் தொகுப்பாளரும், காமெடி நடிகருமான கிறிஸ் ராக், வில் ஸ்மித்தின் மனைவி, ஜடா பிங்கெட்டின் தலைமுடி குறித்து கிறிஸ் ராக் சர்ச்சைக்குரிய வகையில் பேசினார். இதனால் அதிருப்தி அடைந்த வில் ஸ்மித் மேடைக்குச் சென்று கிறிஸ் ராக் கன்னத்தில் அறைந்தார். இந்த செய்தி உலகமெங்கும் பெரும் அதிர்விலைகளை எழுப்பியது. இந்நிலையில், தன் செயலுக்காக வில் ஸ்மித் மன்னிப்பு கோரினார். இந்த விவகாரம் தொடர்பாக வில் ஸ்மித் ஆஸ்கர் அகாடமி உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார். இந்நிலையில், ஆஸ்கர் விருது விழா மற்றும் பிற அகாடமி நிகழ்வுகளில் கலந்துகொள்ள வில் ஸ்மித்துக்கு 10 ஆண்டுகள் தடை விதித்து அகாடமி அமைப்பு உத்தரவிட்டுள்ளது.

MK Stalin

மக்கள் நலப் பணியாளர்களுக்கு மீண்டும் வேலை - சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின்


நேற்று நடந்த சட்டமன்றக் கூட்டத்தில், மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது. அப்போது, மக்கள் நலப் பணியாளர்கள் பற்றிப் பேசிய முதல்வர், " மக்கள் நலப் பணியாளர்களின் நீண்டநாள் கோரிக்கையை ஏற்று, அவர்களின் பிரச்னை குறித்து, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சார்பாக அவர்களுடன் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டன. நிலுவையில் உள்ள வழக்கில், தீர்ப்புக்கு உட்பட்டு நீதிமன்ற ஆணைகளை நடைமுறைப்படுத்துவது குறித்துப் பேசப்பட்டது. பேச்சுவார்த்தைகளின்படி, மொத்தமுள்ள 12,524 கிராம ஊராட்சிகளில் ‘வேலை உறுதி திட்டப் பணி ஒருங்கிணைப்பாளர்’ என்ற பணியிடத்தில் விருப்பம் தெரிவிக்கும் முன்னாள் மக்கள் நலப் பணியாளர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு, இப்பணி வாய்ப்பு வழங்கப்படும். மேலும் அவர்களின் மதிப்பூதியம் ரூ.7,500 வழங்கவும் முடிவு செய்யப்படுகிறது. கடந்த 10 ஆண்டுக் காலத்தில், உயிரிழந்த மக்கள் நலப் பணியாளர்களின் குடும்ப வாரிசு தாரர்கள் விரும்பினால், அவர்களுக்கும் முன்னுரிமை வழங்கி மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டப் பணி ஒருங்கிணைப்பாளராக பணியாற்ற வாய்ப்பு வழங்கப்படும்." என்று அறிவித்தார்.

சென்னை மாநகராட்சி

சென்னை மாநகராட்சி ‘பட்ஜெட்’ இன்று தாக்கல்!


நடந்து முடிந்த உள்ளாட்சித் தேர்தலில் திமுக பெரும் வெற்றி பெற்றது. சென்னையின் மாநகராட்சியின் மேயராக ஆர்.பிரியா தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்நிலையில், பெருநகர சென்னை மாநகராட்சியின் ‘பட்ஜெட்’ இன்று (சனிக்கிழமை) தாக்கல் செய்யப்பட உள்ளது. இந்த பட்ஜெட்டுக்கான கூட்டம் சென்னை மாநகராட்சியின் தலைமை அலுவலகமான ரிப்பன் மாளிகையில் உள்ள மாமன்ற கூட்டரங்கில் நாளை காலை 10 மணிக்கு தொடங்க உள்ளது. பெருநகர சென்னை மாநகராட்சி மேயர் ஆர்.பிரியா இந்தக் கூட்டத்துக்குத் தலைமை தாங்குகிறார்.

corona

கொரோனா கருணைத் தொகை மீதான ஆய்வு தொடக்கம்!


டெல்லி உச்ச நீதிமன்றம், கொரோனா தொற்றால் உயிரிழந்தோரின் குடும்பங்களுக்குக் கருணைத்தொகை வழங்குமாறு உத்தரவிட்டிருக்கிறது. கடந்த 24-ம் தேதி உச்ச நீதிமன்றம் வழங்கிய இந்த உத்தரவின் பேரில் கொரோனா கருணைத்தொகை கோரிக்கை மனுக்கள் தொடர்பாக ஆய்வு நடத்த மத்திய அரசு முடிவு செய்திருக்கிறது. அதன்படி, கேரளா, ஆந்திரா, மகாராஷ்டிரா, குஜராத் ஆகிய 4 மாநிலங்களுக்கு மத்திய குழுக்கள் விரைந்துள்ளன. இந்தக் குழுக்கள் அந்த மனுக்கள் மீதான கோரிக்கையை ஆய்வு செய்யவுள்ளன.

ஆந்திர மாநில தொழிற்சாலைகளில் 50 சதவிகித மின்வெட்டு


கோடைக்காலத்தில் மின்சார தேவை வழக்கத்தைவிட அதிகரிக்கும். இதன் காரணமாக, ஆந்திர மாநிலத்தில் தினமும் 4 முதல் 5 கோடி யூனிட்கள் வரை மின்சார பற்றாக்குறை நிலவுகிறது. இதன் காரணமாக ஆந்திராவில் தொடர்ந்து இயங்கும் தொழிற்சாலைகளுக்கு 50 சதவிகித மின்வெட்டும், இதர தொழிற்சாலைகளுக்கு வாரத்தில் ஒரு நாள் மின்வெட்டும் அறிவிக்கப்பட்டுள்ளது.

நியாய விலைக் கடை

ரேஷன் கடைகளில் ஊட்டச்சத்து அரிசி!

பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவைக் கூட்டம் நேற்று நடைபெற்றது. நாடு முழுவதும் அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் ரேஷன் கடைகள் மூலம் ஊட்டச்சத்து மிக்க அரிசியை வினியோகிப்பது குறித்து விவாதிக்கப்பட்டது. அதில், படிப்படியாக ஊட்டச்சத்து அரிசியை வினியோகிக்கப் பொருளாதார விவகாரங்களுக்கான கேபினட் கமிட்டி ஒப்புதல் அளித்தது. இதையொட்டி, 2024-ம் ஆண்டுக்குள் நாடு முழுவதும் உள்ள ரேஷன் கடைகளில் ஊட்டச்சத்து மிக்க அரிசியை வினியோகிக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியிருக்கிறது. இத்திட்டம் முழுமையாக 2024-ம் ஆண்டு ஜூன் மாதம் அமலுக்கு வரும்வரை முழு செலவையும் மத்திய அரசே ஏற்றுக்கொள்ளும் எனத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.தேசிய உணவு பாதுகாப்பு திட்டம், ஒருங்கிணைந்த குழந்தைகள் மேம்பாட்டுத் திட்டம் உள்ளிட்ட நலத்திட்டங்களின் கீழ் இந்த ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

இம்ரான்கான்

இம்ரான்கான் அரசு மீதான நம்பிக்கையில்லாத் தீர்மானம் இன்று வாக்கெடுப்பு

பாகிஸ்தானில் இம்ரான்கான் அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானத்தின்மீது கடந்த 3-ம் தேதி வாக்கெடுப்பு நடத்தாமல், துணைச் சபாநாயகர் காசிம் சூரி நிராகரித்தார். இதையடுத்து ஜனாதிபதி ஆரிப் ஆல்வி இம்ரான்கான் பரிந்துரையின் பேரில் நாடாளுமன்றத்தைக் கலைத்து உத்தரவிட்டார். இதனால் பெரும் கொந்தளிப்பு ஏற்பட்டது. இந்த விவகாரத்தைப் பாகிஸ்தான் சுப்ரீம் கோர்ட்டு தாமாக முன்வந்து வழக்காக எடுத்து விசாரணை நடத்தியது. விசாரணை முடிவில், பாகிஸ்தான் நாடாளுமன்றத்தைக் கலைத்த அதிபர் ஆரிப் ஆல்வியின் நடவடிக்கை சட்ட விரோதமானது. அது செல்லாது என நீதிபதிகள் தெரிவித்தனர். மேலும், பிரதமர் இம்ரான்கான் அரசுக்கு எதிரான நம்பிக்கை இல்லா தீர்மானம் மீது 9-ம் (இன்று) வாக்கெடுப்பு நடத்த வேண்டும் எனத் தீர்ப்பளித்திருக்கிறது.

Tiwatia

ஐ.பி.எல் போட்டிகள் நிலவரம்!

நேற்று நடைபெற்ற ஐ.பி.எல் போட்டியில், பஞ்சாப் கிங்ஸ், குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதின. இந்தப் போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியை வீழ்த்தியது. இன்று நடைபெறும் போட்டியில், சென்னை சூப்பர் கிங்ஸ், ஐதராபாத் சன் ரைசர்ஸ் அணியுடனும், மும்பைப இந்தியன்ஸ் அணி, ராயல் சேலஞ்சர்ஸ் அணியுடன் மோதுகின்றன.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?