ஐ.பி.எல் தொடரின் டிவி மற்றும் டிஜிட்டல் ஒளிபரப்பு உரிமத்தை வைத்திருக்கும் ஸ்டார் இந்தியாவின் ஒப்பந்தம் இந்த ஆண்டுடன் முடிகிறது. இதையடுத்து அந்த ஒப்பந்தத்தைப் பெறுவதற்காக சோனி நிறுவனத்துடன் சேர்ந்து, புதிதாக ரிலையன்ஸ் மற்றும் அமேசான் நிறுவனங்களும் களத்தில் குதித்திருக்கின்றன. 2017-ம் ஆண்டு இரண்டு உரிமங்களையும் சேர்த்து, 5 ஆண்டுகளுக்கு 16,348 கோடி ரூபாய்க்கு ஏலம் எடுத்திருந்தது ஸ்டார் நிறுவனம். ஆனால், இந்தாண்டு போட்டியில் இதன் மதிப்பு 50,000 கோடி ரூபாயைத் தொடலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஜெலன்ஸ்கி மற்றும் புதின்
கடந்த இரண்டு நாள்களாக கிழக்கு உக்ரைன் பகுதியில் சிறிய அளவிலான தாக்குதல்கள் நடந்துவருகின்றன. ரஷ்யாவின் ஆதரவு பெற்ற கிளர்ச்சி படைகள், கிழக்க உக்ரைனில் ஆங்காங்கே வெடிகுண்டு தாக்குதல் நடத்தியுள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதையடுத்து அப்பகுதியிலிருந்து மக்கள் வெளியேற்றப்பட்டு வருகின்றனர்.
``புதினுக்கு என்ன வேண்டும் என்பதைத் தெரிந்துகொள்ள அவரை மீண்டும் நேரில் சந்தித்துப் பேசவும் தயார்” எனத் தெரிவித்திருக்கிறார் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி. ஆனால், இதற்கு ரஷ்யாவிடமிருந்து எந்த பதிலும் இன்னும் வரவில்லை.
``ரஷ்யா உக்ரைனைத் தாக்கினால், ரஷ்ய நிறுவனங்கள் டாலர் மற்றும் பிரிட்டிஷ் பவுண்டுகளை வைத்து வர்த்தகம் செய்வது தடைசெய்யப்படும்; இது ரஷ்யாவுக்கு மிகப்பெரிய பொருளாதார சேதத்தை உண்டாக்கும்” என நேற்று புதிய எச்சரிக்கை விடுத்திருக்கிறார் பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன்.
பிரான்ஸ் அதிபர் மேக்ரான் மற்றும் ரஷ்ய அதிபர் புடின் இருவரும் நேற்று தொலைபேசியில் பேசியிருக்கின்றனர். மோதலைத் தவிர்த்து மீண்டும் பேச்சுவார்த்தையில் கவனம் செலுத்துவது குறித்து இருவரும் விவாதித்தனர்.
இந்த பரபரப்பான சூழ்நிலையில் உக்ரைனில் தங்கியிருக்கும் இந்தியர்கள் அனைவரையும் தற்காலிகமாக அங்கிருந்து வெளியேற அறிவுறுத்தியிருக்கிறது இந்திய வெளியுறவுத்துறை.
அண்மைய நிகழ்வுகளால் உக்ரைன் எல்லைகளில் இன்னமும் பதற்றம் கூடியிருக்கிறது.
இங்கிலாந்து ராணி 2-ம் எலிசபெத் கொரோனா தொற்றுக்கு ஆளாகி உள்ளார் என பக்கிங்காம் அரண்மனை நேற்று உறுதிப்படுத்தி உள்ளது. அவருக்கு லேசான அறிகுறிகள் காணப்படுகின்றன. வரும் வாரத்தில் அவர் வின்ட்சரில் தங்கியிருந்து பணிகளை செய்வார் என பக்கிங்காம் அரண்மனை அறிக்கை வெளியிட்டுள்ளது.
மேலும், மருத்துவ அறிவுரைகளை தொடர்ந்து பெறும் ராணி எலிசபெத், முறையான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றுவார் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இந்நிலையில், இங்கிலாந்து ராணி 2-ம் எலிசபெத் விரைவில் குணமடையவும், பூரண நலம்பெற வேண்டும் என இறைவனிடம் பிரார்த்தனை செய்கிறேன் என பிரதமர் நரேந்திர மோடி டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
IND vs WI
மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிராக நேற்று நடந்த 3-வது T20 போட்டியிலும் வென்று, தொடரை 3-0 என்ற கணக்கில் முழுமையாகக் கைப்பற்றியது இந்தியா. முதலில் விளையாடிய இந்தியா 184 ரன்கள் எடுத்திருந்தது. அடுத்து விளையாடிய மேற்கிந்தியத் தீவுகள், 20 ஓவர்களில் 167 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியைத் தழுவியது.
Kamal Press Release
விஜய் டிவியில் கடந்த 5 சீசன்களாக ஒளிபரப்பாகிவந்த 'பிக் பாஸ்' நிகழ்ச்சியை ஒவ்வொரு வார இறுதியிலும் தொகுத்து வழங்கி வருகிறார் கமல்ஹாசன். ஐந்து சீசன்கள் முடிந்த பிறகு, டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் ஓடிடி-க்காக 'பிக் பாஸ் அல்டிமேட்' தொடங்கவிருப்பதாகச் செய்திகள் வெளியாகின. இந்தப் புதிய நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்குபவராக கமல்ஹாசன் இருக்கமாட்டார், வேறு ஒரு தொகுப்பாளர் வருவார் என்றே முதலில் செய்திகள் உலாவந்தன.
ஆனால், டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் மற்றும் விஜய் டிவி தரப்பிலிருந்தே அதிகாரப்பூர்வமாகக் கமல்தான் தொகுப்பாளர் என்பதாக ப்ரோமோக்கள் வெளியாகின. இதன் மூலம் ஓடிடி-யிலும் தடம் பதித்தார் கமல்ஹாசன்.
அதே சமயம், 60 நாள்கள் நடக்கவிருக்கும் இந்த பிக் பாஸ் அல்டிமேட்டுக்கு வார இறுதியில் வரும் ஒரேயொரு எபிசோடுக்கு மட்டுமே கமல்ஹாசன் தொகுப்பாளராக இருந்து வருகிறார். இதற்கான ஷூட்டிங் சனிக்கிழமையே எடுக்கப்படுகிறது. டிவி பிக் பாஸில் இரண்டு எபிசோடுகளுக்கு தொகுப்பாளராக வந்தவர், அல்டிமேட்டுக்கு ஒரே எபிசோடு எனத் தன் பங்களிப்பைச் சுருக்கிக் கொண்டதன் காரணம், பட ஷூட்டிங்காக இருக்கலாம் என்று அப்போதே பேச்சுகள் எட்டிப் பார்த்தன.
இதனிடையே தற்போது 'பிக் பாஸ் அல்டிமேட்' நிகழ்ச்சியிலிருந்து முற்றிலும் விலகுவதாக கமல்ஹாசனே அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறார்.
இருந்தபோதும் இது தற்காலிக இடைவெளிதான் என்றும், விஜய் டிவியில் விரைவில் வரவிருக்கும் பிக் பாஸ் சீசன் 6-ல் மீண்டும் சந்திக்கிறேன் என்று உறுதிப்படத் தெரிவித்துள்ளார்.
கமல்ஹாசன் விலகியதைத் தொடர்ந்து, 'பிக் பாஸ் அல்டிமேட்'டின் தொகுப்பாளராக யார் இருப்பார்கள் என்ற கேள்வி எழுந்துள்ளது. முன்பு கமல் கொரோனா பாதிப்பிலிருந்தபோது 5-வது சீசனை கொஞ்ச காலம் நடத்திய ரம்யா கிருஷ்ணனே பிக் பாஸ் அல்டிமேட்டை நடத்துவாரா, அல்லது வேறொரு நடிகர் தொகுப்பாளராக வருவாரா என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது.